பித்தனின் கிறுக்கல்கள் - 2
மரண தண்டனை ஒழிப்பு:
இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001-ல் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் முகமது அப்சலின் தூக்கு தண்டனை தீர்ப்பு இன்று இந்தியாவில் மாநகரத்தின் முக்கிய பேச்சாக (அதாங்க talk of the town) இருக்கிறது. நம்ம ஊர் அரசியல்வாதி திருமாவளவன் இந்த மரணதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து மன்னிப்பும் கருணையும் காட்ட வேண்டும் என்றும், உலகில் 129 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று 'அறிவியல்பூர்வமான ஆய்வுகள்' வெளிக்காட்டியுள்ளன என்றும், மக்கள் விரோதச் சட்டம் என்று பெருவாரியான அரசியல் கட்சிகளால் வலியுறுத்தப்பட்டு பின்னர் கைவிடப் பட்ட பொடோசட்டத்தின் கீழ் இந்த தண்டனை விதிக்கப் பட்டுள்ளது இதனால் இதை ரத்து செய்து மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாடாக உலக அரங்கில் இந்தியா பெருமையுடன் விளங்க வேண்டும் என்று தன் 'திரு' வாய் மலர்ந்தருளியிருக்கிறார். என்ன ஒரு ஆய்வு, என்ன ஒரு கண்டு பிடிப்பு, என்ன ஒரு நாட்டுப் பற்று, என்ன ஒரு மனித நேயம் இவை எல்லாம் மெய் சிலிர்க வைக்கிறது. எப்படி இதுபோல சிந்திக்க கற்றுக்கொள்கிறார்கள் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படி யோசிப்பதற்கு படிப்பு என்ற ஒன்று அவசியமே இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கிறார்.
இந்த மரணதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து மன்னிப்பும் கருணையும் காட்ட வேண்டும் - மிக ஞாயமான கோரிக்கை, அவர் என்ன ஆங்கிலத்தில் தமிழ்த் திரைப்படத்துக்கு பெயர் வைத்தாரா? தங்கர் பச்சானை திட்டினாரா? விரப்பனை கொடுங்கோலன் என்று சொன்னாரா? பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று சொன்னாரா? இல்லையே சும்மா நமது மரியாதைக்குரிய பாரளுமன்றத்தை தாக்கி அவருடைய பல சகாக்களை அநியாயமாய் இழந்து, பல அப்பாவி மக்கள், தோட்டகாரர், பாதுகாப்புப் படையினர் என்று பலரையும் கொன்று, இன்று பிடிபட்டு, இந்திய நீதிமன்றம் அவரது வாதங்களை கேட்ட பிறகு இப்படி ஒரு தண்டனை பெற்று, அதற்காக கொஞ்சமும் வருத்தப்படாமல் இருப்பவருக்கு கண்டிப்பாக கருணை காட்டத்தான் வேண்டும்.
உலகில் 129 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று 'அறிவியல்பூர்வமான ஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன':
என்ன ஒரு அபாரமான கண்டுபிடிப்பு. மரணதண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று அறிவியல்பூர்வமான ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன என்றால், ஒரு நாட்டில் எதற்கு ராணுவம், எதற்கு போலீஸ், எதற்கு சட்டங்கள், எதற்கு தண்டனைகள் அட எதற்கு இவரைப் போல அரசியல்வாதிகள், எந்த சட்டத்தாலும், தண்டனையாலும் குற்றங்கள் குறையப் போவது இல்லையே, மக்களே அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டுமே. உலக அரங்கில் தீவிரவாதத்தை கட்டுப் படுத்த இன்று இருக்கின்ற சட்டங்கள், தண்டனைகள் போதவில்லை என்று எல்லா நாடுகளும் கவலைப் பட்டுக்கொண்டிருக்கும் போது, உலகில் தீவிரவாதத்தால் தினம்தோறும், அதிகம் பாதிக்கப்படும் இந்தியாவில் இவரைப் போன்றவர்கள் இப்படி பேசி வருவது நமக்கெல்லாம் ஒரு சாபம்.
மக்கள் விரோதச் சட்டம் என்று கைவிடப் பட்ட பொடோ சட்டம்
தீவிரவாதத்தை முழுவதும் ஒழிக்க முடியாவிட்டாலும், அதன் வளர்ச்சியை தடுக்க முயன்ற ஒரு சட்டமே பொடோ. அதையும் இவரைப் போன்ற கையாலாகாத அரசியல்வாதிகள் குழி தோண்டி புதைத்து விட்டனர். 1000 பொதுமக்கள் உயிர் இழக்கலாம், ஆனால், இவர்களுக்கு ஒரு தீவிரவாதி உயிர் இழக்கக் கூடாது, மனித உயிர்களை மதிக்க முடியாத தீவிரவாதிக்கு எப்படி மனித உரிமைக் கமிஷனும், இவரைப் போன்றவர்களும் வக்காலத்து வாங்குகின்றனரோ தெரியவில்லை.
ஒரு ஏழை பாடகன் முக்காலத்தையும் அறிந்து இந்திய விடுதலைக்கு முன்பே எழுதினான்:
நெஞ்சி லுரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ - கிளியே வாய்ச்சொல்லில் வீரரடீ.
கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே நாளில் மறப்பாரடீ.
சொந்த அரசும்புவிச் சுகங்களு மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ? - கிளியே அலிகளுக் கின்பமுண்டோ?
சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல்கண்டும்
சிந்தை யிரங்காரடீ - கிளியே செம்மை மறன்தாரடீ.
மேல் குறிப்பிட்ட அரசியல் வாதியை நம்பும் நம் நாட்டு மக்களைப் பற்றி இந்த மகா கவி பாடுகிறார்:
நெஞ்சு பொறுக்குதிலையே - இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே
கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே - நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே - இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே
பட்டிமன்றம்
தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் வகையில் ஒரு பட்டிமன்றம் நடத்த இருக்கின்றோம் என்று ரிச்மண்ட் தமிழ் சங்கத்திலிருந்து அறிவிப்பு வந்து இருக்கிறது. செவிக்கு நல்ல விருந்தாக இருக்கும். அரட்டை அரங்கம் போல ஒன்றுகூட செய்யலாம் நல்லா பொழுது போக கத்தி பேசலாம். நிறைய குழந்தைகள், பாட்டு, பரத நாட்டியம் பயில்கிறார்கள் அவர்களுக்கு பாட்டு போட்டி வைத்து 'சப்தஸ்வரங்கள்' போல ஒன்றும் செய்யலாம். கலந்து கொள்ளும் எல்லா குழந்தைகளுக்கும் பரிசு என்று வைத்துவிட்டால், போட்டி நல்ல களை கட்டும்.
இந்தப் பதிவை பித்தனின் ப்ளாக்கில் படிக்க இங்கே க்ளிக்கவும்:
http://pkirukkalgal.blogspot.com/2006/10/2.html
-பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ...
அட, நம்ம ஊர் அரசியல்வாதிகள் எப்போது மனித உரிமை பற்றி பேச ஆரம்பித்தார்கள்? அவர்கள் உரிமையைத் தவிர இவற்றிலும் அக்கறை உண்டா?
ReplyDeleteஆனால் கேட்டுக் கேட்டு புளித்துப்போன உப்புக்குதவாத வாதங்களில் இருந்து இதுபோல சமாச்சாரங்களை நம்மூர் ஆட்கள் பேச ஆரம்பித்திருப்பதே நல்ல முன்னேற்றம். ஆனால் என்ன? அவர் விடச்சொல்லும் ஆள்தான் சரியில்லை. பேச்சையே கேலிக்கூத்தாக்குகிறார்.
பேண்ட் போட்ட அரசியல்வாதிகளிடமிருந்து இன்னும் என்ன ஆச்சரியங்களோ? அதிர்ச்சி என்று சொல்ல மாட்டேன். அது எல்லாம் எப்பொழுதோ நாம் தாண்டியாகிவிட்டது.