Sunday, April 01, 2018

முதிர்ச்சி

வேட்டி அணிவதை
தொலைத்ததில் இருந்து
வேலியில் ஓணான்களையும் காணோம்.

Sunday, March 25, 2018

பசியாறல்


அடிக்கடி என் மலேசிய நண்பர்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்வதே பிழைப்பாய் போய்விட்டது.

சில வருடங்களுக்கு முன் இங்கு வசித்துவந்த ஒரு மலேசியத் தமிழ்த் தம்பதிகள் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரிச்மண்ட் வந்திருக்கிறார்கள். அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது நாளைக்கு பசியாறைக்கு என்ன பண்ணலாம் என்று கேட்டார்கள். அது என்ன பசியாறல் என்றேன். அங்கிருந்த அனைத்து மலேசியர்களும் என்னை ஆச்சரியமாகப் பார்த்து தெரியாதா - நாங்கள் காலைஉணவை பசியாறல் என்போம். பசி ஆறுதல் என்பதை சுருக்கமாக அப்படி சொல்வோம் என்றனர்.

இது breakfast என்பதனை அப்படியே தமிழாக்கம் செய்தது போல இருக்கிறதே என்றேன்.

நீங்கள் என்ன சொல்லுவீர்கள் என்று அந்த நண்பர் கேட்டார்.

நானும் தங்கமணியும் ஒரேகுரலில் சொன்னோம்.

டிபனு...

இப்போது  அந்த இருவரும்  கடும் வயிற்றுவலிக்காக  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Saturday, March 24, 2018

பள்ளிக்கூடம்

ஆப்பிள் (Android) ஏந்தும் கையில் ஆயுதம் எதற்கு 

ஆடிப்பாடி மகிழ்ந்து
அன்பில் திழைத்து 
புத்தகங்களில் புதைந்து
நட்பைச் சுவைத்து
ஆனந்தத்தில் மூழ்கி
அனுபவிக்கும் வயதில்
தன்னயும் மாய்த்து
தன்னைப் போல் பலரையும் மாய்த்துக்
கனவுகளை கல்லறையில் புதைத்து
கண்ணீர்க் குருதி ஆறாய்ப் பாய 
மனதில் பயத்தோடு தினமும் ....


பள்ளிக்கு

Thursday, March 08, 2018

மகளிர் தின வாழ்த்து



எல்லையில்லாத் தொல்லைகளை 
வில்லைகளாக விழுங்கியும்
முல்லைகளாகச் சூடியும்
புன்னகையால் புறக்கணித்தும்
வெற்றி காணும்
பெண்களுக்கு

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 🎊😃

Sunday, February 18, 2018

காதல் திங்கள்

[9:28 PM, 1/31/2018]
காதலர் தினம் இருக்கும் பிப்ரவரி முழுவதையும் "காதல் திங்கள்" என தினம் ஒரு காமத்துப் பால் குறளைக் கொண்டு கொண்டாடினால் என்ன என்று தோன்றியது.

வள்ளுவர் மிகப்பெரும் காதலராக இருந்திருக்கிறார். விதம் விதமாக காதலியை வருணனை செய்கிறார். இவளால் உண்டான காதல் பிணிக்கு இவளே மருந்துன்னு புலம்பறார். நான் பார்க்கும் போது வேற எங்கியோ நிலத்தைப் பார்க்கறா, நான் பாக்காத போது என்னையவே பார்த்துகிட்டு மெல்ல சிரிச்சுக்கறா-ன்னு பட்டைய கிளப்பி இருக்கிறார். பிரிவுத்துயர் தாங்காம வாடி வாதங்கறார். இன்னும் விதம் விதமா காதலிச்சு இருக்கார்.

நாடுன்னா எப்படி இருக்கணும், மன்னன் என்ன செய்யணும்/கூடாதுன்னு கண்டிப்பான ஆசானாக இருந்தவர் பெரும் காதலராக உருகியும் இருக்கார்.

நாம் இத்திங்கள் முழுதும் தினம் ஒரு குறளாக பார்க்கலாம்.

காமத்துப் பாலில் 2 "இயல்கள்" (categories) இருக்கின்றன‌. களவு & கற்பு.
பிப்ரவரி 14வரை களவியலில் இருந்தும், மீதி 14 நாட்களுக்கு நல்ல பிள்ளைகளாக கற்பியலில் இருந்தும் தினம் ஒரு குறளென பார்க்கலாம்.

குறளை அதன் மூல வடிவில் எடுத்து நாமே படித்து புரிந்து கொள்வோம். கண்டிப்பா வள்ளுவர் கோவிச்சுக்க மாட்டார்.

--------------------------------------------------
[7:19 AM, 2/1/2018]
காதல் திங்கள்

தலைவன் தனிமையில், இரவில், காதல் தலைக்கேறிய நிலையில் வானைப் பார்த்தபடி சொல்கிறான். இந்த விண்மீன்கள் எல்லாம் ஒரு இடத்தில் நிற்காம அலையுதே, நம்மவளின் முகத்தைப்  பார்த்திட்டு எது உண்மையிலேயே நிலவுன்னு அறியாமல் இப்படி அலையுதோ. அப்படிங்கறான்.

அவள் முகம் நிலவுக்கு இணையாக இவனுக்கு மட்டும் தெரியலையாம். விண்மீன்களுக்கும் குழப்பம் ஆகி இரண்டில் எந்த நிலா பக்கத்தில் நாம இருக்கணும்-ன்னு தெரியலையேன்னு கலங்கிப் போய் அலையுதாம்.

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்

மதியும் மடந்தை முகனும் அறியா = நிலவும் பெண்ணின் முகமும் (வேறுபாடு) அறியா
பதி = நிலை
பதியின் கலங்கிய = நிலையில் இருந்து குழம்பிய  
மீன் = விண்மீன்

இன்னொரு முறை மெதுவாக குறளைப் படித்துப் பாருங்கள். முழுதும் புரிகிறது.
--------------------------------------------------


[7:01 AM, 2/2/2018]
காதல் திங்கள்

காதலியின் பாதத்தின் மென்மையைச் இப்படிச் சொல்கிறான்:

அனிச்ச மலர், அன்னத்தின் இறகு போன்றவை எல்லாம் அவள் பாதத்தின் மென்மையை ஒப்பிடுகையில் நெருஞ்சி முள் மாதிரி. அவ பாதம் அம்புட்டு மெத்து மெத்துன்னு இருக்கு.

இதைச் சொல்கையில் "முள்"-ன்னு சொன்னா கூட அவளுக்கு வலிக்கும்னு நெருஞ்சிப் "பழம்"-ன்னு சொல்றாரானாம் தலைவன்.

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

தூவி = இறகு
அடி = பாதம்
--------------------------------------------------


[9:07 AM, 2/3/2018]
காதல் திங்கள்

இருவருக்கும் இடையே காதல் அரும்பிவிட்டது. அவன் பார்க்கும் போது அவளும் பதில் பார்வை பார்க்கிறாள். இவன் பதற்றம் அடைகிறான். நெஞ்சம் குறுகுறுக்கிறது. அவளைச் சந்திக்க விரும்புகிறான்.
ஒரு நாள், எதிர்பாராமல் பொதுவில் சந்திக்கின்றனர். மீண்டும் பார்வை. இம்முறை அவள் இன்னும் கனிவாக, காதலுடன் பார்க்கிறாள். இவனுக்கு தெளிந்து/தெரிந்து விடுகிறது. காதலை ஏற்றுக் கொண்டுவிட்டாள் என மிக மகிழ்கிறான். பின், தோழனிடம் இது பற்றி விவரிக்கிறான்.

மை வெச்ச கண்ண வெச்சுகிட்டு இவ பார்க்கிற பார்வை இரண்டு வகைடா.
முதல் பார்வை என்னைப் பைத்தியம் ஆக்கிருச்சு. அந்த இரண்டாவது பார்வையில தான் தெளிஞ்சேன். அந்த இரண்டாவது பார்வைதான் தெளியவெச்ச மருந்தே. அப்படிங்கறான்.

இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து

நோக்கு  = பார்வை
இவள்உண்கண் = இவள் + உண் + கண் = இவள் + (மை) உண்ட (மை பூசிய) + கண்

இப்போ, இப்படி படித்துப் பாருங்கள்:
இருநோக்கு இவள் (மை உண்ட) கண்ணில் உள்ளது.
ஒருநோக்கு நோய் நோக்கு. ஒன்று (இன்னொன்று) அந்நோய்(க்கு) மருந்து.
--------------------------------------------------


[1:55 AM, 2/4/2018]
காதல் திங்கள்

தலைவி சொல்றா: காதலர் என் நெஞ்சுக்குள்ள இருக்கார். அவருக்கு சுடும்ன்னு சூடான சாப்பாட்டை சாப்பிட பயந்துகிட்டு இருக்கேன்.

அவனைப் பார்க்காமல் அவளுக்கு சோறு இறங்கவில்லை. சாப்பிடாமல் இருக்க ஒரு காரணம் தேடுகிறாள். ஏன் தனக்கு சாப்பிடப் பிடிக்கவில்லைன்னா இந்த உணவு சூடா இருக்கு, அவர் நெஞ்சுக்குள்ளே இருக்கார், சூடா சாப்பிட்டா அவருக்கு சுடும். அதனால எனக்கு சாப்பாடு வேண்டாம் என்கிறாள்.

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து

நெஞ்சத்தார் காதலவர் ஆக = நெஞ்சில் உள்ளார் காதலர் ஆக.
வேய் = வெப்பம்.
வெய்துண்டல் = வெய்து + உண்டால் = வெப்பமாக உண்டால்.
அஞ்சுதும் = அஞ்சுகிறேன்.
வேபாக்கு = வெந்து போதல்.
--------------------------------------------------


[8:01 AM, 2/5/2018]
காதல் திங்கள்

இவர்கள் காதல் ஊராருக்கு தெரிந்து போய்விடுகிறது. எல்லோரும் கரிச்சு கொட்டறாங்க. அவளின் தாய் திட்டித் தள்ளறா. இதெல்லாம் காதலை தடுத்திடுமா என்ன?

அவளே சொல்கிறாள்: ஊரார் ஏச்சும் பேச்சுமே எங்கள் காதலுக்கு எருவாகிறது. எங்கம்மா பேசற பேச்சு இருக்கே, அது தான் எங்கள் காதல் பயிருக்கு நீராக உதவுகிறது. இந்தக் காதல் நோய் இவர்கள் பேச்சினாலேயே வளர்கிறது (நீள்கிறது).

கிட்டத்தட்ட இவர்களைத் திட்டுவோருக்கு எல்லாம் இவங்க காதலை வளர்த்தற்காக நன்றி சொல்றா.

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்.

ஊரவர் = ஊரார்.
கௌவை = தூற்றுதல் (திட்டுதல்)
நோய் = காதலைத்தான் அப்படிச் சொல்கிறாள்
--------------------------------------------------


 [7:13 AM, 2/6/2018]
காதல் திங்கள்

அவள் மீது ஈர்ப்பு கொண்டு பார்க்கிறான். அவன் பார்வைக் குறுகுறுப்பில் அவளும் முதல் பார்வை பார்க்கிறாள்.
இவனுக்கு இன்னும் ஊக்கம் மிகுந்து போய்விடுகிறது. தொடர்ந்து தவிப்புடன் அவளை பார்த்துக்கொண்டு இருக்கிறன். அவளுக்கும் குறுகுறுப்பு. மீண்டும் இவன் பக்கம் பார்வையைத் திரும்புகிறாள். அவ்வளவுதான். கிறுகிறுத்துப் போய்விடுகிறான்.
பின், தன் தோழனிடம் இப்படிச் சொல்கிறான்.

நான் பார்க்கையிலே அவ பார்த்தா பாரு ஒரு பார்வை..
பார்வையிலேயே இவள் போட்டு தாக்கு தாக்குனு தாக்கறது பத்தாதுன்னு ஒரு தேவதை படையோட வேற வந்து தாக்கற மாதிரி இருந்துச்சு.

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து

தாக்கணங்கு = தாக்கும் அணங்கு
அணங்கு = தேவதை.
தானை = படை.
தானைக் கொண்டன்னது உடைத்து = படையைக் கொண்டு வந்தது.
--------------------------------------------------


[6:57 AM, 2/7/2018] 
காதல் திங்கள்

தலைவன் அல்லது தலைவி தங்களது காதலை தோழன் அல்லது தோழியிடம் சொல்வது போலவே பெரும்பாலான பாடல்கள் இருக்கும்.
இந்தக் குறள், இதுவரை அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்த நண்பன்/தோழி பேசுவது போல இருக்கிறது. அதுவும், அந்தத் தோழன்/தோழி நம்மிடம் சொல்வது போல.

வெளி உலகுக்கு காதலைச் சொல்வதற்கு முன், இருவரும் பார்த்துக்கொள்ளும் போது, தங்கள் காதலை மறைத்துக் கொண்டு யாரோ போல இருப்பதைதான் சொல்கிறாள்/ன்.

தோழி/தோழன்:   
     இவுங்க இரண்டு பேரும் எப்படியாப் பட்ட ஆளுக தெரியுமா?
பொது இடங்களில் பார்த்துக்கும் போது, ஒன்னுமே தெரியாதது போல, முன்ன பின்ன அறிமுகம் இல்லாதவங்க மாதிரி பார்த்துக்குறாங்க. என்கிறான்/ள்.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள

ஏதிலார் = முன் அறிமுகம் இல்லாதவர்.
காதலர்கண்ணே = காதலர்களிடமே.
--------------------------------------------------


[7:02 AM, 2/8/2018]
காதல் திங்கள்

இருவரும் மனம் ஒன்றி காதலில் உள்ளனர். ஆனாலும் இன்னும் வெளியே தங்கள் காதலைச் சொல்லவில்லை. பொது இடங்களில் பார்த்து கொள்ளும் போது இருவருக்குமே மகிழ்ச்சிதான் என்றாலும் பேசிக் கொள்ள முடியவில்லை. அப்போதெல்லாம் அவர்களது கண்கள் சந்தித்துக் கொண்டாலே போதுமாம். வாய் திறந்து பேசத் தேவை இல்லையாம்

இருவருக்குமிடையே ஆன எல்லா குறிப்புகளும் கண்ணோடு கண் இணை நோக்கினால் போதும், புரிஞ்சுடும்; வாய்ச்சொல் தேவையில்லை என்கிறார். களவியல் பாட்டு இது. அதிலும் "குறிப்பறிதல்" அதிகாரம்.

கவனிக்க வேண்டிய சொல்லாடல் "வாய்ச்சொற்கள்".
வாய்ச் சொற்கள் பயன் இல்லைன்னா, சொற்களானது கண்கள் மூலம் அவனை/அவளைச் சென்று அடைந்தனவாம்.

இப்போ இக் குறளை படித்துப் பாருங்கள்.

கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல
--------------------------------------------------


[7:13 AM, 2/9/2018]
காதல் திங்கள்

காதலன் சில நாட்கள் கழித்து அவளைக் காண வருகிறான். பணி நிமித்தமாகவோ வேறு காரணங்களுக்காகவோ அவளை சில நாட்களாக காணாதிருந்துவிட்டு இப்போது வருகிறான். அவ சண்டைக்கு வர்றா. என்னை மறந்திட்டியா? ஒருவாட்டியாவது என் நினைப்பு வந்துச்சா-ன்னு சண்டைக்கு வர்றா.

உன்னை மறந்தால் தானே நினைப்பதற்கு, இந்த சண்டை போடும் கண்ணை எப்படி மறப்பேன்னு கொஞ்சறான்.

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்

உள்ளுவன் = நினைப்பேன்
உள்ளுவன் மன் = உள்ளுவனோ என்பதை போல. நினைப்பேனோ. (நினைக்க மாட்டேன் என்று பொருள்)
யான் = நான்
மறப்பின் = மறந்தால்
மறப்பறியேன் = மறத்தல் அறியேன்
ஒள்ளமர் = ஒள் + அமர்
ஒள் = ஒளி
அமர் = போர் (சண்டை)
ஒள்ளமர்க் கண்ணாள் = ஒளி பொருந்திய சண்டை போடும் கண் கொண்டவள்

இப்படி படிச்சு பாருங்க:

உள்ளுவன்மன் யான் மறப்பின் = நினைப்பேனோ நான் மறந்தால்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்  மறப்பறியேன் = சண்டை போடும் (இந்த அழகிய) கண்ணாளை மறக்கமாட்டேன்.

இதேயே கரகாட்டக்காரன் படத்தில் "மறந்தால் தானே நினைக்கணும் மாமா" என்று பயன்படுத்தி இருப்பார் வாலி.
--------------------------------------------------


[8:56 AM, 2/10/2018]  
காதல் திங்கள்

இவர்கள் காதலை பற்றி ஊருக்குள் ஒரே பேச்சு. எல்லோரும் திட்டித் தீர்க்கறாங்க. ஊரார் பேச்சை அவன் ஒன்னும் பெரிசா எடுத்துக்கலை. ஆனால் இவளுக்கு எல்லோரும் இப்படி திட்டறாங்களேன்னு பதைப்பு. ஆனால், இதெல்லாம் எங்கள் காதலுக்கு மேலும் வலு சேர்க்குமே தவிர பாதிக்காதுன்னு நினைக்கிறாள்.

அதும் எப்படி..
"நெய்யை ஊற்றி நெருப்பை அணைக்க நினைக்கறது எப்படியோ அப்படி இருக்கு இவுங்க பேசி பேசி எங்கள் காதலை அணைத்து விடலாம் என நினைப்பது" அப்படிங்கறா. எல்லோரும் திட்டி பேசப் பேச, எங்கள் காதல் மேலும் மேலும் கொழுந்து விட்டு எரியும் என்கிறாள்.

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்

நுதுப்பேம் = அணைப்போம்.
எரி = நெருப்பு.
என்றற்றால் = என்று + அற்று + ஆல் = என்று + நினைப்பது.
கௌவையால் = தூற்றலால்.
--------------------------------------------------


[9:16 AM, 2/11/2018] 
காதல் திங்கள்

தலைவன் அவளை நினைத்துக் கொண்டே காட்டு வழியாக வருகையில் ஒரு குளத்தின் அருகில் வருகிறான். குளத்தில் குவளை மலர்களைப் பார்க்கிறான். குவளை ஒரு நீர்த்தாவரம். நீரில் மிதந்தபடி இருக்கும். அழகிய பூக்கள் இருக்கும்.
அந்தக் குளத்தில் அழகான பூக்கள், நீரில் மிதந்து கொண்டு வானைப் பார்த்த படி இருக்கு. அந்தப் பூக்களைப் பார்த்தவுடன் அவளுடைய கண்கள் அவனுக்கு நினைவு வருது.

அப்போ சொல்றான், "இந்தப் பூக்கள் மட்டும் என் காதலியின் மிக அழகிய கண்களை பார்த்துச்சு, நாம இவ்வளவு அழகா இல்லையேன்னு மனம் வருந்தி நிலம் நோக்கும்" என்கிறான். நீரில் வானம் பார்த்தபடி மிதந்து கொண்டிருக்கும் மலர்கள், வளைஞ்சு நிலத்தைப் பார்க்கற மாதிரி அதன் முகத்தைத் தொங்கப் போட்டுக்குமாம்.

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று

காணின் = கண்டால்
மாணிழை = மாண் + இழை = சிறந்த (மாண்பு) + இழை (அணிகலன்)
கண்ணொவ்வேம் = கண் + ஒவ்வொம் (ஒப்பாகமாட்டோம்)
--------------------------------------------------


[7:21 AM, 2/12/2018]
காதற்திங்கள்

முதல் முறையாக அவளோடு கூடியபின் அதை நினைத்து நினைத்து மகிழ்கிறான். பார்ப்பதெல்லாம் அழகாகத் தெரிகிறது. கள்ளுண்ட வண்டாக கிறுகிறுத்துப் போய் அலைகிறான். தானே பேசிக் கொள்கிறான், பார்க்கும் பொருட்களிடம் கூட தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான். அப்போது அவனது கண்ணில் மென்மைக்கு பெயர் போன அனிச்சம் எனும் மலர் படுகிறது. மென்மை என்றவுடன் அவள் உடல் தீண்டலின் போது அவன் உணர்ந்த மென்மை நினைவுக்கு வருகிறது.

அதனிடம் சொல்கிறான், "ஏய் அனிச்சம் பூவே, நீ நல்லா மென்மையாத்தான் இருக்கிற. நல்லா இரு; ஆனா உனக்கு ஒன்னு சொல்லாட்டா? என் காதலி, உன்னை விட மென்மையானவள், தெரிஞ்சுக்கோ" என்கிறான்.

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்

நன்னீரை = நன் + நீரை = நல்ல + தன்மையுடைய.
வாழி = வாழ்க (நல்லா இரு).
நின்னினும்  = நின்னை (உன்னை) காட்டிலும்.
மென்னீரள் = மென்(மை) + நீரள் (தன்மையுடையவள்).
யாம் = என்னால்.
வீழ்பவள் = விரும்பப்படுபவள் (காதலி).
--------------------------------------------------


[6:50 AM, 2/13/2018]
காதற்திங்கள்

அவளைத் தழுவுகிறான். காதலோடு காமமும் கலந்து மகிழ்ந்திருக்கிறார்கள்.
பின், அருகில் உறங்கும் அவளை ரசிக்கிறான். அவள் கையை எடுத்து நெஞ்சில் வைத்துக் கொண்டு அவள் வளையலைப் பார்த்துக் கொண்டே தனக்குள் சொல்கிறான்.

இவளைக் கண்டும் (ரசித்தும்), கேட்டும் (காதல் மொழியை பேசியும்), உண்டும் (முத்தமிட்டும்), முகர்ந்தும், அணைத்தும் மகிழ்த்தேனே,
"அழகு வளையல் போட்டிருக்கும் இவ கிட்ட, கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து, தொட்டு என என் ஐந்து புலனும் மகிழ முடியுது" அப்படிங்கறான்.

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள

உயிர்த்து = முகர்ந்து.
உற்றறியும் = உற்று + அறியும் = தீண்டி அறியும் = தொட்டு அறியும்.
ஒண்டொடி = ஒண் + தொடி = ஒளிரும் + வளையல் (அணிந்தவள்).
கண் = கிட்ட.
உள = இருக்கு.
--------------------------------------------------


[7:06 AM, 2/14/2018]
காதற்திங்கள்

அவளைச் சந்தித்து, மகிழ்ந்து, பின் தன் வீடு வந்த பின்பும் தங்கள் கூடலை நினைத்தவாறே சொக்கிப் போய் கிடக்கிறான். அவனுக்கு மீண்டும் அவளைப் பார்க்க வேண்டும், அவளோடு இருக்க வேண்டும் போல் இருக்கிறது. இருப்புக் கொள்ளவில்லை. அவனுக்கே தன் நிலை புதிதாக, புதிராக இருக்கிறது. என்னடா இது, நமக்கு புது வித நோய் வந்திருக்கிறது போல என்று சிரித்துக் கொள்கிறான். மற்ற நோய்களுக்கு ஏதேதோ மருந்துகள் உண்டு. இந்த நோய்க்கு மருந்து என்ன என்று அவனுக்குத் தெரியாதா என்ன..

அவனே சொல்கிறான் "பொதுவா நோய்க்கு மருந்து வேற பொருளாகத்தான் இருக்கும், இங்க மட்டும் இவளால் நான் கொண்ட நோய்க்கு இவளே மருந்து" என்கிறான். இவன் கொண்ட காதல்/காம நோயும் அவளே; அதற்கு மருந்தும் அவளேவாம்.

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து

பிணி = நோய்.
பிறமன் = பிற + மன் = வேறானவை
அணியிழை = அணி + இழை = அழகிய அணிகலன்கள் அணிந்த அவள்.
--------------------------------------------------


[7:02 AM, 2/15/2018]
காதற்திங்கள்

அவளைச் சந்தித்து சில நாட்கள் ஆகிறது. தவிக்கிறான், பிரிவில் வாடுகிறான். சில பல தடைகள் தாண்டி மீண்டும் எப்படியோ சந்தித்து விடுகிறான். அன்றும் அவர்களுக்கு மகிழ்ச்சியான பொழுதாக கழிகிறது. உடலும் மனமும் இவனுக்கு பூரித்துப் போகிறது.

அப்போது தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறான்:

 "என்னடா பொண்ணு இவ, இவளைத் தழுவும் போதெல்லாம் இவள் தீண்டலால் என் உடலும் மனமும் புத்துயிர் பெறுதே, இவளை அமுதத்தில் செய்திருப்பாங்களோ" என்கிறான்.

தழுவும் போது தோள்களை முதலில் அணைப்பதால் "தோள்" என்பதோடு முடிக்கிறார் வள்ளுவர். ஆனால் அவர் குறிப்பிடுவது மொத்தமாக அணைப்பதை.

உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்

உறுதோறு = உறும் + தோறும் = இணையும் + போதெல்லாம்.
தளிப்ப = தழைக்க.

இணையும் போதெல்லாம் உயிர் தழைக்க (வைக்கும்) தீண்டல் (வழங்குவதால்) (இந்தப்) பேதைக்கு
அமிழ்த்தில் இயன்ற (ஆன) தோள் (போல).
--------------------------------------------------


[6:22 AM, 2/16/2018]
காதற்திங்கள்

இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்கின்றனர். காதலும் காமமும் பெருகி ஓடுகிறது. அவளைக் கூடுகிறான், மகிழ்திருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் இது களவுக்காதலாகவே இருக்கிறது. எப்போதும் அவளுடனேயே இருக்க முடியவில்லை.அவளை விட்டு பிரிந்து வர வேண்டி உள்ளது. அப்படி பிரிந்து வரும் போது நினைத்துக் கொள்கிறான்.

"என்னடா இது, அவளை நெருங்கினால் மனது எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறது, நீங்கினால் இப்படிச் சுடுகிறதே. இப்படி, எங்கும் இல்லாத புது வித நெருப்பை எங்கிருந்து பெற்றாள்" என்கிறான்.

காமத்தீ அப்படித்தான் - நெருங்கும் போதும் எரியும், விலகும் போதும் எரியும். ஆனால் வழக்கமான நெருப்பைப் போல் இல்லாது வேறுபட்டு, விலகும் போது சுடும் நெருங்கினால் குளிரும் என்கிறார் வள்ளுவர்.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்

தெறூஉம் = தெறும் = சுடும்.
குறுகுங்கால் = குறுகும் + கால் = நெருங்கும் + போது.
தண் = குளிர் (எடுத்துக்காட்டு: தண்ணீர் = தண் + நீர் = குளிர்ந்த நீர்).
தண்ணென்னும் = தண் + என்னும் = சில் + என்னும்.
--------------------------------------------------


[7:54 AM, 2/17/2018]
காதற்திங்கள்

இவர்கள் இருவரும் மிகவும் மனம் ஒன்றி அடிக்கடி கூடி மகிழ்கிறார்கள். இவனுக்கு தலைகால் புரியவில்லை. தங்கள் உறவை, அவளை மிக மதிக்கிறான். அப்படியாக அவளோடு இருக்கும் ஒரு நாள், இவன் தோளில் சாய்ந்திருக்கும் அவள் கூந்தலைக் கோதிக் கொண்டே மனதுள் இப்படி நினைத்துக் கொள்கிறான்.

"விரும்பும் எந்தப் பொருளையும் அடைய அதற்காக காத்திருக்க வேண்டும். தேடிச் சென்றடைய வேண்டும். எதையெல்லாம் மிக விரும்புகிறோமோ அவை அனைத்தும் அவ்வப்போதே கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்குமோ அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது அழகிய பூச்சூடிய இந்த கூந்தல் அழகியை தழுவி இருக்கும் போது" என்கிறான்

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்

வேட்ட = விரும்பிய
தோட்டார் = தோட்டு + ஆர் = பூவிதழ் + அணிந்த = பூச்சூடிய
கதுப்பினாள் = கூந்தலை உடையவள்

கேட்ட பொழுதிலேயே அவையவை (அதெல்லாம்) (கிடைப்பது) போலுமே (போல் இருக்கிறதே)
பூச்சூடிய கூந்தல் (கொண்ட இவளது) தழுவல்.
--------------------------------------------------


[12:27 AM, 2/18/2018]
காதற்திங்கள்

இந்தப் பட்டியலில் உள்ளவை எவ்வளவு மன நிறைவைக் கொடுக்கும் என்று எண்ணிப் பாருங்கள்:
* சொந்த வீடு
* தன் உழைப்பில் திரட்டிய செல்வம்
* ஈகை குணம்
* நல்ல உணவை மகிழ்ச்சியோடு பகிர்ந்து உண்ணுதல்

இவை ஒவ்வொன்றுமே தனித்தனியாக பெரும் மன நிறைவைக் கொடுப்பவை. அனைத்தும் ஒன்றாக வந்தால்?

தன் வீட்டில், தன் உழைப்பில் சேர்த்த செல்வத்தில் வந்த உணவை, மகிழ்வோடு பலருடன் பகிர்ந்துண்டால் எவ்வளவு பெரிய மனநிறைவு வரும்? அப்படி இருந்ததாம் அவளோடு கூடிய போது.

பெரும் இன்பம் தருபவற்றை பட்டியலிட்டு அவை அனைத்தும் ஒன்று சேர பெற்றால் கிடைக்கும் பேரின்பம் போல் இருந்தது அவளோடு கூடிய பொழுது என்கிறான்.

இக்குறளில் வெறும் 7 சொற்களில் இவ்வளவு உவமைகள். இதில் "மா அறிவை"-ன்னு அவளுக்கும் ஒரு உயர்வு நவிச்சி.

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு

தம்மில் = தம் + இல் = தன + இல்லத்தில்
தமதுபாத்து = தமது + பாத்து = தனது உழைப்பில் வந்த
அம்மா அரிவை = அம் + மா + அறிவை = அந்த + மாந்தளிர் (நிறம் கொண்ட) + அரிவை (பெண்).
முயக்குதல் = தழுவுதல்.
--------------------------------------------------


[10:42 AM, 2/18/2018]
இக்குறளோடு களவியலை முடித்துக் கொள்வோம். நாளை முதல் கற்பியல்.