Wednesday, August 23, 2006

ஒரு புல்லின் டைரி குறிப்பு

பாதுகாப்பான பையில் சொகுசாக வீற்றிருந்தேன்
பகட்டுக்காரர்கள் பணம் கொடுத்து என்னை வாங்கி விட்டனர்
வண்டியிலிட்டு வீசி என்னை எறிந்ததும் விடுதலை என்றெண்ணினேன்
விழுந்தது என் தலையில் சுண்ணாம்புக்கட்டிகள்
பின் விழுந்தது வண்ண வண்ண ரசாயனக்கட்டிகள்
- என்னை மேலும் அலங்கரிக்க
அப்பாடா என்று கண்ணசறும் முன் ஜில்லென்ற தண்ணீரில் எனக்கு நீராடல் வேறு
பாராட்டி சீராட்டி வந்த சிலர் என்னை வைக்கோல் போர்வையிட்டும் பேணி வளர்த்து வந்தனர்
என் புழுக்கம் தணிக்க அவ்வப்போது எனக்கு நீராடல் வேறு
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நான் வளர்ந்து பெரியவனாகி விட்டேன்
நான் வளர்ந்ததில் தான் அவர்களுக்கு என்ன பெருமை?
நான் வளர்ந்த பெருமையை நண்பர்கள், உற்றார், உறவினர், சுற்றத்தாரிடமும் தெரிவித்தனர்
வாரந்தோரும் என்னை அறுவடை செய்யும் சிலர்
நான் வளர்ந்தது கூடத்தெரியாமல் விட்டுவிடும் சிலர்
பயணம் சென்று திரும்பி வந்து நான் பூப்பூத்து காய் காய்க்கும் நிலையை அடைந்ததை எண்ணி வருந்தும் சிலர்
இப்படியே என் காலம் தொடர்கிறது
அறுவடை, நீராடல், சுண்ணாம்பு, ரசாயனம் என்று
இதோ குளிர் காலமும் வந்து விட்டது என் போதாத காலம்
தரையோடு தரையாய் என்னை மொட்டை அடித்துவிட்டு நான் வாழும் பூமியில் ஓட்டைகள் வேறு போட்டு விட்டனர்
வலுவின்றி ஓட்டையில் பதுங்கியிருந்த எனக்கு புது நண்பர்கள் வேறு
சரி, பனிக்காலமும் வந்து விட்டது
இனி சில மாதங்களுக்கு ஆழ்ந்த உறக்கம்
மீண்டும் அறுவடை ...இது தான் என் வாழ்க்கை

1 comment:

  1. என்ன பரதேசியாரே, புல்லுக்கு ரொம்ப தண்ணி ஊத்திட்டிங்களா, ரொம்ப வளர்ந்து டைரியெல்லாம் எழுதுது? பலே, பலே!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!