Wednesday, July 25, 2007

மரங்கள்

சிறுவயதிலிருந்தே மரங்களின் மேல் ஒரு பாசம். தொடக்கப்பள்ளியின் மைதானம் ஒரு மாந்தோப்பு. அதற்கு குத்தகைதாரர், காவலாளி எல்லாம் சோவை என்றழைக்கப்பட்ட பெயருக்கேத்த மாதிரி ஒரு பெண்மணி. அவளுக்கு பயந்து கைக்கெட்டிய மாங்காய்களைக்கூட பறிக்கமாட்டோம். மாமரங்களின் நிழலில் நிறைய வகுப்புகள் நடக்கும்.

அடுத்த பள்ளியில் நிறைய தூங்குமூஞ்சி மரங்களும், வேப்பமரங்களும் ஒரு பெரிய ஆலமரமும். தூங்குமூஞ்சிமரத்தின் காய்ந்துபோன காய்களை வைத்து கத்திச்சண்டை போடுவோம். அந்த மரத்தடியில் உட்கார்ந்தால் தூக்கம் வரும் என்று சொல்வார்கள். ஆனால் ஒரே ஒரு டீச்சர்தான் தூங்குவார்கள். அவங்க பெயரே தூங்குமூஞ்சி டீச்சர். (ஆசிரியர்களின் பட்டப்பெயர் வைத்து நிறைய பதிவு எழுதலாம்). வேப்பமரம் எனக்குப் பிடித்த மரங்களில் ஒன்று. தூரத்தில் இருந்து பார்த்தால் மற்ற மரங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமான வெளிர்ப் பச்சையில் பந்து பந்தாக தெரியும். நிறைய வேப்பம்பழங்களையும் துளிர்இலைகளையும் தின்றிருக்கிறேன் பள்ளிநாட்களில். ராஜபுதனத்து வறண்ட பிரதேசத்திலும் எங்கள் கல்லூரி ஒரு பாலைவனச்சோலையாக இருந்ததற்கும் காரணம் வேப்பமரங்கள்தாம். பள்ளியில் நாங்கள் நட்டுவைத்த சில அலங்காரக் கொன்னை மரங்கள் இன்று பெரிதாக வளர்ந்து பிரேயர் க்ரௌண்டிற்கு நிழல் அளிப்பதில் பெரு மகிழ்ச்சி.

வீட்டுப் பின்னாலிருந்த ஒரு வீட்டில் ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களில் ஒன்று பார்க்க கம்பீரமாக ராஜதோரணையுடன் இருக்கும். தென்னைக்கென்ன ராஜ தோரணை என்றெல்லாம் கேட்காதீர்கள். சுற்றி கொஞ்சம் குட்டையான தென்னைகளுக்கு நடுவே உயரமாக அந்த தென்னைகளுக்கெல்லாம் ராஜா மாதிரி நிற்கும். வீட்டருகில் விளையாடும் மைதானத்தில் பூவரச மரங்களும், புளிய மரங்களும், புளியமரத்தைப்போலவே தோன்றும் வாதநாராயண மரங்களும் இருக்கும். வாதநாராயண மரத்தை ரொம்ப நாள் வாழ்நார் மரம் என்றுதான் தெரியும்.
பூவரச மர இலைகளை சுருட்டி பீப்பீ ஊதுவான் மாரிமுத்து. எனக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் காற்றுதான் வரும். மாரியை பார்த்து பொறாமையாக இருக்கும். இன்னொரு வீட்டில் இருந்த கொய்யா மரத்தில் மணிக்கணக்காக விளையாடுவோம். கொய்யாமரத்தின் கிளைகள் வலுவானவை. மெல்லிய கிளைகள் கூட எங்கள் கனத்தைத் தாங்கும்.
இளம் புளியங்காய்களையும் புளியங்கொழுந்துகளையும் ஞாபகத்துக்கு கொண்டுவர வேண்டாம்.

அமெரிக்கா வந்த பிறகு எனக்கு என்ன குறை என்றால், இங்கு நிறைய மரங்களின் இலைகள் முழுவதாகவே இல்லை. மேபிள் மரங்களும், ஓக் மரங்களும்தான் இங்கு நிறைய. அவற்றின் இலைகள் முழுமையாகவே இல்லை. ஒரு பூவரச இலைப்போலவோ ஆல, அரச இலை போலவோ முழுமையில்லை. அதனாலேயே எனக்கு அரச இலையை போல தோன்றும் ப்ராட்ஃபோர்ட் பியர் மரத்தைப் பிடிக்கும்.
அது சரி. முழுமையாக இல்லாமலே இலையுதிர்காலத்தில் இவ்வளவு இலை அள்ளும் வேலை. முழுதாக இருந்தால் என்னாவது என்கிறீர்களா?


இந்த ஊர் மரங்களிலும் சில வித்தியாசமான இலைகள் கொண்டவை இருக்கின்றன. ட்யூலிப் பாப்லரின் இலை சீராக கத்திரிகோல் கொண்டு வெட்டியது போலிருக்கும்.


ஒரே மரத்தில் மூன்று விதமான இலைகள் கொண்ட மரம் ஸாஸ்ஸஃப்ராஸ் மரம். இதைப்பற்றி படித்திருக்கிறேன். ஆனால் இதுவரை கண்ணில் படவில்லை.


சென்ற வருடம் சென்ற நியுயார்க் மிருகக்காட்சிசாலையில் நம்ப ஊர் தட்பவெப்பநிலையில் ஒரு இடத்தை வைத்திருக்கிறார்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அதில் ஒரு பெரிய வேப்பமரம்! நைஸாக ஒரு வேப்பிலையை பிய்த்து தின்றுகூட பார்த்தேன் உறுதிப்படுத்திக்கொள்ள. கண்ணில் நீர் கலங்கிவிட்டது. அதிலிருந்து எனக்கு இங்கே ரிச்மண்டில் வேப்பமரம் வளர்க்க வேண்டும் என்று ஒரு ஆசையில் ஆரம்பித்து வெறியாகியது. வலையில் மேய்ந்து பார்த்ததில் தெரிந்தது, அமெரிக்காவில் தென் ஃப்ளோரிடாவில் மட்டும்தான் வேப்பமரம் வெளியே வளர்க்கமுடியுமாம். அந்த ஆசையில் மண். அப்புறம் வீட்டுக்கு உள்ளே வளர்த்தால் என்ன என்று ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பித்தேன். இங்கே ஃளோரிடாவில் டாம்பா நகருக்கு அருகே ஒரு வேப்பம்பண்ணையே வைத்திருக்கிறார்கள். வேப்ப மரங்களை எப்படி வளர்ப்பது என்று சொல்லித் தருகிறார்கள். உங்களுக்கு வளர்க்க முடியாவிட்டால், அவர்களிடமிருந்து வேப்பங்குச்சி முதல் கொண்டு வேப்ப எண்ணெய், வேப்பங்கன்று எல்லாம் வாங்கலாம். வேப்பங்கொட்டைக்கு முப்பது நாள்தான் ஆயுளாம். அதைப் படித்ததிலிருந்து கோடையில் ஊருக்குப் போகும் சிலரிடம் மரத்திலிருந்து பறித்த வேப்பங்கொட்டை கொண்டு வாருங்களென்றேன். சிலர் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார்கள். சிலர் ஒரு மாதிரி பார்த்தார்கள். ஆனால் இன்னும் சிலர் கொண்டுவந்து கொடுத்து அவர்களும் வளர்த்து வருகிறார்கள். போன வருடம் ஆரம்பித்தது, குளிர்காலத்தில் உள்ளே வைத்திருந்து நிறைய போய் இப்போது ஒரு நான்கைந்து பிழைத்திருக்கின்றன. படம் போட்டால் நீங்கள் கண் போட்டு விடுவீர்கள் என்பதால் போடவில்லை. படத்தில் பார்த்தாலும் தெரியாது. அவ்வளவு சிறிசு. நம்ம ஊர் மரங்கள் பட்டியல் பார்க்கவேண்டுமா? இதோ!

ரிச்மண்டில் சில வருடங்களுக்கு முன்னால் சூறாவளி வீசியதில் நிறைய மரங்கள் விழுந்தன. அப்போது பார்த்தால் பெரிய பெரிய ஓக் மரங்களுக்கும் ஆணிவேரே இல்லை. கொஞ்சம் பரந்துவிரிந்த வேர்கொத்துதான் இருந்தது. ஒருசில வகைமரங்களுக்கு ஆணிவேர் கிடையாதாம். அதுதான் காற்றில் சுலபமாக விழுந்துவிட்டன. அப்படி விழுந்த மரத்தை தூக்கி நட்டுவைத்து என்னை ஆச்சரியப்படுத்தினார் நம் சேகர் வீரப்பன்.

6 comments:

  1. நாகு,

    மரங்களைப் பற்றி அருமையான கட்டுரை. இங்குள்ள மரங்களின் படங்களைப் போட்டது போல், நம்மூர் மரங்களின் (தென்னை, வேம்பு என்று நினைத்துக் கொள்ளாதீர்) பூவரசம், வாழ் நார், கொன்னை ... இவைகளின் படங்களை போட்டிருந்தால் நன்றாக இருக்கும்.

    வேப்பமரத்தின் மீது உங்களின் பற்று என்னையும் பற்றிக் கொண்டது என் பள்ளி நாட்களிருந்தே. அவ்வப்போது கவிதைகளிலும், கதைகளிலும் பயன்படுத்துவதும் உண்டு.

    வள்ளுவர் மரங்களைப் பற்றி தன் குறட்பாக்களில் சொல்லியிருக்கிறார். அதில் இந்தக் குறள் 'வேம்பு'க்கு ஒத்து வருகிறது:

    மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
    பெருந்தகை யான்கண் படின்


    இங்கே மருந்தான மரத்தை வேம்பாகவும், செல்வத்தை உங்கள் கட்டுரையாகவும் ;-) எடுத்துக் கொள்கிறேன்.

    வாழ்த்துக்கள், நல்ல பதிவு.

    ReplyDelete
  2. நன்றி சதங்கா. பூவரசின் படத்தைச் சேர்த்திருக்கிறேன். வாழ்நார் என்று தேடினால் முதலில் இந்த பதிவுதான் கிடைக்கிறது ;-)

    தமிழ் விக்கிபீடியாவில் மரங்கள் பட்டியல் இருக்கிறது. சில மரங்களின் படங்களும் இருக்கின்றன.

    ReplyDelete
  3. இன்று மாலை ஒரு பூங்காவில் நடந்து கொண்டிருந்தபோது கண்டேன் ஸாஸ்ஸஃப்ராஸ் மரத்தை. இலையில் மெலிதாக எலுமிச்சை இலையின் வாசம். என்னைவிட ஒரு கருப்பு rat snake பார்த்த என் மகன் ரொம்ப சந்தோஷித்தான்.

    ReplyDelete
  4. நாகு,
    நல்ல பதிவு.

    /* பூவரச மர இலைகளை சுருட்டி பீப்பீ ஊதுவான் மாரிமுத்து. எனக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் காற்றுதான் வரும். மாரியை பார்த்து பொறாமையாக இருக்கும். */

    பழைய ஞாபகங்களை நினைவுபடுத்திவிட்டீர்கள். :-)

    உங்கள் ஊரிலும் பூவரச இலையில் நாதசுவரம் இசைப்பீர்களா?!

    ReplyDelete
  5. வாங்க வெற்றி.

    //உங்கள் ஊரிலும் பூவரச இலையில் நாதசுவரம் இசைப்பீர்களா?!//

    மற்றவர்கள் இசைப்பார்கள். நமக்கு ஜில்ஜில் ரமாமணி மாதிரி காத்துதான் வரும் :-(

    ReplyDelete
  6. வணக்கம் நாகு.

    இங்கே பாலையில்(State of NM) தானாகவே முளைத்து உயிரை வாங்கும் chinese elm மரங்கள்தான் மூலைக்கு மூலை. வேர்கள் பரவி கழிவுக் குழாய்களுடன் பின்னிக் கொண்டு கொடுக்கும் இன்னல்கள் சொல்ல மாளாது.

    பூவரசு மரம் பற்றிய உங்கள் பதிவு சில நினைவுகளை கிளறிவிட்டது. பூவரசு இலையில் ஊதல் செய்வது ரொம்ப எளிது. ஆயினும் பூவரசு மரத்தில் ஒரு பெரிய அபாயம் உண்டு !! கோடைக்காலத்தில் அதன் பட்டைகளில் படர்ந்து அடைத்துக் கொண்டிருக்கும் "மொசுக்கட்டை" புழுக்கள். இதை கம்பளிப்பூச்சி என்றும் அழைப்பார்கள் என நினைக்கிறேன்.

    சிறுவனாய் இருந்த காலத்தில் நானும் எனது நண்பனும் வயலோரமாய் நிலத்தைத் தூர்த்து அங்கு நடந்து கொண்டிருந்த காத்தவராயன் கூத்தை ரசித்துக் கொண்டிருந்தோம்.அருகே உட்கார்ந்து பார்க்க பூவரசு மரத்தின் மீது ஏறினான் நண்பன் பாலு.

    பத்தையாக அவன் முதுகில் விழுந்தது ஏராளமாக மொசுக்கட்டை !

    அரிப்போ அரிப்பு அவனுக்கு ! இரவு 10 மணிக்கு மேல் என ஞாபகம். அரிப்பை போக்க சாம்பலை எங்கு தேடுவது..? எங்கள் வீட்டு கொல்லையிலிருந்த எருக்குழியில் சொல்லி வைத்தார் போல் வீட்டுக்கு பின்பக்கம் குடியிருப்பவர்கள் சாம்பலை கொட்டியிருந்தனர் போலும், சூடான சாம்பலை எடுத்து அவன் முதுகு பூராவும் நான் தேய்த்துவிட அரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக நின்றது !!

    அதற்கப்புறம் பலவருடங்கள் பூவரசு மரங்கள் பக்கம் நாங்களிருவரும் போனதில்லை !!

    நன்றி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!