Showing posts with label ரத்த புற்று நோய். Show all posts
Showing posts with label ரத்த புற்று நோய். Show all posts

Tuesday, May 25, 2010

மீனாவுடன் மிக்சர் - 21 {நல்ல செய்தியா? கிலோ என்ன விலை?}

வர வர காலையில் எழுந்து செய்திகளை பார்க்கவே பயம்மா இருக்கு. படுக்கையிலிருந்து எந்தப் பக்கமா எழுந்தாலும், முக்கியமா என் முகத்தை முதல் வேலையா காலையில் கண்ணாடியில் பாக்கறதை ஞாபகமா தவிர்த்தாலும் கூட தலைப்பு செய்திகள்ல ஏனோ ஒரு நல்ல விஷயம் கூட பார்க்க முடியறதில்லை.

பூகம்பம், சுனாமின்னு இயற்க்கை ஒரு பக்கம் ஆக்ரோஷ தாண்டவம் ஆடினா, இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்னு சின்ன குழந்தைகளிலேர்ந்து பெரியவங்களோட மனசு வரை விஸ்வரூபமா ஆக்ரமிச்சிருந்த ஒரு மனிதன் திடீர்னு உஜாலா விளம்பரத்துல போட்டியிடும் எதிர் கம்பெனியின் துணி போல சாயம் வெளுத்து தான் ஒரு சராசரி மனிதனுக்கும் கீழ் தான்னு சர்வநிச்சயமா நிரூபிக்கிறார். மனசு வெறுத்து போய் அடுத்த சேனல் மாத்தினா மத வெறி கொண்ட தீவிரவாதிகள் நாலு பேர் தாங்க செய்யற அராஜகத்தை மார் தட்டி உலகத்துக்கு அறிவிக்கிறாங்க. கிளிக், கிளிக், ரிமோட் வஞ்சனை இல்லாமல் தன் பாட்டுக்கு தினந்தோறும் கெட்ட சேதிகளை நம் பக்கமா சும்மா அள்ளி தெளிக்குது.

சரி, செய்திகளும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்னு பொழுது போக்குக்கு டிவியில் வர்ற தமிழ் சீரியல்களை சந்தோஷமா பார்ப்போம்னு ஒரு எண்ணத்துல உக்காந்தீங்கன்னா, மனிதன் இயல்பில் நல்லவன் தான் அப்படீங்கற உங்க எண்ணத்தில் ஒரு லாரி மண் விழறது நிச்சயம். அவ்வளவு வில்லத்தனம் இந்த தமிழ் சீரியல் கதாபாத்திரங்களுக்கு. தான் நல்லா இருப்பது அவங்க வாழ்க்கையோட குறிக்கோள் இல்லை. சுத்தி உள்ளவங்க நல்லா இல்லாம இருந்தா போதும், அதுவே அவங்க பிறந்த பயனை அனுபவிச்ச மாதிரி. வீட்டு மருமகள் அழ அழ பெருக்கெடுக்குற சந்தோஷத்தில் அவங்க திக்கு முக்காடி வயத்துல பால் வார்த்து ஈ கூட மொய்க்க விட்டிடுவாங்க. அவ்வளவு தீசத்தனம்!

சுபீட்சமா நாலு விஷயம் இனி காதில் விழும் ங்கர ஆசை நிராசையாகி காந்தித் தாத்தாவின் குரங்குகள் மாதிரி இனி கண்ணையும், காதையும் இழுத்து பொத்த வேண்டியது தான்னு பலரைப் போல நீங்களும் நினைக்க தொடங்கியிருந்தீங்கன்னா நிச்சயமா மேற்கொண்டு படிங்க. எனக்கு தெரிஞ்ச ஒரு உண்மைக் கதையை உங்களுக்கு இப்ப சொல்லறேன்.

இன்ஜினியரிங் காலேஜ்ல ஒண்ணா படிச்சு முடிச்சு வெளியேறிய ஒரு பத்து நண்பர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வழியே பிரிஞ்சு போய் வாழ்க்கையை ஆரம்பிச்சு இன்னிக்கு ஒரு பதினெட்டு வருஷம் ஆச்சு. (ஏதுடா சமீபத்துல வந்த ஆமீர் கான் படத்து கதை மாதிரி தெரியுதேன்னு யோசனை பண்ணறவங்களுக்கு நான் சொல்ல விரும்பரதெல்லாம் 'வைட்டீஸ் ப்ளீஸ்'.)

ஒரு சராசரி மனிதனோட வாழ்க்கையில கல்யாணத்துக்கு பின்னாடி நடக்கற எல்லாமே - குழந்தைகள், அவங்களுக்கான சேமிப்பு திட்டங்கள், பேங்க் புண்ணியத்தில் வாங்கற அழகான வீடு, குழந்தைகளை பாட்டு, கராத்தே வகுப்புகளுக்கு அழைத்து போய் வர நல்ல ஒரு கார் - இவங்க எல்லோர் வாழ்க்கையிலும் நடந்தது.

காலேஜை விட்டு வெளிய வந்து பிசியா அவங்கவங்க ஒவ்வொரு பக்கம் சம்சார சுழல்ல சிக்கி சுத்திகிட்டிருந்த போதும் விடாம யாஹூ மற்றும் கூகிளாண்டவர் புண்ணியத்துல பதினெட்டு வருஷமா தங்கள் நட்பை விடாமல் அடவு காத்து வராங்க இந்த நண்பர் குழு. வருஷத்துக்கு ஒரு முறை இவங்கள்ல ஏழு, எட்டு பேராவது தத்தம் குடும்பங்களோட தீபாவளியை ஒட்டி சந்தித்து லூட்டி அடிப்பது இப்போ ஒரு வழக்கமா ஆயிட்டுதுன்னே சொல்லலாம்.

மூணு வருஷங்களுக்கு முன்னாடி இவங்களிலே ஒருத்தருக்கு ரத்த புற்று நோய்ன்னு செய்தி வந்த போது ஆடிப் போய் இந்த குழு உட்கார்ந்தது கண் சிமிட்டும் நேரம் தான். நெஞ்சை அழுத்திய சோகத்தை சமாளித்து நிமிர்ந்தவங்க நண்பனுக்கு எப்படி உதவலாம்னு அதில் தீவிர யோசனைல இறங்கினாங்க. வைத்திய செலவுக்கு பணம் திரட்ட வேண்டிய அவசியம் புரிஞ்ச போது அவங்கவங்க சேமிப்பிலேர்ந்து ஒரு பெருந்தொகையை நண்பனுக்காக ஒதுக்கியதோடு இல்லாம இந்த நண்பர் குழு தெரிந்தவங்க தெரியாதவங்கன்னு ஒருத்தரை விடாம எல்லோர் கிட்டயும் உதவிக்கு கையேந்தினாங்க. அதை விட முக்கியமா மனைவிமார்களோடு சேர்ந்து எல்லோரும் எலும்பு மஞ்சை தானம் செய்ய தாங்க பதிவு செய்துகிட்டதோட தெரிந்தவங்க எல்லோரையும் பதிவு செய்ய தூண்டினாங்க. இதெல்லாம் என்ன பெரிய விஷயம்னு நீங்க கேட்டீங்கன்னா ரொம்ப கரெக்ட். இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை தான். ஏன்னா பல வருஷங்களாக பழகியிருக்கும் ஒரு நண்பனுக்கு துன்பம்னா இது போல உதவி யாரா இருந்தாலும் செய்வாங்க தானே?

நான் சொல்ல வந்த விஷயமே வேற. இந்த நண்பர் குழுவில் ஒரு நாலு பேர் எங்க ஊரை சேர்ந்தவங்க. இவங்க தங்கள் நண்பனுக்கு உதவி தேவைன்னு ஊர்ல கேட்டாங்களோ இல்லையோ, முகம் அறியா அந்நியர்களான ரிச்மன்ட்வாசிகள் பலர் பிரியத்தோடு முன்வந்து நிதி உதவி செய்ததோடு எலும்பு மஞ்சை தானம் (bone marrow donation) செய்யவும் உடனடியா அவங்கவங்க குடும்பங்களோட வந்து பதிவு செய்துகிட்டாங்க. நோயுற்று படுத்திருந்தவருக்கு இவங்கல்லாம் யாரு? எதனால அவருக்கு இவங்க உதவினாங்க? கட்டபொம்மன் பாஷையில 'மாமனா மச்சானா?' முகம் அறியா ஒருவரிடம் ஏனிந்த வாஞ்சை?

மூணு வருஷம் நோயோடு கடுமையா போராடி வெற்றி பெற்று இன்று தன் குடும்பத்தோடு நல்ல படியாக வாழும் அந்த நண்பரின் வாழ்க்கை மனித நேயத்துக்கும், நமக்கெல்லாம் உள்ளோடிருக்கும் கருணைக்கும், மனிதாபிமானத்துக்கும் ஒரு சான்றிதழ்னு நான் நினைக்கிறேன்.

'தங்கம்', 'தென்றல்' சீரியல்லாம் பார்த்து அடுத்த முறை பிழிய பிழிய அழும் போது இந்த கதையை மறக்காம நினைச்சுக்கங்க.

-மீனா சங்கரன்