இராகுல் திராவிட் 
ஆஸ்திரேலியப் பயண வெள்ளை அடிப்பிற்க்குப் பிறகு, இராகுல் திராவிட் ஒய்வு  பெறப் போவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அது உண்மையாக இருந்தாலும்  இல்லாவிட்டாலும், திராவிட் நம் எல்லாருடைய நன் மதிப்பைப் பெற்றவர் என்பது  மறுக்க முடியாத உண்மை. இந்தத் தொடரின் மிக மோசமான தோல்வியின் பாதிப்பில்  ரசிகர்கள் இவர் மீதும் சேறை வாரி இறைப்பது தவிர்க்க முடியாத ஒன்று.
ரசிகர்களுக்கு தற்காலிக ஞாபக சக்தி இழப்பு உண்டு என்பது மறுக்க முடியாத  உண்மை. இங்கிலாந்து பயணத்தின் வெள்ளை அடிப்பில் இவர் மட்டுமே  விழலுக்கிறைத்த நீராக மூன்று சதங்கள் அடித்ததை நாம் மறந்து விட்டோம்,  அல்லது அதை உதாசீனப் படுத்துகிறோம். அதே போல, இந்திய அணி ஒரு வேளை இந்த ஒரு  நாள் தொடரை குருட்டாம் போக்கில் வென்று விட்டால், இந்திய அணியைத் தூக்கி  வைத்துக் கொண்டாடி, மேலும் தந்துல்கர் சதம் அடித்து விட்டால் புளகாங்கிதம்  அடைந்து பாரத ரத்னா கமிட்டியைக் கரித்துக் கொட்டவும் நாம் தயங்க மாட்டோம்.
எப்படி இருந்தாலும் இவரது நெடிய கிரிக்கெட் பயணத்தை கொஞ்சம் திரும்பிப்  பார்க்கலாம். புள்ளி விபரங்கள் இணைய தளத்தில் தாராளமாகக் கிடைக்கும்,  அதனால் அவற்றை விட்டு விட்டு, என் நினைவில் உள்ளவற்றைப் பகிர்ந்து  கொள்கிறேன்.
ஒரு முறை இந்திய சுமார் ஐந்து ஓவர்களில் ஐம்பது ரன்கள் எடுக்க வேண்டிய  சூழ்நிலையில், மனோஜ் பிரபாகரும் , நயன் மோங்கியாவும், கொஞ்சம் கூடக்  கூச்சப் படாமல், முயற்சியே செய்யாமல் ஐந்து ஓவர்களைக் கடத்தி  முடித்தார்கள். அதன் விளைவாக இருவரும் அடுத்த ஆட்டத்தில் இருந்து துரத்தப்  பட்ட போது, இவர் அணியில் சேர்க்கப் பட்டார். ஆனால் விளையாடவில்லை. பின்பு  கங்குலியோடு இணைந்து அறிமுகமாகி சொற்ப ரன்களில் அறிமுக சதத்தை இழந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் தனக்கென்று ஒரு இடத்தை ஸ்தாபித்த இவர், கடின உழைப்பின்  மூலம் மட்டுமே எல்லா சாதனைகளையும் அடைந்திருக்கிறார். தந்துல்கரின் கால  கட்டத்திலே அறிமுகமாகியதால், இவரது சாதனைகளின் நாம் பொருட் படுத்தவில்லை  என்பது  தனி மனித வழிபாட்டில் அல்ப சந்தோஷம் அடையும் நம் நாட்டின்  சாபக்கேடு.
ஒரு நாள் போட்டியில் நன்றாக விளையாடும் திறன் படைத்த இவர், ஒரு  கூட்டுக்குள் அடைபட்டது போல அந்தத் திறமைகளை சரியான முறையில்  வெளிப்படுத்தவில்லை. ஆலன் டோனால்டைத் தலைக்கு மேலே சிக்சர் அடித்து அவரிடம்  கடும் திட்டு வாங்கி இருக்கிறார். காலில் போட்டால் தூக்கத்தில் கூட  நான்கடிக்கும் இவர், விரட்டல், மடக்கல், தூக்கல் என்று எல்லா விதமான அடி  முறைகளிலும் திறன் வாய்ந்தவர். குறிப்பிடும்படி  எந்த ஒரு குறைபாடும்  இல்லாதவர். ஒரு நாள் போட்டிக்குத் தகுதி இல்லாதவர் என்று கருதப் பட்ட இவர்,  பத்தாயிரம் ரன்களுக்கு மேல் எடுத்திருப்பதும், கிட்டத் தட்ட 40 சராசரியும்  வைத்திருப்பது ஒதுக்கப் பட்ட விஷயங்கள்.
வெல்லவே முடியாத ஆஸ்திரேலிய அணியை 2003 - ல் வென்ற போது அந்த டெஸ்டில்  இரட்டை சதம் அடித்தவர். ஸ்லிப்பில் இன்றி அமையாத பிடிப்பாளராக மாறி 200  க்கு மேல் பிடித்திருக்கிறார். இவர் அணித் தலைவராக இருந்ததில் 2007 உலகக்  கோப்பை தோல்வியின் கசப்பு மட்டுமே மிஞ்சுகிறது.
நமக்கு துவக்க ஆட்டக்காரர் கிடைக்க விட்டால், துவக்க ஆட்டக் காரராக  அனுப்பப் படுவார். (இல்லா விட்டாலும் நம் அணியின் வண்டவாளத்துக்கு இவர்  கிட்டத் தட்ட துவக்க ஆட்டக்காரர் தான்). கொஞ்ச நாள் ஆறாவது இடத்திலும் ஆடி  இருக்கிறார்.
சுயநலம் இல்லாமல் அணிக்காக ஆடி, கடின உழைப்புக்கு உதாரணமாக விளங்கும் இவரது சாதனைகளை இந்த தருணத்தில் நினைவு கூர்ந்து வணங்குவோம்.
நமது காகிதப் புலிகள் மண்ணைக் கவ்வியதில் ஏன் இவரை மட்டும் காவு கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. லஷ்மணன், சேவாக், டெண்டுல்கர் மட்டும் என்ன கிழித்தார்கள்? குறைந்த பட்சம் லஷ்மணனையாவது அனுப்ப வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் 90கள்தான் டெண்டுல்கருடையவை. 2000க்கு மேலே அணியைத் தாங்கி நிறுத்தியவர் இவர்தான். அதற்காகத்தான் அவருடைய பெயர் அரண். (சுவரைவிட அரண்தான் பொருத்தம்).
ReplyDeleteவெள்ளையடிப்பு என்பதற்கு பதில் அழகான தமிழில் சாந்து பொட்டும், சந்தனப் பொட்டும் வைத்தார்கள் என்று சொல்லலாமே?
இன்னும் சென்னைத் தமிழில் அழகாக S.A.S.T. என்பார்கள். விளக்கம் வேண்டுவோர் பத்து டாலர்கள் அனுப்பினால் சொல்கிறேன். :-)
நாகு,
ReplyDeleteவெங்கடாசலபதி போட்ட டாலரா, கண்டிப்பாக தந்துட்டா போச்சு
முரளி