Saturday, June 29, 2024

தோசை

அந்த உணவு விடுதி பல நாட்களாக, பல நண்பர்களால், பிரபலமாகப் பேசப்பட்டது. ஒரு நாள் தற்செயலாக உள்ளே நுழைந்தோம். நல்ல விசாலமான கடை. அழகாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. 


தோசைகளில் அத்தனை வகையுள்ளது என்றே அன்று தான் தெரிந்தது. வகைகளைப் படிக்கவே ஐந்து நிமிடத்துக்கு மேல் வேண்டியிருந்தது.  நண்பர் யதார்த்தமாகச் சொன்னார், எப்படி ஒரு சாதாரணமான தோசை, இப்படி பல வகையில் மாறிடுச்சின்னு விவேக் பாணியில். 


தோசை மட்டுமா? Buffet வில், மெது வடை, ஆமை வடை, போண்டா, பஜ்ஜி, பொங்கல், சட்னி, சாம்பார், கிழங்கு மாசால், பூரி, கிச்சடி, என்று அது ஒரு தனி வரிசையில். 


முருகர் (முறுகல் தோசை), ரவா தோசை, சொல்லிவிட்டு, தட்டில் ஒரு மெது வடை, கொஞ்சம் சட்னி, எடுத்து வந்து அமர்ந்தோம். பலவிதமான உரையாடலுக்கு நடுவில், முதலில் முறுகல் தோசை வந்தது. பாதி தோசையின் போது, ரவா தோசை வந்தது. அதற்கு மேல் எவ்வளவோ முயன்றும், சாப்பிட முடியவில்லை. 


 வயிறு இரண்டு அங்குலம் அசராமல் விரிந்து இரவில் உறக்கம் படுத்தியது. காலையில் எழுந்து, காப்பி போட அடுப்படியில் நுழையும் போது, அந்த நாளில், எங்கள் வீட்டு சின்ன அடுப்படியில் அமர்ந்து, கல்லில் இருந்து, நேராக நேர்த்தியாக, எங்களின் தேவைக்கேற்ப, அம்மா சுட்டு, எங்கள் தட்டுக்கு வரும், தோசை, அலாதி ருசி. காரமான அந்த சட்னி, தனி மகத்துவம். நாவில் எச்சல் ஊரியது. வேறு பிரதாபகள் எதுவும் இருக்காது. எத்தனை தோசை உள்ளே போனது என்றே தெரியாது. எண்ண அம்மா, சம்மதிக்கவே மாட்டாள், “பேசாம வயிறு நிறைய சாப்பிடு, அதுல என்ன கணக்கு”, இன்றும் அந்த வரிகளுக்கு மாற்றமில்லை. 


எத்தனை பெரிய கடையோ, சுவையோ, அம்மா சமையல், அது தனியே.