Monday, June 25, 2012

செய்திகள் - ஒரு சிறு விளக்கம்

தமிழ்நாட்டுல ஆளுக்கொரு கதை, நாளுக்கொரு கதைன்னு சொல்லிட்டு இருக்கானுவ, சும்மா சின்னதா ஒரு பதிவு போட்ட ஒடனே ஆளாளுக்கு கம்பை எடுத்துகிட்டு அடிக்க வராங்க. 

போன பதிவை போட்டதும் ஒரு நண்பர், "என்ன பித்தன் பிஸினஸ் ஆரம்பிச்சுட்டரா, சொல்லவே இல்லை, நீயும் ஏதோ பிஸினஸ் ஆரம்பிச்சுட்டியாமே, அவர் பிஸினஸ் என்ன, உன் பிஸினஸ் என்ன, அவர் பிஸினஸ்ல பிஸின்னா  நீ பிஸியில்லையா? அதப் பத்தி அடுத்த பதிவுல எழுது.  இவர் பேசின அதே நாள் சாயங்காலம் இன்னொரு ஃப்ரெண்ட், "ஏய் என்னா? தமிழ்நாட்டுல நல்லாட்சி நடக்குதுன்னு உனக்கு யார் சொன்னாங்க, உனக்கும் தாத்தாவை பிடிக்காதுன்னா அந்தம்மா ஆட்சி நல்லாயிருக்குதுன்னு உன் கிட்ட சர்டிஃபிகேட் யார் கேட்டாங்க, அப்பால அசிங்கமா திட்டிடுவேன்" னு சொன்னார்.  சரி இவருக்கு இன்னிக்கு வீட்டுல ஏதோ ப்ரச்சனைன்னு விடலாம்னா, அடுத்த நாள் இன்னொரு நண்பி, "உன்னை வீட்டுல கண்டிச்சு வெக்கரதில்லை, பொம்பளைங்க நாங்க எவ்வளவு வேலை செய்யறோம், அதை விட ஆம்பளைங்க நீங்க என்ன செஞ்சிடரீங்கன்னு உங்களுக்கு ஒரு தந்தையர் தின கொண்ட்டாட்டம்?"  சரி இவங்களுக்கும் என் ஃப்ரெண்டுக்கு இருக்கர அதே ப்ரச்சனைதான்னு விட முடியலை.  அதனால இந்த தன்னிலை விளக்கம்.

பிஸினஸ்:
பித்தன் பிஸினஸ் ஒன்னும் பெரிசில்லை, அவர் ஒரு கம்பெனியில காண்ட்ராக்டரா வேலைக்கு சேர்ந்துட்டதாகவும், அதனால அவருக்கு ஆணிபுடுங்கர வேலை அதிகமாயிட்டதாகவும் கேள்வி.  என் பிஸினஸ்ங்கரது நானும் ஹரி வெங்கடேசனும் சேர்ந்து ஆரம்பிச்சிருக்கர ஒரு பிஸினஸ்.  ஃபோட்டோ மற்றும் வீடியோ கவரேஜ் செய்யர ஒரு சேவை (காசுக்குத்தான்).  ரிச்மண்ட்ல நாங்க ரெண்டு பேரும் பல நிகழ்ச்சிகள்ல ஃபோட்டோ எடுக்கரதையும், நான் அதோட வீடியோவும் எடுக்கரதையும் பார்த்து இருப்பீங்க, அதை கொஞ்சம் கமர்ஷியலா செய்யலாம்ன்னு முடிவு பண்ணி ரெண்டு பேரும் சேர்ந்து நியூவேவ் விஷுவல்ஸ் ன்னு ஒரு கம்பெனியை ஆரம்பிச்சு செய்யரோம்.  பிஸினஸ் இன்னும் சூடு பிடிக்கலை அதனால நான் இன்னும் பிஸியாகலை.  

தந்தையர் தினம் 
ஒரு சின்ன கதை, என்னை மாதிரி ஒருத்தன் வீட்டுல மனைவிக்கிட்ட வாய்சவடால் அடிக்கும் போது, "என்ன சும்மா பேசிட்டே இருக்க, நீ என்னை மாதிரி ஒரு நாளைப் போல ஆஃபீஸுக்கு போய் அங்க அடி ஒதை வாங்கி வேலை செஞ்சு மத்யானம் சாப்பிடக் கூட நேரமில்லாம திண்டாடி தெருப் பெருக்கி சாயங்காலம் வீட்டுக்கு வந்தா அப்ப நான் உன்னை மாதிரி வெட்டியா ஒரு வேலையும் செய்யாம ஜாலியா ஏசி காத்து வாங்கிட்டு, உன்னை பார்த்ததும் அத வாங்கினியா, இத வாங்கினியான்னு நொய் நொய்ன்னு பிடுங்கினா உனக்கு எவ்வளவு கோபம் வரும்"னு சொல்ல, அவன் மனைவி, "அப்படியா, சரி நான் ஒத்துக்கரேன், நீங்கதான் நம்ம வீட்டுல அதிகமா வேலை செஞ்சு உழைக்கரீங்க"ன்னு சொல்ல அந்தப் பயலும் ஏதோ சாதிச்சுட்ட மாதிரி அடுத்த நாள் வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தான்.  

வீட்டுக்குள்ள வந்தா, வீடு கந்த கோளமாயிருந்தது.  வீடு முழுசும் குழந்தைங்க விளையாட்டு சாமான்கள் கிடந்தது, கிட்சன் சிங்க்ல, டைனிங் டேபிள்ள எல்லாம் பாத்திரங்கள் எதுவும் தேய்க்காம அப்படியே இருந்தது, அங்கங்க குழந்தைங்க சாப்பிட்ட சாப்பாடு தரைல சிந்தியிருந்தது, ஒரு இடத்துல தண்ணி கொட்டி துடைக்காம அப்படியே இருந்தது, டாய்லட்ல ஃப்ளஷ் பண்ண முடியாம ஒரு டாய் உள்ள கிடந்தது, குழந்தைங்க செருப்பு, ஷு எல்லாம் அங்க இங்கன்னு இரை பட்டு கிடந்துச்சு. ஃப்ரிட்ஜ்ல பால் கொட்டி துடைக்காம இருந்துச்சு.  சரி அவன் பெண்டாட்டிக்கு இன்னிக்கு மூடு சரியில்லைன்னு மாடிக்குப் போய் அவன் ரூம்ல டிரெஸ் சேன்ஜ் பண்ணலாம்னு போனா, அங்க பெட் கலைஞ்சு கிடந்துச்சு, தலைகாணிங்க எல்லாம், பெட் ரூம்ல மூலைக்கொன்னா கிடந்துச்சு.  அழுக்குத் துணிமணிகள் தோய்க்காம அப்படியே காலைல அவன் போட்டுட்டு போனது போட்ட படியே கிடந்துச்சு. கோபமா கீழ வந்து "ஏய் என்ன அப்படி உனக்கு கோபம் வீடு இப்படி தாறுமாறா கிடக்கு, நமக்கு கல்யாணம் ஆகி இந்த 10 வருஷத்துல ஒரு நாள் கூட வீடு இப்படி இருந்ததில்ல அப்படி என்ன ஆச்சு இன்னிக்கு"ன்னு கேட்டான் அதுக்கு அந்த மனைவி கூலா, "ஒன்னும் இல்லை நான் நீங்க சொன்ன மாதிரி இன்னிக்கு ஒரு நாள் வீட்டுல ஒரு வேலையும் செய்யாம ஏசி காத்து வாங்கிட்டு சும்மா இருந்தேன் அதான் வீடு இப்படி இருக்கு"ன்னா.  அப்பதான் அவனுக்கு புரிஞ்சுது அவன் வெளில வாசல்ல போய் எவ்வளவு வேலை செஞ்சாலும் அதுக்கு ஏத்த கூலி அவனுக்கு கிடைக்குது, ஆனா வீட்டுல நாள் முழுதும் வேலை செய்யர பெண்களுக்கு என்ன கூலி கொடுக்கரோம் சொல்லுங்க.  அதனால நான் எழுதினதுல இருக்கர காமெடி நிறைய பேருக்கு போய் சேரலைன்னு நினைக்கரேன்.  நான் என்னை மாதிரி இருக்கர ஆம்பளைங்க வீட்டு வேலைன்னு சொல்ற அத்தனையும் லிஸ்ட் போட்டு காட்டிட்டேன் அதத் தாண்டி ஒரு லட்சம் வேலை நம்ம வீட்டு பெண்மணிகள் செய்யராங்கங்கரதையும் சொல்லியிருக்கனும்னு இப்போ தெரிஞ்சுண்டுட்டேன்.   கொஞ்ச நாள் முன்னாடி நான் கொலு பத்தி ஒரு பதிவு எழுதியிருந்தேன் அதுல இல்லாள் எப்படி இருக்க வேண்டும்னு ஒளவையார் எழுதியிருந்த ஒரு பாட்டை பத்தி சொல்லிருந்தேன் அந்தப் பாட்டு:

இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.

அதாவது, இல்லாள் - மனைவி வீட்டிலிருந்தால் இல்லாதது எதுவும் இல்லை, அவளே இல்லாளாக இல்லாமல் இருந்தால் அந்த இல் (வீடு) புலி இருந்த குகை போல இருக்கும்.   இதுல ஒளவையார் சொல்ற இல்லாள் அதாவது இல்லத்தை - வீட்டை ஆள்பவள் ஒரு பெண் அதுவும் அவள் அகத்திருக்க, அதாவது இல்லம் - வீடு என்ற ஒன்றுக்கு கட்டுப் பட்டு இருப்பவள் என்றால் அந்த வீட்டில் இல்லாதது எதுவும் இல்லைன்னு சொல்றாங்க. நல்ல வேளை இந்தப் பாட்டைப் பாடினது ஒரு பெண் கவிஞர், ஒரு ஆண் பாடியிருந்தா அவ்வளவுதான் அந்த ஆள உண்டு இல்லைன்னு பண்ணியிருப்பாங்க. 


ஜெயலலிதாவின் ஆட்சி.
எனக்கு இந்தம்மாவோட ஆட்சி தாத்தாவோட ஆட்சியை விட 100 மடங்கு பெட்டர்ங்கர அபிப்ராயம்.  தாத்தா நல்லா தமிழ் பேசராரு அதனால அவர் எனக்குப் பிடிக்கும்ன்னு சொல்ற சில பேர் ரிச்மண்ட்ல இருக்காங்க, அவங்களுக்கு அவரோட சுயநலம் தெரியலை, அவரோட ஊழல் தெரியலை, அவரோட பல கெட்ட குணாதிசயங்களைத் தெரியலன்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்ன்னு தெரியலை.   அதே சமயம், சமீபத்திய இடைத் தேர்தல்ல அந்தம்மாவோட கட்சியும் பணத்தை வாரி செலவு பண்ணியிருக்காங்கன்னு தெரியுது, ஆனாலும் இன்னமும் அந்தம்மா, பல விஷயங்கள்ள தொலை நோக்கோட செய்யராங்கன்னு என்னோட கருத்து.  பித்தன் இதை பத்தி படிச்சுட்டு "கொஞ்சம் அரசியல் பத்தி எழுதாம வழக்கம் போல கதை, டிராமா, இலக்கியம்னு எழுத வேண்டியதுதானே ஏன்  இதைப் பத்தி எழுதி கேவலப் படரே"ன்னு சொல்லிட்டதால் இனிமே 'நோ அரசியல்'.

முரளி இராமச்சந்திரன்.


Monday, June 18, 2012

வர்ஜினியா டென்னிஸ் சாம்பியன்


ரிச்மண்ட் தமிழ்ச் சங்க  சிறுவன் ஒருவன் இந்த வருடம் டென்னிஸில் சாதனை படைத்திருக்கிறான். கடந்த ஜூன் 10-ம் தேதி  நடைபெற்ற வர்ஜினியா மாநில உயர்நிலைப் பள்ளி டென்னிஸ் இறுதிப் போட்டியில் இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறான் பரணி சங்கர். நமது சங்க உறுப்பினரான பிருந்தா, சங்கர் தம்பதிகளின் மூத்தப் புதல்வன் பரணி சங்கருக்கு மாநில இறுதிப் போட்டி ஒன்றும் புதிதல்ல. சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சங்க போட்டி என்று எண்ணுமளவு இரட்டையர் இறுதிப் போட்டியில் நமது சிறுவர்கள் மூவர் ஆடியதை பற்றி இங்கே படிக்கலாம். அந்தப் போட்டியில் இழந்த கோப்பையை இந்த ஆண்டு வெற்றிகரமாக கைப்பற்றியிருக்கிறான் பரணி.

டீப் ரன் பள்ளி இரட்டையர் போட்டியில் வெற்றி வாகை சூடிய செய்தியை இந்தத் தளத்திலும், டீப் ரன் பள்ளியின் தளத்திலும் படிக்கலாம்.

மே மாதத்தில் ரிச்மண்ட் டைம்ஸ் டிஸ்பாட்ச் செய்தித்தாளின் 'இந்த வார சிறந்த விளையாட்டு வீரன்' பரணி சொல்வதை நீங்களே கேளுங்கள்.


இந்த ஆண்டு கல்லூரி செல்லும் பரணிக்கு மேன்மேலும் வெற்றிகளைக் குவிக்க எங்கள் வாழ்த்துக்கள்!

Sunday, June 17, 2012

செய்திகள் வாசிப்பது முரளி

செய்திகள் வாசிப்பதுன்னு எழுத ஆரம்பிச்சதும் அடுத்து என்ன சொல்றதுன்னு தெரியலை அதனால குன்சா ஏதோ போட்டிருக்கேன்.  என் சின்ன வயசுல ஆல் இந்தியா ரேடியோல ஒருத்தர் நியூஸ் படிப்பாங்க, கொஞ்சம் ஆம்பளை குரல்ல கர கரன்னு 'செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணஷ்வாமி'ன்னு சொல்லுவாங்க அது ஞாபகம் வந்தது, சரி அப்படியே சொல்லலாமேன்னு ஆரம்பிச்சேன்.  எந்த செய்தியைச் சொல்றதுன்னு யோசிச்சதும், சும்மா 4-5 விஷயம் டக்குன்னு மனசுல வந்துச்சு.  யாரும் என்னோடு போன பதிவுக்கு 'யோவ் நிறுத்துய்யா"ன்னு சொல்லலை, நாகு மட்டும் வழக்கம் போல வந்து கமெண்ட் போட்டுட்டு போயிட்டார் அதனால உங்க தலையெழுத்து நல்லா அனுபவியுங்க.  இந்தப் பய சும்மா இல்லாம் நம்மள இழுத்து விட்டுட்டானேன்னு தலைவர், மசலா டீன்னு ரேக்கி விட்டிருக்காரு.

தந்தையர் தினம்:
தினம் தினம் பாத்திரம் தேய்த்து, வீடு பெருக்கி (வாகூம் க்ளீனர் யூஸ் பண்ணியோ, துடைப்பம் யூஸ் பண்ணியோ), அப்பப்ப கார் கழுவி, புல் வெட்டி, கடை கடையா ஏறி இறங்கி (காஸ்ட்கோ, சாம்ஸ் க்ளப், வால் மார்ட்) பால், தயிர், எண்ணெய், அரிசி, காய்கறி, பழம் வாங்குவதிலிருந்து ஒரே ஒரு நாள் (அதுவும் 8 மணி நேரம்தான்) விடுதலை கிடைத்திருக்கும் அனைத்து தந்தையர்களுக்கும் தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்.

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க அபார வெற்றி.
அதிமுக எதிர்பார்த்தது போல புதுக் கோட்டை இடைத் தேர்தல்ல சூப்பர் டூப்பர் வெற்றி பெற்று புரட்சித் தலைவியின் ஆட்சி பொன்னான ஆட்சின்னு மீண்டும் நிருபிச்சிருக்காங்க.  தாத்தா பாவம் என்ன செய்யரதுன்து தெரியாம, கலாம்ன்னா கலகம்னு மனசுல இருக்கர வெறுப்பை வெளில துப்பியிருக்கார்.  இப்போ கலாம் மைனாரிடின்னு தெரியலை, அதிகம் படிச்சவர்னு தெரியலை, தெளிவானவர்னு தெரியலை, நல்லவர்ன்னு தெரியலை அவர் பெயர்ல கலாம்ன்னா கலகம்ன்னு (எந்த புத்தகத்துல படிச்சாருன்னு தெரியலை) நல்லா உளர மட்டும் தெரிஞ்சிருக்கு.   கழகம் ன்னா சூதாடும் இடம்னு திருக்குறள்ல இருக்கரதா ஒருத்தர் எழுதியிருக்கார் இதையே சோவும் ஒரு தடவை சொன்னதா ஞ்யாபகம்.  அது பரவாயில்லை போல இருக்கு.  இவர் வாயை வெச்சுகிட்டு பொழப்பு கட்டர ஆளு, இப்ப இஸ்லாமிய இயக்கங்கள் இதை கண்டிக்க ஆரம்பிச்சுட்டாங்க, இது தீவிரமானா, இவரே "கலாம்ன்னா கலகத்தை தீர்ப்பவர்ன்னு ஒரு பொருள் இருக்குன்னு  நான் சொல்ல, ஆரிய பத்திரிகைகள் 5 முறை  தமிழகத்தை ஆண்ட நான் ஒரு தாழ்த்தப் பட்டவன் என்பதால், என் மார்பைச் சுற்றி அவர்களைப் போல ஒரு கயிரில்லாத காரணத்தால்,  என்னையையும் என் கண்களான இஸ்லாமியர்களையும் பிரித்தாள, பார்பன பண்டார பரதேசிகள் சேர்ந்து சொல்லாததைச் சொன்னதாக திரித்து சொல்வது என்னைப் போன்ற பகுத்தறிவு இயக்கத்தினர் நம்பாத அந்த ஆண்டவனுக்கே அடுக்காத ஒன்று, இதை நம் கழகக் கண்மணிகள் நன்கு உணர்ந்து எவ்விடர் வரினும் உங்கள் வாள்களும் வேல்களும், எந்தப் பகைவர்களையும் கொன்று குவிக்காமல் அமைதி காத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்" ன்னு ஒரு சொற்பொழிவு கொடுத்தால் போச்சு.


துக்ளக்:
நான் விரும்பி படிக்கர ஒரு பத்திரிகை.  என்னோட பல நண்பர்கள் என்னைப் போலவே தொடர்ந்து படிக்கராங்க.  அதுலயும் கிறுக்கரவர் கண்டிப்பா படிச்சுடுவார்.  அவர்கிட்ட பேச ஆரம்பிச்சா அநேகமா முதல் 5-10 நிமிஷத்துல கேக்கர கேள்வி, "இந்த வார துக்ளக் படிச்சுட்டீங்களா, அதுலயும் இந்த ஆர்டிகில் படிச்சீங்களா, அதைப் பத்தி நீங்க எப்ப எழுதப் போறீங்க" இதுதான்.  சமீபத்தில துக்ளக் ஆசிரியர் சோவுக்கு உடம்பு சரியில்லாம போய் ஆஸ்பத்திரில ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு வந்திருக்கார் அதைப் பத்தி அவரோட நகைச்சுவை குறையாம இந்த வார துக்ளக்ல எழுதியிருக்காரு.  அதை நான் காபி எடுத்து போட்டாலோ, நானே திரும்ப டைப் பண்ணினாலோ அது காப் ரைட் லா படி தப்புன்னு நினைக்கிறேன்.  ஆனா, இட்லி வடைல இதப் போட்டிருக்காங்க.  அது இந்த லின்க்ல இருக்கு.

http://idlyvadai.blogspot.com/2012/06/blog-post_15.html


அடுத்த ஜனாதிபதி தேர்தல்
இந்தியால அடுத்த ஜனாதிபதியா யாரை கொண்டு வரலாம்னு குடுமி பிடி சண்டை நடக்குது.  ப்ரணாப் முகர்ஜியை காங்கிரஸ் இறக்கியிருக்கு, அப்துல் கலாம் கோதாவுக்கு இன்னும் வரலை.  இந்தியாவுல தன்னோட பெருமைக்கு ஏத்த பதவின்னா அது ஜனாதிபதி பதவிதான்னு சேஷன் கூட ஒரு தடவை நிக்க முயற்சி பண்ணினாருன்னு நினைக்கரேன்.  ஒரு வழியாக் ஊழல் சிரோன்மணி ப்ரதீபா பாடில் வெளில போய்ட்டாங்க, சொல்ல முடியாது ப்ரணாப் ஜனாதிபதிக்கு தான் இப்போ ரெடியில்லைன்னு சொல்லிட்டா அந்தம்மா திரும்ப வந்தாலும் வந்துடும்.

ப்ரணாப் - இவர் இந்திரா காந்தி காலத்துல இருந்து அரசியல்ல ஊழல் பழம் தின்னு, விதை நட்டு அது இப்போ வ்ருட்சமா வளர்ந்திருக்கரத பார்த்திட்டு இருக்கர ஆள்.  இவரப்பத்தி சொல்லனும்னா, பெங்காலிகள் நல்ல புத்திசாலிகள்(மீன் எண்ணெய்), அப்படி ஒரு புத்திசாலி திருடன் எப்படி இருப்பான்னு பார்த்தால் அது இவர் மாதிரிதான் இருப்பான்.  இவர் ஜனாதிபதியா வந்தா, எது நல்லா நடக்குதோ இல்லையோ, 'சிதம்பர' ரகசியம் நல்லா கப்பலேறும்ங்கரது நிச்சயம்.   அடுத்த முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வராதுன்னு நினைக்கிறேன், அப்படி நடந்துச்சுன்னா, இவர் அடுத்து வர்ர கட்சிக்கு குடைச்சல் திலகமா மாறிடுவாரு.  இவர் நாட்டாமை ஜாதி, இவர் ஜனாதிபதியாயிட்டா, நாட்டாமைக்கு இவரில்லாம, காங்கிரஸ் கொஞ்சம் தடுமாறும்ன்னு நினைக்கிறேன்.  பி.வி நரசிம்மராவ் ப்ரதமரா வரதுக்கு முன்னாடி இவரும் அந்த பதவிக்கு நல்லா முயற்சி பண்ணினாரு, கேசரி, குலோப் ஜாமூன்னு(குலாம் நபி ஆஸாட்)  பல பேர் வேலை பாத்து, ராவ் காருவை கொண்டு வந்துட்டாங்க.  இதுல பெரிய காமெடி,  இவர் ராவ் கிட்டயே அமைச்சராவும் வேலை பார்த்தாரு.  ஆனா நல்ல புத்திசாலி.  மன்மோகன் சிங்கும் நல்ல புத்திசாலிதான் என்னத்த கிழிச்சாருன்னு 'கிறுக்கலார்' கத்தறது காதுல விளுது.

கலாம்:  நல்லவர், படிச்சவர், நாட்டு மேல நல்ல பற்று வெச்சிருக்கரவர், படிப்பைப் பத்தி எந்த படாடோபமும் இல்லாதவர்.  இவர் ரெண்டாவது தடவையா ஜனாதிபதி ஆகியிருக்கனும், ஆனால் இவர் நல்லவரா இருக்கரது, ஊழல் மஹாராணி (இத்தாலி)க்கு பிடிக்கலை, தன்னைப் போல இன்னொரு ஊழல் கிழவியை கொண்டுவந்துட்டாங்க.

இவர் ரொம்ப நல்லவரா இருக்கரதுன்னால எப்போ எதைப் பத்தி பேசனும்னு தெரியாம சில சமயம் பேசிடராரு,  உளர்ரத தி.மு.க தலைமைக்கு மொத்த குத்தகைக்கு விட்டாச்சு, அதனால இவர் உளர்ராருன்னு சொல்லக்கூடாது.  சமயா சந்தர்ப்பம் தெரியாம எதையாவது சொல்லிடுவாரு.  உதாரணத்துக்கு ஒரு முறை இந்தியாவோட ராணுவ பலம் எப்படி பாகிஸ்தானை விட நல்லா இருக்குன்னு ஒரு மீட்டிங்கல சொல்லிட்டாரு, எப்படி அணு ஆயுத பரிசோதனையை இந்தியா செஞ்சுதுன்னு சொல்ல ஆரம்பிச்சு நல்ல வேளையா நடுவுல நிறுத்திட்டாரு.  இதுக்கு காரணம் இவர் ஒரு அரசியல்வாதி இல்லை, ஆனா, ஒரு பெரிய நிர்வாகத்துல இயக்குனரா இருந்தார் (இஸ்ரோ) எதை எங்க எப்படி சொல்றதுன்னு கொஞ்சம் யோசிச்சு சொல்லனும், இல்லை சொல்லித்தர சரியான ஆளுங்களை பக்கத்துல வெச்சுக்கனும்.  மிகப் பெரிய அறிவாளி, இவர் பல கண்டுபிடிப்புகளுக்கு உதவியா இருந்திருக்காரு.  முக்கியமா, போலியோ அட்டாக் ஆனவங்க மற்றும் செயற்கை கால் வெச்சிருக்கரவங்களுக்கு காலுக்கு கணமான இரும்புல ஒரு கால் கவசம் இல்லை கட்டை கால் வெச்சிருப்பாங்க அதை கனமில்லாத உறுதியான கட்டமைப்புல செய்ய வெச்சு அதை செயல் படுத்தினவர்.  இவர் மிகப் பெரியவர் இவர் இந்த பதவிக்கு கண்டிப்பா உரியவர் ஆனா, இவர் அரசியல்வாதியில்லை அதனால இந்தப் பதவிக்கு இவரால கண்டிப்பா காலம் காலமா பெருமைதான் ஆனால், இந்தப் பதவியினால இவருக்கு துளி கூட பெருமையோ, பலனோ இருக்காது.

ஒரு தடவை நான் வேலை பார்த்த ஒரு இடத்துல ஒரு டைரக்டர் வேலை காலியாச்சு அதுக்கு என்னோட நண்பர் ஒருத்தரை சிபாரிசு பண்ணினேன், அவர 5-6 தடவை இண்டர்வ்யூ பண்ணிட்டு அவங்க சொன்ன ஒரு வார்த்தை கேவலமா இருந்துச்சு, நீ சொன்ன அவர் ரொம்ப புத்திசாலி ஆனா அவரோட வேகம் நம்ம கம்பெனிக்கு ஒத்து வராது, இவர் அளவுக்கு நம்ம ஆளுங்களுக்கு புத்திசாலித்தனம் இல்லை, அதனால இவரு சீக்கிரம் நம்ம வேலை புடிக்கலைன்னு ஓடிப் போயிடுவாரு, திரும்ப நாங்க இன்னொருத்தர வேலைக்கு எடுக்கனும், அதனால இவர் அளவுக்கு இல்லாம கொஞ்சம் சுமாரா ஒருத்தர நாங்க தேடரோம்ன்னு சொன்னாங்க.  இதுக்கு அப்புறம்  4 வருஷம் கழிச்சுதான் நான் அங்கேந்து கெளம்பினேன் அது வேற விஷயம்.  அது மாதிரி கலாம் ஜனாதிபதியாகிரத காங்கிரஸ் கண்டிப்பா ஆதரிக்காது, ஊழல்ல திளைச்சு இருக்கர தி.மு.க வும் விரும்பாது.

கருணாநிதி: இவர ஏன் ஜனாதிபதியாக்கக்கூடாதுன்னு சத்தியா எழுதரதா சொல்லியிருக்காரு அதனால நான் எழுதல.


நித்தி கைது
நித்தி கைது ஆகி ஜாமீன் வாங்கி திரும்ப கைதாகி திரும்ப ஜாமீன் வாங்கி இப்ப மதுரை ஆதீன மடத்துல இருக்கரதா செய்தி.  ரஞ்சிதா எங்க இருக்காங்கன்னு என்னை கேக்காதீங்க, அது எனக்குத் தெரியாது.  இவரை  கர்நாடகா உள்ள வர விடக் கூடாதுன்னு கர்நாடகாவுல நிறைய பேர் பேச ஆரம்பிச்சிருக்காங்க, இது எனக்குப் புரியலை,  இவர் மேல கேஸ் போட்டிருக்காங்க, கைது பண்ணினாங்க, தீர்ப்புல இவர் குத்தவாளின்னு வந்தா அப்போ இவரை  கர்நாடகாவுல வெச்சிருக்காகூடாதுன்னா என்ன பண்ணுவாங்க, தமிழ்நாட்டுக்கோ, மஹாராஷ்ட்டிராவுக்கோ நாடு கடத்தற மாதிரி மாநிலம் விட்டு மாநிலம் கடத்துவாங்களோ?  ஹைய் ஜாலி, அரசாங்க செலவுல நாலு ஜெயில் பாத்தா மாதிரியிருக்கும்.  ஆனா ஜெயில்ல போயி வாயை மூடிக்கிட்டு இருக்கனும்னு ஒரு ஆர்டர் போடனும், பாவம் அங்க இருக்கர மத்த கைதிங்க,  ஒரே சமயத்துல ஒரு தண்டனைதான் தரனும் இந்த ஆள் பினாத்தரதையெல்லாம் கேட்டு இன்னும் கொலவெறியாகி கூட இருக்கர சக கைதி, இல்லை போலீஸ்காரன்னு யாரையாவது போட்டு தள்ளிறப் போறாங்க.  மொதல்ல இந்த ஆளுக்கு ஒரு ரெபிடெக்ஸ் ஆங்கிலம் பேசுவது எப்படின்னு ஒரு புத்தகம் வாங்கிக் கொடுங்க, இந்த ஆளு ஆங்கிலம் சகிக்கல, இதுல நடுவுல அப்பப்ப கேணத்தனமா ஒரு சிரிப்பு வேற.

முரளி இராமச்சந்திரன்.

Monday, June 11, 2012

எச்சரிக்கை....

ரிச்மண்ட் வாழ் தமிழ் கூறும் நல்லுலகைச் சார்ந்தோரே, அன்பர்களே, நண்பர்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே, சிறுவர்களே, சிறுமிகளே, இளைஞர்களே, இளைஞிகளே, நல்லிளம் சிங்கங்காள், உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

யப்ப்ப்பா மூனு வரி சுத்தத் தமிழ்ல எழுதரதுக்கே நாக்கு தள்ளுதே, எப்படிதான் தமிழ்நாட்ல மூச்சு விடாம மணி கணக்குல பேசராங்கன்னு தெரியலை.  விஷயம் ரொம்ப பெரிசில்லைங்க, நம்ம சங்கத்துப் ப்ளாக் 'ஆளில்லாத டீ கடை மாதிரி கிடக்கு'ன்னு சொல்லி யாரும் எழுதவாங்களான்னு சங்கத் தலைவர் கேட்க, கிறுக்கரவர் கிட்ட கேட்டா அவர் "கொஞ்சம் பிஸினஸ்ல பிசி, அதனால மட்டும் இல்லை, நான் கிறுக்கி யார் படிக்கராங்க, அதனால என்னத்த கிறுக்கி என்னத்த மாத்த முடியும் சொல்லு"ன்னு பிட்டை என் பக்கமே திருப்பிட்டார்.

தலைவரே, எழுதலாம் திடீர்ன்னு அவர் ஏன் ஜகா வாங்கினாருன்னு தெரியலை.  நம்ம மு.கோ நல்லாத்தான் எழுதிகிட்டிருந்தாரு, டக்குன்னு ஊருக்கு போயிட்டாரு, அவர எழுதச் சொல்லி அரவிந்தன்கிட்ட சொல்லனும், அதை அவன் எழுதி வெச்சு அவருக்கு ஃபோன் பேசும் போது சொல்லனும், இப்டி ஆயிரம் உம் கொட்டினா எப்ப அது நடக்குமோ எல்லாம் அந்த ஶ்ரீரங்கம் பெருமாளுக்குத்தான் தெரியும். அட இன்னொரு உம்.

சதங்கா எப்ப அடுத்த பட்டுக்கோட்டையார் பதிவை போடுவார்ன்னு நான் கேக்கப் போக, நாகு "யோவ் தடயம் என்ன ஆச்சு"ன்னு என் தலையை உருட்டினா என்ன செய்யரதுன்னு அவரை விட்டுட்டேன்.

அடுத்து நாகு, ஜெயகாந்தன் ரெண்டு பேர்தான், நாகுவை வெளில வாசல்ல பாக்கவே முடியலை என்ன காரணம்னு தெரியலை, மீன் பிடிக்கராரோ, இல்லை விக் வெச்சுகிட்டு எங்க சுத்தராரோ தெரியலை, சரி ஜெயகாந்தனை பிடிக்கலாம்ன்னா நான் வேலை செய்யர அதே இடத்துலதான் அவரும் வேலை செய்யராரு, அவரை எப்படி பின்னி பெடலெடுத்துகிட்டு இருக்காங்கன்னு எனக்கு தெரியும், (அவர பிடுங்கர பாதி பேர் எங்க குரூப் தான்), சரி எப்படியும் நம்ம மக்களுக்கு இந்த கோடை கொஞ்சம் சோதனையாத்தான் இருக்கப் போறது அதுல நாம எழுதினா என்ன திட்டவா போறாங்க, அப்படியே திட்டினாலும் நாம வீட்டுல வாசல்ல வாங்காத திட்டா சொல்லுங்க.  இதெல்லாம் எழுத்துத் துறைல ரொம்ப சாதாரணமப்பா!

அடுத்து எதைப் பத்தி எழுதலாம்னு ஒன்னும் தோணலை, சரி எதைப் பத்தி வேணும்னாலும் எழுதிடறதுன்னு யோசிச்சா ஒரு ஐடியாவும் கிடைக்கல, யோசிச்சு யோசிச்சு மண்டை காஞ்சு போயி அங்க இங்க நுனிப்புல் மேயும் போது நித்தியைப் பத்தி என் ப்ரெண்ட் ஃபேஸ் புக்ல ஒரு லிங்க் அனுப்பியிருந்தான், அது சூப்பர் காமெடி ஆக்டர் நித்தின்னு வந்திருக்கு.

இவர் அடிக்கர கூத்துக்கு முன்னாடி ஒரு கூத்தும் நிக்காது போல இருக்கு.

http://www.youtube.com/watch?v=wEFBQjCnFao&feature=endscreen&NR=1

இவர் பேசரத கேட்டதுக்கு அப்புறம் எப்படி இத்தனை பேர் இவர் பின்னாடி வராங்கன்னு தெரியலை. நல்லா ஒரு ஹெட் ஃபோன் காதுல மாட்டிகிட்டு, ரெண்டு சீட் தள்ளி ரஞ்சிதா வோட ஒரு பெரிய பேட்டியை கொடுக்கராரு.  இவர் பேசரது ஒரு காமெடின்னா, அந்தம்மா, சும்மா சொல்டி சொல்டி ஆங்கிலத்துல அடிக்கராங்க, அதுக்கு பின்னனியில கவுண்டர் டைலாக் ஓட்டரது சூப்பர்.


நித்தி மதுரை ஆதீனமா வந்தது சரியா தப்பான்னு ஒரு பட்டி மன்றம் போட்டு விவாதிக்கலாமான்னு தமிழ் சங்க சீனிவாசன் கிட்ட கேக்கனும்.   நல்ல தமாஷா இருக்கும்.  நேத்திக்கு அவரை அரெஸ்ட் பண்ண கர்நாடகா போலீஸ் தேடுதாம், இவர் தலைமறைவா இருக்காராம்.  இத்தனை நாள் டிவி, பேப்பர், பத்திரிகைன்னு போட்டோ வந்த ஒருத்தர் தமிழ்நாட்டுல தலைமறைவா இருக்காராம், இவரை போலீஸ் தேடுதாம், நல்லாத்தான் கதை வுடராங்க.

கிறுக்கரவர் கிட்ட நித்தியைப் பத்தி கேட்டேன். "ஏஏஏன் எவன் எப்படி போனா எனக்கு என்ன, ரிச்மண்ட் ஆளுங்க பல பேர் மதுரைதான் அவங்கள கேளு அவங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான்" ன்னுட்டாரு.  அப்படியே, உங்க ஊர் பண்ருட்டிகாரர் என்ன சொல்றார்ன்னு கேக்கச் சொன்னாரு கேட்டுட்டேன்.

சென்னை வீட்டுக்கு ஃபோன் போட்டா, சென்னைல வெயில் மண்டைய ஒடைக்குதாம், இதுல ரெண்டு மணி நேரம் கரண்ட் கட்டாம், இல்லாத கரெண்டுக்கு ஏண்டா காசு வாங்கரீங்கன்னு பல பேர் கத்தராங்களாம்.  சரின்னு  நம்ம அண்ணாச்சிகளுக்கு ஃபோன் போட்டா, ஐ.பி.எல் ல சென்னை தோத்து போச்சு, காசு வாங்கிட்டு ஆடிட்டாங்கன்னு அவங்க ஆலாபனை, சென்னை எப்படிடா ஃபைனல்ஸ்க்கு வந்தாங்கன்னு கேக்கலாம்,  கேட்டா, "ஐ.பி.எல்லை பத்தி உனக்கு என்னடா தெரியும்"ன்னு அவங்க கேட்டா எனக்கு என்ன தெரியும் சொல்லுங்க.  எழுதரது ஒரு மாதிரி கோர்வையா வருதுல்ல, ஹூம்,  இதெல்லாம் ஒரு கதை நாடகம் எழுதும் போது வரமாட்டேங்குது.  


அடுத்து, ஜெவும் சசியும் சேர்ந்துட்டாங்கன்னு சங்கத் தலைவர் ரொம்ப கோபமா இருந்தாரு, இப்ப என்ன நிலைமைன்னு தெரியலை.  ராஜா வெளில வந்துட்டார், நேரு ஶ்ரீரங்கனுக்கு நேர்ந்து கிட்டு சமீபத்துல மொட்டை போட்டுட்டாராம்.  இந்தப் பகுத்தறிவுக்கு முன்னாடி யார் என்ன சொல்ல முடியும்னு தெரியலை.

நாளைக்கு ரிச்மண்ட்ல எலெக்‌ஷன், காலைல போய் ஓட்டு போட்டுட்டு வேலைக்கு போகனும். 10 K ரேஸ் ஓடும்போது ஒரு இந்திய இளைஞன் "நான் எரிக் காண்டருக்கு எதிரா தேர்தல்ல நிக்கப் போறேன்"னு சொன்னான், அவனை நம்பி அவன் நீட்டின ஒரு அட்டைல கையெழுத்து போட்டுட்டு வந்தேன், அவன் கதி என்ன ஆச்சுன்னு தெரியலை.

நம்மூர் லைப்ரரில புத்தக ஆய்வுன்னு ஒன்னு அடிக்கடி நடத்தராங்க, அதுமாதிரி தமிழ் சங்கத்து சார்புலயோ இல்லை தனியாவோ செஞ்சா என்ன?  நீங்க யாராவது ரெடின்னா, எனக்கு ஒரு இ-மெயில் அனுப்புங்க(rmurali@gmail.com).  புத்தகம்னு இல்லை, சினிமா, டிராமா எதுவா இருந்தாலும் பரவாயில்லை, அட சும்மா கூடி உக்காந்து அரட்டை அடிக்கலாமா சொல்லுங்க நான் ரெடி.

ஆமிர் கான் சமீபத்துல 'சத்ய மேவ ஜயதே'ன்னு ஒரு ப்ரோக்ராம் பண்ண ஆரம்பிச்சிருக்கார்,  அதை தமிழ்ல  விஜய் டிவி ல பார்க்காதீங்க, முடிஞ்சா யூ ட்யூப்ல யோ இல்லை Star TVலயோ பாருங்க, ஹிந்தில பார்த்தா ஒரு பாதிப்பு இருக்கத்தான் செய்யுது.  முதல் வார நிகழ்ச்சியை பார்க்க முடியலை அவ்வளவு கொடுமைக்கார கணவர்களை காமிச்சாங்க.  பார்த்ததுக்கு அப்புறம் கொஞ்சம் மனசு கனமா இருந்தாலும், நிச்சயம் பூனைக்கு மணியை நல்லாத்தான் கட்டறாரு.

இந்தப் பதிவை முடிக்கரதுக்கு முன்னாடி, புதுக்கோட்டை இடைத் தேர்தல்ல புரட்சித் தலைவியின் அ.இஅ.தி.மு.க அமோக வெற்றி பெற வாழ்த்தி, போட்டிக்கு வரதுக்கு முன்னாடியே, பயந்து போய் ஒடிவிட்ட தி.மு.க வின் தலைமைக்கு ஆறுதலைச் சொல்லி, ராசா ஒருவழியா ஜாமீன் கிடைச்சு வந்திருக்கார் அவர்கிட்ட வாங்க வேண்டிய பங்கையெல்லாம் வாங்கிட்டு அதையெல்லாம் மனைவி, துணைவி, ஒட்டினது, ஒட்டாதது, சேர்ந்தது, சேராததுன்னு எல்லாத்துக்கும் பங்கு போட்டு கொடுத்துட்டு உளியின் ஓசை மாதிரி ரம்பத்தின் ரீங்காரம்னு ஒரு டப்பா கதை எழுத கிழவரை வாழ்த்திவிட்டு அடுத்த முறை சந்திக்கிறேன்.

முரளி இராமச்சந்திரன்.