Showing posts with label நடை. Show all posts
Showing posts with label நடை. Show all posts

Tuesday, October 14, 2014

பாதயாத்திரைப் பயணம்

சனிக்கிழமை காலை ...

'எல்லாம் எடுத்திக்கிட்டாச்சா'னு ஒருமுறை பார்த்துக்கங்க என்ற அன்பான தங்கமணியின் அக்கறையில், தண்ணீர் குடுவை, சிலபல கொறிக்கும் பதார்த்தங்கள், குளிருக்கு ஒரு மென்கம்பளிச் சட்டை (fleece), ஐ.டி.கார்டு, பணப்பை (wallet), கைத் தொலைபேசி, எல்லாம் ரெடி.  கெளம்ப வேண்டியது தான்.  சரி, போய்ட்டு வருகிறேன் என்று, 'மேப் மை வாக்'ஐ கிளிக்கி ...

நான் ஒரு வழியாகப் போகலாம் என்றிருந்தால், 'அந்த வழிகள் பெரிய பெரிய சாலைகள், உயிருக்கு உத்திரவாதமில்லை.  அதனால், குறுக்கு சாலையிலயா (லிஸ்ட் அடுக்கப்படுகிறது) போயிட்டு மரியாதையா வாங்க.  எங்காவது மட்டையாயிட்டா உடனே கூப்பிடுங்க.  (மட்டையாயிட்டு எப்படிக் கூப்பிடமுடியும் ! :))  அப்பப்ப தண்ணி குடிச்சுங்கங்க, மறக்காம ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை கூப்பிட்டு எங்க இருக்கேனு இற்றைப்படுத்துங்க‌ (update).  எவ்வளவு நாள் வெயிலடிச்சுது அப்பலாம் கிளம்பாம, குளிர‌ ஆரம்பிக்கும் போது அப்படி என்ன நடைப் பயணம் வேண்டிக்கிடக்கு' என்று தங்கமணியின் குரல் மெல்லத் தேய்ந்து (fade) குறைய‌, வீட்டை விட்டு ஒருசில நூறு அடிகள் கடந்து அடியேனது பாதயாத்திரை துவங்கியது.  இலக்கு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு நடக்கலாம் என்று!

அதிகாலைக் குளிரில், கதிரவனின் ஒளியில் நடக்க ஆனந்தமாக இருந்தது.  சர்சர்னு சிற்றுந்தில் கடந்த சாலைகளில், ரொம்ப நேரமா நடக்கற மாதிரி தோன்றியது.  இவ்ளோ நேரம் ஆச்சு, இன்னும் இந்த சாலையிலேயேவா இருக்கிறோம் என்று தோன்றியது.  வழியில் ஆங்காங்கே நகர சபை(city council)க்கு என்னைத் தேர்ந்தெடுப்பீர் எனும் பதாகைகள் பல வீடுகளின் முன்பு அறிவித்திருந்த‌ன.  வருகிற நவம்பரில் தேர்தல்.  பெரிய சாலைகளில் நடப்பதற்கு தனிச் சாலையும், மறுபுறம் கடப்பதற்கு பொத்தானும்  இருந்தன.  சிறிய சாலைகள் தான் எதுவுமே இல்லாமல், கொஞ்சம் அச்சம் விளைவிப்பதாய் இருந்தன.  ஒரு குறுஞ்சாலையில், ஆளரவமின்றி இருக்க, திடீரென எதிரில் தூரத்தே இரு ஆண்கள்.  மனதில் கொஞ்சம் பீதி ஏற்படத்தான் செய்தது.  வெள்ளைக்காரர்களா இருந்தா (பொய் சொல்லமாட்டங்க எனும் நகைச்சுவை எண்ணம் மறந்து), பரவாயில்லை, வேறு எவராவதா இருந்து நம்ம ஏதாவது பண்ணிடுவாங்களோ என்று மனம் சிறிது யோசித்தது.  அந்த அளவிற்கு எல்லாம் போகவில்லை.  சற்றே நெருங்கி அவர்களைக் கடக்கையில், 'ஹவ் ஆர் யூ'  என்று அசோகன் பாணியில் அடிவயிற்றில் இருந்து கேட்டுவிட்டு கடந்து விட்டன‌ர்.  அப்பாடா என்றிருந்தது.


இந்த மாதிரி ஆட்கள் சிலநேரம் வழிமறிந்து கையில் எவ்ளோ வச்சிருக்கேனு கேட்டு, நம்மிடம் இருக்கத புடுங்கிட்டுப் பற‌ந்துடுவாங்கனு எல்லாம் கேள்விப்பட்டதினால, பையில் எப்பவும் ஒருசில பச்சை நோட்டுக‌ள் மேலாப்பல வைத்திருப்பேன்.  பின் பாக்கெட்ட்ல இருந்து எடுக்கக் கூடாதாம் .. ஏன்னா துப்பாக்கி தான் நாம் எடுக்கறோம்னு அவன் சுட்டுட்டு போய்டுவான் என்றெல்லாம் எனது நண்பர்கள் சொல்லியிருந்தார்கள்.

சிறிது தூரம் நடந்து சிலபல பொத்தான்கள் அமுக்கி சாலைகள் கடந்து நகரப் பூங்கா அருகில் இருந்தேன்.  சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் வந்து செல்லும் இடம்.  (கோபால் பல்பொடி ஞாபகம் வருகிறதா?:))  சனிக்கிழமை ஆதலால், பல்வேறு விளையாட்டுக்கள், பிறந்த பிஞ்சுக்களில் இருந்து பதின்ம வயது இளைஞர்கள் வரை.  ஸாஃப்ட் பால், பேஸ் பால், ஸாக்கர், இன்னும் பல பெயர் தெரியாத விளையாட்டுப் போட்டிகள் பல வண்ணங்களில் ந‌டந்து கொண்டிருந்தன.  நடைமேடையில் பலரும் தங்கள் செல்லப் பிராணிகளான நாய்கள் இழுத்துச் செல்ல, அவைகளைத் தொடர்ந்திருந்தனர்.  எப்படித் தான் வளர்க்கிறார்களோ?  ஒரு நாய் கூட குரைக்கவில்லை, சண்டித்தனம் செய்யவில்லை, எப்படி என்ற ஆச்சரியம் தொடர்ந்து கொண்டிருந்தது என்னுள்.

போட்டி நடக்கும் விளையாட்டு மைதானங்களில், பார்வையாளர்கள் பலர்.  தங்கள் தாத்தா பாட்டி, சொந்தங்கள், என அனைவரையும் கூட்டி வருகிறது இளைய தலைமுறை.  பூங்காவே ஒரு திருவிழா போல திகழ்கிறது.  காணக் கண் கொள்ளா ஆனந்தம்.  நம்மூரில் இது சாத்தியமா ?  எளிதாகச் சொல்லிவிடுவோம், 'வயசான காலத்துல இதெல்லாம் தேவையா' என ...

பூங்காவை சுற்றி வருகையில், விளையாட்டுத் தவிர குடும்பங்களாகப் பலர் அன்றைய மதிய உணவை கரி அடுப்புகளில் சுட்டுக் கொண்டும், அத்தோடு பல கேளிக்கைகளில் திளைத்தும் இருந்தனர்.  பூங்காவினுள் பெரிய நீர்த் தேக்கம், அதன் நடுவில் மென் நீர்த்தூவல்.  பல வண்ணங்களில் படபடத்துச் செல்லும் மீன்குஞ்சுகள்.  நீரோரங்களில் ஒற்றைவால் தவளைக்குஞ்சுகள்.  ஒருசில வாத்துக்கள்.  இவை எல்லாவற்றையும் ஒரு எல்லைக்குள் வைக்கும் விதமாக ஒரு பெரிய பூந்தோட்டம்.  குளிர் ஆரம்பித்திருப்பதால், பூக்களின் விளைச்சல் குறைய ஆரம்பித்திருந்தது.

பூங்காவைக் கடந்து, மற்றொரு பெருஞ்சாலயில் நடையைக் கட்டிய போது தூரத்தே ஒருவர் ஓடி வருவது தெரிந்தது.  ஆணா?, பெண்ணா?, என்று அனுமானிக்கமுடியவில்லை.  சற்றே பெருஞ்சாலை ஆதலால் சர்சர் என்று சிற்றுந்துகளின் உறுமல்.  கிட்டே நெருங்க நெருங்க பதின்ம வயதுப் பெண் அவர்.  இழுத்துப் போர்த்திய மேலாடையும், அரை நிஜாரும், கையில் தண்ணீர் குடுவையும், காதுகளில் இசைக்குழாயும் சொருகி மெய்மறந்து, சற்றும் ஒரு ஜீவன் தன்னை எதிர்கொண்டு செல்கிறது என்ற எண்ணமில்லாமல் என்னை கடந்து விட்டிருந்தார்.

இதன் நடுவே அலைபேசி அழைப்பில் தங்கமணி.  சொல்றத கேளுங்க, அங்கே இருங்க, வண்டிய எடுத்துட்டு வர்றேன்.  எதுக்கு வீராப்பு என்று அடுக்க, வழக்கம் போல அவர்களது அன்பான எண்ணத்திற்கு வளையாமல், சிறிது இடைவெளி எடுத்து, நீர் அருந்தி, தின்பண்டங்கள் கொரித்து, வானத்தை நிமிர்ந்து பார்த்தேன்.  குளிரிலும் வந்த சூரியனின் கதிர்கள் கண்களைக் கூசின.  மதியம் ஆகி இருந்தது.  மேப் மை வாக்கை பார்த்தால், பன்னிரெண்டு மைல்கள் காட்டியது.  சந்தோஷத்தில் கை கால் புரியவில்லை.  துள்ளிக் குதிக்கலாம் என்றால் அப்போது தான் கால்களில் லேசாக வலி எடுக்க ஆரம்பித்திருந்தது.  இன்னும் ஒன்னரை மைல்கள் நடக்க வேண்டும் வீட்டிற்கு.  நடந்து, ஆண்டவன் புண்ணியத்தில் இந்த நாள் நடைபயணத்தை முடித்துக் கொண்டாயிற்று!

நடப்பது சுகம் ! தொடரும் ...

Sunday, September 27, 2009

நடையா, இது நடையா...

சென்ற வார இறுதியில் சாரணர்களுடன் தெரியாத்தனமாக ஒரு முகாமுக்கு போக ஒத்துக் கொண்டேன். முதுகில் மூட்டையை சுமந்து கொண்டு ஏழு மைல் நடந்துபோய் முகாம் அமைத்து சமைத்து சாப்பிட வேண்டுமாம். வீட்டில் நம் இடுப்பளவை வைத்து ஒரு சிக்ஸ் சிக்மா பிராஜக்ட் ஆரம்பித்திருப்பதால், இரண்டு நாள் தப்பிக்கலாம் என்று சரி செய்யலாம் என்று கிளம்பினேன். பக்கத்து முகாமில் Wild Women Weekend நடக்கிறது, 21 வயது பெண்குழந்தைகளுக்கு இயற்கையோடு ஒன்றுவது எப்படி என்று சொல்லித் தருகிறார்கள் என்று வேறு ஆசை காட்டினர். அப்படியும் வருகிறேன் என்று சொன்ன நிறைய தந்தையர்குலம் கடைசி நிமிஷத்தில் கழண்டுகொண்டனர். என்னடா விஷயம் என்றால் எனக்குத் தெரியாமல் ஏழு மைல் நடை, ஒன்பதாகியிருந்தது. அடப்பாவிகளா. நம்மை வைத்து இப்படி ஒரு காமெடியா?

நாங்கள் போன இடம் அருமையான இடம். வர்ஜினியா பீச்சிற்கு தெற்கே சுற்றும் நீர் சூழ்ந்த் ஒரு தீபகற்பம்(அப்படி என்றால் என்ன என்று கேட்கக்கூடாது). ஒரு மைல் குறுக்களவில் நீண்டிருக்கும் ஒரு நிலப்பரப்பு. வர்ஜினியாவிலேயே இந்த மாநிலப் பூங்காவிற்குத்தான், மிகக்குறைந்த மக்கள் போவார்களாம். ஏன் தெரியுமா - இந்தப் பூங்காவிற்கு நீங்கள் நடந்தோ அல்லது சைக்கிளிலோதான் போகலாம். காரில் முடியாது. வயதானவர்களுக்கு சுற்றிக் காண்பிக்க ஒரு டிராம் போகிறது. அதில் ஏற பிறப்புச் சான்றிதழ் எல்லாம் கேட்பார்கள்.

நாங்கள் காலையில் கிளம்பியபோது பேருந்தளவில் இருந்த நம் வேனைப் பார்த்துவிட்டு ஐந்து வா/சாரணர்களை ஏற்றிவிட்டார்கள். போய் சேருவதற்குள் தாவு தீர்ந்து விட்டது. ஒருவன் Q94 வை என்கிறான், ஒருவன் 98 வை என்கிறான், ஒருவன் இவன் அடிக்கிறான் என்கிறான்... போங்கடா என்று பாய்ஸ் பாட்டு கேட்கவைத்தேன். அதில் ஒருசில வார்த்தைகள் தமிழில் இருந்தால் அவர்களுக்கு சரியாகப் புரியவில்லை. 'அடியே கொல்லுதே' பசங்களுக்கு கொஞ்சம் ஓகே. Car Talk அது இது என்று ஓட்டிவிட்டேன். பதினோரு மணிக்கு போய் சேர்ந்தோம். கொஞ்சம் நடந்துவிட்டு கொண்டு வந்த மதிய உணவை சாப்பிடலாம் என்று கிளம்பிவிட்டோம். முதலில் ஒரு தார் ரோடு. நல்லவேளையாக மேகமூட்டமாக இருந்ததால் வெயில்சூட்டில் இருந்து தப்பித்தோம். ஒரு கொடுமை என்ன என்றால், போன வழியில் கடலோசை கேட்கிறது, கடல் வாசம் தெரிகிறது, ஆனால் கடல் தெரியவே இல்லை. கடல்பக்கம் நெடுக்க மணல்குன்றுகள் கடலை மறைத்திருந்தன.


வந்த சிறுவர்களிலேயே சிறியதாக இருந்த பையனின் மூட்டை என் மூட்டையை விட கனமாக இருந்தது. கேட்டால் எல்லாம் அத்தியாவசிய பொருட்கள் என்கிறான். அவனுக்கு நடக்க மிகவும் சிரமமாக இருந்தது. நம்முடைய புத்திர சிகாமணி ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே எனக்கு இது முடியாது திரும்பவேண்டியதுதான் என்றான். அதனால் அடுத்த ஒரு மணிநேரம் அவன் பக்கமே போகவில்லை. குட்டிப்பையனுக்கு துணையாக நடக்கிறேன் பேர்வழி என்று நானும் அவனுடன் மெதுவாக தவழ்ந்து போனேன்.

கூட வந்த சாரண ஆசிரியர் நாங்கள் நடக்கும் வேகம் ஒரு மணிக்கு ஒரு மைல், இந்த வேகத்தில் இரவு எட்டு மணியாகிவிடும் என்று வயிற்றில் புளியைக் கரைத்தார். ஒரு மணிக்கு சாப்பிட உட்கார்ந்தோம். 'அத்தியாவசிய பொருட்களில்' freezer ice pack போன்ற சில குப்பைத்தொட்டிக்கு போனது.

மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். பெரிய சாரணர்கள் விரைவில் போய் சேர்ந்து திரும்ப வந்து பொடியன்களின் மூட்டைகளை சுமக்கிறோம் என்று விரைவாகப் போய்விட்டார்கள். நாங்கள் நாரை, மைனா, ஆர்க்டிக் டர்ன்(பையனின் உடான்ஸ்?) என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு மெதுவாகப் போனோம்.



பொடியனை கொஞ்சி கெஞ்சி நடக்கவைத்து மெதுவாகப் போய்க்கொண்டிருந்தோம். மகமாயி ஒரு போலீஸ்காரி ரூபத்தில் வந்து எங்களுக்கு அருகாமையிலேயே ஒரு கேம்ப் சைட்டில் இடம் கிடைத்திருக்கிறது என்று அருள் பாலித்தாள். மூன்று மைல் நடை மிச்சம். பசங்களுக்கும் அசுரபலம் வந்து ஒரேமூச்சில் முகாமை அடைந்தார்கள். மூட்டையை இறக்கிவைத்தேன். சுமை இறங்கியதும், கால்கள் தன்னாலே நடக்க ஆரம்பித்தன. விசித்திரமான அனுபவம்.





From False Cape State Park

கூடாரங்களை அமைத்துவிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்தோம். யாருமே வராத இடம் என்பதால் பூங்கா மிகவும் அமைதியாக இருந்தது. ஒரு வகையான லாரல் மரங்கள் அடர்ந்த இடம் நாங்கள் தங்கியிருந்த இடம். தாழ்வாக பரந்து விரிந்த மரங்கள் எங்களூர் முந்திரிக் காடுகளை நினைவூட்டின. அமைதியான வளைகுடா எங்களை இளைப்பாற வைத்தது.

களைப்பெல்லாம் பெரியவர்களுக்குத்தான். பசங்கள் கடற்கரை போகவேண்டும் என்றார்கள். கிளம்பினால் கடற்கரை ஒன்றரை மைல் தூரம் :-(
கடற்கரையில் சிறிது நேரம் விளையாடிவிட்டு முகாமுக்குத் திரும்பினோம்.





From False Cape State Park

இரவு உணவு தயார் செய்தோம். வேறென்ன - கொதிக்கவைத்த நீரில் ராமென் நூடுல்ஸ். ஒரு ஆள் பையிலிருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு எடுத்து எண்ணெயில் வதக்கி சாப்பிட்டு வயத்தெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்.





From False Cape State Park

இங்கே கேம்ப் ஃப்யர் எல்லாம் பண்ணக்கூடாது என்பதால் அனைவரும் சீக்கிரம் தூங்கிவிட்டோம். படுக்கையில் தலையை சாய்த்ததுதான் தெரியும். காலையில் உலகில் உள்ள புள்ளினங்கள் எல்லாம் என் கூடாரத்துக்கு வெளியே போட்ட கூப்பாட்டில்தான் எழுந்தேன். காலை உணவு கொதிக்கும் நீரில் ஓட் மீல். கூடாரங்களைக் கலைத்து, மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு கிளம்பினோம். இந்த முறை கடற்கரை ஓரமாக நடை.

நல்ல வெயில். ஆனால் அலையோரமாக நடந்ததால் வெயிலின் சூடு தெரியவில்லை. கரையெல்லாம் நிறைய ஹார்ஸ் ஷூ நண்டு ஓடுகள் கிடந்தன. சிலவற்றில் முழு நண்டின் உடலே இருந்தது. அங்கங்கே குட்டியாக கருப்பில் சுருக்குப்பை மாதிரி கிடந்தது. மெர்மெய்ட் பர்ஸ் என அழைக்கப்படும் அந்தப் பை சுறா முட்டைகள் அடங்கிய பையாம். மேலும் சில பெலிகன்களைப் பார்த்தோம். ஒரு டால்பின் கும்பலையும் பார்த்தோம்.
From False Cape State Park
. கடைசி அரை மைல் கரையில் இருந்து உள்ளே பயணம். அப்போதுதான் வெயிலின் சூடு தாக்க ஆரம்பித்தது. கடைசி அரைமைல் பல்லைக் கடித்துக் கொண்டு விடுவிடுவென நடந்து காரை அடைந்தோம்.

நம்மூர் கர்நாடக சங்கீதம் மாதிரி இந்த மாதிரி நேரத்தில் எதுவும் உதவாது. வண்டியில் இன்னொரு பையனும் சேர்ந்து மொத்தம் ஆறு வா/சாரணர்கள். கிளம்பும்முன் ஒரு எச்சரிக்கை விடுத்தேன். ஏதாவது சண்டையோ சச்சரவோ ஆரம்பித்தால் இதுதான் நடக்கும் என்று ஒரு நிமிடம் ஒரு கர்நாடக சங்கீத பாடலை போட்டுக் காண்பித்தேன். அனைவரும் கப்சிப். வரும் வழியில் ரெண்டே ரெண்டு முறைதான் அந்தப் பாட்டை போடவேண்டி வந்தது.

மற்ற படங்களையும் பார்க்கிறீர்களா?