Sunday, June 10, 2007

விருந்து



தழுவி வரவேற்று
தலைவாழை இலைபோட்டு

அறுசுவைக் காய்கறிகள்
அரணென நிறுத்தி

இட்ட சாதத்தில்
விட்ட நெய்கிளறி

சொட்டு நீர்விட்டு
உட்கொளல் ஆரம்பம்

தாளித்த சாம்பாரும்
புளித்த மோர்க்குழம்பும்

தக்காளி ரசத்தின்பின்
தயிர்சாதம் பிசைந்துண்ண

வடைபாயசம் அப்பளம்
தடையின்றி தானிறங்க

நறுக்கிவைத்த ஆப்பிள்
ஆரஞ்சு மாம்பழம்

சிலதுண்டு வாயில்போட்டு
சிலாகித்து உள்ளிறங்க

காம்புகிள்ளி வெற்றிலை
காரத்துடன் நான்மெல்ல

உண்டு முடியுமுன்
துணிந்ததென் உறக்கமுமே

என்னென்று வியப்பேன்
எளிதில் மறவேன்.

15 comments:

  1. என்ன சதங்கா, நேற்று விருந்து பலமோ? உம் கவிதைகளில் நன்றாக அனுபவங்களைக் கொண்டுவருகிறீர்கள். இந்த கவிதையில் பிரச்னை என்னவென்றால், நன்றாக சாப்பிட்ட உணர்வு வந்து கடைசியில் வயிற்றில் யாரோ வாக்வம் க்ளீனர் வைத்து காலி செய்த உணர்வு மிஞ்சுகிறது.... அதுவும் உமக்கு வெற்றியே.

    துணிந்ததென் உறக்கமுமே
    தான் எனக்கு கொஞ்சம் இடிக்கிறது.

    ஆரவாரமான 'கல்யாண சமையல் சாதம்' அனுபவத்தை எளிமையாக கொண்டு வந்திருக்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் விருந்து...

    ReplyDelete
  2. நன்றி நாகு,

    //என்ன சதங்கா, நேற்று விருந்து பலமோ?//

    யு.எஸ் வந்தாலும் வந்தேன், ஒரு வாழை இலையைக் கூட கண்ணுல காணல. எங்கே போறது விருந்துக்கு ஏங்குவதைத் தவிற :-(

    எல்லாம் ஊர்ல அனுபவித்தது.

    //உம் கவிதைகளில் நன்றாக அனுபவங்களைக் கொண்டுவருகிறீர்கள்.//

    எஸ்.ஆரின் "கலையும் காட்சிகள்", உங்களின் "தொலையும் தொடர்புகள்", அடியேன் யோசிக்கும் "அழியும் அடையாளங்கள்" ... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் இந்த மாதிரி கவிதையை எழுதத் தோன்றிய எண்ணம் பற்றி !


    //துணிந்ததென் உறக்கமுமே
    தான் எனக்கு கொஞ்சம் இடிக்கிறது. //

    சாப்பிட்டு முடிக்குமுன் நல்லா தூக்கம் வந்தது. அதை அடித்துத் துரத்த முடியவில்லை. முடிவில் துணிந்து தூக்கம் வெற்றி பெற்றுவிட்டது. அந்த அளவுக்கு விருந்து இருந்ததுனு சொல்ல வந்தேன்.

    உங்க விளக்கம் சொன்னிங்கன்ன நல்லா இருக்கும்.

    //ஆரவாரமான 'கல்யாண சமையல் சாதம்' அனுபவத்தை எளிமையாக கொண்டு வந்திருக்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் விருந்து...//

    கவிதையின் எளிமையைக் கண்டுகொண்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. சதங்கா,

    அட்டகாசம், என்ன வீட்டு ஞாபகம் வராம இருக்க எவ்வளவோ முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன், அதை இப்படி ஒரு கணத்துல பட்டுன்னு உடைச்சு என் இனிய கடந்த காலத்தை நினைவு படுத்தி, படுத்தி விட்டீர்கள்.

    இந்த கவிதை என்ன வகைப் படும்? சில இடங்களில் நேரிசை வெண்பா தென்படுகிறது.

    உ-ம்:
    "இட்ட சாதத்தில்
    விட்ட நெய்கிளறி"

    "தாளித்த சாம்பாரும்
    புளித்த மோர்க்குழம்பும்"

    "வடைபாயசம் அப்பளம்
    தடையின்றி தானிறங்க"

    //சொட்டு நீர்விட்டு
    உட்கொளல் ஆரம்பம்//

    இந்த வரிகள் உங்களைப் பற்றி பலதும் எனக்கு புலப்படுத்தியது.

    மீண்டும் ஒரு முறை அருமையான ஒரு விருந்திற்கு நன்றி.

    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete
  4. முரளி,

    இரவு 12:30 வரை விழித்திருந்து வாசித்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி. வேலைப் பழுவோ ?

    முதலில் நான் பட்டேன், பின்பு நாகு, இப்போ நீங்க. இலைச் சாப்பாடு படத்தை நெட்-ல தேடி கண்டுபுடிக்கவே ரொம்ப நேரம் ஆச்சு. அப்ப எந்த அளவுல விருந்தோம்பல் இருக்குனு பாத்துக்குங்க. அதான் அழியறதுக்கு முன்னாடி பதிஞ்சிறனும்னு ஒரு எண்ணம்.

    நாகு வாழைக் கன்று வாங்கியிருக்கதா சொன்னார். அது எப்போ பெரிய மரமா வளர்ந்து நமக்கு விருந்து வைக்கப் போறாரோ ;-)

    //இந்த கவிதை என்ன வகைப் படும்? சில இடங்களில் நேரிசை வெண்பா தென்படுகிறது.//

    ஓசை வருகிறமாதிரி பார்த்துக் கொண்டேன் (இதுவும் சரியானு தெரியல, நீங்க தான் சொல்லனும்). மத்தபடி நீங்க சொல்ற மாதிரி நேரிசை வெண்பாவெல்லாம் தெரியாதுங்க. உங்க பின்னூட்டங்களே சொல்லுது நீங்க நெறய தெரிஞ்சவர்-னு. நமக்கு அவ்வளவு ஞானம் இன்னும் வரலைங்க.

    //இந்த வரிகள் உங்களைப் பற்றி பலதும் எனக்கு புலப்படுத்தியது.//

    உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா என்னனு தெரிஞ்சிக்கலாமா ? ;-)

    ReplyDelete
  5. சதங்கா,

    //இரவு 12:30 வரை விழித்திருந்து வாசித்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி. வேலைப் பழுவோ ?//

    நம்பளாவது வேலை செய்றதாவது, என்னது இது சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு.

    உங்களுடைய முந்தைய கவிதையை படித்துவிட்டு உங்களிடம் வெண்பா கற்றுத்தரச் சொல்லி கேட்டது நினைவிருக்கலாம். உங்களிடமிருந்து ஒரு பதிலும் வராததால், சரி இவரும் அல்வா கொடுத்துட்டார்ன்னு விக்கி பீடியாவில தேடி கண்டு பிடித்து படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு எப்ப வெண்பா புரிஞ்சு, எப்ப பாட்டு பாடத் தெரிஞ்சு, பாடி, அட போங்கப்பா, விடிஞ்சுடும்.

    //இந்த வரிகள் உங்களைப் பற்றி பலதும் எனக்கு புலப்படுத்தியது.//

    உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா என்னனு தெரிஞ்சிக்கலாமா ? ;-)

    - அத உங்கள நேரில் பார்க்கும் போது சொல்றேன். இது எப்படி இருக்கு.

    அன்புடன்,
    முரளி

    ReplyDelete
  6. முரளி,

    //உங்களிடம் வெண்பா கற்றுத்தரச் சொல்லி கேட்டது நினைவிருக்கலாம். உங்களிடமிருந்து ஒரு பதிலும் வராததால், //

    பதில் வரலயா ? நீங்க பார்க்கலயா ? உங்க கிட்ட இருந்து ஆமோதிப்பு வரலையே என்றல்லவா நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் :)

    //அத உங்கள நேரில் பார்க்கும் போது சொல்றேன். இது எப்படி இருக்கு.//

    நீங்க அப்புறம் விருந்தெல்லாம் பண்ணனும். எதுக்கு உங்களுக்கு சிரமம். அதனால இங்கேயே சொல்லுங்க ... ;-)

    ReplyDelete
  7. முரளி/சதங்கா - உங்க ரெண்டு பேரோட லொள்ளு தாங்கலப்பா. அடுத்தவர பத்தி என்கிட்ட விசாரிச்சி தள்றீங்க... ஒருத்தர ஒருத்தர் பாக்காம இப்படி ஃப்ரண்ட்ஷிப் போட்றீங்க. இத மாதிரி பாக்காம உருகின ரெண்டு பார்ட்டி ஞாபகம் வருது. பேர் சொன்னா ஏன்யா அபசகுனமா பேசரன்னு அடிக்க வருவீங்க...

    முதல்ல உங்க ரெண்டு பேத்தையும் சந்திக்க வச்சாதான் எனக்கு நிம்மதி போல இருக்கு...

    ReplyDelete
  8. சதங்கா,
    எங்க உங்க பதிலைப் படிக்காம விட்டுட்டேனோன்னு திரும்ப போயி படிச்சேன்.

    விருந்து என்ன பெரிய விருந்து, அதைவிட ஒரு அருமையான யோசனை, தமிழ் சங்கத்தின் சார்பாக புதிய மின்னேடு வெளிவர முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதில் உங்களை கண்டிப்பாக இடம்பெறச்செய்ய வெண்டும் என்று தானைத் தலைவர் நாகு அவர்களிடம் சொல்லியிருக்கிறேன்.

    (நாகு: நல்லா அடைமொழியெல்லாம் போட்டு பாராட்டியிருக்கிறேன். அதனால விமர்சனம் பண்ணாம படிங்க.)

    அதன் முதல் கூட்டத்தில் நாம் அனைவரும் குடும்ப சகிதமாக கலந்து கொண்டால், அவர்களுக்கும் நம் முயற்சி பற்றி தெரியும், அவர்களது கருத்துகளும் நமது முயற்சிக்கு வலு சேர்க்கும்.

    Pot luck snacks என்று வைத்து விட்டால், அனைவரும் பங்கு கொண்டது போலவும் இருக்கும், உரையாடி மகிழவும், குழந்தைகள் விளையாடி மகிழவும் ஏதுவாக இருக்கும்.

    நாகு: அருகில் உள்ள ஒரு பூங்காவில் ஒரு நிழற்குடையை முன்பதிவு செய்யலாமா?

    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete
  9. முரளி,

    நல்ல யோசனைதான். சதங்கா தலைக்கு முகமூடி போட்டுக் கொண்டு வரலாமா என்று கேட்கிறார். நான் இந்த சந்திப்புக்கு டிக்கெட் போட்டு விற்கலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன். விடாக்கண்டன் - கொடாக்கண்டன் சந்திப்பு என்று போஸ்டர் அடித்து கடைகளில் ஒட்டலாமா?

    ReplyDelete
  10. நாகு,

    நல்ல தமிழில்!!! 'விமர்சனம் பண்ணாம படிங்க' ன்னு சொன்னா, சொல் பேச்சு கேக்க மாட்டீங்களா?

    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete
  11. விமர்சனம் எங்கே பண்ணினேன்? ஓ.. நல்லயோசனைன்னு சொன்னதுக்கா. நான் நீங்க சொன்னபடி கூட்டத்துக்கு திட்டம்தானே போடறேன்?

    ReplyDelete
  12. முரளி,

    //அதில் உங்களை கண்டிப்பாக இடம்பெறச்செய்ய வெண்டும் என்று தானைத் தலைவர் நாகு அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். //

    அதிகமா நம்பிக்கை வச்சிருக்கீங்க. அதைக் காப்பாத்தனும்னு நெனைக்கும்போது கொஞ்சம் பயமாய் இருக்கிறது.

    //அதன் முதல் கூட்டத்தில் நாம் அனைவரும் குடும்ப சகிதமாக கலந்து கொண்டால், அவர்களுக்கும் நம் முயற்சி பற்றி தெரியும், அவர்களது கருத்துகளும் நமது முயற்சிக்கு வலு சேர்க்கும்.//

    நிச்சயமாக. ஆனால் என்ன, வீட்டு வேலை செய்யாம blog blog திரியற நம்மை எந்த அளவுக்கு நம் குடும்பத்தலைவிகள் கருத்து சொல்லி ஆதரிப்பாங்கன்னு ஆச்சரியமாக இருக்கு. உங்க வீட்டுல விதிவிலக்கோ என்னவோ. அதான் வலு சேர்க்கும்னு சொல்றீங்க :)

    //Pot luck snacks என்று வைத்து விட்டால், அனைவரும் பங்கு கொண்டது போலவும் இருக்கும//

    ஒரு பேச்சுக்கு விருந்து வேண்டாம்னு சொன்னா, சரின்னு pot luck போய்ட்டீங்களே ;-)

    ReplyDelete
  13. நாகு,

    //சதங்கா தலைக்கு முகமூடி போட்டுக் கொண்டு வரலாமா என்று கேட்கிறார்.//

    ஒரு படி மேல போய், எல்லாரும் முகமூடி போட்டுக் கொண்டு சந்திச்சா எப்படி இருக்கும் ? ஏன்னா நான் மட்டும் முகமுடியோட வந்தா easy-யா முரளி கண்டுபுடிச்சிடுவாரே ;-)

    நம்ம மூனு பேரு தான் மாஞ்சி மாஞ்சி பேசிகிட்டு இருக்கோம். மத்தவங்களுக்கும் interest இருக்கானு தெரியல. குழு நல்லா plan பண்ணி எல்லாரையும் attract பண்ற மாதிரி அழைப்பு போட்டு நீங்க தான் கூட்டனும். எங்க ஒத்துழைப்புக் கண்டிப்பா உண்டு உங்களுக்கு.

    //நான் இந்த சந்திப்புக்கு டிக்கெட் போட்டு விற்கலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன். விடாக்கண்டன் - கொடாக்கண்டன் சந்திப்பு என்று போஸ்டர் அடித்து கடைகளில் ஒட்டலாமா?//

    மேலே உள்ள வரிகளைப் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தோம். நகைச்சுவையின் எல்லைக்கே போய்விட்டீர்கள் நாகு. கண்களில் நீர் கொட்டி, வாயெல்லாம் வலித்து ...

    ஆனால் முரளி தான் கோபித்துக் கொண்டார். நீங்கள் விமர்சனம் செய்வதாக நினைத்து.

    ReplyDelete
  14. சதங்கா,

    //அதிகமா நம்பிக்கை வச்சிருக்கீங்க. அதைக் காப்பாத்தனும்னு நெனைக்கும்போது கொஞ்சம் பயமாய் இருக்கிறது.//
    என்னங்க பயம், நானே எழுதரபோது எழுதத் தெரிந்த நீங்கள்ளாம் பயந்தா நல்லாவா இருக்கு.

    //வீட்டு வேலை செய்யாம blog blog திரியற நம்மை எந்த அளவுக்கு நம் குடும்பத்தலைவிகள் கருத்து சொல்லி ஆதரிப்பாங்கன்னு ஆச்சரியமாக இருக்கு. உங்க வீட்டுல விதிவிலக்கோ என்னவோ. அதான் வலு சேர்க்கும்னு சொல்றீங்க//

    அதுகெல்லாம் நெறைய வழிகள் இருக்கு, கவலையேபடாதீங்க, சமாளிச்சிடலாம்.

    pot luck பற்றி விக்கி பீடியாவில் தேடியதில் இப்படி இருக்கிறது.
    Pot Luck - original meaning was "food given away to guests", probably derived from"whatever food one is lucky enough to find in the pot", i.e. whatever food happens to be available, especially when offered to a guest. By extension, a more general meaning is "whatever is available in a particular circumstance or at a particular time."
    இதைத் தானே காலம் காலமாக நம்ம வீட்ல செய்றாங்க, அதிர்ஷ்டம் இருந்தா சூடா தோசை கிடைக்கும், 5-வதா லைன்ல தட்டு எடுத்துகிட்டு சாப்பிட போனா மாவு தீந்து போயி பழையதுதான் கிடைக்கும்.

    //ஆனால் முரளி தான் கோபித்துக் கொண்டார். நீங்கள் விமர்சனம் செய்வதாக நினைத்து//
    எனக்கு எதுக்குங்க கோபம் இப்படி சீண்டலேன்னா அப்பரம் எப்படி பின்னூட்டங்களை அதிகப் படுத்தரது.

    நாகு சீக்கிரம் சொல்லுங்க ஒரு இடம் பிடிச்சுடலாம், வெங்கட், ஸ்ரீலதா முத்து, நடராஜ மூர்த்தி, சதங்கா, நீங்க, நான், ரமேஷ் ஊர்ல இருந்தா அவர், சண்முகா எல்லோரையும் திரட்டி முதல் சந்திப்பை முடிவு செஞ்சிடுங்க,

    சன் டிவியில் அசத்தப் போவது யாருல மதுரை முத்து என்பவர் standup comedy பண்ணும் போது ஒரு முறை சொன்னார், "வாருங்கள் எல்லோரும் வடம் பிடிப்போம், வரலாற்றில் இடம் பிடிப்போம்" என்று, அப்படியே ஜமாய்சிடுவோம்.

    அன்புடன்,

    முரளி

    ReplyDelete
  15. //நம் குடும்பத்தலைவிகள் கருத்து சொல்லி //
    நாம தினம் அவங்க கிட்ட 'கருத்து' கேக்கறது பத்தாதா? இதுல கூட்டம் வேற போட்டு 'கருத்து' கேட்டா என்ன ஆகும்னு பயம்மா இருக்கு. ஏதோ இவ்வளவு நாள் வீட்டுல கருத்து கேட்டுட்டு இருந்தாலும் வெளில கௌரத்தியா சுத்திக்கிட்டு இருக்கோம். அதுக்கும் வேட்டு வெக்க பாக்கறாரு முரளி. சரி செஞ்சுடுவோம்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!