சில வருஷங்களுக்கு முன்னாடி நான் கலிபொர்னியாவில் வசித்த போது ஒரு தோழியின் தங்கைக்கு கல்யாணம் நிச்சயித்து பக்கத்தில் இருக்கும் ஒரு கோவிலிலேயே செய்வதா சொன்னாங்க.  ஒரு மாதம் முன்பே கல்யாண பத்திரிகை குடுத்து எங்களை அவசியம் வர வேண்டும் அப்படீன்னு சொல்லிட்டு போனாங்க.
உங்களைப் பத்தி எனக்கு தெரியாதுங்க.  எனக்கு நம்மூர் கல்யாணம்னாலே ஒரு தனி குஷி.  அதுவும் அமெரிக்காவில் நான் பார்க்க போற முதல் இந்திய கல்யாணம் இது தான்.   சின்ன வயசில் எழுத்தாளர் சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' ங்கர புத்தகத்தை நான் படிச்சு படிச்சு கிழிச்சதுல என் தொல்லை தாங்காம ஒரு நாள் அந்த புத்தகம் சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு சந்நியாசம் வாங்கிண்டு போயிடுத்துங்க.  
அமெரிக்காவுல கல்யாணம்னா சும்மாவா?  பெண் வீட்டுக்காரங்களுக்கு தான் எத்தனை வேலை இருக்கும்?  இந்தியாலேந்து வண்டி(விமானத்த தான் சொல்லறேங்க) வச்சு எத்தனை சாமான் கொண்டு வரணும்?  எத்தனை பேரை கூட்டிண்டு வரணும்?   அதான் நம்ம எழுத்தாளர் சாவி அமெரிக்காவில் கல்யாணம் செய்தா என்னென்ன பண்ணனும்னு அவர் புத்தகத்துல பிட்டு பிட்டு வச்சிருக்காரே. 
    * தட்டானை வரவழைச்சு கல்யாண பெண்ணுக்கு வேண்டிய ஒட்டியாணம், வங்கி, வளையல்கள், ஹாரம், திருமாங்கல்யம் போன்ற நகைகளை செய்தாகணும். 
    * வயசான பல பாட்டிகளை கூட்டி கொண்டு வந்து அப்பளம் இட்டு காய வைத்து கல்யாண விருந்துக்கு தயார் பண்ணியாகணும். 
    * இட்ட அப்பளங்களை காய வைக்க பெரிய கட்டடங்களோட மொட்டை மாடியை வாடகைக்கு எடுத்தாகணும்.
    * மடிசார் கட்டிக்க ஆசைப்படற பெண்களுக்கு, (ராக்பெல்லர் மாமி உட்பட) அதை சொல்லித்தர பாட்டிகளை ஏற்பாடு செய்தாகணும்.
    * புரோகிதர்களை வரவழைத்து அவங்க தங்கரத்துக்கு இட வசதிகள் செய்து கொடுத்தாகணும். 
    * வைதீக காரியங்களுக்கு மடியா தண்ணி வேணும்னு சொல்லற புரோகிதர்களுக்கு புதுசா கிணறு வெட்ட ஆட்களை வரவழைக்கணும். 
    * மாப்பிளையை கார்ல ஊர்வலமா அழைச்சுண்டு போற ஜானவாச ரூட்டுக்கு கவர்மென்ட் பர்மிட் வாங்கணும்.
    * ஜான்வசத்தில் மாப்பிள்ளை காரின் பின்னாலே காஸ் விளக்கு தூக்கி கொண்டு நடக்க இந்தியாவுலேந்து நரிக்கொரவர்களை வரவழைக்கணும்.
    * நலங்கில் பெண்ணும், மாப்பிள்ளையும் உருட்டி விளையாட தேங்காய் வரவழைக்கணும்.
    * கல்யாண சத்திரம் வாசல்ல கட்ட வாழை மரம் வரவழைக்கணும்.
    * பந்தியில் பரிமாற வாழை இலை வரவழைக்கணும்.  வடு மாங்காய் வரவழைக்கணும்.  வெள்ளைக்காரர்கள் பந்தியில் உட்கார்ந்து வடு மாங்காய் சாப்பிட்டு விரலை கடித்து கொண்டால் அவங்க கைக்கு பேண்ட் ஐட் போட தேவையான first aid boxes வரவழைக்கணும்.
நினைக்கவே எனக்கு மலைப்பா இருந்தது.  என் தோழி வீட்டுக்கு போன் பண்ணி கல்யாண ஏற்பாடுகள் பண்ண எந்த உதவி வேணும்னாலும் சொல்லுங்க செய்யறேன் அப்படீன்னு சொன்னதுக்கு எல்லாம் 'under control' அப்படீன்னு சொன்னாங்க. சரி தான்.  நிறைய ஆள்பலம் இருக்கும் போல இருக்குன்னு நானும் விட்டுட்டேன். 
கல்யாண நாள் கிட்ட நெருங்க நெருங்க எங்க வீட்டு கல்யாணம் மாதிரி எனக்கு ஒரே பரபரப்பு.  தினமும் நான் அலமாரியை திறந்து நாலு தரம் கட்ட வேண்டிய பட்டு புடவைகளையும் நகைகளையும்  சரி பார்த்து வைப்பதை பார்த்து என் கணவருக்கு ஒரே குழப்பம்.  அமெரிக்காவில் பட்டுப் புடவை கட்டிண்டு ஜானவாச கார் பின்னாடி நடக்கவும்,  நலங்கு போது கலாட்டா பண்ணி பாட்டு பாடவும்,  வாழை இலை கட்டி மாக்கோலம் போட்டிருப்பதை பாக்கவும் ஒரு குடுப்பினை வேண்டாமா?  'வாஷிங்டனில் திருமணம்' கதை போல நடக்கவிருக்கும் கலிபோர்னியா கல்யாணத்தை பாக்க எனக்கிருந்த ஆர்வம் அவருக்கு புரியலை.
கல்யாணத்துக்கு முதல் நாள் பெண் வீட்டுக்காரங்களை விட அதிக கவனத்தோட நான் ஜானவசத்துக்கு ரெடியாகி கொண்டிருந்த போது எதேச்சையா என் வீட்டுக்கு வந்த இன்னொரு தோழி என்னை பாத்து குழம்பி போய் நின்றாள்.  விசாரிச்சா கல்யாணத்துல ஜானவாசமே கிடையாதாம்.  அது மட்டுமில்லை.  அடுத்த நாள் கல்யாணம் ரொம்ப சிம்பிளா தாலி மட்டும் கட்டி அரை மணியில முடிஞ்சுடுமாம்.  அப்புறம் எல்லோரும் ஹோட்டலுக்கு போய் buffet சாப்பாடு சாப்பிட்டு போகணுமாம். 
என்ன அக்கிரமம்க  இது?  ஒரு ஜானவாச கார் கிடையாதாம்.  கார் பின்னாடி நடக்கற ஊர்வலம் கிடையாதாம்.  ஊர்வலத்துக்கு காஸ் விளக்கு தூக்கிண்டு நடக்கும் நரிக்குரவங்க கிடையாதாம். மடிசார் கட்டிய ராக்பெல்லர் மாமி கிடையாதாம்.  உட்கார வச்சு வாழை இலைல பரிமாரற விருந்து கிடையாதாம்.  ரொம்ப ஏமாத்தமா இருந்துதுங்க.  எனக்கு இருந்த கோவத்துல ஆசை காமிச்சு மோசம் பண்ணினதுக்கு திருவாளர் சாவி மேல கேஸ் போடலாமான்னு கூட யோசனை பண்ணினேன்.  நல்ல காலம் அப்படியெல்லாம் செய்யாமல் விட்டேன்.  இல்லேன்னா இப்போ அவர் பேரை சொல்லி ப்ளாக் எழுதினத்துக்கு என் பேர்ல கேஸ் போடுவாங்களே.
-மீனா சங்கரன்