Showing posts with label மலை. Show all posts
Showing posts with label மலை. Show all posts

Saturday, August 22, 2009

மீனாவுடன் மிக்சர் - 10 {வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை)

சமீபத்தில் நண்பர் நாகு "வார இறுதியில் மலை ஏற போகிறோம், வரீங்களா" ன்னு எங்களையும் சேர்த்து சில குடும்பங்களை கேட்டிருந்தார். இந்தியாவிலிருந்து திரும்பி வந்து ஜெட் லாக்ல களைப்பா இருக்குன்னு சாக்கு சொல்லி நான் ஜாலியா படுத்து தூங்கிட்டேன். மிச்ச குடும்பங்களும் வேறு சில காரணங்களால் போகவில்லை.

நாங்க எல்லோரும் இப்படி கழுத்தறுத்த பின்னும் கூட மனம் தளராமல் சென்று மலை ஏறி வெற்றி வாகை சூடி வந்தாங்க நண்பர் நாகுவின் குடும்பத்தார். இவர்கள் மலை மேல் ட்ரெக்கிங் செய்வதில் கால் தேர்ந்தவர்கள் (கை தேர்ந்தவர்கள்னு சொன்னா ஏதோ இலக்கண பிழை போல இடிக்கிறதே!). எங்க குடும்பத்தின் கோட்டாவையும் சேர்த்து இவங்க அவ்வப்போது ஏதாவது மலை அல்லது குன்றின் மேலே ஏறி கொடி நட்டு விட்டு வந்திடுவாங்க. (கொடி நடுவாங்கன்னு தான் நினைக்கிறேன். அவ்வளவு தூரம் கால் கடுக்க ஏறி கொடி நடாமல் திரும்பி வந்தால் என்ன பிரயோசனம்?) இந்த காலத்தில் நாற்காலி உருளைகிழன்காக(அதாங்க couch potato) உள்ள முக்கால்வாசி குடும்பங்களுக்கு நடுவில் இந்த குடும்பத்தின் 'outdoor activities' என்னை கவர்ந்த ஒன்று.

இதில் அதிசயம் என்னன்னா ஏற்கனவே ஒருதரம் எங்கள் குடும்பத்தோடு ட்ரெக்கிங் செய்த அனுபவம் இருந்தும் நாகு மறுபடி எங்களை கூப்பிட்டது தான். என்னை மலை ஏறக் கூப்பிடறதும் பூனையை மடியில் வைத்து கொண்டு சகுனம் பாக்கறதும் ஒண்ணு தான். ஏணியில் நாலு படி ஏறினாலே நான் அசந்து போய் ஸ்டூல் கொண்டு வரச்சொல்லி உட்கார்ந்து நீர்மோர் கேப்பேங்க. போன மாசம் சென்னை போயிறந்தப்போ கூட நல்லி கடைக்குள்ள போய் சில்க் காட்டன் செக்ஷன்லேந்து தஸ்ஸர் சில்க் செக்ஷன் போறதுக்குள்ள காத்து போன பலூன் போல தொஞ்சு போய் ஒரு பன்னீர் சோடா குடிச்சுட்டு அரைமணி உட்காராமல் இனியொரு புடவை பாக்க மாட்டேன்னு என் தங்கை கிட்ட கண்டிப்பா சொல்லிட்டேன். அவளும் உடனே என்கிட்டே கண்டிப்பா சொல்லிட்டா - இனி ஒருதரம் நான் அவளை கடைக்கு போகலாம் வான்னு கூப்பிட்டால் உடனே நாட்டு எல்லையை தவழ்ந்தாவது கடந்து பாகிஸ்தானுக்கு குடிபோயிடுவாள்னு. அவளை சொல்லி குத்துமில்லைங்க பாவம். அதுக்கு கொஞ்சம் முன்னாடி தான் பாண்டிபஜார்ல ஒரு சின்னக் கடைக்கு என் துணிகளுக்கு மாட்சிங்கா வளையல் வாங்க போயிருந்தோம். என்னை விட எனக்காக அதிக சிரத்தையோடு எல்லாக்கலர் வளையலையும் எடுத்து காமிக்க சொல்லி என் தங்கை கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த போது நான் குறுக்கிட்டு ரொம்ப முக்கியமா உட்கார ஒரு பெஞ்சும் குடிக்க ரெண்டு சோடாவும் கொண்டு வர சொல்லி கேட்டேன். கோவம் வருமா வராதா சொல்லுங்க? ஒரு வழியா இனி எங்கே கிளம்பினாலும் நாலு சோடா பாட்டிலும் மடக்குற நாற்காலியும் மறக்காமல் கொண்டு வருவேன்னு சத்தியம் பண்ணினப்புறம் தான் என் தங்கை கொஞ்சம் சமாதானம் ஆனாள்.

இதுக்கு முன்னாடி ஒருதரம் நாங்களும் இன்னும் சில நண்பர்கள் குடும்பங்களும் நாகுவின் ஊக்குவித்தலில் ட்ரெக் செய்ய கிளம்பிச் சென்றோம். கையில் எலுமிச்சம்பழசாதம், புளியஞ்சாதம், தயிர் சாதம், ஊறுகாய், சிப்ஸ், பழவகைகள், ஜூச்வகைகள், சோடாவகைகள் எல்லாத்தையும் பாத்து பாத்து பாக் பண்ணிண்டு கிளம்பிப்போனோம் (பின்ன மலை ஏறிட்டு வந்தா பசிக்காதா? கண்ணு போடாதீங்க). போய் மலை அடிவாரத்தில் ஒரு பிக்னிக் ஏரியாவில் சாப்பாட்டு மூட்டையை இறக்கி விட்டு ஒரு கும்பலாக ஏற ஆரம்பித்தோம். முதல் கொஞ்சம் நேரம் கேலியும் சிரிப்புமா ஜாலியாக தான் இருந்தது. அப்புறம் தான் ஆரம்பிச்சது அவஸ்தையே. முதலில் குதி கால் வலிக்கற மாதிரி இருந்தது. கொஞ்ச நேரத்தில் பின்னங்காலும் பங்க்சர். அப்புறம் கீழ்கால் தசைகளில் தபலா அடிக்கும் எபெக்ட். குழந்தைகளால் புகழ்பெற்ற "Are we there yet?" கேள்வியை நான் திருடி கெஞ்ச ஆரம்பித்த போது எனக்கு கிடைத்த ஒரே பதில் "இதோ வந்துடும். ரொம்ப தூரம் இல்லை." மந்திரி குமாரி படத்தில் மாதுரி தேவிக்கு "வாராய் நீ வாராய்" பாட்டின் போது எப்படி இருந்திருக்கும்னு எனக்கு அப்போ நல்லா புரிஞ்சது. ஒரு பெரிய கதையை சுருக்கனும்னா கடைசி அரை மைல் இருக்கும் போது கடவுள் என் கதறலை கேட்டு தாங்க முடியாமல் ஒரு பெரிய பாறையை கண்ல காமிச்சார். அவ்வளவு தான். நானும் எங்கள் கும்பலில் இருந்த குழந்தைகளும் தாவி ஏறி அதில் உட்கார்ந்து இனி நடக்க மாட்டோம்னு மறியல் பண்ணினோம். வேறு வழியில்லாமல் மத்தவங்க எல்லோரும் மிச்ச தூரம் இறங்கி போய் காரை எடுத்துண்டு வந்து எங்களை கூட்டி கொண்டு போனாங்க.

இப்போ சொல்லுங்க. என்னை மலை ஏற நீங்க கூப்பிடுவீங்களா?


-மீனா சங்கரன்

Sunday, June 28, 2009

தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே...


சென்ற வாரம் போயிருந்த முகாமில் ஒரு நாள் சூரிய உதயத்தைப் பார்க்க அழைத்துச் சென்றார்கள். ஐந்து மணிக்கு வரச்சொல்லியிருந்தார்கள். நான் கைக்கடிகாரத்தில் அலாரம் நேரத்தை சரியாக வைத்துவிட்டு அலாரம் ஆன் செய்ய மறந்துவிட்டேன். ஆனால் விப்பூர்வில் பறவைகள் மறக்காமல் எழுப்பிவிட்டன. அலறி அடித்துக்கொண்டு ஓடினால் நார் நாராகக் கிழித்துவிடுவார்கள் என்ற பயத்தால் சத்தம் போடாமல் ஓடினேன்.
எல்லோரும் தூக்கத்தில் நடந்து வந்ததுபோல் இருந்தார்கள். ஒரு இருபது நிமிட நடையில் முகாமுக்கு நேர் மேலே ஒரு உச்சியை அடைந்தோம். அங்கிருந்து பார்த்ததில் தெரிந்த காட்சிதான் மேலே இருக்கும் படம்.

மூங்கில் இலை மீது தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே

இனி நான் குறுக்கே பேசவில்லை. சூரியன் உதிப்பதற்கு முன்னும், பின்னும் எடுத்த படங்களைப் பாருங்கள்.
மலையேற அஞ்சும் எங்கள் தலைக்காக அவர் நகர்ந்து உட்கார்ந்த நாற்காலியில் இருந்து சூரிய உதயத்தைப் பார்க்க கடேசியில் ஒரு வீடியோவும் உண்டு...

சூரிய உதயத்துக்கு முன்னால் வீடியோ...








சூரிய உதயம்...


இந்த வீடியோவில் வேகமாற்றம் ஏதும் இல்லை. நிகழ்ந்த மாதிரியேதான். சூரியன் உதிக்கும் முன் மாறும் நிறங்களைப் பாருங்கள். இது என் டிஜிட்டல் கேமராவின் வீடியோ வசதியில் எடுத்தது. நல்ல கனமான வீடியோ யாராவது தூக்கிக்கொண்டு வந்து கொடுத்திருந்தால் உங்களுக்கு இன்னும் அற்புதமான படம் கிடைத்திருக்கும். உங்களுக்கு வாய்த்தது இவ்வளவுதான்...

Thursday, June 25, 2009

இந்த வார சொர்க்கம்

சென்ற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து நான் ஒரு சாரண முகாமில் இருக்கிறேன். வர்ஜினியாவின் ப்ளூரிட்ஜ் மலைத் தொடரில் இருக்கும் ஒரு பெரிய சாரண முகாம். புலஸ்கி கவுண்டியில் ஹிவாஸ்ஸி என்ற கிராமத்துக்கு அருகில். மலைகளும் சிறு நதிகளும் நிறைந்த இந்த இடம் இன்னொரு சொர்க்கபுரி.

இணையத்தொடர்பும் அலைபேசி தொடர்பும் வேலை செய்யாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.  சொர்க்கத்தை அனுபவிக்காமல் இங்கே என்னய்யா செய்கிறீர்கள் என்பவர்களுக்கு - எல்லாம் உங்கள் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கொள்ளத்தான். சொர்க்கத்தின் ஒரு உதாரணம்...


இது என்ன என்கிறீர்களா?

எனது ஊஞ்சலில்(ஹம்மாக்) இருந்து எனக்கு தெரிவதெல்லாம் இதுதான்! போய் இன்னும் இன்றைக்கும் இந்த வாரம் மீதமிருக்கும் வேலைகளை எல்லாம் முடியுங்கள் சரியா? நான் கொஞ்சம் தூங்க வேண்டும்.

அடுத்த வாரம் விவரமாக...


விவரமாக அடுத்த வாரம்.