Monday, December 21, 2015

மனிதனால் வந்த பேரிடர் (Man made Disaster )



           
   சென்ற நவம்பர் முதல் வாரம் வரை குடிநீர்த் தட்டுப்பாடு வரும் என்று அஞ்சிய சென்னை மக்களுக்கு வடகிழக்குப் பருவமழை நன்றாக இருக்கும் என்று கூறிய வானியல் ஆய்வு மைய்யச் செய்தி சற்று நம்பிக்கை கொடுத்தது. ஆனால் 2 வது வாரத்தில் கனமழை எச்சரிக்கை அடிக்கடி வரத் தொடங்கியது. எல்லோருடைய எதிர்பார்ப்பையும் மீறி பெய்த கனமழை ஒரு சில நாளில் 47செ.மீ, 49 செ.மீ என்றும் பெய்து செனனை நகரத்தையே புரட்டிப் போட்டுவிட்டது.
      பல ஆண்டுகளாக இயற்கையைச் சீண்டி விளையாடிக் கொண்டிருந்த மனிதன் மீது இயற்கை ஆக்ரோஷத்துடன் தாக்குதல் நடத்தியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். மேம்போக்காக எழுதுவதை விட சில விவரங்களைக் குறிப்பிட்டு எழுதுவது  நல்லது என்று நினைக்கிறேன்
      சென்னையைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் சுமார் 3700 ஏரிகள் உண்டு. சில ஏரிகள் பெரியவை, பல ஏரிகள் சிறியவை.பெரிய ஏரிகளும்,முக்கியமான சில சிறிய ஏரிகளும் தமிழ்நாடு அரசாங்கத்தின் பொதுப்பணித் துறையின் நேரடி   கட்டுப்பாட்டில் உள்ளன. புழல் ஏரி,செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய பெரிய ஏரிகள் சென்னை மாநகரத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யப் பயன்படும்.நவம்பர் 1 ம்தேதி செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் நிலை மிகமிகக் குறைவு.( 228 மில்லியன் கன அடி).வெளியேற்றப்பட்ட நீரின் அளவு 46.மில்லியன் கன அடி. ஆனால் தொடர்ந்து பெய்த மழையால் பெருகிய நீர்வரத்தை சரியாக கணிக்காமல் திடீரென்று நவம்பர் 17 ம் தேதி 18000 மில்லியன் கன அடியும் டிசம்பர் 1 ம்தேதி 29000 மி.கன அடி நீரும் திறந்துவிடப்பட்டது.
 இது பற்றி எதிர்க்கட்சிகள் கூறும் புகார்களுக்கு அதிகாரிகளூம் மாறுபட்ட, முரண்பட்ட அறிக்கையை காலம் கடந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த குற்றச்சாட்டுக்களைப் பற்றி விவாதிப்பது எந்த பயனையும் கொடுக்கப் போவதில்லை .ஆளும் கட்சியின் அதிகாரக் குவியல் முறைக்கு இது நல்ல உதாரணம். அவ்வளவுதான் இந்த அதிகாரக் குவியல் கடந்த பல ஆண்டுகளாக அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. பல ..எஸ் அதிகாரிகளும் உயர் அதிகாரிகளும் தன்மானத்தை இழந்து உத்தியோகம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
 இந்த விவரங்களுக்குள் இப்பொழுது போக வேண்டாமென்று நினைக்கிறேன் இப்பொழுது வெள்ளத்துக்கான உண்மையான காரணங்களைப் பற்றி மட்டும் சிந்திப்போம்
45 ஏரிகளின் உபரி நீர் கூவம் நதியில் கலந்து சென்னை நேப்பியர் பார்க் அருகில் கடலில் கலக்கும்.200 ஏரிகளின் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் கலந்து சென்னை அருகில் கடலில் கலக்கும்.இந்த கொசஸ்தலை ஆறு ஆந்திராவில் உற்பத்தியாகி 130 கி.மீட்டர் தமிழ்நாட்டில் ஓடுகிறது. இறுதியாக சென்னை அருகில் கடலில் கலக்கிறது.
 ஆந்திராவில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் 140 கி. மீட்டர் தூரம் ஓடும் ஆரணி ஆற்றில் 210 ஏரிகளின் உபரி நீர் கலக்கிறது.இந்த ஆறும் சென்னை அருகில் கடலில் கலக்கிறது.
 தமிழ்நாட்டின் நீர்வளம் நிலவளம் என்று எப்படியோ எவ்வளவோ பெருமை பேசினாலும் இங்கே ஓடும் பெரும்பாலான நதிகள் பிற மாநிலங்களில் தான் உற்பத்தியாகின்றன என்ற உண்மையை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். தமிழ்நாட்டில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டில் ஓடி, தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்கும் ஒரே நதி தாமிரபரணி மட்டும்தான்.
தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் விவசாயிகள் ஏரியில் இருக்கும் நீரை நம்பித்தான் விவசாயம் செய்தார்கள்.சில வருடங்கள் தஞ்சை மாவட்டத்தில் இல்லாத அளவுக்கு வட மாவட்டங்களில் மூன்று போக விவசாயம் நடப்பதுண்டு தேக்கி வைக்க முடியாத அளவுக்கு நீர் நிரம்பினால் ஏரியின் உபரி நீர் பாலாறு,ஆரணி ஆறு போன்ற ஆறுகளில் கலந்து கடலில் சேரும் .
2005 ம் ஆண்டு வந்த வெள்ளத்தில் கொசஸ்தலை ஆற்றில். எவ்வளவுநீர் பாய்ந்ததோ அதே அளவு நீர்தான் இந்த ஆண்டும் பாய்ந்த்தாகச் சொல்கிறார்கள். ஆனால் இப்பொழுது ஆற்றின் படுகையின் அளவு 50 மீட்டர்  குறுகி விட்டது.ஆற்றின் கொள்ளளவு குறைந்ததால் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.
  2005 ம் ஆண்டு அடையாற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் ஓடியது.அதே அளவு நீர்தான் இந்த வெள்ளத்திலும் ஓடியது. இடையில் உள்ள முக்கிய ஏரிகள் பல ஆக்கிரமிப்புக்குள்ளானதால் ஆற்று நீர் ஆக்ரோஷமாக பல பகுதிகளில் புகுந்து பழி தீர்த்தது
      கூவம், அடையாறு,  கொசஸ்தலை,ஆறுகள் கடலில் கலக்கும் இடம் மணல், சேறு நிரம்பி, பல மைல்களூக்கு தூர் வாரப்படாமல் இருப்பதால் நீர் கடலை அடைவதில் தாமதம் ஆகிறது, தூர் வாரும் கடமையை பல ஆண்டுகள் செய்யாததாலும், பல இடங்களில் பேப்பரில் மட்டும் தூர் வாரியதாக கணக்கு காட்டியதாலும் ஏற்பட்ட பலனைத்தான் இன்று மக்கள் அனுபவிக்கிறார்கள்.
  ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் என்று பெருமையுடன் குறிப்பிடப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஒரு ஏரியை நிரப்பி மேடாக்கி கட்டப்பட்டிருக்கிறது. மதுரையில் புதிய பேருந்து நிலையமும் அப்படி உருவாக்கப்பட்டதுதான்
  நூற்றுக்க்ண்க்கான பெரிய ஏரிகள் பல ஆண்டுகளாக சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை.தூர் வாரப்படவில்லை.ஏரிக்கு நீர் வரும் பகுதிகளும் ஏரியிலிருந்து நீர் வெளியேறும் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டது. தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுகிறது,இந்த வகையில் எல்லோருமே குற்றவாளிகள்.பொதுமக்கள்,  மணல் மஃபியாக்கள்,ஒப்பந்தக்காரர்கள்,ரியல் எஸ்டேட் முதலாளிகள்,பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் சேர்ந்து நடத்தும் கூட்டுக் கொள்ளையில் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாடு அமைதியாக சீரழிந்து கொண்டிருக்கிறது.
  பல ஏரிகள் மேடாக்கப்பட்டு,கட்டிடங்கள் எழுப்பபட்டன. தனியார் வீடுகள்,அடுக்குமாடிக் கட்டிடங்கள்,கம்பெனி அலுவலகங்கள், அரசாங்க அலுவலகங்கள்,இப்படி வகை வகையாக  இயற்கையின் மீதான வன்முறை சூறையாடல் கேட்பாரற்றுத் தொடர்ந்தது.
திருநெல்வேலியில் ஸ்ரீவைகுண்டம் அணை தூர் வாரப்படவேண்டும் என்று கோரி விவசாயிகள் இயக்கம் நடத்தினார்கள்.விவசாயிகளுக்கு ஆதரவாக நல்லகண்ணு என்ற பெரியவர் நீதிமன்றத்துக்குப் போய் வெற்றி பெற்றார்.ஆனால் அரசாங்கம் நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்தவிலை. நீதிமன்றத்துக்குப் போக பெரியவருக்கு உதவியாக இருந்து பல விவரங்களைக் கொடுத்த பக்கத்து கிராம பஞ்சாயத்துத் தலைவர் 80 வயது முதியவர் கொலை செய்யப்பட்டார்.நேர்மையாக நடக்க முயன்ற அதிகாரிகள்,தாசில்தார்கள் மீது லாரி ஏற்றிக் கொல்வதும் அதை விபத்தாகச் சித்தரிப்பதும் நிறையவே நடந்திருக்கின்றன.எந்த விசாரணையும் நடந்ததில்லை.
   30 அடி அகலமுள்ள வாய்க்கால்கள் இன்று 8 அடி அல்லது 10 அடி அகலமுள்ளதாகச் சுருங்கிவிட்டன. காரணம் விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தை விஸ்தரித்துக் கொண்டேபோகிறார்கள்.எந்த கிராம  நிர்வாக அதிகாரியும் அளந்து பார்ப்பதிலை.கேட்பதில்லை.இதன் விளைவாக வாய்க்காலின் கடைசியில் உள்ள நிலத்துக்கு நீர் போவதில்லை. கிராமங்களில் சண்டை, சச்சரவு. இதேபோல் தெருக்களில் சாலைகளில் நீர்வழிப்பாதைகள். மறிக்கப்படுகிறது.எல்லா ஏரிகளும் அளவில் சுருங்கிப் போய்விட்டன. பல ஏரிகள் காணாமல் போய்விட்டன.
  சென்னையைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களின் நீர்வழிப்பாதை சீரழிக்கப்பட்டதுதான் இந்த வெள்ளத்துக்கு காரணம்.அசாதாரணமான மழை என்பது உண்மையாக இருக்கலாம் ஆனால் இன்று அல்ல,பல ஆண்டுகளாகவே சென்னை நகரம் இந்த மழையின் அளவில் பாதியைக் கூடத் தாங்க முடியாத அளவுக்கு சீர் கெட்டுவிட்டது பெரும்பகுதி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.சென்னையின் பெருமை என்று பேசப்படும் அண்ணா சாலை கூடமூழ்கியது.சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தின் கைப்பிடிச் சுவற்றுக்கு மேல் 5 அடி உயரத்துக்கு வெள்ள நீர் போனதைப் பார்க்கும் போது உலகம் பிரளய காலத்தை நெருங்கிவிட்டது போலத் தோன்றியது.
70 சதவிகித மக்கள் பெரும் இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. ஒரு வார காலத்துக்கு நகரத்தில் மின்சாரம் இல்லை. தொலைபேசி இல்லை. .செல்போன் இல்லை.போக்குவரத்து இல்லை.நகரம் தமிழ்நாட்டில்
இருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. நெடுஞ்சாலைகளீல் உடைப்பு எடுத்து பேருந்துகள் நிறுத்தப்பட்டன. 70 க்கு மேற்பட்ட பாலங்கள் உடைந்தன.சமீப காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட,5 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட புதிய பாலங்கள் உடைந்தன.
   திருநெல்வேலி மாவட்டத்தில் 16 ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டு இந்த மழைக்கு ஈடு கொடுத்து நின்றது.நவீன விஞ்ஞான யுகத்தில் வளர்ச்சி அடைந்த கல்வி முறையில் படித்து பட்டம் பெற்ற பொறியாளர்கள் கட்டிய பாலங்கள் சிதறிப் போய் கட்டியவர்களூடைய தொழில் நேர்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியது இந்த வெள்ளம்.
  கழிவுநீர் வெளியேற்றம் போன்ற எந்த திட்டமும்  நிறைவேற்றப்படவில்லை.இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு வழிகாட்டும் வகையில் 1976 ம் ஆண்டு தொடங்கி அமைக்கப்பட்ட 8 கமிட்டி ரிப்போர்ட்கள் பத்திரமாகத் தூங்கிக் கொண்டிருக்கின்றன. .பொறுமை இழந்த சாக்கடை நீர் ரிப்பன் கட்டிடத்தைத் தேடி செனை நகரம் முழுவதும் வலம் வந்துவிட்டது
  வெள்ளநீர் தெருவில் வரும்போது சாக்கடைநீருடன் சேர்ந்து கழிவுநீராகவே வீடுகளில் புகுந்தது.குழிகள் இருக்கும் இடம் தெரியாமல் குழியில் விழுந்த மனிதர்கள் எத்தனை பேர் அவர்கள் கதி என்ன என்பது இன்னும் முழுதாகத் தெரியவில்லை.இடுப்பளவு நீர் உள்ள தெருக்களில் கூட நடப்பது அபாயகரமானதாகவே இருந்தது.திடீரென்று குழிகள் தட்டுப்படும். இரு சக்கர வாகனங்கள்,கவிழ்ந்த வாகனங்கள் தட்டுப்படும்
மழை வெள்ளத்தில் இறந்தவர்கள் பற்றிய முழு விவரங்கள் வெளியிடப்படவிலை.சென்னை நகரத்தில் மட்டும் 1000 த்தைத் தாண்டும் இன்று வரை 350 பேர் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. பரிதாபமான முறையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றிய விவரம் கண்களை ஈரமாக்கும்.
  பொதுவாக வெள்ளம் நதிக்கரயில் உள்ள ஏழைகளின் குடிசைகளையும் உடைமைகளையும் தான் சேதப்படுத்தும் என்ற நிலை மாறி இந்த வெள்ளம் மத்தியதர வர்க்க மக்களின் வீடுகளையும், மாடிக் கட்டிடங்களையும் கடுமையாக பாதித்துவிட்டது. பல அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் தளம் முழுகி, நீர் இரண்டாம் தளத்துக்குச் செல்லும் அளவுக்கு நிலைமை மோசமானது.மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்து பல நாட்கள் பசியாலும்,மனவேதனையிலும் மக்கள் குன்றிப் போனார்கள். ஆதம்பாக்கம்,நங்கநல்லூர்,கீழக்கட்டளை போன்ற புதிய குடியிருப்புப் பகுதிகள் பல நாட்கள் நீரில் மூழ்கிக் கிடந்தன.
    கர்ப்பிணிப் பெண்கள்,  வயோதிகர்கள், நோயாளிகள்,ஆகியோருக்கு எந்த உடனடி உதவியும் செய்ய முடியவில்லை .மாம்பலம் போன்ற பகுதிகளில் பல மளிகைக் கடைகளின் பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன.எந்தப் பொருளையும் காப்பாற்ற முடியவில்லை.பல இரு சக்கர வாகனங்கள், கார்கள்.பல நாட்கள் நீரில் மூழ்கி உருத் தெரியாமல் சிதைந்து போய்விட்டன.பெரும்பாலான வாகனங்களை இனி இயக்க முடியாது என்கிறார்கள்.
     அண்ணா சாலை போன்ற நகரத்தின் மைய்யபகுதியில் வெள்ளம் வரும் என்று யாரும் கனவு கூட கண்டிருக்கமாட்டார்கள்.நகரத்தின் பெரும் பகுதி பாதிக்கப்பட்டது. தமிழ்நாடே கலகலத்துப் போனது
முதல் சில நாட்கள் குலைந்து போய் நின்ற மக்கள் பிறகு பிரச்னையை எதிர்கொள்ளத் தொடங்கினார்கள்.தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டார்கள் அரசாங்கம் ஆபத்து காலத்தில் பெரியதாக உதவி செய்து விடப் போவதில்லை என்று உணர்ந்தவர்களய்த் தாங்களே செயல்பட்டனர்.
      உடல்கட்டும்,மனவலிமையும் உள்ள இளைஞர்கள் பகுதி, பகுதியாகக் கூடி, சாதி, சமய எல்லைகளைக் கடந்து, பக்கத்து
வீட்டார், எதிர்வீட்டார், பக்கத்துத் தெருவினர் என்ற உறவில் உதவத் தொடங்கினார்கள்.படகுகளைக் கொண்டு வந்து பெண்களையும்,குழந்தைகளையும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சேர்த்தார்கள்.இடையில் ராணுவமும் வந்தது.வேலை துரிதமானது.
ராணுவம், பேரிடர் மீட்புப் படை ஆகிய அமைப்புகளின் பயிற்சி பெற்ற ஊழியர்கள் வந்த பிறகுதான் நிலைமை ஓரளவுசரியானது.இளைஞர்கள் தொண்டுள்ளத்தோடு அவர்களுடன் இணைந்து செயல்பட்டனர்.எல்லா கட்சியினரும்,பல தொண்டு அமைப்புகளும் வரிந்து கட்டிக் கொண்டு செயலில் இறங்கினார்கள்.மனிதன் தனக்குத் தானே வரைந்து கொண்ட எல்லா எல்லைகளையும் களைந்தெறிந்து விட்டுச் செயல்பட்டான்
   மொட்டைமாடியில் நின்று கொண்டிருந்த மக்கள் ஹெலிகாப்டர் மூலம் கொடுத்த உணவுப் பொருட்களை வாங்கும்போது ஆதங்கத்தோடு மேல்நோக்கி அவர்கள் கை ஏந்தும்போது அவர்களுடைய முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது அவர்கள் யாரும் இல்லாதவர்கள் இல்லை. பல லட்சம் முதல் போட்டு கட்டிய வீட்டின் சொந்தக்காரர்கள்.கவுரவமான உத்தியோகம் பார்ப்பவர்கள். பசி அவர்களை மாற்றி விட்ட கொடுமையை வார்த்தைகளில் அடக்க முடியாது. குழந்தைகள் என்ன பாடு பட்டிருக்கும்?.நெஞ்சை உலுக்கும் வகையில் அவர்களுக்கு கொடுமை இழைத்துவிட்டது இந்த வெள்ளம்
 எளிய மக்கள் தங்களுடைய குடிசைகளை இழந்து விட்டார்கள். இருந்த இடத்தைக் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு சுவடு தெரியாமல் வெள்ளம் அழித்து விட்டது வெள்ளம் ஏற்படுத்திய அழிவால் குவிந்த குப்பைகள் பல லட்சம் டன் இருக்கும் என்கிறார்கள், மாநிலத்தின் பிற நகரங்களிலிருந்து முனிசிபல் ஊழியர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.சுத்தம் செய்யும் வேலை முடிய ஒரு மாதம் ஆகலாம்.
  தி.மு.,.தி.மு.,.தி.மு. தே.மு.தி.. தொண்டர்களும் காங்கிரஸ் பி.ஜே.பி,ஆர்.எஸ்.எஸ் மற்றும் பல முஸ்லீம் அமைப்புகளும்.இப்படி எல்லா அமைப்பினரும் தீவிரமாக வேலை செய்ததை பல பத்திரிகைகள் பாராட்டியிருக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சியினரும் அவர்களுடைய தொழிற்சங்கத் தொண்டர்களும் பல நாட்கள் இரவு பகல் கண்விழித்து செயல்பட்டதாக ஹிந்து பத்திரிகை எழுதுகிறது.
   திருவல்லிக்கேணீயில் பிராமண சங்கத்தினர் 2000 உணவுப் பொட்டலங்களைத் தயாரித்தனர்.ஆனால் அதை விநியோகம் செய்ய அவர்களிடம் தேவையான தொண்டர்கள் இல்லை.பக்கத்தில் இருக்கும் விடுதலைச் சிறுத்தை கட்சியைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் தலைவருக்கு அவர்கள் தகவல் கொடுத்தார்கள் அந்த முஸ்லீம் 20 தொண்டர்களுடன் போய் அந்த உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக் கொண்டு  பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்தார். பிராமணர்கள் என் மீது நம்பிக்கை வைத்து என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தது எனக்கு உண்மையிலேயே பெருமையாக இருந்தது என்று நா தழுதழுக்க அவர் கூறினார் .அவர் கண்களில் கண்ணீர் சுரந்தது.
  சென்னை தங்கசாலைத் தெருவில் ஜெயின் சமூகத்தினர் அதிக எண்ணீக்கையில் வாழ்கிறார்கள் சேட்டு என்று தமிழ்நாட்டில் அவர்களைக் குறிப்பிடுவார்கள் தமிழ் சினிமாக்களில் அதிக வட்டி வாங்கும் கொள்ளையர்களாகச் சித்தரிக்கப்படுவார்கள் )அவர்கள் அற்புதமான தொண்டு செய்தார்கள்.தினமும் பல ஆயிரக் கணக்கான உணவுப் பொட்டலங்கள் தயாரித்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள் குடும்பப் பெண்கள்,சிறுவர்கள் அணைவரும்  உணவு தயாரிக்கும் வேலையில்  ஈடுபட்டனர்.சுமார் 2 லட்சம் உணவுப் பொட்டலங்களை அவர்கள் மட்டும் கொடுத்திருப்பார்கள்
    நிவாரண வேலையிலும் அங்கும் இங்குமாக சில அபஸ்வரம் இருக்கத்தான் செய்தது.தனக்கும் தன்னுடைய அமைப்புக்கும் பெயர் தேடிக் கொள்ள வாய்ப்பாக சிலர் பயன்படுத்திக் கொண்டார்கள் அந்த விவரங்களுக்குள் போக விரும்பவில்லை மனிதனுடைய இருப்புக்கு சவால் வரும்போது அவன் எல்லா எல்லைகளையும் கடந்து இணைந்து நின்று சவாலை எதிர்கொள்கிறான் என்பது சற்று ஆறுதலான விஷயம்தானே? .குறைபாடுகளை மறக்க முயற்சிப்போம் அல்லது அந்த குறைபாடுகள் திரும்ப நிகழாமல் பாடம் கற்போம் .  
                                         மு.கோபாலகிருஷ்ணன்.

Wednesday, December 16, 2015

மீனாவுடன் மிக்சர் 26: வங்கக்கடலுக்கு வேப்பிலை அடிச்சாச்சா?

ஒரு மாசம் முன்னாடி தமிழ்நாட்டில் வெள்ளம் வரப்போகுது அப்படீன்னு யாராவது சொல்லியிருந்தா லூசாப்பா நீன்னு நிச்சயமா கேட்டுருப்பேன். எனக்கு நினைவு தெரிஞ்சு தமிழ் மக்கள்  நல்ல தண்ணியை கனவுல பாத்து ஏக்கமா பெருமூச்சு விட்டு தான் பழக்கம்.  சின்ன வயசுல காலையில் பல் தேய்க்கக் கூட தண்ணி இல்லாமல் பக்கத்துக்கு தெரு குழாயில் ஒரு பக்கெட் தண்ணி அடிக்க க்யூவில் நின்ன ஞாபகம் இன்னும் எனக்கு நெஞ்சில் பசுமையா இருக்கு. அப்படி தண்ணி லாரி பின்னாடி கலர் கலர் குடத்தோட பின்னங்கால் பிடரி ல இடிக்க ஓடற மக்களை மட்டுமே இவ்வளவு நாளா  பார்த்த தமிழ்நாட்டுல  இன்னிக்கு கரைபுரளும் வெள்ளமா? வெச்சா குடுமி இல்ல செரைச்சா மொட்டையா?  என்ன கொடுமைங்க இது கார்த்திகேயன் ?  (சும்மா ஒரு சேஞ்சுக்கு தான்.  எவ்வளவு நாள் தான் சரவணனையே புடுங்க முடியும்?)

எனக்கு ஒரு சந்தேகம்.  வங்கக்கடலுக்கு கூட சாமி வருமா?  சின்ன வயசுல கோவில் பூஜையில் ஒரு தாடி வச்ச அண்ணனுக்கு சாமி வந்து பார்த்து பயந்திருக்கேன்.  நம்ம பிரபு தேவாவுக்கு அவர் ஒண்ணு விட்ட அண்ணனோன்னு சந்தேகம் வரும்படியான அதே தாடி, அதே வேகம்! அந்த மாதிரி ஆட்டத்தை  இத்தன வருஷம் கழிச்சு இப்ப தான் மறுபடியும் வங்கக்கடல்ல பார்க்கறேன்.

சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீங்க. ஆனாலும் இந்த வங்கிக்கு (வங்கக்கடலை சுருக்கி நான் வச்ச பேருங்க) இவ்ளோ ஆக்ரோஷம் கூடாது.  அவரவர் கஷ்டப்பட்டு, கடனோ உடனோ வாங்கி கட்டின வீடும், வீட்டு சாமான்களும் தண்ணியில் மிதக்கரதுல அப்படி என்ன தான் சந்தோஷமோ?   மழை வந்தா காகித கப்பல் மிதக்க விட்டு நான் பாத்திருக்கேன்.  இப்போ ப்ரிஜ்ஜும் , டிவியும் மிதந்து போறதாமே? ரெண்டு வாரமா சாமியாடின வங்கிக்கு  வேப்பிலை அடிச்சு மலை இறக்கின அந்த முருகனுக்கு  என் கையால சர்க்கரை பொங்கல் பண்ணி நைவேத்தியம் பண்ணலாம்னு ஒரு எண்ணம் இருக்கு.  ஆனா அதுக்கான நேரம் தான் இல்லை.

வெளிநாட்டுக்கு வந்து குடி புகுந்துட்டாலும் அமெரிக்கவுல வாழற என்னை மாதிரி தமிழர்களுக்கு நம்ம ஊர் பாசம் ரொம்பவே அதிகம்.  ஒரு வாரம் தமிழ் நாடு அங்க வெள்ளத்துல மிதந்ததுன்னா இங்க நாங்க கை நகத்தை கடிச்சு குதறி எங்க டென்ஷனை குறைக்கறோம் அப்படீங்கற பேர்ல ஒரு சோகக்கடல்ல மிதந்தோம். .  ஊர்ல அம்போன்னு  விட்டுட்டு வந்த நம்ம சொந்தமெல்லாம் நல்லபடியா இருக்காங்களான்னு  தெரியாம விலை உயர்ந்த ஷாம்பூ போட்டு உறுவி எடுத்தது போக இருந்த மிச்ச நாலே நாலு தலை முடியை கஷ்டப்பட்டு ரெண்டு கையால பிச்சுகிட்டிருந்தோம்.  ஆனா இழுக்க இழுக்க வர்றதுக்கு இது என்ன துச்சாதனன் உறுவின புடவையா?   ஒரு நிமிஷத்துக்கப்புறம் இனி இழுத்தா மண்டை ஓடு தான்னு புரியவும் அடுத்தது என்ன செய்யலாம்னு ரூம் போட்டு யோசனை பண்ணினோம்.

அமெரிக்கா  போரவங்க எல்லாம் காப்பசீனோ குடுச்சிட்டு கால் நீட்டி உக்காந்திருக்காங்கன்னு தப்பா நினைக்கிற ஆட்களில் நீங்களும் ஒருத்தரா இருந்தீங்கன்னா எங்க வாழ்க்கை பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க. ஒரு சராசரி இந்தியனின் தினசரி அமெரிக்க வாழ்வில் அவருக்கு பல பல முகங்கள். அவரே வீட்டு தலைவர்/தலைவி, அவரே காரோட்டி, அவரே வீட்டை பெருக்கி, துடைக்கும் ஆள், அவரே  துணிகளை இஸ்தரி செய்பவர், அவரே குழந்தைகளை பராமரிப்பவர், அவரே ப்ளம்பர், அவரே தோட்டக்காரர்....மொத்ததுல அவரே ஒரு பாவமான ஜீவன்.   இதுல அவர் எங்க காப்பசீனோ குடிச்சு காலை நீட்டறது ?

ஆனா இதே 'பேக்கு' என்று செல்லமா அழைக்கப்படும் அயல்நாட்டு இந்தியர்கள்  நம்ம ஊர் மக்கள் யாருக்காவது கஷ்டம்னு மட்டும் கேள்விப்பட்டாங்க அவ்ளோ தான்.  வரிஞ்சு கட்டிண்டு  உதவ கிளம்பிடுவாங்க.  எங்கயோ போய் உக்காந்துண்டு எப்படி உதவுவீங்கன்னு கேக்கறீங்களா?  வேறெப்படி நிதி திரட்டி தான்.  இதுல மட்டும் எங்களை மிஞ்சிக்க ஆளே கிடையாது.  ஆ,வூன்னா டென்ட் போட்டு நிதி திரட்ட கூடிடுவோம்.

ரெண்டு நாள் முன்னாடி அப்படி தான். போற வரவங்களை எல்லாம் வந்து 10 டாலரை இந்த கல்லாப்பெட்டில  போட்டுட்டு ஆசை தீர பாடுங்க, ஆடுங்க நாங்க ரசிக்கரோம்னு அடிச்சு சொல்லி எங்க ஊர் தமிழ் சங்கம் செய்த சூப்பர் ஏற்பாடின் படி கலை நிகழ்ச்சி நடத்தி, நிதி திரட்டி, தமிழ் நாட்டுக்கு வெள்ள நிவாரணியாய் அனுப்ப இருக்காங்க.  அமெரிக்காவின் எல்லா ஊருலேயும் தமிழர்கள் இது போல நிதி திரட்டி அவங்களால முடிஞ்ச உதவியை பண்ணறதா கேள்விப்பட்டேன்.  இந்த மனித நேயத்தை நினைச்சு பெருமை படாம இருக்க முடியலை.

எங்க ரிச்மண்ட் ஊர் மக்கள் இதோட விடுவாங்களா?  அதான் இல்லை. வெள்ளத்துல அடிச்சுண்டு போனது வீடு மட்டும் இல்லை, எல்லோரோட துணியும்னு யார் சொன்னாங்களோ தெரியலை.  உடனே அவங்க அவங்க அலமாரியை திறந்து கவுத்து போட்டு அவங்க போடற/போடாத, பிடிச்ச/பிடிக்காத. துணிகளை எல்லாம் அள்ளி போட்டு ஊருக்கு அனுப்ப தயாராகிட்டாங்க.  ஒரு வாரமா கர்ணப்பரம்பரைல வந்த அக்கம்பக்கத்து மக்கள் கொடுத்த துணி மூட்டைகளை பிரிச்சு அடுக்கினதுல என் தோழிகள் பலருக்கும் தூக்கத்துல கூட புடவையும், சல்வார் கமீசுமா கண் முன்னாடி வலம் வருதாம்.

பக்கத்து அறைல இருக்கற மிச்ச துணி மூட்டையை டப்பாவுல அடுக்கிட்டு அடுத்த வேலை வங்கிக்கு வந்த சாமியை மலை ஏத்தின குமரனுக்கு நைவேத்தியதுக்கு சர்க்கரை பொங்கல் செய்யறது தான்.

-மீனா சங்கரன் 

Tuesday, October 27, 2015

என்ன தான்.... என்னுதே என்னுது தான்

1. என்ன தான் பணக்காரனா இருந்தாலும்        கையில் அடி பட்டா டாக்டர் கிட்டே கைநீட்டி தான் ஆகவேண்டும்

2. என்ன தான் பெரிய வீரம் மிக்க ராஜாவா இருந்தாலும் முதுகு வலி வந்தால் வைத்தியரிடம் புறமுதுகு காட்டித்தான் ஆகவேண்டும்

3. என்ன தான் பெரிய பல் டாக்டரா இருந்தாலும் தன் சொத்தைப்பல் புடுங்க இன்னொரு பல் டாக்டரிடம் பல்லைக்காட்டித்தான் ஆகவேண்டும்

4. என்ன தான் பெரிய காமெடியனா இருந்தாலும் பேசினா நாலு பேர் நாலு விதமா சிரிக்கத்தான் செய்வாங்க

5. என்ன தான் பச்சை தண்ணி குடிக்காவிட்டாலும் சில பேர் பச்சை பச்சையாக பேசுவதும் உண்டு

6. என்ன தான் பெரிய Dr. டெய்லர் னு பேர் வெச்சிருந்தாலும் சில சமயம் போட்ட தையலை பிரித்துத்தான் ஆகவேண்டும்

7. என்ன தான் சிங்கம் னு பேரு வெச்சிருந்தாலும் அப்பா பேரு அரிமா என்று இருந்தால் அசிங்கம் ஆகிவிடும்

8. என்ன தான் மாதமாயிருந்தாலும் ஆடு எப்போதும் "மே" என்று தான் சொல்லும்

9. என்ன தான் சட்ட சபையில் ஸ்பீக்கரா இருந்தாலும் விரதம் இருந்தா மௌனமாகத்தான் இருக்க வேண்டும்

10. என்ன தான் படேல் னு பேர் இருந்தாலும் படேல் னு அடிச்சா வலிக்கத்தான் செய்யும்

Monday, October 26, 2015

மீனாவுடன் மிக்சர் 25: சுண்டலோ சுண்டல்!

உங்க ஊரை பத்தி எனக்கு தெரியாது ஆனா எங்க ஊர்ல வர வர நவராத்திரி பண்டிகை கிட்டத்தட்ட ஒரு ஒலிம்பிக் ஓட்ட பந்தயம் மாதிரி ரொம்பவே விறுவிறுப்பா தான் நடக்குது.  வருஷா வருஷம் மேலும் பல பல வீடுகள் ல  கொலு வைத்து எல்லோரையும் கூப்பிட்டு அசத்தறாங்க.  கூகிள் காலேண் டரே  எங்க கொலு schedule லை பார்த்து கதி கலங்கி போய் browser tab  ஐ இழுத்து மூடி படுத்துக்குதுன்னா பாருங்க.     

நவராத்திரி ஆரம்பிக்கருதுக்கு ஒரு பத்து நாளைக்கு முன்னாடியிலேர்ந்து வந்து குவிய ஆரம்பிக்கற கொலு பத்திரிகைளை சரி பார்த்து Excel spreadsheet ல போடறது தான் முதல் ஜோலி.   ஒரு ஏழு வருஷத்துக்கு முன் பத்து பேர் கூப்பிட்டுட்டு இருந்த நிலைமை மாறி இன்னிக்கு குறைஞ்சது ஒரு ஐம்பது பேர் வீட்டிலாவது கூப்பிடறாங்க.   துண்டு பேப்பர்ல எழுதி வச்சிண்ட காலமெல்லாம் மலை ஏறியாச்சு.  முன்னாடி மின்னஞ்சல்ல மட்டும் தான் பத்திரிகை அனுப்புவாங்க எங்க பெண்கள்.  ஆனா இப்பல்லாம் Evite , whatsapp மூலமா கூட அனுப்பறாங்க.  இது போறாதுன்னு  Kumon சென்டர் மற்றும் Kohls வாசல்ல எல்லாம் குங்குமச்சிமிழ் வச்சு நின்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்கன்னு வேற பேசிக்கறாங்க.   Spreadsheet உதவி மட்டும் இல்லைன்னா எத்தனையோ சுண்டல் பாக்கெட்டுகள் பல வீடுகள்ல சீந்துவார் இன்றி அனாதையா கிடக்கும். 

Spreadsheet ல நாள் வாரியா, zone வாரியா, நேரம் வாரியா  பிரிச்சு பிரிண்ட் ஔட் எடுத்து நிமிர்றதுக்குள்ள நாக்கு  வறண்டு ஒரு பன்னீர் சோடா கிடைக்காதான்னு ஏங்கி போய் நான் ஒரு சுத்து இளைச்ச மாதிரி இருக்கும் எனக்கு.  ஆனா பாருங்க முதல் நாள் புடவை கட்டறச்ச பாதி கை மட்டும் ஏறி வேலை நிறுத்தம் செய்யற  என் blouse அந்த நினைப்புக்கு  மிகப் பெரிய ஆப்பு ஒண்ண  சத்தமில்லாம வைக்கும்.   ஆனால் அதுக்கெல்லாம் அசர்ரதுக்கு நீங்க வேற ஆளை பார்க்கணும்.  

விக்ரமாதித்யன் கதைல வர்ற மாதிரி என் உயிர் நவராத்திரியின்  போது மட்டும் ஏழு தெரு தாண்டி, ஆறு மாடி ஏறி, அஞ்சு வீட்டுக்குள்ள இருக்கிற நாலு விதமான சுண்டல் ல தான் மறைஞ்சு இருக்கும். ஒன்பது நாளும் சுண்டல் பாக்கெட் வாங்குவதில்  எந்த ஒரு தடங்கல் வந்தாலும் இந்த மீனா பொங்கி எழுந்திடுவாங்கற உண்மை ஊர்ல பல பேருக்கு தெரியும்.   அஞ்சா நெஞ்சத்தோடு பாரதியின் புதுமை பெண் மாதிரி நிமிர்ந்து நின்னு எல்லாத் தடங்கல்களையும்  எதிர் நோக்கி வீர நடை போட்டு எனக்கு வர வேண்டிய சுண்டல் பாக்கெட்டுகளை கைபற்றர வரைக்கும்  நான் ஓயவே மாட்டேன்.   என்னை பெத்தவங்களுக்கு கூட இந்த விஷயத்துல என்னை நினைச்சு ரொம்ப பெருமை. 

நவராத்திரி ஒன்பது நாளும் மாலை மூணு மணிக்கு ஆரம்பிச்சா எங்க ஓட்டம் ஒரு பத்து மணிக்கு தான் நிக்கும்.  இந்த சீசன்ல எல்லா தெருக்களிலும் பட்டு புடவை கட்டி, நகை நட்டு போட்டு மங்களகரமா இருக்கற பெண்களால தான் அதிக டிராபிக் ஜாம்.   பல சமயம் 2 அல்லது 3 பேரா சேர்ந்து கூட கொலு ரௌண்ட்ஸ் போவாங்க.  நான் பார்த்த வரைக்கும் முக்கியமான ஒரு விஷயம் பாட்டு பாடலைன்னா எங்க ஊர் மக்கள் சுண்டல் கொடுக்கரதில்லை.  இதனால பாட தெரியாதவங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து மூளைபுயல் மூலமா (அதான் brainstorming) இதுக்கு ஒரு தீர்வு கண்டிருக்காங்கன்னு கேள்வி.  அதி புத்திசாலியான இந்திய பெண்கள் இப்ப பாடறதை கூட outsource பண்ணிடறாங்களாம் .  

இதை நானே போன வாரம் கண் கூடா பாத்தேன்.  ஒரு தோழி அவங்க வயதான அம்மாவை கூட கூட்டிகிட்டு தெரு தெருவா ஏறி எறங்கிட்டிருந்தாங்க.  ஒரு கொலு வீட்டுல நுழைஞ்சு 5 நிமிஷத்துல இந்த தோழி அவங்க அம்மாவை பாத்து, விவேக் பாஷைல சொல்லனும்னா, cute ஆ கண்ணடிச்சாங்க.  உடனே அவங்க அம்மா தொண்டைய செருமிகிட்டு டக்குனு பாடி கலக்கிட்டாங்க.  நான் அசந்தே போயிட்டேன்.  என்ன ஒரு மாஸ்டர் பிளான்!  கொலுவுக்கு பாடறது நீங்க நினைக்கறா மாதிரி ஈசியான வேலை இல்லை.  ஒரே ஒரு பாட்டை வச்சு தேய்க்க முடியாது.  நம்ம போற வீட்டுக்கெல்லாம் நம்ம பின்னாடியே ஒரு கும்பல் வருவாங்க.  ஒரே பாட்டை எல்லா இடத்துலயும் பாடினா நம்ம வண்டவாளம் ஊர் தண்டவாளத்துல அன்னிக்கு ராத்திரிக்குள்ளயே அமோகமா வளைய வரும்.  

நவராத்திரி முதல் நாளைக்கப்புறம் எங்க closet பக்கம் போகாம இருப்பது உங்க இருதயத்துக்கு தான் நல்லது.  வரிசையா தினமும் நாங்க உருவி போடற புடவைங்க வழிஞ்சு ஒரு மினி சுனாமியை ஞாபகப்படுத்தும்.  ஆயிரக்கணக்கில் குடுத்து வாங்கின பட்டு புடவைகளை நாங்க கூசாம ஒரு ஓரமா விட்டெறிவோம் இந்த ஒன்பது நாட்களும்.  பொதுவா கணவர்களுக்கு ரத்த கொதிப்பு அதிகமாவது இந்த சீசனில் தான்னு ஆராய்ச்சி பண்ணினால் யாராவது கண்டு பிடிக்கலாம்.  கொலு பொம்மைகளை கட்டி மேலே போட்டு  மூச்சு விட்டப்புறம் தான் நாங்க புடவை கடையை கவனிக்கவே  வருவோம்.   

இந்த வருஷம் நவராத்திரி முடிஞ்சு நாலு நாள் ஆச்சு.  வீடு புயல் அடிச்சு ஓய்ந்தாப்பல இருக்கு.  வீடு  வீடா ஏறி ஏறி கால் கழண்டு போச்சு.  சர்வ வியாதி நிவாரணியான Tylenol துணையோட என்னை மாதிரி பல பெண்களின் வாழ்க்கை மெதுவா அவங்களோட அன்றாட பாதைக்கு திரும்பிண்டிருக்கு.  வேர்கடலை, கொண்டைகடலை, பட்டாணி, பயத்தம் பருப்பு, கடலை பருப்பு, காராமணி, பச்சை பயறு இப்படி பலவிதமான சுண்டலை ஒன்பது நாளா மாத்தி மாத்தி சாப்பிட்ட திருப்தியில்(?), இனி ஒரு வருஷத்துக்கு சுண்டல் பேரையே யாரும் சொல்ல கூடாதுன்னு பல வீடுகளில் ஒரு புது விரதம் எடுத்திருக்காங்களாம்.


இதுக்கு மேல மொக்கை போட்டு உங்க பொறுமையை சோதிக்காம இந்த வருஷ நவராத்திரியின் இனிமையான நினைவுகளோடு உங்களிடமிருந்து விடை பெறுவது:

-மீனா சங்கரன். 

  இந்த ஆண்டு கொலுப் படங்களை பார்க்க இங்கே செல்லவும்.