Wednesday, September 19, 2012

வள்ளலாரும் பாரதியும் நாமும்


நமக்கு எப்பவுமே ஒரு இலக்கு இருந்து கொண்டே இருக்கும்.  நாம் வைத்துக் கொள்கிறோமோ இல்லையோ, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நிச்சயம் நமக்கு ஒரு இல'க்கு' வைத்து விடும்.  இதற்கு சிலபல உதாரணங்கள் இன்றைய நடைமுறை வாழ்வில் நாம் காணலாம்.

ஒரு பள்ளி சிறந்த பள்ளி என்று பெயரெடுத்துவிட்டால் போதும், அவர் பையனை அங்கு விட்டார் என்று, இவரும் விடுவார்.  இவர் ஏழையாக இருந்தாலும், சமூக உந்துதல் இவரை விடாது.  இதே போல சைக்கிளுக்கே வழியில்லாதவராக இருந்தாலும், அவர் வைத்திருக்கிறார் என இவர் கார் வாங்குவார்.  இப்படித் தொடங்கிய பயணம் ஒரு முடிவுக்கே வராது, அது வேண்டும், இது வேண்டும் என்று தவிதவிக்கும்.

பாரதியாரும் அவர் பங்கிற்கு எழுதிய பாடல் எத்துனை சான்று.

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும், – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் – அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன்
காவலுற வேணும், – என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

அவர் வேண்டியவற்றை, நாம் அப்படியே பின்பற்றி, காணி நிலம் என்ன, கண் காணும் இடமெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டு(ம்) இருக்கிறோம்.  பாரதியார் கேட்டவை ஒரு சிறு காணி நிலமும், அதனைச் சுற்றி அழகிய சுற்றுப் புறமும், ஒரு மாளிகையும், அன்பு மனைவியும், கத்தும் குயிலோசையும்.  படிக்கக் கேட்க பாடல் அற்புதம்.  அதில் சிறு மாற்றுக் கருத்தும் இல்லை.  ஆனால், இந்த நிலையில் நில்லாது, அடுத்து அடுத்து எனத் தாவி இன்று எந்த நிலையில் நாம் இருக்கிறோம் என்பது எவருக்குமே தெரியும்.

இத்தனையும் வேண்டும் என்றாலும், ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றுமே உதவாது என்பதை நாம் உணரவேண்டும்.  உணர்ந்தால், நமது இலக்கை நமக்கு அடுத்தவர் எப்படி அமைக்க முடியும்?!  வேடிக்கை என்னவென்றால், இந்தக் காலத் தலைமுறையினர், பொய் சொல்வது குற்றம் என்றோ, பெரியவர்களை அவமதிப்பதைத் தவறு என்றோ உணர்ந்தார்களில்லை.  எல்லா 'வேண்டும்'களுக்கும் பின்னே, பெற்றோர் அலைவதால் ஏற்பட்ட கொடுமை தானோ இது ?!!!

அன்றைய காலகட்டத்தில், பலரும் தத்தமது 'வேண்டும்'களைப் பாடல்களில் தெரிவித்து இருக்கலாம்.  அப்படி, வள்ளலாரின் 'வேண்டும்'கள் சமீபத்தில் கேட்ட பொழுது உடல் சற்றே சிலிர்க்கத் தான் செய்தது.  மேற்கண்ட 'வேண்டும்'களில் இருந்து மிகவே மாறுபட்டு, நல்லறிவும், நல்உறவும், நற்சிந்தனையும் வேண்டும் என்கிறார்.

  ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
   உத்தமர் தம் உறவு வேண்டும்
  உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
   உறவு கலவாமை வேண்டும்
  பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
   பொய்மை பேசாது இருக்க வேண்டும்
  பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
   மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
  மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
   உனை மறவாதிருக்க வேண்டும்
  மதி வேண்டும்; நின் கருணை நிதி வேண்டும்
   நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
  தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
   தலமோங்கு கந்த வேளே
  தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ மணி
   சண்முகத் தெய்வமணியே! சண்முகத் தெய்வமணியே!

காணி நிலம் நம் மனதை ஆக்கிரமித்தது போல வள்ளலாரின் மேற்கண்ட பாடல் எத்தனை பேருக்குப் பரிச்சயம் ?!!!!

5 comments:

  1. சதங்கா,

    அசத்தல். வேண்டும் பாடலில் இரண்டாவது அடியில் இருக்கிறது பெரிய சூட்சுமம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். வேண்டாம் என்று சொல்லியிருந்தால் பாட்டின் சுவை விடு பட்டிருக்கும். இந்தப் பாடல் கொஞ்சும் சலங்கை படத்தில் பி. ஜானகியின் குரலில் வெளிவந்த பாடல்.

    காணி நிலம் வேண்டும் பாடலில் பலப் பல உண்மைகள் ஒளிந்திருக்கிறது. தமிழ்நாட்டுல யார் யாரையோ என்ன என்னவோ பேர் சொல்லி பாராட்டராங்க. பாரதி தமிழை கையாண்டதை பார்த்தால் ப்ரமிப்பா இருக்கு, ஆனா வாழும் காலத்துல, சொந்த சமூகத்தை விட்டு தள்ளி வைக்கப் பட்டு, சொந்த பந்தங்கள் அவரை உதறித் தள்ளி, பசி பட்டினின்னு வாழ்ந்தும் இப்படி ஒரு அருமையான படைப்புகளை செய்ய முடிஞ்சுதுனா அவர் நிஜமாவே மகா கவிதான்.

    முரளி

    ReplyDelete
  2. அருமை, சதங்கா.

    வேண்டும் தொடரில் பாரதியின் மனதிலுறுதி வேண்டும் பாடலும் முக்கியமானது.


    முரளி - டபுள் நெகடிவ் போட்டு 'குழப்பாமை வேண்டாம்' :-)

    //
    காணி நிலம் நம் மனதை ஆக்கிரமித்தது போல வள்ளலாரின் மேற்கண்ட பாடல் எத்தனை பேருக்குப் பரிச்சயம் ?!!!!//

    மனிதர் பக்கத்து ஊரில் உட்கார்ந்து கொண்டு எழுதியிருக்கிறார். எங்களூரில் தடுக்கி விழுந்தால் 'ராமலிங்க'த்தின் மேல்தான் விழவேண்டும். தைப்பூசத்தில் போய் ஜோதி பார்த்து திருவிழாவில் திரிந்துவிட்டு வந்ததோடு சரி :-(

    ஆமாம், 'மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்' என்ற வரிகள் கொண்ட சமாச்சாரங்களை எல்லாம் நீர் எப்படி படிக்கிறீர் :-)

    ReplyDelete
  3. நாகு,

    டபுள் நெகடிவ்வா? எதை சொல்றீங்கன்னு தெரியலை. எனக்கு தெரிஞ்ச கணக்கு படி, டபுள் நெகடிவ் பாசிடிவாயிடும்.

    மருவு பெண்ணாசை வரி சொல்ற கதை என்னங்கரதை அடுத்த வாட்டி வெளில வாசல்ல பார்த்தா சொல்றேன். ஆமா, அதை சதங்கா படிக்கக்கூடாதா, ஏன் என்ன சமாசாராம்?

    முரளி.

    ReplyDelete
  4. முரளி - சும்மா சதங்காவ அவரது (நம் சங்கப் பதிவின்)விடலைப் பருவ கவிதைகளை வெச்சு சதாய்ச்சேன். அத வெச்சு புரளி கெளப்பவேணாம் :-)
    அப்பறம் வீட்ல அவர உண்டு இல்லன்னு பண்ணிடுவாங்க...

    // வேண்டாம் என்று சொல்லியிருந்தால் பாட்டின் சுவை விடு பட்டிருக்கும்.//
    டபுள் நெகடிவ் அதுக்கு சொன்னேன்...

    ReplyDelete


  5. முரளி,

    கருத்திற்கு நன்றி. தங்கள் எண்ணமே எனக்கும் ! 'உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு...' என்று பாடலைக் கேட்கும் போதே, என்னடா இது, இவர் நட்பு வேண்டாம் எனச் சொல்லப் போகிறாரா என வியந்தால், 'கலவாமை வேண்டும்' எனச் சுவைப‌ட‌ப் பாடி ந‌ம்மை ஆட்கொள்கிறார் வ‌ள்ள‌லார்.

    நாகு,

    //வேண்டும் தொடரில் பாரதியின் மனதிலுறுதி வேண்டும் பாடலும் முக்கியமானது.//

    நிச்சயமாக ! ஆனால், கானி நிலத்தைப் பின்பற்றிய கூட்டத்தைக் கணக்கிட்டால், மனதிலுறுதி வேண்டிய கூட்டம் அணுவினும் சிறிதாகும், இல்லையா ?!

    எத்தனையோ வரிகள் இருக்க 'மாதர்' கரம் பற்றிய ரிச்மன்ட் நாயகா ! நின்புகழ் என்றும் நிலைத்திருக்க வேண்டும் ;)

    ===

    இன்று கேட்ட‌ காரைக்கால் அம்மையார் அவ‌ர்க‌ளின் 'வேண்டும்' பாட‌ல். என்ன‌ ஒரு எளிமை ! இனிமை !! ஐயாயிர‌ம் ஏக்கரா ஜ‌மீன்தார், ப‌த்தாயிர‌ம் பங்க‌ளா சொந்த‌க்கார‌ர் என‌ யாரையாவ‌து அவ‌ர் சென்ற‌ பின் அறிகிறோமா ?

    இறவாத இன்ப அன்பு
    வேண்டிப்பின் வேண்டு கின்றார்
    பிறவாமை வேண்டும் மீண்டும்
    பிறப்புண்டேல் உன்னை என்றும்
    மறவாமை வேண்டும் இன்னும்
    வேண்டும் நான்மகிழ்ந்து பாடி
    அறவாநீ ஆடும்போது
    அடியின்கீழ் இருக்க என்றார்

    வாழிவில் எல்லா சுகதுக்கங்களையும் அனுபவித்து 'காடு வரை பிள்ளை ... கடைசி வரை யாரோ...' என்று ஆகுமுன் 'என்ன வேண்டும்' என அருண‌கிரியார் வேண்டுவது. விள‌க்க‌ம் கீழே (ந‌ன்றி இணைய‌ம் !)

    சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை
    யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய
    இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி
    நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது
    சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை
    பேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர ...... இனிவரவேணும்

    இனி உயிர் நிலை பெறாது, இவருக்கு பிரமன் இன்றோடு அழியும்படி விதித்திருக்கிறான், (முன் எழுதியது போல்) யமன் ஓலை வர இன்று இறந்து விட்டார் என்று சிலர் கூறவும், நாழிகை ஆயிற்று, சுடலைக்கு எடுங்கள் என்று சிலர் சொல்லவும், ஓடிச் சென்று திட்டமிட்டபடி புதிய பறைகள் ஆகிய வாத்தியங்களை முழக்கவும், சுடுகாட்டுக்குச் சென்று, உடல் நன்கு வெந்து நீறாவதற்கு வரட்டி முதலியவற்றை அடுக்கி, அந்த நெருப்பில் எரிந்து போனார் என்று துயரத்தோடு ஒருவரை ஒருவர் கட்டி அழுது, தண்ணீரில் முழுகி விடுபட்டுப் போகும் பாசத்தினின்றும் விலகி, உன்னுடைய உண்மை ஞானத்துக்கு உறைவிடமான திருவடித் தாமரைகளைப் பற்றுக் கோடாக அடைந்து தமிழ்க் கவிதைகளை ஓதிப் பணிந்து, உருகும்படியான அன்பை இன்று அடியேனுக்குத் தர இனி வந்தருள வேண்டும்.


    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!