அன்னை வயிற்றின் கதகதப்பில்
அன்புக் குடிலின் அரவணைப்பில்
கண்கள் மூடி அருந்தவத்தில்
காத்திருந்தாய், அன்று நிறங்களில்லை
ஈரைந்து மாதங்கள் கரைந்த பின்னே
உறக்கம் கலைந்து எழுந்த பின்னே
உலகைக் கண்ணால் கண்ட பின்னே
உன் சிரிப்பினில் மலர்ந்தது வெள்ளை நிறம்
தத்தித் தவழ்ந்து நடை பயின்றாய்
மழலைப் பேச்சால் மயங்க வைத்தாய்
கள்ளம் இல்லாப் பிள்ளை நெஞ்சில்
இன்னும் இருந்தது வெள்ளை நிறம்
செல்லக் கோபம் காட்டக் கற்றாய்
ஒன்று கிடைக்காவிடில் பிடிவாதம் செய்தாய்
கண்ணீர் சிந்தி அடம்பிடிக்கையிலே
லேசாய் மாறுது வெள்ளை நிறம்
பாகுபாடுகள் பார்க்கக் கற்றாய்
ஏற்றத் தாழ்வையும் ஏற்றுக் கொண்டாய்
நம்பிக்கையின்றி வாழக் கற்றாய்
அன்பைக்கூட அளந்து வைத்தாய்
ஆளைப் பார்த்து ஆடை பார்த்து
ஆதாயம் பார்த்து நடக்கும் பொழுதினில்
தானாய் மறையுது வெள்ளை நிறம்…
--கவிநயா
நல்ல கற்பனை. கடைசி வரியை இப்படி முடித்தால் எப்படி இருக்கும்?
ReplyDelete"எப்போதாவது தெரியுது வெள்ளை நிறம்" (அல்லது) "எங்கே அந்த வெள்ளை நிறம்"
- முரளி.
நன்றி, முரளி. "எங்கே அந்த வெள்ளை நிறம்"கிறது நல்லாருக்கு.
ReplyDeleteஅன்புடன்,
கவிநயா.