Showing posts with label வலைப்பதிவர். Show all posts
Showing posts with label வலைப்பதிவர். Show all posts

Monday, August 27, 2007

நம்ப ஊர் பதிவுகள் - நம்ம ஊர் வலைவலம்

என்னடா இது, இந்த ரிச்மண்டுக்கு வந்த சோதனை? இதில் எழுதிக்கொண்டு இருந்த மக்களைக் காணவில்லை. கோடை விடுமுறையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள் போலிருக்கிறது. பித்தனாவது பரவாயில்லை. தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டு நம்முடன் கூட்டணி வைத்திருக்கிறார். இந்த சதங்கா இருக்கிறாரே - சத்தம் போடாமல் தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டார். தமிழ்மணத்தில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். என்னய்யா தனியாக மைக் பிடித்து விட்டீர் என்றேன். கொள்கை அடிப்படையில் தனியாக போய்விட்டேன் என்று சொல்லிவிட்டார். நான் 'இஞ்சி' தின்ற குரங்கு மாதிரி ஆகிவிட்டேன். அவ்வப்போது நான் ரொம்ப அழுதால், ஒரு இஞ்சி, மன்னிக்கவும், ஒரு பதிவு இங்கே போடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். வாரத்துக்கு ஒருமுறை புலம்புவதாக உத்தேசம்.

தமிழ்மணத்தின் பூங்கா வலை இதழில் சதங்காவின் யானைக்கவிதை வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!

பரதேசியாரும் காணோம். சென்னைக்கு போய்விட்டு வந்து இன்னும் பரதேசி மனநிலைக்கு வரவில்லையோ என்று நினைத்துக் கூப்பிட்டேன். தலைக்கு மேல் வேலையாம். அவர்தான் இந்த பதிவை ரொம்ப நாள் ஆக்சிஜன் கொடுத்து காப்பாற்றி வந்தார். இன்னும் ஒரு வாரம் பார்த்துவிட்டு கூப்பிட்டு "தமிழ் சங்கப் பதிவுக்கோர் குறை நேர்ந்தால் உனக்கன்றி எனக்கில்லை" என்று பாடப்போகிறேன்.

காணாமல் போன தேனப்பனை பிடித்துக் கொடுக்கும் நபருக்கு ஒரு குறிஞ்சிப்பூ பரிசு கொடுக்கப்படும். அவர் கதையை அடுத்த பதினோரு வருஷத்துக்கு கேட்கக்கூடாது என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

நம் ஊரில் தனிக்கட்சி நடத்தும் மற்ற சிலரைப் பார்ப்போம். நம் தமிழ் சங்க வெப் மாஸ்டர் கதையைப் பாருங்கள். தனிமரம் காடான கதையாய் ஒரே ஆளாய் பல பேரில் கூட்டணி நடத்துகிறார். அவருடைய புகைப்படங்கள் மிகவும் அருமையானவை. ஜெயகாந்தன் என்றால் சும்மாவா?

எங்க ஊரு பாட்டுக்காரன் பதிவைப் பாருங்கள். தமிழ் சங்க கல்லாப்பெட்டிக்காரர் அரவிந்தின் பாடல்கள் அருமையாக இருக்கின்றன. அரவிந்தன் மட்டும் எழுதினால், அவர் வீட்டில் சும்மா இருப்பார்களா? முப்பது நாளில் முப்பது பதிவுகள் என்று ஒரு சாதனை செய்திருக்கிறார் சுபத்ரா. அவருடைய பதிவு இதோ. ஆனால் கல்லாப்பெட்டி ரொம்ப மோசம். அவர் படிக்கும் பதிவுகள் என்ற வரிசையில் மனைவியின் பதிவை கடைசியில் குறிப்பிடுகிறார்(ஏதோ நம்மால் ஆன கைங்கரியம் :-)

எல்லோர் பதிவையும் சொல்லிவிட்டு இந்த பதிவைச் சொல்லாவிட்டால் எனக்கே புவ்வா கிடைக்காது :-) அப்படியே நம் புத்திர சிகாமணிகள் பதிவுகளும் இங்கே (ஒன்றா, இரண்டா) இருக்கின்றன.

அட மறந்தே விட்டேன். ரிச்மண்டில் அனைவரையும் எழுத வைக்க மூல காரணமே கவிநயாதான். அவருடைய வலைத்தளத்தில் புதிதாக ஏதும் காணவில்லை. அன்புடன் ஜோதியில் கலந்திருக்கிறார் போல. அவர்தான் இயலிலும் நாட்டியத்திலும் கலக்குகிறார் என்றால் அவர் மகன் எனம்மா இசையை விட்டு வைத்தீர்கள் என்ற தோரணையில் மேற்கத்திய இசையில் கலக்குகிறான். எனக்கு ஒரே ஆச்சரியம் அரவிந்த் கேட்கும் மேற்கத்திய இசை எல்லாம் எனக்குப் பிடித்த கிளாஸிக் ராக்! அவனது இசையிலும் அதன் தாக்கம் தெரிகிறது. மேலும் தொடர்ந்து இசையில் சாதனை புரிய என் வாழ்த்துக்கள்.

எனக்குத் தெரிந்த ரிச்மண்ட் பதிவுகள் இவ்வளவுதான். உங்களுக்கு தெரிந்த ரிச்மண்ட்காரர்களின் பதிவுகளையும், வலைத்தளங்களையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

Wednesday, June 27, 2007

வலைப்பதிவர் ஆத்திச்சூடி

அற்புத வலை
ஆர்ப்பாட்டம் குறை
இனிதாய் எழுது
ஈர்ப்பது நட்பு
உற்றது உரை
ஊக்கம் வளர்
எழில் பதிவிடு
ஏமாற்றம் தவிர்
ஐயமற விளக்கு
ஒவ்வாதன நீக்கு
ஓய்வு எடு



-----

சில வரிகள் எழுத பல நேரம் பிடித்தது. 'ஓய்வு எடு'னு எழுதினவுடனே தான் ஞாபகம் வந்தது, நான் ரொம்ப நேரமா வலையிலே இருக்கிறேன் என்று. அதானால ஓய்வு எடுத்துக்கிறேன். ;-)

கடைசி இரு எழுத்துக்களுக்கு, உங்களுக்கு ஏதாவது தோன்றினால் பின்னூட்டமிடுங்கள். அசத்தலாகச் சொல்பவர்களுக்கு "திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா" (சங்கத்து சார்பா, அப்பாடா தலை தலையில தூக்கிப் போட்டாச்சு பொறுப்ப :)) வழங்கப்படும்.

என்றும் அன்புடன்
சதங்கா