Showing posts with label கம்பர். Show all posts
Showing posts with label கம்பர். Show all posts

Friday, June 29, 2007

ஔவையார் vs [க|வ]ம்பர்

ஒரு நாள், சோழன் அவையில் புலவர் பெருமக்கள் பலரும் குழுமியிருந்தனர். அப்போது சொற் குறும்பினைத் தொடங்கினார் கம்பர்.

ஆரைக் கீரை ஒரு தண்டின் மேல் நான்கு இலைகளை உடையதாக விளங்கும். அதனை மனத்தே கொண்டார்.

ஔவையாரை ஆரைக்கீரையோடு ஒப்பிட்டு, 'ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ' என்று சிலேடையாகக் கூற, ஔவையார் கோபம் கொண்டார்.

கம்பரின் குறும்பினை புரிந்து கொண்டு அதே பாணியில் ஒரு பாடலைச் சொல்லி, அவரை வாயடங்கச் செய்தார். அந்தப் பாடல் இது.


எட்டேகால் லட்சணமே எமனே றும்பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே -- முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா ?


தமிழில் 'அ' என்பது எண் 8 ஐக் குறிக்கும். 'வ' 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் 'அவ' என வரும். இந்த மாதிரி எழுத்தையும், எண்ணையும் தொடர்பு படுத்தி, வார்த்தை விளையாட்டுக் கவிதைகள் எராளம் உண்டு அக்காலத்தில்.

"அவலட்சணமே ! எமனின் வாகனமான எருமையே ! அளவு கடந்த மூதேவியின் வாகனமான கழுதையே ! முழுவதும் மேற்கூரை இல்லாதுபோன வீடாகிய குட்டிச்சுவரே ! குலதிலகனான ராமனின் தூதனாகிய அனுமனின் இனமே ! அடே ! ஆரைக் கீரையைச் சொன்னாயடா !" என்று பொருள் பட பாடினார்.