நீங்க நம்ப மாட்டீங்க.  நானும் கடந்த சில மணி நேரங்களா ரொம்ப கடுமையா முயற்சி செய்யறேன்.  வீட்ல பல அறைகளில் உட்கார்ந்து பாத்துட்டேன் .  உட்கார்ந்திருந்த  நாற்காலியை மாத்தி பாத்துட்டேன்.  சோபாவில் சாய்ந்து மோட்டை வெறித்து பாத்துட்டேன்.  ஆழ்ந்த யோசனைக்கு அறிகுறியா விரல் நுனியால் மோவாய் கட்டையை தட்டி பாத்துட்டேன்.  வைரமுத்து கணக்குல குறுக்கும் நெடுக்குமா நடந்து பார்த்துட்டேன்.  ம்ஹூம் ..........பதிவுக்கு ஒரு நல்ல ஐடியா வரக்காணுமே!  நம்ம கற்பனை குதிரைய தட்டி ஓட விடலாம்னு பார்த்தா அது சுருண்டு படுத்து தூங்கிடுத்துங்க.
நாட்டுல மக்கள் அரைப்பக்கத்தில் அம்சமா கதையே எழுதறாங்க.  நமக்கு மட்டும் மைண்ட் இப்படி லைசால் ஸ்ப்ரே போட்டு தொடச்ச சமையல் மேடை போல இருக்குதேன்னு கவலையோடு  நான் ஜன்னல் வழியே தோட்டத்தை பாத்துண்டு இருந்த போது தான் அது மறுபடி கண்ணில் பட்டுது. பத்து நாளைக்கு முன்னாடி பூத்து குலுங்கிய எங்க வீட்டு செம்பரத்தி செடி இப்போ வாடி வதங்கி கொல்லையில் தொட்டியில கிடக்குது. 
முதலிலேயே ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிடறேன்.  அந்த செம்பருத்தி செடி காலமாப்போனதுக்கு நான் காரணம் இல்லைங்க.  எங்க வீட்ல செத்துப்போன வேறு ஐந்தாறு செடிகளுக்கும் நான் பொறுப்பு இல்லீங்க.  ஊருல வேறு விதமா பேச்சு இருக்கும்.  ஆனா நீங்க நம்பாதீங்க.   நடந்ததை நான் வெவரமா உங்களுக்கு சொல்லறேன். 
என் கணவர் சில மாசங்களா அடிக்கடி வேலை விஷயமா வெளியூர் போறார்.  ஊரில் இருக்கும் போது சின்ன குழந்தைகளை பராமரிக்கிற மாதிரி செடிகளுக்கு தண்ணி விட்டு வளர்ப்பார்.  ஏன் நான் தண்ணி விட மாட்டேனான்னு கேக்கறீங்க, அப்படி தானே? விடக்கூடாதுன்னு எண்ணம் கிடையாதுங்க.  சின்ன வயசுல ஞாபக  சக்திக்கு சூரணம் குடுத்த போது நான் துப்பிட்டேன் போல இருக்கு.  எனக்கு கொஞ்சம் மறதி ஜாஸ்தி.  என் நினைவாற்றலின் மேல் நம்பிக்கையற்று தான் என் கணவர் தானே செடிகளுக்கு தண்ணி விட்டு, பூச்சி மருந்து அடிச்சு எல்லாம் செய்வார். 
போன மாசம் ரெண்டு வாரம் வெளியூர் போறதுக்கு முன்னாடி என்னைய உக்காத்தி வெச்சு எந்தச்செடிக்கு எத்தனை கப் தண்ணி விடணும்னு வெவரமா சொல்லிட்டு தான் போனார்.  இந்த  முறையாவது  இவர் ஊரிலிருந்து திரும்பும்போது வாய் பிளக்குமாறு நாலு இலை பச்சையாக இருக்கட்டும்னு நானும் ரெண்டு நாள் முனைஞ்சு விட்டேங்க.  மூணாவது நாள் செம்பருத்தி செடியோட இலைல கொஞ்சம் ஓட்டைங்க இருந்துது.  ரெண்டு தடவை அதை சுத்தி வந்து பாத்துட்டு யோசனையா நகந்து போயிட்டேன்.  அடுத்த நாள் முழு செடியிலும் பூச்சி கடித்து நம்மூர் சல்லடை மாதிரி ஓட்டைங்க.  
இது என்ன அனாவசியமான வம்பு?  இந்த செடிக்கு ஒண்ணுன்னா பழி என் மேலல்லவா வரும்? கவலையோட நிமிர்ந்து பார்த்த போது அறை மூலையில் இருந்த விண்டக்ஸ் கண்ணில் பட்டது.  ஆஹா, என் கை கொடுக்கும் தெய்வம்.  எல்லாக்கிருமிகளையும்  அழிக்கும் தீர்த்தம்.  இதன் வீரியத்துக்கு முன்னாடி எந்த பூச்சி ஜெயிக்கும்னு நினைச்சு  விண்டக்ஸ் பாட்டிலால் செடியை ஸ்ப்ரே பண்ணி விட்டு 'பகவானே நீ விட்ட வழி' அப்படின்னு போயிட்டேன்.  மொதல்ல எல்லா பூச்சியும் செத்து போச்சுங்க (நான் சொல்லலை இது வேலை செய்யும்னு?).  பிறகு எல்லா இலையும் உதிர்ந்து போச்சுங்க.  அப்புறம் செடியே வதங்கி, சுருண்டு படுத்துருச்சுங்க.  மனசு நிறைய துக்கத்துல அடுத்த ஒரு வாரம் நானே சரியா சாப்பாடு, தண்ணி இல்லாம வளைய வந்ததுல, மிச்சம் மீதி செடிகளுக்கு தண்ணீர் விட மறந்து போச்சு.  இது ஒரு குத்தமா?  நீங்களே சொல்லுங்க.  
ஊருக்கு போயிட்டு வந்து கோபமா என் மேல் பாய்ந்த கணவரிடம் நிச்சயமா சொல்லிட்டேன்.  அடுத்த பயணத்தின் போது வீட்டுல இருக்கிற எல்லா செடிகளையும் கூடவே எடுத்துட்டு போக சொல்லி.  இவர் பாட்டு ஊருக்கு கிளம்பி போக, இவர் தெரு முனை திரும்பறத்துக்குள்ள செடிகளெல்லாம் மறியல் போராட்டம் செய்து தற்கொலை முயற்சியில் இறங்கினா நான் என்ன செய்ய முடியும், சொல்லுங்க? 
-மீனா சங்கரன்
பொதுவா நாம்மெல்லாம் என்னைக்குமே instructions படிக்கரதேயில்லையே. இதோட ரெண்டு விலை அதிகமான செம்பருத்தி செடிகள் மற்றும் ஒரு மல்லிகை கொடியையும் டம்புக்கு அனுப்பி வீட்டுகரம்மாகிட்ட வாங்கி கட்டிகிட்டேன். அந்த தொட்டி சும்மா இருக்கேன்னு போன வாரம் வாழை கண்ணு ரெண்டு வச்சேன். அதையாவது நல்லபடியா காப்பாத்தனும்னு உறுதி எடுத்திருக்கேன்.
ReplyDelete:(
ReplyDelete:)))
நல்ல வழி பூச்சிகளைக் கொல்றதுக்கு. கூட செடியும் பூட்ச்சே!!??
ReplyDeleteஇதுக்குதான் my big fat greek wedding மாதிரி படத்துல இருந்து செடி பராமரிப்புக்கு ஐடியா திருடக்கூடாதுன்றது.
முத்துலெட்சுமி - பாண்டிக்காரவுக இப்படி மாத்ருமந்திர் படம் போடாம லோடஸ் டெம்பிள் படம் போடலாமா?
அரைப்பக்க கதைக்கு ஒரு விளம்பரம் போட்டதுக்கு முதற்கண் நன்றி.
ReplyDeleteஅங்கேயும் இதே கதை தானா ! ஆனா நாங்க உங்க அளவுக்கு வீர தீர செயல்களில் இறங்கவில்லை. இறங்கலாம்னு ஐடியா இருந்துச்சு, நல்ல வேளைக்கு பதிவு போட்டு காப்பாத்திட்டீங்க.
ஜெயகாந்தன்,
ReplyDeleteஇந்த வாழைக்கன்னையாவது காப்பாத்தணும் அப்படீங்கற உங்க உறுதியை பாராட்டறேன். என் செம்பருத்தி போல் இல்லாமல் உங்க வாழை தழைத்து வரட்டும். :-)
முத்துலெட்சுமி,
ReplyDeleteவருகைக்கு நன்றி. :-))))
நாகு,
ReplyDeleteநான் My Fat Greek Wedding படம் இன்னும் பார்க்கலை. நான் patent பண்ணிடலாம்னு நினைச்ச Windex treatment ஐ யாரோ ஏற்கனவே முயற்சி பண்ணிட்டாங்களா? அடடா......என்னுடைய millionaire கனவு அல்பாயுசுல போச்சே. சரி போகட்டும் விடுங்க.
சதங்கா,
ReplyDeleteவாங்க! விபரீத பரிட்சைகள் லேந்து உங்க வீட்டு செடிகளை காபபாத்தியதை குறித்து ரொம்ப சந்தோசம்க. ஊரார் வீட்டு செடியை காப்பாத்தினாலாவது எங்க வீட்டு செடி வளருதான்னு பாக்கறேன். :-)
இதுக்குத்தான சொல்றது எல்லாரும் எல்லா வேலையும் செய்யக்கூடாது.
ReplyDeleteIts too hard to type it in tamil. Your blogs are hilarious.
அனானிமஸ்,
ReplyDeleteதமிழ்ல டைப் பண்ணறது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு நல்லா தெரியும். நானே இப்போ தான் இந்த வித்தையை கத்துண்டிருக்கேன். பதிவு நகைச்சுவையா இருந்ததுன்னு சொன்னதுக்கு மிகவும் நன்றி.
//நம்ம கற்பனை குதிரைய தட்டி ஓட விடலாம்னு பார்த்தா அது சுருண்டு படுத்து தூங்கிடுத்துங்க.//
ReplyDeleteதூங்கிடுச்சா.... நல்லாவே ஓடுதுங்க உங்க கற்பனை குதிரை... அதுவும் நாலு கால் பாய்ச்சல்ல...
நல்லா எழுதுங்க வாழ்த்துக்கள். நட்சதிரமானதுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசுவர்ணலேகா,
ReplyDeleteநம்ம குதிரை நொண்டாம நடந்தா பெரிய விஷயமுன்னு நினைக்கிறேங்க. நீங்க என்னடான்னா நாலு கால் பாய்ச்சல்ல ஓடுதுன்னு சொல்லறீங்க. பதிவிட்டு சொன்னதுக்கு ரொம்ப நன்றி.
வாழ்த்துக்களுக்கு நன்றி சோமி. நாகு தான் இந்த வார நட்சத்திரம்....நான் இல்லைங்க. :-)
ReplyDelete