Thursday, June 02, 2016

நாம் மாறவே இல்லை



முப்பது வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. பசுமையாக நினைவிருக்கி/றது. பல சமயங்களில் இந்த சம்பவம் நினைவுக்கு வரும். அப்படி நினைவுக்கு வரும்போதெல்லாம் மனம் வலிக்கும். பல நிமிடங்களுக்குப் பிறகு நானே மறந்து விடுவேன். மன நிம்மதியாக இருப்பதாக உணர்வேன்.
 
 மறதி என்ற ஒரு குணம் அல்லது திறமை என பெயரிட்டு வேண்டுமானால் அதைச் சொல்லிக் கொள்ளலாம். அந்த மறதி மனிதனுக்கு அவசியம் என்று அடிக்கடி நான் நினைப்பது உண்டு. மனதில் வலி இல்லாமல் இருக்கவாவது மறதி வேண்டும். சரி விஷயத்துக்கு வருவோம்.
 
  நான் என்னுடைய அலுவலகத்தில் இருந்தேன். இடைவேளை நேரம் பகல் 1 மணிக்கு மேல் இருக்கும். என்னுடைய பியூனை ஒரு வேலையாக வெளியில் அனுப்பியிருந்தேன். அவன் வருகிறானா என்று அலுவலக ஜன்னல் வழியாக அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தேன்.

அலுவலகம் முதல் மாடியில் இருந்தது. ஜன்னல் வழியாக ஜங்ஷனுக்கு வந்து செல்லும் பேருந்துகளைப் பார்க்கலாம். பேருந்து நின்று பயணிகளை இறக்கி விட்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்படும். பேருந்து நிற்கும் இடத்திலிருந்து சற்றுத் தள்ளி ஒரு பெட்ரோல் பங்க் உண்டு. இப்பொழுது அது இல்லை.

நான் மாடியில் இருந்தபடி ரயிலுக்குச் செல்லும் பயணிகளை ஜங்ஷன் உள்ளே நுழையும் வரை பார்க்கலாம். நான் அனுப்பிய பியூன் வந்து சேர வில்லை. என்னுடைய கண் அங்கேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. பொறுமை இழந்து ஜன்னல் வழியாக திரும்பவும் நான் பார்த்தபோதுதான் அந்த சம்பவம்.நடந்தது.

  பெட்ரோல் பங்க் அருகில் சாலையைக் கடந்து கொண்டிருந்த ஒரு மாடு திடீரென்று சத்தம் போட்டது. நகரப் பேருந்தின் முன் சக்கரம் பட்டு அந்த மாடு ஐந்தாறு அடி தூரம் போய் விழுந்ததை நான் கண்ணால் பார்த்தேன். மாடியில் இருந்த நான் அடடா என்றேன். பக்கத்தில் இருந்தவர்கள் என்ன என்று கேட்டார்கள். பங்க் அருகில் மாடு பேருந்தில் அடிபட்டுவிட்டது என்றேன். நான் உடனடியாக மாடியிலிருந்து இறங்கி காம்பவுண்டை விட்டு வெளியேறி மாடு அடிபட்டுக் கிடந்த இடத்துக்குப் போனேன்.
நான் அங்கு போய்ச் சேருவதற்குள் 20, 30 பேர் கூடிவிட்டார்கள். நான் போய்ச் சேரவும் டிரைவர் பேருந்தை ஓட்டிக் கொண்டு போகவும் சரியாக இருந்தது. அது அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துதான்
 பங்க்கில் வேலை செய்யும் சிறுவனை விசாரித்தேன். மாடு மெதுவாக்த்தான் போய்க் கொண்டிருந்தது,சார். டிரைவர் எடுக்கும் போதே வேகமாக ஓட்டத் தொடங்கினார். மாடு அடிபட்டு எட்டிப் போய் விழுந்தது என்றான்.

மாட்டுக்கு பின்னங்கால் இரண்டிலும் அதையொட்டிய உடற்பகுதியில் நல்ல அடி. ரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. கிராம மக்கள் பாஷையில் சொன்னால் இரண்டு ஈற்று போட்ட பசு மாடு.

வெள்ளை நிறம். சரியான தீனி இலாமல் சற்று இளைத்திருந்தது. வலியில் மாடு துடித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க வேதனையாக இருந்தது. பார்த்துக் கொண்டிருந்த மக்கள் சலிப்படைந்தவர்களாக தங்கள் வேலையை  பார்த்துப் போகத் தொடங்கினார்கள்.

 பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இளைஞனிடம் கேட்டு போன் வாங்கி கார்ப்பொரேஷன் அலுவலகத்துக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை விளக்கமாகச் சொல்லி விட்டு யாரையாவது அனுப்பி வைக்கும்படி கூறினேன். நான் கூறியதை பொறுமையாகக் கேட்ட.  கார்ப்பொரேஷன் ஊழியர் எங்களுக்கும் இது போன்ற விஷயங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.என்று சொல்லி விட்டு போனை வைத்துவிட்டார். ஜங்ஷன் அருகில் கார்ப்பொரேஷன் தொடர்பான ஒரு சிறு அலுவலகம் உண்டு. அங்கே போய் ஊழியரைப் பார்த்து அவர்கள் ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டேன். பிறப்பு இறப்பைப் பதிவு செய்வது மட்டுமே இங்கே நடக்கும். மற்றபடி எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி கையை விரித்து விட்டார்கள்

  அங்கிருந்த ஒரு ஊழியர் சார் எங்கள் வேலையைச் செய்யவே இங்கே ஆள் கிடையாது. மாட்டைக் காப்பாற்றுவதில் உஙளூக்கு அக்கறை இருந்தால் வண்டி ஏற்பாடு செய்து பாலக்கரை மாட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்கள் என்றார்

எப்படியாவது அந்த மாட்டைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று நினைத்த எனக்கு அவருடைய யோசனை சரியாகப்பட்டது. மாட்டின் துடிப்பையும் அரற்றலையும் பார்க்க முடியவிலலை.

இன்னொருவர் மாட்டுச் சொந்தக்காரனைக் கண்டுபிடித்து அவன் மேல் கேஸ் போடலாம் என்று யோசனை கூறி தன்னுடைய சட்ட ஞானத்தைக் காட்டிவிட்டு நடையைக் கட்டினார்.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. என்னுடைய பியூனும் வந்து சேர்ந்தான்
அலுவலகத்துக்கு அரை நாள் விடுமுறை சொல்லிவிட்டு அவனையும் அழைத்துக் கொண்டு மாடு படுத்துக் கிடந்த இடத்துக்கு திரும்ப வந்தேன்.
நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. ஒருமணி நேரம் ஆகியிருக்கும் எனக்கு ஒரே குழப்பம். மாட்டுச் சொந்தக்காரன் உடனடியாக கிடைக்க வாய்ப்பில்லை.செய்தி கேள்விப் பட்டு அவனாக வந்தால் உண்டு’.
என்னுடைய பியூனும் நானும் மட்டுமே அங்கே இருந்தோம்.
பங்கில் வேலை செய்யும் சிறுவன் என்னைப் பார்த்துச் சொன்னன் சார் அந்த பேருந்து அடுத்த டிரிப் கூட வந்துவிட்டது. இப்பொழுதுதான் போகிறது.என்றான்.

அந்த டிரைவரை பார்த்தாயா என்று கேட்டேன். பார்த்தேன் அவரும் மாட்டைப் பார்த்துவிட்டு இன்னும் இந்த மாடு சாகவில்லையா என்று கேட்டு விட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு போய்விட்டார் என்றான்
எனக்கு எதுவும் சொல்ல வாயில் வார்த்தை வரவில்லை தன் கண் முன்னால் ஒரு உயிர் துடித்துக் கொண்டிருக்கும் போது அதற்கு தான் மட்டுமே காரணம் என்று உணராமல் இருக்கும் மனிதர்களையும் இந்த உலகம் தாங்கிக் கொண்டிருக்கிறது என்ற சிந்தனையுடன் வறட்டுச் சிரிப்பை மட்டுமே உதிர்க்க முடிந்தது.  

அடுத்தபடியாக என்ன செய்யலாம் என்று குழப்பத்தில் இருந்த போது என் பக்கத்தில் இருந்த பியூன் ஒரு யோசனை சொன்னான். சார் பிராணிகள்
வதைத் தடுப்புச் சங்கத்தை தொடர்பு கொண்டு ஏதாவது செய்ய முடியுமா என்றுகேட்கலாம் என்றான் அல்லது பசுமாட்டுக்கு பாதுகாப்பு கொடுக்க பிஞ்சராபோல் என்று ஒரு இடம் இருக்கிறது.ஒரு ஆஃபீஸ் இருக்கிறது. அங்கே ஒரு ஐயர் இருக்கிறார்.அவரை போய்ப் பார்க்கலாம் என்றான்
யோசனை எனக்கும் சரியாகப்பட்டது அந்த ஆஃபீஸ் காந்தி மருத்துவ மனைக்கு அருகில் இருப்பது நினைவுக்கு வந்தது அந்த வழியாக போகும் போது பார்த்திருக்கிறேன் 

  ஆமாம் நல்ல யோசனைதான் அந்த ஐயர் பொறுப்பில் விட்டுவிடலாம். தேவையான உதவியை நாம் செய்யலாம் என்று கூறிவிட்டு அவனையும் கூட்டிக் கொண்டு அந்த ஆஃபீஸுக்குப் புறப்பட்டேன்

ஏற்கெனவே ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது
அந்த சிறிய அலுவலகம்.பூட்டிக் கிடந்தது.அலுவலகத்துக்குப் பின்புறம் மாட்டுக்கான தீவனக் கிடங்கு மாடுகளூக்கு போடும் வைக்கோல் சிறிய சிறிய கட்டாகக் கிடந்தது பார்க்கும் போது அலுவலகமும் தீவனக் கிடங்கும் சரியான பராமரிப்பில் இல்லை என்று தெரிந்தது.
பக்கத்தில் இருக்கும் கடையில் விசாரித்தேன்.கடையில் இருந்தவர் ஐயர் இன்றைக்கு வரவில்லை.என்றார். இப்பொழுதெல்லாம் அவர் எப்போதாவது வருகிறார்.நிச்சயமாக எதுவும் சொல்ல முடியாது. அவர் வீடு எங்கே இருக்கிறது என்று விசாரித்தேன். தெரியாது அவர் ரொம்ப தூரத்திலிருந்து தான் வருகிறார் என்றார். அடுத்த கடைக்காரர் பாவம் அவர் என்ன செய்வார் அவருக்கு சம்பளம் சரியாகக் கிடைப்பதில்லை.அதற்கு தகுந்தாற்போல் தான் அவருடைய வேலையும் இருக்கும் என்றார்.

  எனக்கு அறிமுகமான ஒருவர் கடைக்குச் சென்று விசாரித்தேன்.
சார் அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீர்கள்.அந்த வரிசையில் இருக்கும் கடைகளெலாம் ஒரு டிரஸ்டுக்குச் சொந்தம் அந்த டிரஸ்ட்தான் பசுமாடுகள் பராமரிப்பதற்கு ஏற்பட்டது அங்கே இருக்கும் பத்து கடைகளை  வாடகைக்கு எடுத்து கடை வைத்து வியாபாரம் செய்யும் யாரும் பல வருஷங்களாக வாடகையைக் கட்டவில்லை. இருபது வருஷத்துக்கு முன் விதிக்கப்பட்ட குறைந்த வாடகை அதையொட்டி கோர்ட்டில் வழக்கு நடக்கிறது இப்போதைக்கு அது முடியப்போவதில்லை வாடகை பல வருஷங்களாக வராததால் மாட்டுத்தீவனம் இதர செலவுக்கு ரொம்பவும் தட்டுப்பாடு.சில நல்லவர்கள் கொடுக்கும் தர்மத்தைக் கொண்டு அங்கே வரும் மாடுகள் பராமரிக்கப்படுகிறது. மற்றபடி ஐயர் சம்பளத்தைப் பற்றி இப்போதைக்கு யாரும் பேசமுடியாது.  அவரும் நம்பிக்கையை விட்டுவிட்டார்என்றார்

மேலும் விசாரிக்க எனக்கு நேரம் இல்லை. நான் நம்பிக்கையை இழந்து, பியூனை அழைத்துக் கொண்டு திரும்பி வந்தேன். .   
வரும்போது ஏதேதோ எண்ணங்கள்.ஏறக்குறைய மூன்று மணி நேரம் ஆகிவிட்டது.இனி அந்த மாட்டுக்கு என்னால் எதுவும் செய்யமுடியும் என்ற நம்பிக்கை போய்விட்டது. திரும்பவும் அந்த மாடு கிடக்கும் இடத்துக்கு வந்தேன். நான் அந்த இடத்தை நெருங்கும் முன் அந்த பெட்ரோல் பங்க் சிறுவன் சொன்னான் சார் மாடு செத்துப் போச்சு

 நான் அருகில் சென்று பசுமாட்டை உற்றுப் பார்த்தேன். நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பது போல அது இறந்து கிடந்தது.மாட்டின் மேல் ஈக்கள் மொய்க்கத் தொடங்கியது.சுற்றியும் சிதறிய ரத்தத் துளிகள்
தெருவில் அலையும் மாடுகளைப் பற்றி கவலைப் படாமல் இயங்கும் ஒரு   நகராட்சி நிர்வாகம் பாலைக் கறந்து கொண்டு, இனி பால் கறக்காது என்றவுடன் மாட்டை தெருவில் விரட்டி மேய வைக்கும் மாட்டுச் சொந்தகாரர்கள். அடி பட்ட மாட்டின் துடிப்பை உணராமல் அலட்சியமாக வண்டி ஓட்டும் டிரைவர்கள். பசு பாதுகாப்பு அமைப்பு என்று வைத்துக் கொண்டு அதை சரியாக இயக்காமல் முடக்கி வைக்கும் ஒரு சமூகம்

புனிதமான காரியத்துக்கு உதவி.செய்கிறோம் என்ற எண்ணத்தோடு  வாடகையை கொடுக்காமல் சாமர்த்தியம் செய்யும் வியாபாரிகள், ,எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிப் போகும் மக்கள் இவர்களுக்கு மத்தியில் ஒரு ஜீவனைக் காப்பாற்ற முடியாமல் தோல்வி அடைந்தது பற்றி அதிக வேதனைப் படாமல் அலுவலகத்துக்குப் போய்ச் சேர்ந்தேன் அலுவலகம் மூடும் நேரம் நெருங்கிவிட்டது. லீவ் போட்டுவிட்டு ஏன் திரும்ப வந்துவிட்டாய் என்று கேட்ட நண்பருக்கு பதில் சொல்லாமல் சீட்டில் போய் உட்கார்ந்தேன்

    முஸ்லீம்களை வம்புக்கு இழுப்பதற்கு மட்டும்தான் பசுபாதுகாப்பு பற்றி வாய் கிழியப் பேசுவோம் மற்ற நேரங்களில் நாம் அதுபற்றி என்ன செய்கிறோம்? என்று காந்தியடிகள் ஒரு முறை கேட்டது என் நினைவுக்கு வந்தது. எனக்கு வெட்கமாக இருந்தது.அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி ?

                              - மு.கோபாலகிருஷ்ணன்.