Tuesday, June 20, 2017

தாயுமான என் தாய்மாமன் வெ.பாலன்.




பிறந்த நொடி முதல் என்னை தன் மகளாய் பாசத்தை கொட்டி வளர்த்தீர் - எனது வாழ்க்கையை மிக அழகாக செதுக்கியதற்கு கோடி நன்றி!
தங்கை மகளுக்கு இன்னொரு தகப்பனாய் என் வாழ்க்கைக்கு ஆதாரமாய் விளங்கினீர் - நீர் எமக்கு செய்தவை எண்ணில் அடங்கா!
வாயார 'அம்மா' என்று அழைக்கும் அந்த பாசக் குரலையும், கம்பீர சிரிப்பை கேட்கவும், வாரா வாரம் கிடைக்கும் அந்த அன்பு முத்தமும் இனி நான் அழுது புரண்டாலும் கிட்டாது!
மடிமீது அமர்த்தி காது குத்தியது முதல், என் முதல் வாகன பூஜை வரை அனைத்தும் முன்னின்று செய்தீர்கள்.
என் நலத்தில் என்னைவிட அதிக அக்கறை கொள்வீர் - நீர் எமக்கு என்றுமே கடவுளின் அன்புப் பரிசு!

பள்ளிக்கு அடியெடுத்து வைக்கும் முதல்நாள் அரிசியில் 'அ' என எழுதி, என் கல்வி வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது தொடங்கி, நான் பல்கலைக்கழக பட்டம் பெறும் வரை எனக்கு தூண்டுகோலாய் விளங்கினீர் - எனது ஒவ்வொரு வெற்றிக்கும் தாங்களே முதன்மை காரணம்.

என் முதல் ஆசானாய், ஆலோசகராய், நண்பராய், நல்ல மனிதராய், எழுத்தாளராய், சிறந்த தலைவராய், சமுதாய நலன்விரும்பியாய் பல பரிணாமங்களில் திகழ்ந்தீர் - உங்களின் மறைவு நம் குடும்பத்திற்கு மட்டுமல்ல, சமூதாயத்திற்கே பேரிழப்பு!

இந்நேரம் சொர்க்கமும் தங்கள் வரவால் மகிழ்ந்திருக்கும்!
தாய் மாமன் எனும் உறவிற்கு தங்களைவிட வேறு எவராலும் பெருமை சேர்த்திருக்க முடியாது!

நீர் எமக்கு செய்த அனைத்திற்கும் நன்றி நவில வார்த்தைகள் போதாது மாமா.
எனது முதல் கவியையும் கண்ணீரையும் சமர்பிக்கின்றேன்!
நீர் எமக்கு தாய் மாமன் மட்டுமல்ல - தாயுமானவர்!

 - பா.பவித்ரா

(மலேசியாவில் பிறந்து வளர்ந்த பவித்ரா, அண்மையில் மறைந்த தாய்மாமனுக்காக எழுதிய தந்தையர் தின கவிதை. புகைப்படமும் அவர்களுடையதுதான்...)

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!