Monday, January 14, 2013

நோட்டீஸ் ப்யுட்டீஸ் - 7

நோட்டீஸ் ப்யுட்டீஸ்  -7


செருப்பு தான் நம் காலைக்கடிக்கும் என்று நமக்குத்தெரியும். இங்கு செருப்பையே நாம் கடிக்கலாம் போலிருக்கே!!!

Monday, January 07, 2013

காப்பிபுராணம்


 இலக்கிய மன்றக் கூட்டத்திற்கு எழுத்தாளர் பொன்னீலன் அவர்களை அழைத்திருந்தோம். அவர் பேசும்போது தன்னுடைய இளமைப் பருவத்தில் பேராசிரியர் ஆ. சீனிவாசராகவன் வீட்டிற்கு போன அனுபத்தைப் பற்றி கூறினார். பேராசிரியர் சீனிவாசராகவன் முந்தைய தலைமுறையின் மிகச் சிறந்த இலக்கிய விமர்சகர். திருநெல்வேலி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பனி புரிந்தவர். கம்பராமாயணம், பாரதி இலக்கியங்களை கற்றுத் தெளிந்த சிறந்த தமிழ் அறிஞர்.

 அவருடைய வீட்டுக்குப் போனால் தனக்கு கிடைக்கும் காப்பியைப் பற்றிக் கூறினார். பேராசிரியரின் மனைவி அற்புதமான ருசியுடன் கூடிய காப்பியை கொடுத்து உபசரிப்பார், என்று கூறினார். அந்த அனுபவத்தைக் கூறிவிட்டு மேலும் தொடர்ந்தார். திருச்சிக்கு வந்தால், நல்ல ருசியுள்ள காப்பிக்கு நான் எங்கே போவேன் கோபால கிருஷ்ணன் வீட்டுக்குத்தான் போக வேண்டும். என்றார். கூட்டத்தில் ஒரே சிரிப்பு.

 மேலும் தொடர்ந்தார், அது என்ன மாயமோ இந்த பிராமணர்கள் இவ்வளவு ருசியுடன் காப்பி தயாரிக்க எங்கே கற்றுக் கொண்டார்களோ தெரியவில்லை என்றார். அரங்கம் சிரிப்பில் அதிர்ந்தது.

பொன்னீலன் என் வீட்டுக்கு ஒரு முறை வந்திருக்கிறார். என் மனைவி கொடுத்த காப்பியை அப்பொழுது வாயாரப் புகழ்ந்தார். அவர் சொன்னது என்னவோ உண்மைதான். பொதுவாக பிராமணர்கள் வீட்டில் காப்பி நல்ல ருசியாக இருப்பதாக பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.கேட்கும்போது ஒரு வகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

 இந்த நாட்டின் பாரம்பரியப் பெருமை பேசும் பிராமணர்கள் வெளிநாட்டுச் சரக்கான காப்பியை எப்படி இவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொண்டார்கள், அந்த பானத்தை தன்வயப் படுத்திக் கொண்டு ரசனையோடு தயாரிக்கிறார்கள் என்பது ஒரு தனிக் கதை.

 இருபதாம் நூற்றாண்டு தொடக்க காலம் வரை பிராமணர்கள் வீட்டில் காப்பி கிடையாது. விசேஷ நிகழ்ச்சிகளில் கூட காப்பி கிடையாது. நகரங்களில் இன்று காணப்படும் காப்பிக் கடைகள் கூட அன்று இல்லை. சோத்துக் கடை என்று கூறப்படும் சில விடுதிகளில் உணவு கிடைக்கும். பிராமணர்களும், பிள்ளைமார் போன்ற சாதி இந்துக்களும் அந்த விடுதிகளுக்குப் போக மாட்டார்கள். ஆச்சாரக் குறைவு என்று கூறி அந்த விடுதிகளுக்குள் நுழைவதை தவிர்த்துவிடுவார்கள். நகரத்துக்குச் செல்லும் காலங்களில் வீட்டில் தயாரித்த உணவை கையில் எடுத்துச் செல்வார்கள். தன சாதிக் காரர்
வீட்டைத் தேடி அங்கே உட்கார்ந்து கையில் கொண்டு போன உணவை சாப்பிட்டு விட்டு அந்த வீட்டில் நீர் வாங்கிக் குடிப்பார்கள்.

 இதுதான் அன்று நிலவிய பழக்கம்.சமூகச் சீர்திருத்தப் பிரச்சாரம் செய்ய சுற்றுப்பயணம் மேற்கொண்ட தலைவர்கள் கூட தன்னுடன் தன சாதியைச் சேர்ந்த ஒரு சமையற்காரனை உடன் அழைத்துக்கொண்டு போவது வழக்கமாக இருந்தது. அந்த சமையற்காரரை தவசிப் பிள்ளை என்று குறிப்பிடுவார்கள்.

 நகரங்களின் அளவும்,நகரங்களுக்கு அடிக்கடி செல்வோரின் எண்ணிக்கையும் வளரத் தொடங்கிய பின் நிலைமை சற்று மாறியது. அத்தகைய பயணிகளின் தேவைக்காக காப்பி கிளப்புகள் தோன்றத் தொடங்கின. அங்கே காப்பியை தவிர வேறு சில பலகாரங்களும் கிடைத்தன.இப்படி வளர்ந்த காப்பி கிளப்புகள்தான் காப்பி குடி பழக்கத்தை நாட்டில் எல்லா பகுதி மக்களிடமும் வளர்த்தது.

 ஒரு காலத்தில் ஐரோப்பியர்களின் பானமான காப்பி இன்று எல்லா சாதி மக்களின் பானமாக வளர இந்த காப்பி கிளப்புகள் தான் காரணமாக அமைந்தது. எல்லா சாதியச் சேர்ந்த மத்தியதர வர்க்க குடும்பங்களிலும், காலை உணவு காப்பியி லிருந்து தான் தொடங்குகிறது. சிலர் பல் துலக்கக் கூட காத்திருப்பதில்லை. படுக்கையிலிருந்து எழுந்த வுடன் காப்பியை குடிக்கும் நாகரீகமும் (?)உண்டு.

 இந்த காப்பி கிளப்புகளை பெரும்பாலும் பிராமணர்களே நடத்தினார்கள். அவர்களுக்கு கிடைத்த புதிய தொழிலாக ஹோட்டல் தொழில் அமைந்தது. அந்த கிளப்புகளில் எல்லா சாதியாரும் ஒரே பந்தியில்உட்கார்ந்து உணவு அருந்தும் பழக்கம் வளர்ந்தது. சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்ய காலத்தில் தமிழ்நாட்டில் ரயில்கள் ஓடத்தொடங்கிய போது எல்லா சாதியாரும் ஒரு சேர உட்கார்ந்து பயணம் செய்வதால் சாதிக் கலப்பு ஏற்படுகிறது, என்று பிராமணர்கள் அங்கலாய்த்துக் கொண்டது உண்டு. தங்கள் சாதி ஆச்சாரம் கெடாமல் பயணம் செய்ய ரயிலில் தங்களுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று பிராமணர்கள் அரசாங்கத்துக்கு மனு கொடுத்தது உண்டு. அதே பிராமணர்கள் தான் இன்று காப்பி கிளப் தொடங்கி சகல சாதியாரும் கலந்து அமர்ந்து உணவு அருந்தும் நிலையை உருவாக்கினார்கள்.

 தொழில் திறமையும் சாமர்த்தியமும் உள்ள பிராமணர்கள் காப்பி கிளப் தொடங்கினார்கள்.படிக்க வசதியில்லாத,கல்வியைத் தொடர முடியாத பிராமணச் சிறுவர்கள் கிளப்புகளில் சர்வர்களாக சமையல்காரர்களாக பிழைப்பைத் தொடங்கினார்கள்.ஆகக் கூடி காப்பி கிளப் என்ற புதிய வர்த்தக அமைப்பு பெரும்பாலும் பிராமணர்கள் வசம் இருந்தது என்னவோ உண்மைதான்.

 ஆனால் பழமைவாதம் பேசும் எல்லா சாதியாரும் கிளப்புகளில் உணவு அருந்துவதை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளவில்லை.பல நூற்றாண்டுகளாக தான் உணவு உண்பதை வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் பார்க்கக் கூடாது என்ற நம்பிக்கையில் வளர்ந்தவர்கள் இந்த நாட்டு மக்கள். இந்த நம்பிக்கைக்கு எந்த சாதியாரும் விலக்கு அல்ல. காப்பி கிளப்புகளில் கிடைக்கும் உணவு வகைகள் பிராமணர்களால் தயாரிக்கப்பட்டவை என்ற உத்திரவாதம் சில பழமைவாதிகளை திருப்திபபடுத்தலாம். அவர்கள் காப்பிகிளப் உணவை ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில்தான் பிராமணாள் காப்பி கிளப் என்ற பெயர்ப் பலகையுடன் விளம்பரம் செய்யப்பட்டது.

 இந்த அறிவிப்பு சாதி வெறி யை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி பெரியார் ஈ.வே. ரா. 1950 களில் எதிர்ப்பு இயக்கம் தொடங்கினார். அவருடைய தொண்டர்கள் பெயர்ப் பலகையில் இருந்த பிராமணர் என்ற சொல்லை தார் பூசி அழித்தனர்.ஆகையால் பெரும்பாலான ஹோட்டல்களில் பிராமனாள் என்ற சொல் விளம்பரப் பலகையிலிருந்து நீக்கப்பட்டது. ஆனால் இன்று தமிழ்நாட்டில் பல நகரங்களில் ஐயங்கார் பேக்கரி என்ற விளம்பரப் பலகையைப் பார்க்கலாம்.எந்த கட்சி தொண்டனும் அதற்கு எதிர்க்குரல் கொடுக்கவில்லை. தார்ச் சட்டி களையும் காணவில்லை.

 இந்த பேக்கரிகளுக்கும்,அங்கே விற்பனையாகும் தின்பண்டங்களுக்கும் அய்யங்கார்களுக்கும் எந்த வகை ஓட்டும் இல்ல, உறவும் இல்லை என்பது வேறு விஷயம்.

 ஆனால் வைதீக பிராமணர்கள் பலர் இன்று வரை கிளப்பில் காப்பியோ இதர உணவு வகைகளையோ சாப்பிடுவதை தங்களுக்கு ஆச்சாரக் குறைவு என்றே நினைக்கிறார்கள்.

 சர்க்கார் உத்தியோகத்தை கைப்பற்றுவதில் பிராமணர்கள் முன்னே நிற்பதை எதிர்த்து பகுத்தறிவுவாதிகள் கிளர்ச்சி செய்தனர். அதனால் சர்க்கார் வேலை வாய்ப்பை இழந்த பிராமண இளைஞர்கள் ஹோட்டல் தொழிலில் இறங்கினார்கள். அவர்களையும் பகுத்தறிவு வாதிகள் விட்டு வைக்கவில்லை. அதன் ஒரு அம்சம்தான் தார்ச்சட்டி, பெயர்ப்பலகை அழிப்பு எல்லாம்.புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் காப்பிக் கடை முண்டங்கள் என்று பாப்பாரச் சிறுவர்கள் மீது கவிதையில் வசை பாடினார்.

 ஹோட்டல் முதலாளிகளும் சரி அடுப்படியில் நெருப்பில் வெந்து பிழைப்பு நடத்தும் சமையல் காரர்களும் சரி எல்லோருமே சுரண்டல்காரர்கள்தான், ஏனென்றால் அவர்கள் எல்லோரும் பார்ப்பனர்கள். இதுதான் பகுத்தறிவுப் பார்வை.

 கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் சமூக மாற்றங்களில் மிக முக்கியமான ஒன்று இந்த காப்பிகிளப் தொடர்புடையதுதான்.இன்று பிராமணர்கள் ஹோட்டல் தொழிலில் கொண்டிருக்கும் பங்கு குறைவு. பல்வேறு சாதி இந்துக்கள் ஹோட்டல் தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திருச்சி, மதுரை, கோவை போன்ற பெரிய நகரங்களில் பிராமணர்கள் நடத்தும் ஹோட்டல்களைத் தேடி காண்பது அரிது. ஹோட்டல் சமையல்காரர்களாக இருப்பவர்களிலும் பிராமணர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. சென்ற தலைமுறையில் பிராமண சமையல்காரர்கள் தயாரித்த தின்பண்டங்களையும்,உணவு வகைகளையும் இதர சாதியைச் சேர்ந்த சமையல்காரர்கள் இன்று நல்ல முறையில் தயாரிக்கிறார்கள். சுருங்கச் சொன்னால் காப்பி கிளப்புகளிலும் பார்ப்பன ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது.

 இன்று தமிழ்நாட்டில் சகலரும் குடிக்கும் பானமான காப்பி ஆப்பிரிக்காவில் உள்ள எதியோப்பியாவில் உதயமானது என்ற செய்தி பலருக்கு அதிசயமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. அந்த நாட்டின் சில பகுதிகளில் வளர்ந்த காப்பிச் செடிகளின் விதைகளை தின்ற பறவைகள் கூடுதலான உற்சாகத்தோடு பறந்து திரிவதை அந்த நாட்டு மக்கள் கூர்ந்து கவனித்தார்கள். அந்த காபிச் செடியின் விதைகளை எப்படி உணவாகத் தயாரிக்கலாம் என்று பல முயற்சிகளைச் செய்தனர்.

 அந்த நாட்டின் ஒரு சிறு இனக்குழுவைச் சேர்ந்த மக்கள் காப்பிச் செடியின் விதை களை நீரில் போட்டு கொதிக்க வைத்து தயாரித்த பானத்தைக் குடித்தார்கள். இந்த பானம் பசியைக் குறைப்பதையும் சற்று சுறுசுறுப்பை ஏற்படுத்துவதையும் உணர்ந்தார்கள். தங்களுடைய சமயச் சடங்குகளில் இந்த பானத்தை விநியோகம் செய்தார்கள். தங்களுடைய நாட்டிலிருந்து காப்பிச் செடி விதைகள் வெளிநாடுகளுக்குகொண்டு செல்வதற்கு தடை விதித்தனர்.

 17ம் நூற்றாண்டில் மைசூர் பகுதியைச் சேர்ந்த பாபா புதன் என்ற முஸ்லீம் துறவி ஹஜ் யாத்திரை மேற்கொண்டார். மெக்காவிலிருந்து திரும்பி வரும்போது அவர் கள்ளத்தனமாக ஏழு காப்பி விதைகளை கொண்டு வந்தார். தன இடுப்பில் கட்டிய சிறிய துணியில் மறைத்து வைத்து கொண்டு வந்த அந்த
காப்பி விதைகளை மலை பாங்கான சிக்மகளூர் பகுதியில் விதைத்து பயிர் செய்தார். படிப்படியாக பல பகுதிகளில் பயிர் செய்யப்பட்டன. நாளடைவில் மலைப் பாங்கான பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பளவு நிலங்களில் பயிர் செய்யப்பட்டது.

 அப்படி பயிர் செய்யப்பட காப்பி கொட்டை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.மிகச் சிறிய அளவிலான காப்பி கொட்டையை இந்தியாவில் வாழ்ந்த பிரிட்டிஷ், மற்றும் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் வாங்கினார்கள். இந்தியர்கள் யாரும் அந்த காப்பிக் கோட்டையை வாங்கியதில்லை. காலப் போக்கில் மைசூர் பகுதியில் (இன்றைய கர்நாடகம்) மிகப் பெரிய வாணிபப் பயிராக வளர்ந்தது. ஆயிரக் கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.

 இப்படி காப்பி விதைகளை வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து பயிர் செய்து ஆயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திய பாபா புதன் என்ற துறவியின் மீது மக்கள் அன்பு பாராட்டினர் அவர் காலத்துக்குப் பிறகு அவருக்கு எழுப்பப்பட்ட சமாதி இன்று எல்லா சமயத்தவரும் தொழுகை செய்யும் தர்க்காவாக வளர்ந்திருக்கிறது

 இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் விவசாயப் பொருள்களில் காப்பிக் காப்பிக் கொட்டை மிக முக்கிய இடத்தை பிடித்துவிட்டது. இன்று கணிசமான அளவுக்கு அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிறது.


 இதுதான் காப்பி இந்தியாவுக்கு வந்த கதை.

 (இரண்டாம் பாகம்)

- மு.கோபாலகிருஷ்ணன்

Friday, December 14, 2012

பாரதியின் கடிதம்

பாரதியாரை விட ஏழாண்டுகள் இளையவர் பரலி .சு .நெல்லையப்பர் அவரை தன்னுடைய அருமைத் தம்பியாகவே கருதி நேசித்தார். அவருக்கு  பாண்டிச்சேரியிலிருந்து ஒரு நீண்ட கடிதம் எழுதியுள்ளார். பாரதியின் தமிழ் பற்றை தன் மொழியை அவர் நேசித்த பாங்கை புரிந்து கொள்ள அந்த கடிதம் பயன்படும்.



          ஓம்
புதுச்சேரி 
19 ஜுலை 1915

எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளையைப் பராசக்தி நன்கு காத்திடுக

தம்பி – மாதத்துக்கு மாதம் , நாளுக்கு நாள், நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக்கமலத்திலே பேரறிவாகிய உள் – ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை

ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து,

அந்த பாஷைப் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால் தமிழ் நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும், தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க ஆனால் புதிய செய்தி, புதிய யோசனை . புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் -  தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்

தம்பி – நான் ஏது செய்வேனடா

தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாகயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது

தம்பி – உள்ளமே உலகம்


ஏறு ! ஏறு ஏறு  மேலே மேலே மேலே!


நிற்கும் நிலையிலிருந்து கிழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்கச் சிரி

உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ !
பற. ! பற ! - மேலே மேலே மேலே!
**


தம்பி – தமிழ்நாடு வாழ்க என்றெழுது 

தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது

தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது

அந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது

தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு. அதன்பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது

ஆணும் பெண்ணும்  ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது

அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது

பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக்குத்திக் கொண்டான் என்றெழுது

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது

தொழில்கள், தொழில்கள் என்று கூவு

தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பன் மேற்குலத்தான் என்று கூவு.

வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக

முயற்சி ஒங்குக. ஸங்கீதம், சிற்பம் யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கைநூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு

சக்தி ! சக்தி சக்தி என்று பாடு

தம்பி – நீ வாழ்க

**
உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல் இருந்தபடியால் உடனே ஜவாப் எழுத முடியவில்லை. குழந்தை புதிய உயிர் கொண்டது. இன்று உன் விலாசத்துக்கு  நாட்டுபாட்டுக்கள் அனுப்புகிறேன். அவற்றைப் பகுதி பகுதியாக உனது பத்திரிக்கையிலும் ஞானபானுவிலும் ப்ரசுரம் செய்வித்திடுக. புதுமைப்பெண் என்றொரு பாட்டு அனுப்புகிறேன். அதைத் தவறாமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங்கேனும் எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கனுப்புக. 


தம்பி – உனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை? நீ வாழ்க.

                                                                                                 உனதன்புள்ள
                                                                                                  பாரதி


19-7-1917 அன்று பாரதி புதுச்சேரியிலிருந்து எழுதிய கடிதம்.


 டிசம்பர் மாதம்  பதினோன்றாம் நாள் பாரதியின் பிறந்த நாள் அதை முன்னிட்டு ஒரு கட்டுரை எழுதி அனுப்ப  வேண்டும் என்று முயற்சி செய்தேன். வேறு சில கடமைகள் காரணமாக நேரத்தை ஒதுக்கி உட்கார முடியவில்லை அதனால்  சமீபத்தில் நான் படித்த பாரதி  கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கிறேன். இந்த கடிதம் பாரதி பாண்டிச்சேரியில் இருக்கும்போது பரலி சு நெல்லையப்பருக்கு எழுதப்பட்ட கடிதம்.
- மு. கோபாலகிருஷ்ணன்







Friday, December 07, 2012

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 5

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 5




லாங் டாய்லட்டா  ஷார்ட்  டாய்லட்டான்னு எப்படி தான் கண்டுபிடிப்பாங்களோ? உள்ளே மெஷின் வெச்சு இருப்பாங்க போலிருக்கு.

1 ரூபாய் கொடுத்துவிட்டு லாங் டாய்லட் போனால் தண்ணிய பாதியில் நிறுத்தி விடுவாங்களோ இல்ல கதவை திறந்து விரட்டிடுவாங்களோ தெரியலியே!


Thursday, November 29, 2012

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 4

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 4

அட, பழைய சோற்ற கூட இப்படி நம்பர் போட்டு விக்கிறாங்களே நம்ம ஊரில்.










Tuesday, November 20, 2012

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 3

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 3



இவரு என்னைக்கு லீவு முடிஞ்சு திரும்பி வந்து மீட்டிங்க்ல பேசி வோட்டு கேட்கப்போறாரோ. அதுக்குள்ளே எலக்ஷனே முடிஞ்சிடும்.

Sunday, November 18, 2012

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 2

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 2






பிரசவ ஆஸ்பத்திரின்னு சொல்றாங்களா இல்ல குட்டி கரடி கடைன்னு சொல்றங்களா ? தாங்க முடியலப்பா

Saturday, November 17, 2012

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 1

சென்னை மாம்பலம் ரயில் நிலையம் வாசலில் வைத்துள்ள அறிவிப்பு(சிரிவிப்பு). ஆக்ஸ்போர்டில் படித்திருப்பார்களோ?

Tuesday, November 13, 2012

ரிச்மண்டில் கொலு வலம் - 2012

ரிச்மண்டில் 2012 - கொலு வலம்

போன வருஷம் கொலுவுக்கு போகலைன்னு இந்த வருஷம் சூப்பரா ஒரு ரவுண்ட் போய் கொலு பார்த்துட்டு சுண்டல் ஸ்வீட் எல்லாம் வாங்கிட்டு வந்தேன்.  ஏங்க ஒரு ஆளு குடும்பத்தையே கூட்டிண்டு வரானேன்னு ஒருத்தர் வீட்லயும் எனக்கு goodie bag அதாங்க வெத்தலை பாக்கு பை, கொடுக்கலீங்க.  சரி சரி உனக்கு சுண்டல் ஸ்வீட்டே ஜாஸ்தின்னு யாரோ கொரல் விடரது கேக்குது.  இதெல்லாம் சகஜமப்பா....

எல்லார் வீட்டு கொலு ஃபோட்டோவும் இங்க போடலை, சாஸ்திரத்துக்கு ஒரு வீட்டு கொலுவுக்கு ஒரு ஃபோட்டோ போட்டுட்டு மீச்சம் இருக்கர ஃபோட்டோக்களை பிக்காசாவுல போட்டு ஒரு லிங்க் இந்த பதிவோட கடைசீல போட்டு இருக்கேன்.  அது மட்டும் இல்லாம, ரிச்மண்டில் கொலு வெச்சிருக்கர எல்லார் வீட்டுக்கும் நான் போகலை.  காரணம் அவங்கள எனக்கு தெரியாது இல்லைன்னா மாலதி மட்டும் தனியா போயிட்டு வந்திருப்பாங்க.  நான் போயிருந்த கொலுவைப் பத்தி மட்டும்தான் எழுதியிருக்கேன்.   நாகு கிட்ட சொல்லி அப்படி விட்டுப் போயிருக்கர கொலுவைப் பத்தி அவரை ஒரு பதிவு எழுதச் சொல்லிக் கேக்கரேன்.

மொதல்ல எங்க வீட்டு கொலுல இருந்து ஆரம்பிக்கரேன்.


ரெண்டே ரெண்டு பொம்மைதான் சேர்த்திருக்கோம்.  மொதல்ல, எங்க குருஜி எங்க வீட்டு கொலுவுல இருக்கார் அடுத்து, சஞ்சீவி மலையை கைல வெச்சிருக்கர ஆஞ்சநேயர் பொம்மை.  இந்த பொம்மையை, எனக்கு சுமா நவமி அரங்கேற்றதுக்கு வீடியோ எடுத்ததற்கு அவங்க அம்மாக்கள் ரெண்டு பேரும் சேர்ந்து பரிசு கொடுத்தாங்க.  வழக்கம்போல இருக்கர சாண்டா க்ளாஸ் டிரெயின் செட் மிஸ்ஸிங்.  சொல்லப்போனால் பார்க் மிஸ்ஸிங்.  அடுத்த வருஷம் என்ன பண்றதுன்னு ஜனவரிலயே ப்ளான் ஸ்டார்ட் பண்ணனும் போல இருக்கு.


சுகந்தி ஆனந்த் வீட்டு கொலு

சுகந்தி வீட்டு கொலுல நிறைய சேஞ்சஸ் இருக்கு, சூப்பரா படி செஞ்சிருக்காங்க, ஸ்நோ இருக்கர மாதிரி பார்க் கட்டியிருக்காங்க, தரைல ரங்கோலி பூவால பண்ணியிருக்காங்க.  நிறைய புது பொம்மை சேர்த்திருக்காங்க.  ராமர் பட்டாபிஷேகம் அழகு வார்த்தைகள்ல சொல்ல முடியாது அவ்வளவு திருத்தம்.


வித்யா முரளி வீட்டு கொலு

இவங்க வீட்டு கொலுவுக்கு முதல் தடவையா போயிருந்தேன்.  குட்டியான அருமையான கொலு.  ஆலிலை க்ருஷ்ணரும், ப்ளூட் (இல்லாமல்) நின்ற கோலத்தில் க்ருஷ்ணரும் அருமை.

இந்து ஐயர் வீட்டு கொலு

கச்சிதமான காவி நிற கொலு, அருமையான பார்க்கும் கட்டியிருக்காங்க  4-5 வருஷங்களுக்கு முன்னாடி அவங்க வீட்டு கொலு பார்த்த ஞாபகம் லேசா இருக்கு.  வரலஷ்மி அம்மன் கொலுவுல இருந்து நான் முதல் தடவை பாக்கரேன்.  அம்மன் அழகோ அழகு.  குழலூதும் க்ருஷ்ணர், ஆண்டாள் அவதாரம்னு அழகா இருந்தது.




காயத்ரி வீட்டு கொலு

இவங்க வீட்டு கொலுவும் நான் முதல் தடவையா பாக்கரேன்.  காயத்ரி சூப்பரா ஒரு சரஸ்வதி பொம்மையை பண்ணியிருக்காங்க.  ஒரு முழு புடைவையை மடிச்சு மடிச்சு கட்டி பண்ணியிருக்காங்க.  அதுக்கு அவங்களுக்கு ரெண்டு மணி நேரம்தான் ஆச்சாம்.  ஹூம். எனக்கு வீட்டுல தோச்சு காயவெச்ச என் துணியை அடுக்கவே ரெண்டு மணி நேரம் பத்தாது, இவங்க இப்படி அழகா ஒரு பொம்மையை செய்ய ரெண்டு மணிதான் ஆச்சுன்னு சொல்றாங்க.  பரமாச்சார்யாரின் படம் வெச்சிருக்காங்க. ஒரு சின்ன பார்க் மேசை மேல வெச்சிருக்காங்க, கலர் கலர் அரிசில அருமையா ஒரு ரங்கோலி போட்டிருக்காங்க.  



பார்கவி கணேஷ் வீட்டு கொலு


பார்கவி வீட்டு கொலுதான் எங்க வீட்டு கொலுவுக்கு இன்ஸ்பிரேஷன்னு சொல்லனும்.  இவங்க வீட்டு கொலுவை பத்தி சொன்னா புரியாது ஒரு தடவை போய் பார்த்தா தான் அனுபவிச்சு கொலு வெக்கரது எப்படி புரியும்.  படிகள்ல கொலு வெக்கரதை கொஞ்சம் மாத்தி இந்தப் பக்கம் அந்தப் பக்கம்னு எல்லா எடத்திலயும் கொலு வெச்சுட்டு 4-5 பொட்டி பொம்மைகளை இன்னும் ஸ்டாக்ல வெச்சிருக்கரவங்க இவங்க.  கல்யாண செட், வித விதமா பிள்ளையார்கள், வசுதேவர் க்ருஷணரை கோகுலத்துல கொண்டு விட போற பொம்மை, பள்ளி கொண்ட பெருமாள், வெண்ணை திருடும் கண்ணன், ராச லீலை, காலிங்க நர்தனம், ஷீர்டி பாப, சுவாமி விவேகாநந்தர், மூஞ்சூரு இழுக்கும் ரதத்தில் பிள்ளையார் என சொல்லிலடங்கா கொலு.

லஷ்மி ஶ்ரீதர் வீட்டு கொலு

கொஞ்சம் கொஞ்சமா பெரிசாயிண்டே வர கொலு இவங்க வீட்டு கொலு.  கல்யாண செட், பீங்கான் பொம்மை செட்னு நேர்த்தியான கொலு.


ப்ருந்தா ஷங்கர் வீட்டு கொலு


கன கச்சிதமான கொலு.  தசாவதாரம் அழகோ அழகு.


சந்திரிகா சத்யநாரயணன் வீட்டு கொலு


பிங்க் கொலு.  ரெண்டு விதமான தசாவதார செட் வெச்சிருக்கர கொலு.  ஆதிசேஷன் மேல பெருமாள் லஷ்மியுடன் இருக்கர பொம்மை சூப்பர்.

ஷீலா கார்த்திக் வீட்டு கொலு


சத்யநாராயண பூஜை செட் முதல் தடவையா கொலுவுல பாக்கரேன். பெரிய புத்தர் பொம்மை, வழக்கம் போல கார்த்திக்கின் கை வண்ணத்துல ஒரு அருமையான கோலம். வாரகஸ்வாமியை கொலுவுல முதல் தடவையா பாக்கரேன்.  முருகர் மயில் மற்றும் சேவலோடு இருக்கார்.


வேதா சேகர் வீட்டு கொலு


வேதா வீட்டு கொலுவும் நாம் முதல் தடவை பாக்கரேன்.  பெரிய கொலு.  நல்ல செலக்‌ஷன்.  கல்யாண செட், பாட்டு கச்சேரி செட், குழல் ஊதர க்ருஷ்ணர், பூரி ஜகன்னாதர் எல்லோரும் இருக்கர கொலு.


சிவகாமி சுபாஷ் வீட்டு பூ சமர்பணம் 

சிவகாமி வீட்டுல பார்த்தது கொலு இல்லை, அரவிந்தர் ஆசிரமத்தின் அம்மாவின் பூ வழிபாடு.  ரொம்ப ரொம்ப அருமையான ஏற்பாடு.

சங்கீதா வாஞ்சி வீட்டு கொலு

இவங்க வீட்டு கொலுவும் முதல் தடவையா பாக்கரேன்.  திருப்பதி பெருமாளும் தாயாரும் இருக்காங்க, குருவாயூரப்பன், பஞ்ச முக ஆஞ்சநேயர், லஷ்மி நரசிம்மர், ராம ஆஞ்சநேய ஆலிங்கணம், ராகவேந்திரர், கைலாசத்துல சிவ பெருமான், பள்ளி கொண்ட பெருமாள், ப்ரம்மா விஷ்ணுவின் சிவ பூஜை, வராகஸ்வாமி, சத்ய நாராயண பூஜை செட்இப்படி சொல்லிட்டே போலாம்.

விஜி வேதகிரி வீட்டு கொலு



இவங்க வீட்டு கொலுவுல இருந்து போன தடவை ஒரு பார்க் கட்டர ஐடியாவை சுட்டுண்டு வந்தேன் அது சுத்தமா மறந்து போச்சு, இந்த தடவை ஒரு படமே புடிச்சிண்டு வந்துட்டேன்.  நல்லா ஒரு ப்ராஜெக்ட் மாதிரி போட்டுண்டு கொலு வெக்கராங்கன்னு நினைக்கரேன்.  பிள்ளையாரோடு இருக்கர சிவன் பார்வதி அழகோ அழகு.  குருவாயூரப்பன், அழகான மீரா ந்னு சூப்பர் கொலு. 3-டி ப்ரிண்டர்ல பண்ணின கோவில் வெச்சிருக்காங்க.  அடுத்து 3-டி ல பொம்மை வருமான்னு கேட்டு வரும்னா ஒரு 3-டி ப்ரிண்டர் வாங்கிடனும்.


சுஜாதா ரமேஷ் வீட்டு கொலு


கொலுவை வருஷா வருஷம் நல்லா அழகாக்கிட்டே வராங்க.  ராமர் பட்டாபிஷேகம் அருமையோ அருமை.  ராமர் சிம்மசனத்துல இருக்கரமாதிரி பொம்மையை நான் இவங்க வீட்டுலதான் பாக்கரேன். சத்ய நாராயண பூஜை செட்.  சின்ன டேபிள்ல ஒரு கல்யாண செட், மீரான்னு கலக்கிட்டாங்க.


வித்யா சுப்ரமணியம் வீட்டு கொலு

இவங்களை இப்ப சமீப காலமாத்தான் தெரியும்.  இதுதான் முதல் தடவை இவங்க வீட்டு கொலுவுக்கு போனது.  டிவி வெக்கர பிட் ல கச்சிதமா கொலு வெச்சிருக்காங்க.  பாண்டுரங்கனோட அழகுக்கு ஈடு சொல்லவே முடியாது.  பொம்மையெல்லாம் குட்டி குட்டியா இருந்தாலும் ரொம்ப நேர்த்தி.  இவங்க பொம்மை எங்க வாங்கினாங்கன்னு கேட்டுண்டு வந்து இருக்கேன்.  அடுத்த தடவை சென்னை போகும் போது கண்டிப்பா நிறைய பொம்மை வாங்கனும்.  எனக்கு தெரிஞ்சு வெள்ளிப் பாத்திரக் கடை வெச்சிருக்கர செட்டியாரம்மாவை மொதல் தடவையா இவங்க வீட்டு கொலுலதான் பார்த்தேன்.  ஒரு கொசுறு செய்தி வித்யா படம் வரையரதுலயும் கில்லாடி, சாம்பிளுக்கு இதோ ஒரு படம்.




ரேணுகா பாலசுப்ரமணியன் வீட்டு கொலு

ராசலீலை க்ருஷ்ணர், வாத்யம் வாசிக்கர பிள்ளையார், காய்கறி விக்கர வயதானவர்ன்னு நிறைவான கொலு.

சந்தியா ப்ரசாத் வீட்டு கொலு:

சந்தியா ப்ராசாத் வீட்டு குட்டி கொலு.  குழந்தைங்களுக்கு பிடிச்ச மாதிரி சின்னதா ஒரு பார்க்கும் கட்டியிருக்காங்க.  வெண்ணைப் பானைல கை விட்டு கை ஃபுல்லா வெண்ணையா இருக்கர க்ருஷ்ணர் சூப்பரோ சூப்பர்.


பவானி கண்ணன் வீட்டு கொலு


குட்டியா இருந்த கொலு இன்னிக்கு 7 படில இருக்கு.  புதுசு புதுசா பொம்மைகள் வெச்சு அசத்தியிருக்காங்க.  இவங்க அடுத்து பார்க் ஒன்னு கட்டி கொலு வெக்கரதுக்குள்ள நான் ஒரு பார்க் அடுத்த வருஷம் கட்டிடனும்.


வேதுக் குட்டியின் குட்டி கொலு

வேதுக் குட்டிக்கு எவ்வளவு பெருமை பாருங்க அவளோட குட்டி கொலுவுக்கு பக்கத்துல நிக்கும் போது.


ப்ரியா ராஜேஷ் வீட்டு கொலு

இவங்க வீட்டு கொலுவுக்கு மாலதி தனியா போயிட்டு வந்துட்டாங்க.  இவங்க எங்க வீட்டு கொலுவுக்கு வந்த போது உரிமையா ஏன் வரலைன்னு கோவிச்சுக்கர அளவுக்கு போயிட்டாங்க.  அதனால ஒரு ஸ்பெஷல் ரிக்வெஸ்ட் போட்டு ஒரு நாள் ஆபீஸ்ல இருந்து நேர இவங்க வீட்டுக்கு போய் கொலு பார்த்துட்டு வந்தேன்.  ஆழ்வார்கள் பொம்மைகளை பூஜைல வெச்சிருக்கரத பார்த்தேன்.  அருமையோ அருமை.  அதே ஆழ்வார்களை கொலுவுலயும் வெச்சிருக்காங்க.  திருப்பதி பெருமாளும் தாயாரும் இருக்காங்க. கல்யாண செட், குருவாயூரப்பன்,  ஆஞ்சநேயர் நின்ற கோலம், பக்கத்துல ஒரு ஷெல்ஃப்ல க்ருஷ்ணனின் விளையாடல்கள்னு பின்னிட்டாங்க.

இப்படி நான் பார்த்த பல கொலுவை இங்க தொகுத்து கொடுத்துட்டேன்.  அடுத்து கொலுவோட மொத்த படங்களும் இந்த லிங்க்ல இருக்கு.

அன்புடன்,

முரளி இராமச்சந்திரன்.

Wednesday, November 07, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்னு எங்கேயோ படிச்சது






அடுத்து நம்மூர் கொலு வலம் பதிவுல பாக்கலாம்.

முரளி இராமச்சந்திரன்.