Sunday, April 08, 2018

ஒரு கதை சொல்லட்டுமா..



பெரியவர்களுக்கான பொதுவான மாத்திரையை சிறியவர்களுக்கு கொடுக்கும்படி வந்தால் என்ன சொல்வாங்க? முழு மாத்திரை தேவை இல்லைங்க, பாதியா உடைச்சு அரை மாத்திரை குடுங்க போதும்-ன்னு நம்ம ஊர்ல சொல்லிக் கேட்டிருப்போம், இல்லையா? அதாவது, தேவையைப் பொறுத்து அளவை மாற்றிக் கொள்வோம்.

அது மாதிரியே பாதியா வெட்டி அரை மாத்திரை எடுத்துக் கொள்ளும் எழுத்து வகை தமிழில் உண்டு.

குற்றியலுகரம்.

மேலே சொன்ன மாத்திரைக் கதை ஒரு புரிதலுக்காக. உண்மையில் தமிழில் மாத்திரை என்பது கால அளவு. ஒரு எழுத்து, ஒலிக்கும் நேரத்தைக் குறிக்க பயன்படுத்துவது. தோராயமாக, கண் இமைக்கும் நேரம், கை சொடுக்கும் நேரம் எல்லாம் ஒரு மாத்திரை என்பார்கள். இன்றைய அளவுப் படி கிட்டத்தட்ட அரை நொடி.
ஆச்சா?

தமிழின் குறில் எழுத்துக்களுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரைகள், மெய்யெழுத்துக்களுக்கு அரை மாத்திரை அளவு என்பது விதி.

இப்போ தலைப்புக்கு வருவோம்.

ஒரு கதை சொல்லட்டா?
உங்க மேல ஒருத்தி/ஒருவன் கிறுக்கா இருக்கறதா வைப்போம்.

ஒரு நாள், உங்க கிட்ட வந்து "உம்மேலே கிறுக்கு" அப்படின்னு சொல்றாள்/ன்.
நீங்களும் சொக்கிப் போயிடறீங்க.
அப்புறம்?

மேலே என்ன ஆச்சுன்னு ஆராயலாம் தான், ஆனா இப்போ நம்ம ஆர்வம் இருக்க வேண்டியது இலக்கணத்தின் மீது.

"உம்மேலே கிறுக்கு"
அந்தச் சொற்களில் உள்ள இரண்டு "உ" க்களையும் சொல்லிப் பாருங்கள். முதல் உ-வை முழுசாச் சொல்வோம். கிறுக்கு-ல் (கு=க்+உ) உள்ள "உ" பாதில நின்னுடும்.  சொல்லித்தான் பாருங்களேன். "கிறுக்உ" என்று ஒலிக்காது.

உங்க ஆளு சொன்னதுல, வெட்கத்தில குறுகிப் போய் நீங்க நிக்கறீங்களோ இல்லையோ, அந்த "உ" குறுகி நின்னுடும். இப்படிக் குறுகி, முழு மாத்திரை அளவுக்கு ஒலிக்காகாமல் அரை மாத்திரையில் ஒலிக்கும் உகரம், குறுகிய + உகரம் = குற்றியலுகரம்.
அம்புட்டுதான்.

கதை சொல்லறேன்னு உங்க காதை வாங்கி இலக்கணம் சொல்வது தப்பா?
தெரியாது. ஆனா இன்னொரு குறிப்பு சொல்ல தெரியும்.

தெரியாது ->  இந்தத் "து"வில் உள்ள "உ" (து=த்+உ) முழுசா ஒலிக்குது. அதனால இது முற்றிய + உகரம் = முற்றியலுகரம்.

அவ்வளவுதான் குற்றிய/முற்றிய உகரங்கள்.

ஒரே கல்லுல இரண்டு மங்கா:
ஒரே கதையில குற்றியலுகரம் மற்றும் முற்றியலுகரம்.

 ​#ஞாயிறு போற்றுதும்.


Sunday, April 01, 2018

முதிர்ச்சி

வேட்டி அணிவதை
தொலைத்ததில் இருந்து
வேலியில் ஓணான்களையும் காணோம்.