Monday, December 17, 2018

ஓணான்


நான் நிம்மதியாக
வேலியிலேயே இருந்து விட்டு போகிறேன்.
ஏன் என்னை எடுத்து
வேட்டியில் விட்டுக் கொள்ளத் துடிக்கிறீர்கள்?

Saturday, October 06, 2018

இதுல உனக்கு என்ன பெரும?

//பள்ளியில் 30 குறள், மதிப்பெண்னுக்காக படிச்சவனை திருக்குறள் தெரிந்த கணக்கில் வைப்பது 👌🏽
என்னடா சொல்ற? பள்ளியில் குறள் படித்தவனெல்லாம் மதிப்பெண்ணுக்காக படித்தான் என்றால், வேதம் படிச்சவன் எல்லாம் ராக்கெட் விடவா படித்தான்? இவனாவது தினப்படி வாழ்வில் அவ்வப்போது சரியான பொருளில் இரண்டொரு குறள்கள் பயன்படுத்துகிறான். அந்த 1000 கோடி பேரும் மதச் சடங்குகளில் ஒப்பிக்கத்தானே படித்தார்கள்? அவர்களுக்குள் பொருளுணர்ந்து அவ்வப்போது சிலபல செய்யுள்களை சொல்லிக்கொள்கிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் இரண்டும் ஒன்றுதானே? திருக்குறள் தெரிந்தவர்கள் வெறும் மதிப்பெண்ணுக்காக படித்தார்கள்; அதனால் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாதே!

//பரமசிவன், பார்வதி, சரஸ்வதின்னு சொல்லாம, பரம்பொருள்ன்னு சொன்னதை வைத்திருங்திருக்கலாம். 
பரம்பொருள் வரியை நீக்காது விட்டு வைக்க வேண்டுமென்றால் "சிதைந்து, வழக்கொழிந்த ஆரியம்" என்பதையும் வைக்கணும். இல்லையா? அதுக்கொரு சட்டம் இதுக்கு வேறயா?

//உனக்கு எனக்கும் தமிழ் பிடிக்கும் என்பதால் மற்ற மொழி பற்றி அவதூறு பேசுவது சரியல்ல.
அவதூறு ஏதுமில்லை. உண்மையைச் சொல்வது அவதூறு என்றால், பேதை, பெருந்தன்மையற்றவர் என்பதை எல்லாம் எந்தக் கணக்கில் வைக்க?

//உலகலாவிய கற்றவர்களுள் அதிகம் ஆராயாப்படும் படைப்புகள் அதிகம்(தமிழை விடவும்) கொண்டது சமஸ்கிருதம்.  
"தமிழை விடவும்". 
எந்த அடிப்படையில்? உன் ஒப்பீட்டுத் தரவு என்ன? கற்பனைகள், ஆசைகள் எல்லாம் செல்லாது. சமற்கிருதத்தின் மீது நடக்கும் ஆராய்ச்சிகள் எல்லாம் மொகஞ்சதாரோ, கீழடி, டைனோசர் எலும்புகள் போன்றவற்றின் மீது நடக்கும் புதைபொருள் ஆராய்ச்சி போலத்தான். சிலப்பதிகாரம் முதல் இன்றைய காவல் கோட்டம் வரை குண்டு குண்டு புத்தகங்களாக எழுதிப் படிக்கிறோமே, அந்த "சமற்கிருதம் கற்றவர்களை" இப்போ அப்படி ஒன்னு எழுதச் சொல்லேன் பார்ப்போம். எழுதவும் ஆளில்லை; படிக்கவும் ஆளில்லை. என்றோ இருந்ததை தோண்டித் துருவி செய்யும் ஆராய்ச்சி புதைபொருள் ஆய்வு போலத்தான்.

//நாம் பிறந்த நாட்டில் தோன்றிய மொழி எனும் பெருமை எனக்குண்டு.
இதுல உனக்கு என்ன பெருமை? 47ல் Radcliffe கோடு போடுகையில் கொஞ்சம் இந்தப் பக்கம் வலிச்சு போட்டிருந்தார்னா இன்றைய "நாம் பிறந்த நாட்டின்" சில பகுதிகள் "டுஷ்மன் டேஷ்" ஆகி இருக்கும். அந்தப்பக்கம் வளைச்சு இழுத்து இருந்தார்ன்னா, லாகூர் "மேரா பாரத் மகான்" பகுதி ஆகி இருக்கும். அவுரங்கசீப் காலத்தில் இன்றைய சில ஈரானியப் பகுதிகள் வரை ஆக்ரா/தில்லி ஆட்சியின் கீழ்தான் இருந்தது. அரபி, பெர்சியன், உருது மொழிகளுக்கும் நீ பெருமைப் பட வேண்டி இருக்கும். அதனால, "நான் பிறந்த நாட்டில் தோன்றிய மொழி" ன்னு ஓவர் செண்டிமெண்ட் ஆகாதே. யாதும் ஊரே, எல்லா மொழிகளும் மனித சாதனைகளே என்று இரு. எல்லைக் கோடுகள் எல்லாம் நாமாக கற்பனையாக போட்டுக் கொண்டவை.
உனக்கு சமற்கிருதம் எழுதவோ படிக்கவோ பேசவோ தெரியாது. உனக்கு மத/கடவுள் நம்பிக்கை இல்லை என்றும்  சொல்கிறாய். ஆக, மதச் சடங்கு மொழியான சமற்கிருதத்துடன் உனக்கு எந்த விதத்திலும் தொடர்போ அம்மொழியால்  உனக்கு பயனோ இல்லை. தொடர்பில்லாத ஒன்றில் நீ பெருமைப் பட என்ன இருக்கிறது? நீ பெருமைப் பட வேண்டியது தமிழில் பேசி, எழுதி, சண்டை போட்டு தமிழின் நீட்சிக்கு பங்களிப்பதற்கு. "நாம் பிறந்த" என்ற பெருமை இங்கே சரி, உண்மை.
மற்றபடி, யாதும் ஊரே, யாரவரும் கேளிர்; வழக்கொழிந்த மொழிகள் உட்பட எல்லா மொழிகளும் மனிதர்கள் கூட்டாக அடைந்த உன்னதங்களே என்று பெருந்தன்மையாக இருப்பதே சரி.

மனசிலாயோ.

* இனி அடிச்சு கேட்டாக் கூட இத்தலைப்பில் பதில் பேசமாட்டேன்னு ஒருத்தருக்கு சூடம் அடிச்சு உறுதி கொடுக்காத குறையாகச் சொன்னேன். அவர் சிரிப்பது கேட்குது.



Friday, September 28, 2018

மறதி



கடந்த மாதம் துபாயில் வசிக்கும் என் கல்லூரித் தோழன் ராஜேஷ் ரிச்மண்ட் வந்திருந்தான். ரிச்மண்ட் நண்பர்கள் பலர் அவன் குறித்து அறிந்திருப்பீர்கள். இங்கே ஒரு நாள் தங்கி மற்ற தோழர்களை சந்தித்துவிட்டு வாஷிங்டன் வழியாக ஊர் திரும்ப இருந்தான். அவனுக்கு வாஷிங்டன் நகரத்தை சுற்றிக் காண்பித்துவிட்டு வழியனுப்பி வைக்கலாம் என்று கிளம்பினேன்.

போய்க்கொண்டிருக்கும்போது வாஷிங்டன் அருகில் வசிக்கும் நண்பன் ராஜாஜியின் தந்தையை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் வந்தது. அதுவும் விமானநிலையம் அருகில் இருக்கும் மருத்துவமனை. ராஜாஜியும் ராஜேஷும் சந்தித்து கால் நூற்றாண்டு ஆகியிருந்தது. கடைசியாக இருவரும் சந்தித்தது ராஜாஜியின் திருமணத்தில்தான். அந்த திருமணத்துக்குக்கூட நானும், ராஜேஷும்தான் பெங்களுரில் இருந்து சென்னை சென்றிருந்தோம். ராஜாஜி மருத்துவமனை பார்க்கிங் லாட்டில் காத்துக் கொண்டிருந்தான். அவனுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு  உள்ளே சென்றோம். அப்பா எப்படி இருக்கிறார் என்று விசாரித்தேன். அவருடைய ஞாபக சக்தி மிகவும் குறைந்திருப்பதாகவும், இரவு நர்ஸ்கள் கூட அப்பா கத்தி சண்டை போட இருந்ததாகவும் ராஜாஜி கதை விட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு கொஞ்சம் கற்பனைவளம் கொஞ்சம் அதிகம்.

ராஜாஜியின் அப்பா அறைக்குப் போனோம். அவரைப் பார்த்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆயிற்று. மிகவும் மெலிந்திருந்தார். அறையில் நுழைந்ததும் என்னையும் ராஜேஷையும் பெயர் சொல்லி அழைத்து விசாரித்தார் அவர். எப்படி இருக்கிறீர்கள் மாமா என்றேன். உன்னைப் பார்த்ததும் எனக்கு பலம் இரண்டு மடங்காகிவிட்டது என்றார் மாமா மகிழ்ச்சியுடன். ராஜேஷை பெயர் சொல்லி அழைக்கிறாரே என்று ராஜாஜியிடம் விசாரித்தேன். நீங்கள் இருவரும் வருகிறீர்கள் என்று சொல்லியிருந்தேன். மற்றபடி அவருக்கு அவனை நினைவில்லை என்றான் ராஜாஜி.

உனக்கு ரெண்டு பசங்கதானே ராஜேஷ், என்றார் மாமா. என்னடா என்றேன் ராஜாஜியிடம். அது எல்லாம் சும்மா அடிச்சி விடறார்டா என்றான்.

கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று கோபாலகிருஷ்ணன் எப்படி இருக்கிறார் என்று கேட்டார் மாமா. ராஜாஜிக்கு ஒன்றும் புரியவில்லை. நானும் கொஞ்சம் யோசித்தேன், யாரை சொல்கிறார் என்று. நாங்கள் முழிப்பதைப் பார்த்து அவரே சொன்னார். அந்த காலத்து நினைவுகளை எல்லாம் எவ்வளவு அழகாக எழுதுகிறார், சமீபத்தில் ஏதாவது எழுதினாரா என்றார் மாமா. ஆடிப் போய் விட்டேன். கண்கலங்கி விட்டது எனக்கு.

சேதி என்னவென்றால், ரிச்மண்ட் வலைப்பதிவில் திரு. மு. கோபாலகிருஷ்ணன் எழுதும்போதெல்லாம் அவற்றை நான் மின்னஞ்சலில் மாமாவுக்கு அனுப்பி வந்தேன். இவருக்கு கடைசியாக அவற்றை அனுப்பி நான்கைந்து ஆண்டுகள் ஆகியும் நன்றாக நினைவில் வைத்திருக்கிறார். இவருக்கு மட்டும் அல்ல. தமிழார்வம் கொண்ட என் கல்லூரித் தோழர்கள் தந்தைகள் சிலருக்கும் அனுப்புவது என் வழக்கம். மு.கோ. அவர்கள் அண்மையில் சற்று உடல்நலம் குன்றியிருந்ததாலும், ஓரிரு புத்தகங்கள் எழுதுவதில் மும்முரமாக இருந்ததாலும் அவர் நம் பதிவுக்கு எழுதுவது குறைந்திருந்ததை சொன்னேன். முடியும்போது எழுதச் சொல்லு என்றார் மாமா.

மு.கோ. அவர்களே – யார் படிக்கிறார்கள் என்ன சொல்கிறார்கள் என்று என்னைக் கேட்டுக் கொண்டே இருப்பீர்களே? பாருங்கள் உங்கள் எழுத்தை ரசிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். என்ன ஒன்று – யாரும் பின்னூட்டம் இடுவதில்லை, நேரில் பார்க்கும்போதுதான் விசாரிக்கிறார்கள். ஆகவே முடியும்போதெல்லாம் எழுதுங்கள். அந்த காலத்து அரசியலும், வாழ்க்கை அனுபவங்களும், அந்தப் பார்வையில் இந்த காலத்து அரசியல், அனுபவங்களை அலச உங்களால்தான் முடியும்.
-->

Wednesday, September 05, 2018

பக்தி இயக்கத்தால் தமிழுக்குத் தீமைதான்

உள்ளூர் இலக்கியக் குழுவில் நடந்த உரையாடல்.

நண்பர் ஒருவர் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனின் கட்டுரை ஒன்றை பகிர்ந்து இருந்தார். கட்டுரையின் சாரம் தமிழுக்கு நேர்ந்த இருண்ட காலம் என்பது இந்த நூற்றாண்டின் பகுத்தறிவு இயக்கம்தான் என்றும் அதுவே உண்மையான களப்பிரர் காலம் என்றும், நல்லவேளையாக அந்தக் களப்பிரர் காலம் முடிந்துவிட்டது என்றும், இதுகாறும் தமிழைக் காத்து வருவது சமயமே என்றும் இருந்தது.

குழுவில் சிலர் அந்தக் கருத்தை ஆமோதித்தனர், மற்றவர்கள் அமைதியாக இருந்தனர். ஒருவர் மட்டும் உண்மையில் பக்தி இயக்கத்தால் தமிழுக்கு தீங்கே நிகழ்ந்தது என்றும், காதல், வீரம் மற்றும் பிற மனித உணர்வுகள் எதிலும் கவனம் செலுத்த விடாது முழுக்க "பஜனை" ஒலி மட்டுமே கேட்கும்படி 10ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை தமிழுக்கு அமையும்படி சமயங்கள் செய்து விட்டன என்றார்.

அந்த விவாதம் நீளமாகச் செல்லவே வேறு தலைப்புக்குள் சென்றுவிட்டோம். அந்த விவாதத்தின் போது நண்பர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. இறுதிப் பத்தி மட்டும் புதுசு.

---------------------

[5:22 PM, 8/30/2018] உள்ளூர்காரன்:
    வைத்தியநாதன் தப்பாகச் சொல்கிறார்.
தடம் மாறிப் போய் வெறும் "போற்றிப் பாடடி"-ன்னு இருந்ததை மக்கள் மொழியாக்கி வளமாக்கியது பகுத்தறிவு/ தமிழியக்கம்.
தமிழைக் காப்பது சமயங்கள் அல்லவே அல்ல. தமிழை பயன்படுத்தி தங்களை வளர்த்துக் கொள்வது சமயங்கள் தான்.
இங்கே அரசியல்/சமயம்  பேச வேண்டாம் என்பதால் ஞான் மேற்கொண்டு பேசலை.

ஆனாலும், வைத்தியநாதன் பேச்சு சரியில்லை.


[5:26 PM, 8/30/2018] நண்பர்1:
    பக்தி இலக்கியங்கள் 😂


[5:30 PM, 8/30/2018] உள்ளூர்காரன்:
    தங்களை வளப்படுத்திக் கொள்ள சமயங்கள் தமிழைப் பயன்படுத்திக் கொண்டது.

அந்தந்த சமயங்களுக்கு பயன்பட்டது. தமிழுக்கு சுமை.
காதல், வீரம், அறிவியல் என எதிலும் கவனம் செலுத்த விடாது வெறுமனே, "போற்றி பாடடி பொண்ணே" -ன்னு வெட்டியாக காலத்தை கழிக்க வைத்து தங்களை வளர்த்துக் கொண்டன சமயங்கள்.



[5:38 PM, 8/30/2018] நண்பர்1:
    சமஸ்கிருதம் இருக்க அதை தொடாது, தமிழை கையாண்ட புலவர்கள், தமிழுக்கு அணி செய்தவர்கள்! தமிழ் அவர்களை தொழுது ஏற்க்கும்.

  
[5:42 PM, 8/30/2018] நண்பர்1:
    பக்தி இலக்கியமே தமிழை 11 நூற்றாண்டில் இருந்து 20 வரை கடத்தி வந்தது. அறம் பக்தி சார்ந்தே, அறமே கல்வி. அறிவியல் கல்வி ஆனபினே, அறம் அவரவர் பார்வைக்கு ஏற்ப நிலை குன்றியது

[5:46 PM, 8/30/2018] நண்பர்2:
    மனம் ஒன்றை பற்றுவது மாற்ற இயலா விதி. அது கடவுளை பற்றினால் அது பக்தி, ஆண் பெண்னை அல்லது பெண் ஆணை பற்றினால் அது காதல், ஒரு சிலரை பற்றினால் அன்பு, உலகை பற்றினால் அருள்......

  
[5:52 PM, 8/30/2018] உள்ளூர்காரன்:
    10 நூற்றாண்டுகளுக்கு தமிழை அழுத்திக் கொண்டிருந்தது - தன் நலனுக்காக. தமிழுக்காக அல்ல.

பகுத்தறிவு/தமிழியக்கம் அதிலிருந்து விடுவித்தது.


[6:02 PM, 8/30/2018] நண்பர்1:
    பத்தி கடவுளையும் கேள்வி கேட்டது. தமிழியக்கங்கள் இறுதியில் சில பல சீமான்களையே எச்சங்களாக விட்டு சென்றது.

  
[6:13 PM, 8/30/2018] உள்ளூர்காரன்:
    சீமான்தான் உன் கண்ணுக்கு தெரிகிறார் என்றால் தவறு தமிழியக்கத்துடையதல்ல.


[6:18 PM, 8/30/2018] நண்பர்1:
    😂 இறுதியில்....

  
[6:53 PM, 8/30/2018] நண்பர்2:
    காதல், வீரம், அறிவியல், நீதி & அறம் இவை அனைத்துமே ஒரு மனிதனின் உணர்வுகளையும் அவன் சமூகத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை விளக்கக்கூடியவை, தமிழில் இல்லாத நூல்களை இவைகளை பேச?

மனித உயிரினத்துக்குமட்டுமே வாய்க்கப்பெற்றது  ஆன்மிகம் மற்றும் மொழி. ஆன்மிகம் ஒரு மனிதன் தன் ஆன்மாவை(spirit  & soul ) எவ்வாறு உயர்த்தி அடுத்த நிலைக்கு செல்வது பற்றியது.. ஆன்மீகத்தால் நடைமுறை வாழ்க்கைக்கும் (material  life) எப்படி உதவும் என்று ஆராய்ச்சி  செய்வது எப்படி முடியும்.. ஒரு மனிதனின் அன்றடா தேவைகள் முடிந்தபின்பே உண்மையான ஆன்மிகம் தொடங்கும்

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு திருமூலர் எழுதிய திருமந்திரம் வெறும் போற்றிப்பாடும் பஜனை பாடல் அல்ல என்பது அதை முழுவதுமாக படித்து உணர்ந்தவர்களுக்கு தெரியும்

நான் போகாத ஊர் என்பதால் இல்லாத ஊர் அது என்று கூறும் பகுத்தறிவு படைத்த படைப்புகள் என்ன?

ஒரு மனிதன் அந்தந்த வயதுக்கு ஏற்ற முந்திரிச்சியும் வளர்ச்சியும் வேண்டும் வெறும் உடலளவில் மட்டும் அல்லது மனதளவிலும் கூட.. ஆன்மிகம் இல்லாத மனிதன்  20  வயதில் அரைத்த மாவையே 90  வயதிலும் அரைத்து கொண்டிருப்பான்.

உதாரணம் மானாட மயிலாட... அது அந்த பெரியவரின் தவறல்ல, அவரின் தமிழ் மேல் எனக்கு எப்பொழுதும் மதிப்பு உண்டு ஆனால் பகுத்தறிவு பாதையால் அவரின் படைப்புகள் குறுகியவட்டத்தில் அடக்கிவிட்டதாகத்தான்  நினைக்கிறேன் (நான் அறிந்தவரையில்)


[7:28 PM, 8/30/2018] உள்ளூர்காரன்:
    இங்கே அரசியல் வேண்டாம்.

  
[7:35 PM, 8/30/2018] நண்பர்2:
    இதில் அரசியல் எங்கே  அய்யா இருக்கிறது?
நான் சொன்னது எல்லாம் நம் மொழிக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பும் அதை விளக்கி பார்க்கவேண்டியது இல்லை என்பதே !
நான் கூறிய உதாரணமும் சரியானதே.. அவருடைய அரசியல் கொள்கையை, கட்சியை  பற்றி விவாதிதிக்காதவரை


[5:24 AM, 8/31/2018] நண்பர் 3:
    அருமையான உரையாடல். தொடருங்கள்.

  
[6:38 AM, 8/31/2018] நண்பர் 4:
கலக்கிட்டீங்க!
நான் போகாத ஊர் என்பதால் இல்லாத ஊர் அது
அருமையான வரி, நவீன களப்பிரர்களுக்கு உறைக்கும் அடி.
அவரவர்களின் அனுபவம். பக்தியையும், பகுத்தறிவையும்  முழுவதுமாக உணராமல் விவாதம் செய்ய முடியாது. அதனால் இரண்டும் ஒன்றாகி விடமுடியாது.


[7:49 AM, 8/31/2018] உள்ளூர்காரன்:
    தனியா கம்பு சுத்தறது என்று தீருமோ.

அரசியல் பேசப் பிடிக்கும், ஆனால் இது தளமல்ல. ஆன்மீகம் பேசப் பிடிக்காது, இது தளமும் அல்ல என்பதால் மறுக்கிறேன்.



[8:03 AM, 8/31/2018] உள்ளூர்காரன்:
    சமயங்கள் எப்படி தமிழ்த் தொண்டாற்றின என்று சொல்லுங்கள், பேசலாம்.

என்னென்ன இலக்கண/இலக்கிய நூல்கள் எப்படி தமிழின் நலனுக்காக சமயங்களால் இயற்றப்பட்டன என சொல்லுங்கள் பேசலாம்.

என் நிலைப்பாடு, தமிழை சமயங்கள் தங்கள் நலனுக்கு பயன்படுத்திக் கொண்டனவே தவிர, தமிழ்த் தொண்டு என்று ஒன்றும் அதில் இல்லை என்பதே.

இன்றைய கிருத்துவ மிசனரிகள் போலவே சைவமும் தமிழைப் பயன்படுத்தித் தன்னை வளர்த்துக் கொண்டது. அவ்வளவுதான்.

தேம்பாவணி, சீறாப்புராணம் எல்லாம் இவ்வகையே.



[8:14 AM, 8/31/2018] நண்பர்1:
    எந்த படைப்பாளியும் காலம் கடந்து அவை போற்றப்படவேண்டும் என்ற நோக்கில் படைப்பதில்லை. அவை அனைத்தும் அவர் எண்ணங்களின் பதிவே, அவர் விரும்பிது/வெறுத்தது என படைப்பாளியின் பார்வை. அவர் காலம் கடந்த பின் நாம் அவற்றை தொகுத்து, தொடர்கிறோம்.
தொகுப்பதற்கு ஒரு காரணம் வேண்டும், பக்தியே நமக்கு பல அறிய படைப்புகளை தொகுத்து நாம்மை அடைய செய்தது, தமிழும் பிழைத்தது, இல்லாவிடில் தமிழ் 11 நூற்றாண்டை தாண்டியிராது.


[8:24 AM, 8/31/2018] உள்ளூர்காரன்:
 
தப்பு.
11ம் நூற்றாண்டுக்கு முன் வந்த திருக்குறள் சிலப்பதிகாரம் மணிமேகலை எல்லாம் தாங்கள் சார்ந்த சமணத்தை உயர்த்திப் பிடிக்கவில்லை.

அந்நூல்கள் எல்லாம் பக்தியின் "உதவி" இல்லாமல்தான் 1000 ஆண்டுகள் கழிந்தும், இன்றும் தாண்டிக் கொண்டு இருக்கிறது.

கடைச்சங்க காலத்திற்கு பின் வந்த சமய "இலக்கியங்கள்" தமிழின் மீது பெரும் சுமையாக, வேறு எதிலும் கவனம் கொள்வதை தடுத்து விட்டது. தமிழ் அதையும் தாண்டி பிழைத்தது/கிறது.

சமயங்களுக்கு தமிழ் தேவைப்பட்டது. தமிழுக்கு சமயங்கள் சுமையாகவே இருந்து வருகிறது.



[8:30 AM, 8/31/2018] உள்ளூர்காரன்:
    ஏற்கனவே தாமதமாய்டுச்சு.

முடிந்தவர்கள் தொடருங்கள்.
சாயங்காலம் சேர்ந்துக்கறேன்.



[8:30 AM, 8/31/2018] நண்பர்1:
    😂 அவை அனைத்தும் மடங்கள்/ஆதினங்கள் வழியே மக்களை அடைந்தது

  
[9:07 AM, 8/31/2018] உள்ளூர்காரன்:
    எதன் அடிப்படையில் சொல்கிறாய்? என்ன தரவு? அதைக் காண்பி.
உன் கற்பனைகள் தரவு ஆகா.


[2:37 PM, 8/31/2018] நண்பர்2:
    நண்பர்1 கூறுவது சரியே.. உதாரணம் சம்ஸ்கிருதம்!  நடைமுறைவாழ்க்கைக்கு சமஸ்க்ரிதத்தில் இல்லாத நூல்களா சொல்லாத மனித உணர்வுகளா ? இருந்தும் மற்ற மொழிகள் அந்த இடத்தை நிரப்பினாலும் ஆன்மீகத்தில் மட்டும் இன்றும் உபயோகத்தில் இருப்பதே சான்று!
எத்தனை மொழிபெயர்ப்பு செய்தாலும் ஆன்மீகத்திர்ற்கும்   மொழிக்கும் உள்ள தொடர்பை அவ்வளவு எளிதாக மொழிபெயர்த்துவிடமுடியும் என்று தோன்ற வில்லை ..
நம் திருமந்தித்ரத்தையும் சிவபுராணத்தையும் என்தனைமுறை மொழிபேயர்த்தாலும் தமிழால் அதைஉணர்வதுபோல அமையாது


[8:59 AM, 9/1/2018] நண்பர் 3:
    மொழியை சமயம் தன் நலனுக்காக பிடிச்சுகிச்சு எனும் கருத்து ஏற்புடையதாய் இல்லை.  மற்ற வீர தீர செயல்கள் செய்ய விடாமல் தடுத்து விட்டது என்று சொல்வதும் அடுக்குமா எனத் தெரியவில்லை.  தமிழ் இலக்கணம் தொல்காப்பியனுக்கு முன்பே அகத்தியன் எழுதினான் என்ற குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.  அகத்தியன் யாரிடம் மொழியைக் கற்றான் என்றும் அறிஞர் பெருமக்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள்.  கம்பனின் உதாராணங்கள் விக்கியிலிரிந்து …  இதெல்லாம் ‘சும்மா’ என்று சட்டுனு பகுத்துஅறிந்து புறந்தள்ளிவிட முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.

கம்பர் கருத்து[தொகு]
தொடர்புள்ள கம்பராமாயண மூலம்
என்றுமுள தென்றமிழ் இயம்பி இசை கொண்டான் - 47
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் -36
தழற்புரை சுடர்கடவுள் தந்த தமிழ் தந்தான். 41
கடலெல்லாம் உண்டு அவர்கள் பின்னர் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் - 37
வாதாபிகன் வன்மைக் காயம் இனிது உண்டு அலகின் ஆரிடர் களைசைந்தான் - 38
விந்தம் எனும் விண் தோய் நாகம் அது நாகம் உற, நாகம் என நின்றான். 39
வடாது திசை மேல்நாள் நீசம் உற, வானின் நெடு மா மலயம் நேரா, ஈசன் நிகர் ஆய், உலகு சீர் பெற இருந்தான். 40
குண்டிகையினில், பொரு இல், காவிரி கொணர்ந்தான். 46
முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கினான். 56

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D


[6:55 PM, 9/1/2018] உள்ளூர்காரன்:
    தொல்காப்பியருக்கு முன் இருந்ததாகச் சொல்லப்படும் அகத்தியம் நமக்குக் கிடைக்கவில்லை.
கிடைக்காத நூலைப் பற்றி அதன் ஆசிரியரைப் பற்றி அவரவருக்கு வசதியானவற்றை சொல்லிக் கொள்ள முடியும் என்பதால் அதை எப்படி ஏற்பீர்கள்?

எப்படி இருந்தாலும், அதே ஆசிரியர்தான் "அகஸ்திய" முனிவர் என்பது சரியாக வரவில்லை. தமிழிலேயே இல்லாத கிரந்த எழுத்தைக் கொண்ட ஒரு "முனிவர்"தான் தமிழ் இலக்கணமே எழுதிக் கொடுத்தார் என்பது மதவாதிகளின் பொருந்தாத் தற்பெருமையாகத் தெரியவில்லையா? அவர் மனைவி "லோபாமுத்திரை"யாம். தமிழ்ச் சொற்கள், பெயர்கள் லகாரத்தில் துவங்காது. பொய்யாவது பொருந்தச் சொல்கிறார்களா பாருங்கள்.

நீண்ட நாட்களாகவே இப்படி நம்மை குழப்ப முயற்சி செய்துகிட்டேதான் இருக்காங்க. நம்பாதீங்க. கலைஞர், தன் மகன் மு.க முத்துவை கொண்டு வர முயன்றது போலவே வீரசோழியம்-ன்னு எல்லாம் "தமிழ் இலக்கணம்" எழுதிப் பார்த்தார்கள். மு.க முத்து போலவே அதுவும் ஆகிப் போனது.

காக்கா தட்டிவிட்டு காவிரி உருவாக்கக் காரணமான அகஸ்தியர் என்பது போன்ற அறிவுக்கொவ்வாத கதைகளை விடுத்து தகவல்களை மட்டும் பார்ப்போம்.

* சிலப்பதிகாரம் போன்ற பெரும் காப்பியங்களைக் கூட விட்டு விடலாம். பொன்னியின் செல்வன் போன்ற கதைகள் கூட 10 நூற்றாண்டுகளுக்கு யாரும் எழுத மாட்டார்களா?
* ஏன் வெறும் அந்தாதிகள் மட்டுமே ஊக்குவிக்கப்பட்டன?
* மடாதிபதிகள், சமயக் குரவர்கள் தவிர்த்து எல்லோரும் தமிழைக் கண்டுக்காமல் விட்டுட்டாங்க.
* சங்க காலம் தொட்டு மக்கள் மொழியாக இருந்தது, திடீர்ன்னு வெறும் "போற்றி போற்றி" ஆகி விட்டது.
* ஒரே ஒரு பெரிய படைப்பு கூட 1000 ஆண்டுகளுக்கு "தற்செயலாக" வராது போயிற்று.

இதெல்லாம் தானாக நடந்தது என்றால் நம்பும்படியாகவா இருக்கிறது?

அந்நாட்களில் பொருளுதவி இருந்தால்தான் இலக்கியம், இலக்கணம் படைக்க முடியும். ஓய்வு நேரத்தில் தமிழ் படித்து அட்டகாசமான இலக்கியம் படைக்கலாம் என்பதெல்லாம் நடைமுறைக்கு முடியாதது. அன்றைய மிசனரிகள் மூலம் பொருளுதவி சமய நூல்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. உதவி வேண்டும் என்றால் "பஜனை" பாடு, மற்றவற்றிக்கு எல்லாம் ஒன்னும் கிடையாது என்றால் எப்படி வேறு இலக்கியங்கள் படைப்பது?

20ம் நூற்றாண்டில் அந்தத் தளை உடைக்கப்பட்டது. மொழி மக்களிடம் வந்து சேர்ந்தது. "பஜனை" ஒலி நின்றது/குறைந்தது. அதுதான் வைத்தியநாதன்களின் கடுப்புக்கு காரணம்.




[7:11 PM, 9/1/2018] நண்பர் 4:
    1200 க்குப் பிறகு தமிழகத்தை ஆண்டவர்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்லர். அவர்களுக்கு தமிழ் வளர்ச்சி இரண்டாம் பட்சம் கூட இல்லை

  
[3:00 PM, 9/2/2018] நண்பர்2:
    ஆன்மீகத்தையும் சமயத்தையும்அடக்கிவிட்டு (நாத்திகத்தால்) தான் மற்ற விஷயங்களை வளர்க்க முடியும் என்பதிலிருந்தே தெரியவில்லையா மற்ற விஷயங்களின் நிலையற்ற தன்மையை?

வள்ளலார் அவர்கள் எந்த மன்னரின் பொருளுதவிக்காக திருவருட்பாவை எழுதினார் என்று கூறினால் நன்றாக இருக்கும்.  ஆன்மீகத்தை எழுதிய  பெருன்பாலான அன்பர்களுக்கு வேறு வருமானம்  இல்லாமல் சன்யாசிகளாக திரிந்ததானால்  தாங்கள்  எழுதியவகைகள் நிலைபெற்று அடுத்ததலைமுறைக்கும்  உதவ கல்லலிலும் தாமிரபட்டயத்திலும் வடிக்க மன்னனர்களை நாடினார்கள்

அவ்வாரு ஆதரித்த மன்னர்கள் மற்றவிஷ்யங்களை இல்லை என்று விளக்கிவிடவில்லையே.. தங்களை புகழ்ந்து  எழுதிய புலவர்களுக்கு சன்மானம் அளிக்காமலிருந்தார்கள்? (பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டா இல்லையா என்ற ஆராய்ச்சி வேறு, அதற்க்கு 1000 பொற்காசுகள்  )  ஆனால் அவைகள் எல்லாம் அந்த மன்னன் அழிந்த உடன் அழிந்துவிட்டவை...

கடந்த 800 வருடங்களாக இந்தியா அந்நிய படையெடுப்பின் காரணாமாக அடிமை நாடாக வாழ்ந்துதான் மற்ற இலக்கியங்கள் வளராமல் போனதற்கு காரணம்.பக்தி இலக்கியங்கள் thappi  பிழைத்தார்க்கும் வளர்ந்ததற்கும் அதை படைத்தவர்கள் சாதாரண material  life விட மேலான ஒன்றின் மேல் ஈர்க்கப்பட்டதனால் மட்டுமே.

இன்னும் கூட எழுத ஆசைதான், நான் விவாதித்துக்கொண்டிப்பவரின் அறிவுக்கூர்மை என்னக்கு தெரியும். நான் மேலே கூறியவகையெல்லாம் அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும்?  தூங்குபவர்களை மட்டுமே எழுப்பமுடியும் என்பதால் என் வாதத்தை இத்துடன் முடித்து கொள்கிறேன்.

நன்றி !!!


[4:43 PM, 9/2/2018] நண்பர் 4:
    //அதை படைத்தவர்கள் சாதாரண material  life விட மேலான ஒன்றின் மேல் ஈர்க்கப்பட்டதனால் மட்டுமே.//
அருமையாகச் சொன்னீர்கள்!!


[2:03 PM, 9/3/2018] உள்ளூர்காரன்:
    800 ஆண்டுகள்.. அந்நியப் படையெடுப்பு.. அடிமை இந்தியா.. இதெல்லாம் "தமிழ் இலக்கியம் வளராததற்கு" காரணம்ங்கறீங்க. :)

வாதத்தை முடித்துக் கொண்டீர், வாதத்துக்கு நன்றி.

வள்ளலார், வைத்தியநாதன் பொரும்பும் 19ம் நூற்றாண்டு "களப்பிரர்" காலத்தவர். உங்கள் எடுத்துக்காட்டு செல்லாததாகி விட்டது.

மேலும், வள்ளலார் வசதியானவர். பசிப் பிணியே பெரும் பிணியென ஊருக்கெல்லாம் வெகு காலத்துக்கு சாப்பாடு போட்டு வந்திருக்கிறார். பொருளாதரச் சிக்கல் அவருக்கு இருந்ததில்லை. அதனால் அவர் உங்களுக்கு சரியான எடுத்துக்காட்டல்ல.

இந்தக் குழுவின் நோக்க எல்லைக்கப்பால் இருப்பதால், மதங்களைப் பற்றிய பேச்சுகள் வேண்டாம். ஒரு கோடி மட்டும் காட்டுகிறேன், ஆர்வம் இருப்போர் தேடிப் பாருங்கள்.

வள்ளலார் ஏன் எரித்துக்கொல்லப்பட்டார் எனத்தேடிப் படியுங்கள். சமயங்களின் இன்னொரு நன்முகம் புரியக்கூடும்.



[4:14 PM, 9/3/2018] நண்பர்2:
    இங்கே மதங்களை பற்றி பேசக்கூடாது என்றுதான் அமைதியாக இருந்தேன்... வள்ளலார் ஜோதியில் ஐக்கியமானதாகத்தான்   நான் படித்தவரை.. ஒரு சில நாத்திகர்களுக்குத்தான் (அவர் எரித்துக்கொள்ளப்பட்டார்) என்ற நினைப்பு.

  
[4:46 PM, 9/3/2018] நண்பர் 4:
    வள்ளலாருக்கும் இப்படி ஒரு நாத்திக முடிவு இருக்கா? நான் நந்தனாருக்கு மட்டும்தான் அப்படின்னு கேள்விப்பட்டிருந்தேன்

  
[4:51 PM, 9/3/2018] நண்பர்2:
    விட்டால் ராகவேந்திரரைஉயிரோடு அவர்களின் சாகாக்களே புதைத்தார்கள் என்றுதான் சொல்வார்கள்... அவர்களை சொல்லி குற்றமில்லை.. அவர்களக்கு தெரிந்தது அவ்வளவுதான்

  
[10:03 PM, 9/5/2018] உள்ளூர்காரன்:
    இன்றைய இந்திய தண்டனைச் சட்டப்படி தற்கொலையும் அதற்கு உதவுதலும் குற்றம். இராகவேந்திரர் போல ஒருவர் இன்று முயன்றால் தற்கொலை முயற்சிக்கும் அவரது மாணவர்கள் அதற்கு உடந்தையாக இருந்ததற்கும் வழக்கு பதிய வேண்டி இருக்கும்.

எக்காரணம் கொண்டும் தன்னுயிரை ஒருவர் மாய்த்துக் கொள்ளுவதற்குப் பெயர் தற்கொலையே.

சமயம், தன் நலனுக்காக மற்றவர்களைக் கொல்வதையோ ஒருவர் தன்னையே மாய்த்துக் கொள்ளச் செய்வதையோ காலகாலமாக செய்தே வருகிறது. மனிதர்களுக்கே இக்கதி எனும்போது மொழி எல்லாம் எம்மாத்திரம்?

வாடிய பயிரைக் கூட கண்ட போதெல்லாம் வாடிய பெருங்கருணையாளர் வள்ளலாரையே எரித்துக் கொன்றது சமயம். "ஜோதியில் ஐக்கியமாயிட்டார்" என்று அவரைப் பின்பற்றுபவர்களே சொல்லும்படி செய்திருக்கிறது.

"அருட்பெரும் சுடரே, தனிப் பெரும் கருணை" என்று சொன்ன வள்ளலாரின் சொற்களுடனேயே முடித்துக் கொள்வோம்.

தமிழையும், நம்மில் யாரையும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்.



Friday, May 11, 2018

நாம் எங்கே போகிறோம்?


   இந்தியா  ஒரு நாடு என்ற முறையில் அல்லது இந்திய சமூகம் என்ற முறையில் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்ற கேள்வி பல சமயங்களில் என் மனத்தில் உதித்தது உண்டு. இதே கேள்வியை நல்லெண்னம் மிகுந்த பலரும் கேட்டுவிட்டு ஓய்ந்து போகின்றனர். செய்தித்தாளில் மோசமான பல செய்திகளை படிக்கும்போது,. அல்லது பல விபரீதமான சம்பவங்களை நேரடியாக பார்க்க நேரும் போது இப்படி கேட்டு விட்டு ,சில நாட்களில் மறந்து விடுகிறோம்.  நடக்கும் சம்பவத்தின் கடுமை,சம்பவம் நடைபெற்ற இடம், நம்மிடமிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது,, சம்மந்தப்பட்ட நபர்களுடன் நமக்கு இருக்கும் உறவு இவற்றைப்  பொறுத்து நம்முடைய மனத்தில் ஏற்படும் கிள்ர்ச்சியின் கடுமை இருக்கும்.சில நாட்களில் அல்லது சில  வாரங்களில் அதை மறந்து விடுவோம். ஆனால் சமீப கால நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அபாயத்தை நம் வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்தக் கூடிய நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது..
சில வருடங்களுக்கு முன் ஒரு பிரபல எழுத்தாளர் நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டு இறந்து போனார்.  யூ.ஆர் ஆனந்த மூர்த்தி என்பது அவருடைய பெயர். கன்னட எழுத்தாளரான அவருடைய பல நூல்கள் பல இந்திய மொழிகளிலும் வெளிநாட்டு மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது,  அந்த அளவுக்கு பிரபலமான அவர் நிச்சயமாக பலருக்கு வேண்டாதவராகக் கூட இருக்கலாம். அவருடைய கதைகளில் சமூக அக்கரையும் புதிய எண்ணங்களும் பழமையை சாடுவதும் இருக்கத்தான் செய்யும். நான் அவருடைய எல்லா சிறுகதைகளையும் படித்ததில்லை. தமிழ் மொழி பெயர்ப்பில் சில கதைகளையும் கட்டுரைகளையும் படித்திருக்கிறேன் . அவருடைய கதை ஒன்று திரைப்படமாக்கப்பட்டு தேசீய அவார்டு பெற்றது. அந்த கன்னட படத்தை நான் பார்த்திருக்கிறேன்.
கூட்டிக் கழித்து சொன்னால் யு.ஆர் ஆனந்தமூர்த்தி கன்னட மொழிக்கு பெருமை சேர்த்த ஒரு எழுத்தாளர். ஆனால் அவர் இறந்த தினத்தில்  நடந்ததான் மிகப் பெரிய துயரம்.
அவர் இறந்த செய்தி வெளியானவுடன் அவரை எதிரியாகக் கருதும் சிலர் அவர் வீட்டின் முன் நின்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். தெருவில் போவோர்க்கும்.,வருவோர்க்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள் ,ஆனந்த மூர்த்திக்கு எதிரான கோஷம் என்று நினைத்து பல  கோஷங்களை  போட்டார்கள். அவர்கள் ஆனந்த மூர்த்தி வீட்டுக்கு எதிரில் நின்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வதையும் இனிப்பு வழங்கியதையும் வீடியோ படம் எடுத்து பத்திரிகைகளில் போட்டார்கள்..பல நாட்கள் இந்த செய்தி பெங்களூர் நகரத்தில் கார சாரமான விவாதத்துக்கு காரணமானது. பெங்களுர் நகரத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் குறிப்பாக இலக்கிய வட்டாரத்தில் விவாதம் நடந்தது.
காவல் துறையினர் கடைசி நேரத்தில் வந்து கூட்டத்தை கலைந்து போகச் செய்தார்களே யொழிய யாரும் கைது செய்யப்படவில்லை.
இது போன்ற சம்பவங்கள் நடந்தது பற்றி நானும் கேள்விப்பட்டிருகிறேன். காந்தியடிகள் இறந்த போது  பல வடநாட்டு நகரஙகளில் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள் என்ற செய்தியை கேள்விப் பட்டிருக்கிறேன். இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டபோது  என் கண் முன்னால்  ஸ்ரீரங்கத்தில் இனிப்பு வழங்கப்பட்டதும் அதையொட்டி கலகம் நடந்ததும் எனக்கு நினைவுக்கு வருகிறது.
நமக்கு வேண்டாதவர்கள் நோய் காரணமாக இறந்தாலும் கொலை செய்யப்பட்டு இறந்தாலும் நாம் அனுதாப்படாமல் இருக்கலாம்,உள் மனத்தில் மகிழ்ச்சி கூட சிலர் அடைவதுண்டு..ஆனால் வெளிப்படையாக அதை பகிரங்கமாகக் களிப்புடன் கொண்டாடுவது எத்தகைய மன  நிலையைக் குறிக்கிறது என்பது பற்றி சிந்திக்கும் போது  நான் கவலைப்படுகிறேன். நம் சமூகம் முழுவதற்கும் ஏதோ மனநோய் பீடித்திருக்கிறது என்று கவலைப்படுகிறேன்.இது ஒரு வகையான பழி வாங்கும் மனநிலையை வளர்த்து விட்டிருக்கிறோம் என்று நினைக்கச் செய்கிறது.எதிரி என்று கருதுபவனை எப்படியாவது தீர்த்துக் கட்டுவது என்ற மனநிலையை பொதுமைப்படுத்தினால் அது சமூகத்துக்கு எவ்வளவு பெரிய கேட்டை விளைவிக்கும் என்பது பற்றி புரியாமல் பொதுவாழ்க்கை இந்த நாட்டில் கறை பட்டுக் கிடக்கிறது. சமூகம் முழுவதும் வக்கிரம் கொண்டதாக மாறினால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.
சம்பவம் நடந்து முடிந்து பல நாட்கள் ஆகிவிட்டது அதைப் பற்றி பேசி எழுதி என்ன செய்யப் போகிறோம் என்று நினைக்கலாம்.. ஆனால் அதே போன்ற அல்லது அதை நினைவு படுத்துகின்ற சம்பவங்கள் இப்பொழுது அடிக்கடி நடக்கத் தொடங்கி விட்டது. அத்தகைய சம்பவங்கள் இயல்பானதாக ஆகி விடும் அபாயம் தொடர்கிறது சம்பவத்தையொட்டி தெரிவிக்கப்படும் கருத்துக்கள் சமூகத்தை பீடித்துள்ள நோய் எவ்வளவு பரவலாக எல்லோரையும் பாதித்திருக்கிறது என்ற உண்மையையும் வெளிக் கொணர்கிறது..  .
சென்ற பிப்ரவரி மாதத்தில் இன்னொரு சம்பவம் நடந்தது சென்னை கிரிமினல் கோர்ட்  ஒன்றில் ஒரு இளைஞனுக்கு மரண தண்டனை விதிக்க;பட்டவுடன் அங்கே கூடியிருந்த பலர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.தமிழ்நாட்டு அரசியல் கூட்டங்களில் முழங்குவது போல நீதிபதியின் பெயரைச் சொல்லி அவருக்கு ஜே போட்டு முழங்கினார்கள் ,.அருகில் இருந்த பலருக்கு இனிப்பும் வழங்கப்பட்டது என்று பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது.ஆனால் இந்த வழக்கின்  தன்மையே வேறு.
சென்னை நகரத்தில் ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் குடியிருந்த ஒரு மத்ய தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவன் அந்த இளைஞன்..ஒரே மகன் இஞ்சினீரிங் படித்தவன். அவன் அதே அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ள மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு வயதுப் பெண்ணை கற்பழித்து கொலை செய்துவிட்டதாகக் குற்றச்சாட்டு அவனை ஜாமீனில் எடுத்து வந்த தந்தையையும்., தாயையும் அவன் விட்டு வைக்கவில்லை. வீட்டில் தாய் தனியாக இருந்த போது அவளை கொலை செய்து விட்டு அவள் அணிந்திருந்த நகைகளுடன் ஓடிப்போய் விட்டான். போலிஸ் அவனை வலை வீசி தேடி கடைசியில் மொம்பை நகரத்தில் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர். மூன்று மாத காலத்துக்குள் இரண்டு பெண்களை கொலை செய்தவனுக்கு இதை விட தகுதியான தண்டனை யாரும் கொடுக்க முடியாது சென்னை நகரத்தையே ஒரு கலக்கு கலக்கிய வழக்கு இது ..தீர்ப்பு வழங்கிய நாளில் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தில் குடியிருக்கும் பலர் குடும்பத்துடன் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர் என்பது மற்றொரு செய்தி இந்த மரண தண்டனை செய்திக்கு இனிப்பு வழங்கியதை நம்மால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். ஆனால் மரணம் தொடர்பான செய்திகளை நாம் கேள்விப்படும் போது எந்த உணர்ச்சியையும் நாகரீகமாக வெளிப்படுத்த வேண்டுமென்ற  நடைமுறை இதிலும் சற்று மீறப்பட்டிருப்பதாகவே நினைக்கிறேன் இங்கிதம் இல்லாத முறையில் ஆனந்த மூர்த்தி மரணத்தை கொண்டாடியவர்களை விட இவர்கள் தரக் குறைவானவர்கள் அல்ல. .
சில நாட்களாக பத்திரிகையிலும்,, தொலைக் காட்சியிலும் ஒரு செய்தி அதிகமாக பேசப்படுகிறது அதுதான் காஷ்மீரில் காத்துவா என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு கற்பழிப்பு மற்றும் கொலை. இந்த வழக்கிலும் சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு எட்டு வயதுதான் ஆகிறது.அந்த பெண்ண்ணை ஒரு கோயிலுக்குள் எட்டு நாட்கள் வைத்திருந்து பலர் கற்பழித்து கடைசியில் கொலை செய்து விட்டதாகச் செய்தி..இறந்த பெண்ணின் உடலில் எழுபதுக்கு மேற்பட்ட காயங்களிருந்ததாக மருத்துவ அறிக்கை கூறுகிறது.
.இந்த சம்பவம் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களுக்கு செவி சாய்க்காத காவல் துறையினர் நிர்ப்பந்தத்தின் காரணமாகச் செயல்பட்டனர். ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கில் பல பெரிய இடத்துக்காரர்கள் தொடர்பு இருப்பது தெரியவந்தது .இறுதியாக காவல் துறையைச் சேர்ந்த சிலர் உள்ப்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்
பிரச்னை இத்துடன் முடிந்து விடவில்லை இப்பொழுது புதிய பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது..கைது செய்யப்பட்டவர்கள் ஆறு பேரும் அப்பாவிகள்.காவல்துறையினர் பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் இது முழுக்க முழுக்க ஒரு பொய் வழக்கு. என்பது அந்த பகுதியில் இருக்கும் சிலருடைய வாதம் இத்தகைய நிலைபாட்டுக்கு முக்கிய காரணம் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண் ஒரு முஸ்லீம் கைது செய்யப்படவர்கள் ஆறு பேரும் இந்துக்கள்.. இதுதான் அவர்களுடைய வாதம்
·       உண்மை தெரிய வேண்டும் என்றால் வழக்கை மத்ய புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. .எங்கோ ஒரு மூலையில்  நடைபெற்ற இந்த சம்பவத்துக்கு டெல்லி நகரத்தில் பலர்  கூட்டம் நடத்தி  போராடும் நிலை வந்து விட்டது  நாடு முழுவதும் பல பத்திரிகைகளில் விவாதிக்கப்படுகிறது. காரணம் இந்த வழக்கில் இரு வேறு மதத்தினர் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள்.பெண்ணின் தந்தை தங்குமிடம் கூட  இல்லாத ஒரு நாடோடிக் குடுமபத்தைச் சேர்ந்தவர்.
·       குற்றவாளிகளைக் காப்பாற்ற பெரிய படை திரண்டு போராடிக் கொண்டிருக்கிறது இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் நடத்தும் போராடத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் ஊர்வலத்தில் தேசீயக் கொடி பயன்படுத்த்ப் படுகிறது,. தங்களுடைய மதத்துக்கு பெரிய ஆபத்து வந்து விட்டதாகக் கூக்குரல் எழுப்புகிறார்கள். ஊர்வலத்தில் அமைச்சர்களும் பங்கு கொண்டு பேசுவது இதில்
·        பெரிய வேடிக்கை மட்டுமல்ல. விபரீதம்
·       காவல்துறையினர்  நீதிமன்றத்தில் வழக்கை பதிவு செய்ய விடாமல்
·       வழக்கறிஞர்கள் தடுத்தனர். எல்லாவற்றையும் மீறி கடைசியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .இப்பொழுது உச்ச நீதிமன்றம் தலையிட்டு வழக்கை அடுத்த மாநிலத்தில் உள்ள பதான்கோட்டில் நடத்த உத்தரவிட்டிருக்கிறது.
·       இன்று நாடு உள்ள நிலைமையில் குற்றம் சாட்டப்பட்டவரின் அல்லது பாதிக்கப்பட்டவரின் மதத்தைப் பார்த்து கட்சி பேசத் தொடங்கினால் விபரீதம் அதிகமாகும்.  உதாரணத்துக்கு நாட்டில் பெரிய குற்றமாக இன்று நடப்பது பெண் குழந்தைகள் கொலையும் கற்பழிப்பும்தான்.
·        பத்து அல்லது பன்னிரண்டு வயதுக்குட்பட்ட பெண்கள் சீரழிக்கப்படுவது கொலை செய்யப்படுவது பற்றிய பத்திரிகைச் செய்தி இல்லாத நாளே இல்லை.. ஒரிஸ்ஸா மாநிலத்தில் மட்டும் சென்ற 2017 ஆம் ஆண்டில் 5000 க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏழு  பாராளூமன்ற உறுப்பினர்கள் இந்த வகையான  குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி, அவர்கள் மீதான வழக்குகள் சென்ற சில மாதங்களில் திரும்பப் பெற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது இப்பொழுது சொல்லுங்கள் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று கேட்பதில் நியாயம் இருக்கிறதா?  இல்லையா?
  - மு.கோபாலகிருஷ்ணன்

Sunday, April 08, 2018

ஒரு கதை சொல்லட்டுமா..



பெரியவர்களுக்கான பொதுவான மாத்திரையை சிறியவர்களுக்கு கொடுக்கும்படி வந்தால் என்ன சொல்வாங்க? முழு மாத்திரை தேவை இல்லைங்க, பாதியா உடைச்சு அரை மாத்திரை குடுங்க போதும்-ன்னு நம்ம ஊர்ல சொல்லிக் கேட்டிருப்போம், இல்லையா? அதாவது, தேவையைப் பொறுத்து அளவை மாற்றிக் கொள்வோம்.

அது மாதிரியே பாதியா வெட்டி அரை மாத்திரை எடுத்துக் கொள்ளும் எழுத்து வகை தமிழில் உண்டு.

குற்றியலுகரம்.

மேலே சொன்ன மாத்திரைக் கதை ஒரு புரிதலுக்காக. உண்மையில் தமிழில் மாத்திரை என்பது கால அளவு. ஒரு எழுத்து, ஒலிக்கும் நேரத்தைக் குறிக்க பயன்படுத்துவது. தோராயமாக, கண் இமைக்கும் நேரம், கை சொடுக்கும் நேரம் எல்லாம் ஒரு மாத்திரை என்பார்கள். இன்றைய அளவுப் படி கிட்டத்தட்ட அரை நொடி.
ஆச்சா?

தமிழின் குறில் எழுத்துக்களுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரைகள், மெய்யெழுத்துக்களுக்கு அரை மாத்திரை அளவு என்பது விதி.

இப்போ தலைப்புக்கு வருவோம்.

ஒரு கதை சொல்லட்டா?
உங்க மேல ஒருத்தி/ஒருவன் கிறுக்கா இருக்கறதா வைப்போம்.

ஒரு நாள், உங்க கிட்ட வந்து "உம்மேலே கிறுக்கு" அப்படின்னு சொல்றாள்/ன்.
நீங்களும் சொக்கிப் போயிடறீங்க.
அப்புறம்?

மேலே என்ன ஆச்சுன்னு ஆராயலாம் தான், ஆனா இப்போ நம்ம ஆர்வம் இருக்க வேண்டியது இலக்கணத்தின் மீது.

"உம்மேலே கிறுக்கு"
அந்தச் சொற்களில் உள்ள இரண்டு "உ" க்களையும் சொல்லிப் பாருங்கள். முதல் உ-வை முழுசாச் சொல்வோம். கிறுக்கு-ல் (கு=க்+உ) உள்ள "உ" பாதில நின்னுடும்.  சொல்லித்தான் பாருங்களேன். "கிறுக்உ" என்று ஒலிக்காது.

உங்க ஆளு சொன்னதுல, வெட்கத்தில குறுகிப் போய் நீங்க நிக்கறீங்களோ இல்லையோ, அந்த "உ" குறுகி நின்னுடும். இப்படிக் குறுகி, முழு மாத்திரை அளவுக்கு ஒலிக்காகாமல் அரை மாத்திரையில் ஒலிக்கும் உகரம், குறுகிய + உகரம் = குற்றியலுகரம்.
அம்புட்டுதான்.

கதை சொல்லறேன்னு உங்க காதை வாங்கி இலக்கணம் சொல்வது தப்பா?
தெரியாது. ஆனா இன்னொரு குறிப்பு சொல்ல தெரியும்.

தெரியாது ->  இந்தத் "து"வில் உள்ள "உ" (து=த்+உ) முழுசா ஒலிக்குது. அதனால இது முற்றிய + உகரம் = முற்றியலுகரம்.

அவ்வளவுதான் குற்றிய/முற்றிய உகரங்கள்.

ஒரே கல்லுல இரண்டு மங்கா:
ஒரே கதையில குற்றியலுகரம் மற்றும் முற்றியலுகரம்.

 ​#ஞாயிறு போற்றுதும்.