நோபல் பரிசு
சமீபத்தில் உலக சமாதான நோபல் பரிசு வழங்கியதில் என்ன லாஜிக்? அவருக்கு அதைப் பெறுவதற்கு தகுதி உண்டா? அவர் என்ன சாதித்து அதைப் பெற்றார்? என்றெல்லாம் கவைக்குதவாத கேள்விகளைக் கேட்டு எதற்கு எல்லோரும் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. நோபல் பரிசு தனிப்பட்ட ஒரு நிருவனத்தால் தரப்படுவது. சமாதானத்திற்கு எப்போது அவர்கள் அண்ணல் மாகாத்மாவை 5 முறை தகுதியற்றவர் என்று நிராகரிக்க முடிந்ததோ அப்போதே அவர்கள் தரும் விருதைப் பெறாதவர்கள் ஒன்றும் சோடை போனவர்கள் இல்லை என்பது தெளிவாகிறது.
ஆனால் இந்த விருதை சமீபத்தில் அறிவித்த உடன் எனக்கு நினைவுக்கு வந்தது சென்னை அண்ணா மேம்பாலம் அருகே இரு புறமும் இரண்டு குதிரைகளை இருவர் இழுத்து பிடித்தது போல இருக்கும் இரு சிலைகள்தான். அதில் ஒரு வாசகம் எழுதியிருக்கும் ‘தமிழக அரசு குதிரைப் பந்தயத்தை நிறுத்துவதாக முடிவு செய்ததை ஒட்டி இந்த சிலைகளை முதல்வர் ..... திறந்து வைக்கிறார்’ என்று, அந்த சிலைகளைத் திறந்து வைத்த பிறகு சாதாரணமாக இருந்த குதிரைப் பந்தயம் ஜாம் ஜாம் என்று இன்றளவும் நடந்து வருகிறது. அந்த கேலிக்கூத்துக்கும் இதற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.
இந்த பரிசு அறிவிப்பு தவறு என்றால், அண்ணாத்துரை என்ற ஒரு 3ம் தர பேச்சாளர் எப்படி கழிசடை கழகங்களால் பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்பட்டாரே அது சரியா? சாதாரண கல்லூரி ஆசிரியர் அன்பழகன் எப்படி பேராசிரியர் ஆனாரே அது சரியா? இந்தியப் படங்களில் மட்டுமே நடிக்கும் கமலஹாசன் உலகநாயகன் என்று பட்டம் பெற்றாரே அது சரியா? விரல் சொடுக்கும் சிம்பு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று சின்னபுள்ளத் தனமா ஆனாரே அது சரியா?, தமிழில் காமத்துப் பாலை மட்டும் கரைத்துக் குடித்த கருணாநிதி முத்தமிழ் வித்தகராக ஆனாரே அது சரியா? நடிப்பு என்றால் சிவாஜி, சிவாஜி என்றால் நடிப்பு என்று இருந்தாலும் அவருக்கு இந்தியாவிலேயே விருது தர மனமில்லாத கேடு கெட்ட அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக ரிக்ஸாகாரன் என்ற திராபைபடத்தில் மகா திராபையாக நடித்து சண்டை காட்சிகளில் மட்டும் தூள் கிளப்பிய எம்.ஜி.ஆருக்கு பாரத் பட்டம் கொடுத்தது சரியா?
இதெல்லாம் சரி என்றால் இந்த வருட சமாதான நோபல் விருது இவருக்கு வழங்கப் படுவதும் சரிதான்.
சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவர்,“ஜிம்மி கார்டருக்கு தந்தார்கள், அல் கோருக்கு தந்தார்கள் அதைப் பற்றியும் எழுது” என்று கேட்டார், “ஜிம்மி கார்ட்டருக்கு நம்மூர் மேல்சபை பதவியை தருவது போல தந்தார்கள், அல் கோருக்கு வழங்கியது அவர் சார்ந்த கட்சி இணைய தளத்தை கண்டு பிடித்ததை நமக்கு தெரிவித்ததற்காக தந்திருக்கலாம் அது இதயம் இனித்தது, கண்கள் பனித்தது டைலாகிற்கு சமம்” என்றேன். “அப்படியா சரி, யாசர் அராபத் போன்ற தீவிரவாதிக்கு எப்படி தந்தார்கள்” என்று கேட்டார் அதற்கு என்னிடத்தில் பதில் இல்லை, உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
இலங்கையில் இந்திய (தமிழக) நாடாளுமன்ற உறுப்பினர்களின் விஜயம்.
இது என்ன் லாஜிக் என்று எனக்குத் தெரியவில்லை. இதனால் இந்திய அரசியலின் லாஜிக் எனக்கு விளங்கி, தமிழக அரசியலின் லாஜிக் மட்டும் விளங்கவில்லை என்று சொல்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். ரெண்டு லாஜிக்கும் குப்பை என்பது எம் கருத்து.
ஒரு புறம் ஆயுத உதவி, மறு புறம் அப்படி எதுவும் இல்லை என்ற டைலாக். மத்திய அரசில் பங்கு வகிக்கும் தமிழக முக்கிய கட்சியான தி.மு.க தனக்கு எதுவும் தெரியாது என்ற ரீதியில் ஒரு டைலாக் ஒரு நாள், 50 வருடங்களாக எனக்கு தூக்கமே இல்லை என்று ஒரு டைலாக் மறுநாள், என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லையே, என்ன செய்வது என்று யாராவது சொல்லுங்களேன் என்று கண்ணீர் மல்க டைலாக் அடுத்தநாள், இவர் ஒரு தமிழினத் தலைவர், இவர் ஒரு முத்தமிழ் காவலர், நவீன சாணக்கியர், பலம் பொருந்திய ராஜ தந்திரி என்று தினமும் இவருக்கு அள்ளக்கைகளின் பாராட்டுகள். “சீசீ நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு” என்று ஒரு ஏழைக்கவிஞன் பாடியது இவர் போன்றவர்களைப் பற்றித்தான் என்று நீங்கள் நினைத்தால் அது என் தவறல்ல.
இனி தொடங்கிய தலைப்புக்கு வருவோம். இந்த குழு சொல்லி வைத்து சென்றதனால், அங்குள்ள தமிழர் முகாம்களில் பல ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்க முடியும், இருந்தாலும் இலங்கை அரசாங்கம் இவர்கள் வருகையை தடைசெய்யாததே பெரிய விஷயம். அங்கு சென்ற அனைவரின் ஒருங்கிணைந்த ஒரு செய்தியோ அல்லது வெள்ளை அறிக்கையோ வெளிவருவதற்குள், காங்கிரஸ் எம்.பி, சுதர்சன நாச்சியப்பன் முந்திக்கொண்டு வவுனியா ஆட்சியாளரை பாராட்டி ஒரு பெரிய பாராட்டு பத்திரம் வாசித்ததே, ஏதோ ஒன்று சரியில்லையே என்று எண்ணத் தோன்றுகிறது. அங்கு சென்ற திமுக எம்.பிகள் டி.ஆர்.பாலு, கனிமொழி போன்றோர் வழக்கம் போல உளறி விட்டு வந்திருக்கிறார்கள். நல்லவேலை தொல். திருமாவளவன்ஏதும் பேசாமல் வந்திருக்கிறார். அவரை பேச விடவில்லை என்றும், அவர் தமிழர்களை சந்திக்கவும் சிங்கள ராணுவம் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், அது சரியானதே. இல்லையெனில இலங்கை வாழ் தமிழர்களுக்கு பால், தேன் எல்லாம் ஆறாக வரப்போகிறது என்ற அளவில் ஏதாவது டைலாக் விட்டிருப்பார், அது தவிர்க்கப் பட்டது நல்லதே.
எப்படி இவர்களால் அசராமல், சளைக்காமல் உளற முடிகிறது, கேட்பவர்கள் கேணையர்கள் என்று எப்படி இவர்களால் தானாகவே ஊகம் செய்து கொள்ள முடிகிறது என்பது எனக்கு புரியாத ஒன்று.
சீன எதிர்ப்பு.
இந்திய ப்ரதமர் இந்தியாவின் மாநிலமான அருணாச்சல் ப்ரதேசம் சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்துஇந்தியாவுக்கான சீனத் தூதரை இன்று அழைத்த வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கண்டனத்தைத் தெரிவித்தது.
இந்தியாவின் ஒரு பாகமான அருணாச்சல் ப்ரதேசத்தின் கலாச்சாரம் சீன கலாச்சாரத்தின் சாயலுடன் இருப்பதால், அது அவர்கள் நாட்டுக்குச் சொந்தம் என்பது சீனாவின் வாதம். எங்கள் வீட்டுக்கு அருகே ஒரு சிறிய வீட்டில் நேபாள நாட்டு கூர்க் குடும்பம் வசித்தார்கள். அவர்கள் இன்றுவரை இரவு காப்பாளர்களாக எங்கள் ஊரில் ரோந்துக்கு செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் பார்ப்பதற்கு சீனர்கள் போலவே இருப்பார்கள், அதனால், நாமும் சீனர்களை நம் ஊருக்கு வந்து இரவு ரோந்துக்கு செல்லும்படி சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் சீனாவுக்கு நமது அருணாச்சல ப்ரதேசத்தின் மீது இருக்கும் உரிமை.
மன்மோகன் சிங்கின் அருணாசசல ப்ரதேச விஜயத்தை கண்டிக்கும் சீனாவின் போக்கு எவ்வளவு அபத்தம் மற்றும் தவறான செயல் என்பதை சீனா கண்டிப்பாக உணரப்போவதில்லை. அவர்களுக்கு அதை உணர்த்த இந்தியாவும் முயலப்போவதில்லை. ஆனால் இந்தியா சீனாவுக்கு இதை உணர்த்த இரண்டு செயல்களைச் செய்தால் போதும், ஒன்று, அவர்கள் நாட்டு தூதுவரை திரும்ப செல்லுமாறு பணித்தல், இரண்டு, அவர்கள் நாட்டு இறக்குமதிகளை காலவரையின்றி நிறுத்தி வைத்தல். அது நமது நாட்டு வியாபாரிகளின் முதலீட்டுக்கு ஆபத்து எனில், இனி சீனாவுடன் செயல்படுத்தப்படும் எந்த முதலீடுகளும் இந்திய அரசாங்கத்தின் பரிசீலனைக்குப் பின்பே நடைபெறவேண்டும், இதை இந்திய அரசாங்கம் வழக்கம் போல கால தாமதமாகச் செய்ய செய்ய, இந்திய வியாபாரிகள் வேறு நாட்டோடு இறக்குமதிக்கு ஏற்பாடுகளைச் செய்வார்கள், அது சீனாவுக்கு சரியான அடியாக இருக்கும்.
சீனாவின் இந்த விதமான அட்டூழிங்களைப் பார்க்கும் போது, இரண்டாம் உலகப்போரில் உலகத்தையே கண்களில் விரல் விட்டு ஆட்டிய ஜப்பானியர்கள் அதற்கு முன் சீனாவின் பெரும் பகுதியை தன் கட்டுக்குள் வைத்திருந்து ஆட்டிப் படைத்ததை மறந்து விட்டார்கள் போலிருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் அமெரிக்கா/இங்கிலாந்துடன் போரில் இறங்கியதை நாமும் மறந்து சீனாவை சற்று கதறடியுங்கள் என்று சற்று சுதந்திரமாக விட்டால் போதும், சீனாவின் அட்டூழியங்களுக்கு ஒரு முடிவு கட்டி விடுவார்கள்.
கடைசியாக தமிழகத்தில் சமீபத்தில் பெரும் சர்ச்சைகுள்ளான ஒரு நடிகையின் வாக்குமூலம் பற்றிய செய்தி ஒரு தினசரி பத்திரிகையில் வந்த சம்பவம் பற்றி என்னை ஒரு நண்பர் எழுதச் சொன்னார், அது பல தமிழ் பத்திரிகைகளில் அடிக்கடி வரும் ஒரு செய்திதான் அது இந்த தினசரியில் வந்ததுதான் தவறே தவிர, செய்தி அல்ல. இதற்கு மேல் இந்த செய்தியை பற்றி விவாதிப்பது என் தரத்துக்கு உகந்தது அல்ல.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....