Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Tuesday, March 12, 2013

சென்னைப் பகுதிகளின் பெயர்கள்

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம்பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.
அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே.

- 108 
சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு,பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

- Armoured Vehicles And Depot of India 
என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)

- chrome leather factory 
இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.

- 17,18
ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.

மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.

தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.

சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.

முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.

உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.

சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.

கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.

சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதிபின்பு மாவில்வம் என்றாகி,காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.

பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்.

சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.

நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என  அழைக்கபடுகிறது (தி.நகர்)

புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால்இப்பகுதி
புரசைவாக்கம் ஆனது.

அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்றுகாஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும்தமிழில் பூவிருந்தவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

- 17
ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி 'குணங்குடி மஸ்தான் சாகிப்'.இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள   தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.

பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே
பயன்படுத்தியதால்இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.

பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கிபின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது.

தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது.

- City Improvement Trust 
என்பதின் சுருக்கமே CIT நகர்

- மின்னஞ்சலில் வந்த செய்தி. மூலம் தெரியவில்லை.

Wednesday, June 22, 2011

1986 Tied Test - 25 வருடங்களுக்குப் பின் ஒரு நினைவு கூறல்

1986 Tied Test - 25 வருடங்களுக்குப் பின் ஒரு நினைவு கூறல்

1986 -
ல் சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடை பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி tie -ல் முடிந்து சரித்திரத்தில் இடம் பெற்றது. இன்று நடைபெற்றது போல் இருக்கிறது. அதனுடைய வெள்ளி விழா வருடத்தில் அந்த போட்டியை நினைவு கூற விரும்புகிறேன்.

சங்கரன்கோவிலில் பத்தாவது படித்துக்கொண்டிருந்த பருவம். இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே ஆன முதல் டெஸ்ட் பந்தயம். புதன் கிழமை செப்டம்பர் 18 - ஆம் தேதி தொடங்குகிறது. சென்னையில் நடை பெறுவதால் ஒரு திருப்தி. இந்தி கமெண்டரி-யின் தலைவலி விட்டு கொஞ்சம் தமிழ் கம்மேண்டேரி கேட்கலாம். பந்துகளை ஸ்ரீக்காந்த் மடக்கி (pull ) அடிப்பதையும், விரட்டுவதையும் (drive ) காது குளிர கேட்கலாம். ராமமூர்த்தி என்று ஒரு IAS அதிகாரியின் கமெண்டரி அருமையாக இருக்கும். வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லாதது கொண்டும், புதன், வியாழன், வெள்ளி விடுமுறை போட்டு கமெண்டரி கேட்கும் அளவுக்கு ஆசை இருந்தாலும் சுதந்திரம் இல்லாதது கொண்டும், முதல் மூன்று நாள் ஆகாஷ வாணி செய்திகளிலும் பள்ளி அருகில் உள்ள பெட்டிக்கடையில் உள்ள transistor -ல் அவ்வப்போது கமெண்டரி கேட்பதிலும் ஓடியது.

முதல் இன்னிங்ஸ்
toss ஜெயித்த ஆலன் பார்டர், பாட்டிங் தேர்ந்தெடுத்தார். பூன் சதம் அடித்து ஆஸ்திரேலியாவிற்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்தார். அடுத்து வந்த டீன் ஜோன்ஸ் சென்னையின் கொளுத்தும் வெயிலில் துவண்டு போய், பல கட்டங்களில் அவஸ்தைப்பட்டு வரலாறு காணாத ஒரு 210 எடுத்தார். அப்போது நான் டீன் ஜோன்ஸ் மற்றும் மார்டின் குரோவ் ஆகியோரின் பரம ரசிகன். இந்திய முதல் மூன்று நாள் கண்டிப்பாக தோல்வி என்ற நிலமையில் இருந்தது. இருந்தாலும் டீன் ஜோன்ஸ்-இன் 210 - ஐ ரகசியமாக ரசித்தேன். ஸ்ரீக்காந்த் bruce reid -ஐ விரட்டி விரட்டி அடித்து சென்னை சூட்டை அதிகரித்தார். கபில் தேவ் ஒரு அதிரடி 119 அடித்து follow -on - ஐ தவிர்த்தார். ஆஸ்திரேலியா 177 ரன்கள் முன்னிலை எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸ்
நான்காவது நாள் பாட்டிங் தொடங்கிய ஆஸ்திரேலியா, இறுதியில் ஐந்து விக்கட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து 347 ரன்கள் புன்னிலையில் இருந்தது. ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியவுடன் பார்டர் சவாலுடன் டிக்ளர் செய்தார்.
87 ஓவர்களில் சரியாக 348 ரன்கள் எடுத்தல் வெற்றி. நான்கு ரன்கள் ரன் ரேட் தேவை. கொஞ்சம் மெதுவாக தொடங்கிய ஆட்டம் இந்தியா டிராவுக்கு ஆடும் என்ற தோற்றத்தை கொடுத்தது. கவாஸ்கரும் அமர்நாத்தும் 103 ரன்கள் partnership எடுத்து கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தார்கள். அசாருதின் ஒரு 42 ரன் எடுத்து கொஞ்சம் பலம் கூட்டினார்,
கபில்தேவ் ஆர்டரில் முன்னாள் வந்து உடனே அவுட் ஆனார். சந்திரகாந்த் பண்டிட்டும் சாஸ்திரியும் 290 வரை கொண்டு வந்தார்கள். சேதன் ஷர்மா நன்றாக ஆடி 331 வரை கொண்டு போனார். கிரண் மோர் தங்க வாத்து முட்டை வாங்கினார். ஷிவ்லால் யாதவ் எதிர் பாராத வகையில் ஒரு சிக்ஸர் அடித்தார். நான்கு ரன் எடுக்க வேண்டிய நேரத்தில் ஷிவ்லால் யாதவ் போல்ட் ஆகி கடைசி விக்கட் ஆன மணிந்தர் சிங் இறங்கினார். இரண்டு பந்துகளை சமாளித்தார்.
கடைசி ஓவர். மாத்தியூஸ் வீசுகிறார். இரண்டாவது பந்தில் சாஸ்திரி இரண்டு ரன்களையும், மூன்றாவது பந்தில் ஒரு ரன்னையும் எடுத்து சம நிலைக்கு கொண்டு வந்தார். நான்காவது பந்தை சமாளித்த மணிந்தர், ஐந்தாவது பந்தை காலில் வாங்கினார். LBW கொடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியர்கள் மகிழ்ச்சியில் குதிக்க, இந்த டெஸ்ட் மாட்ச் சரித்திரத்தில் இடம் பெற்றது.
கடைசி நாள் மாத்திரம் தொலைக்காட்சியில் பார்க்கும் அதிர்ஷ்டம் கிட்டியது. சங்கரன் கோவில் தெற்கு ரத வீதியில் ரவி என்று ஒரு வக்கீல் டிவி வைத்து இருந்தார். 20 to 30 மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அங்கு பார்த்தோம். ரவி பெருந்தன்மையாக அனுமதித்தார். அந்த அனுபவம் இன்றும் நினைவில் நிற்கிறது. நான்கைந்து வருடங்களுக்குப் பின் ஒரு முறை அவரை ஒரு இரயில் பயணத்தில் பார்த்தேன். அவருக்கு நினைவில்லை. ஆனாலும் என் நன்றியை தெரிவித்தேன்.
1986 -ல் இந்த டெஸ்ட் மேட்ச் tie ஆன போது, இதற்கு முன் tie ஆன டெஸ்ட் 25 வருடங்களுக்கு முன்பாகும் (1961 ) ஆண்டு செய்தி தாள்களில் வந்து இருந்தது. அடேங்கப்பா என்று பிரமிப்பாக இருந்தது. இப்போது, இன்னொரு 25 வருடங்கள் போய் விட்டன.
ஒரு இனம் புரியாத சோக உணர்வைத் தவிர்க்க முடியவில்லை.

Saturday, January 16, 2010

இந்தியப் பயணம் - பகுதி - 4

மாம்பலம்

சமத்துவம் என்பதை மாம்பலத்தில் மிகச்சரியாக தெரிந்து கொள்ள முடியும். ஒருபுறம், பல லட்சங்களுக்கு ஒரே ஒரு நகையை விற்கும் கடையும் இருக்கிறது. நூறு ரூபாய்க்கு பல பொருட்களை விற்கும் கடையும் இருக்கிறது. பல லட்சரூபாய் மதிப்புள்ள கார் ஓடும் அதே சாலையில் அருகே, இன்னிக்கோ நாளைக்கோ உடைந்துவிடக்கூடிய நிலையில் இருக்கும் வண்டியில் மாங்காய், வெள்ளரிக்காய், நெல்லிக்காய் விற்கும் பாட்டிகள் இருக்கிறார்கள். விற்பனை உரிமம் வழங்கப் பட்ட திரைப்பட குறுந்தகடுகள் விற்பனைசெய்யும் கடைகளின் வாசலில் நாளை வெளிவர இருக்கும் திரைப்படத்தின் குறுந்தகடுகள் அமோகமாக விற்கப்படுகிறது. சூப்பர் டூப்பர் உணவகங்கள் இருக்கும் அதே தெருவில் கையேந்தி பவன் வண்டியைச் சுற்றியும் கூட்டம் அம்முகிறது. துணிக்கடை/நகைக் கடைகளில் உள்ளே நுழைய, வெளியே வர க்யூ நிற்கிறது. இக்கடைகளில் இருக்கும் கூட்டத்தை பார்த்து விட்டும் இன்னமும் இந்தியா ஏழை நாடு என்று மேலை நாடுகள் சொல்வதை கேணத்தனமாக கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

பாத்திரக் கடையோ, நகைக் கடையோ, துணிக்கடையோ சரவணா ஸ்டோர்ஸை முடிந்தால் தவிர்க்கவும், நாம் எவ்வளவுக்கு பொருட்கள் வாங்கினாலும், நம்மை ஒரு திருடன் என்கிற நினைப்போடுதான் பார்க்கிறார்கள், மதிக்கிறார்கள். துணியென்றால், நல்லி, குமரன், ஆரெம்கேவி/போதீஸ் (பரவாயில்லை ரகம் தான் இருந்தாலும் நூறு சரவணா ஸ்டோர்ஸ்க்கு சமம்), நகையென்றால் ஜி.ஆர்.டி இதுதான் என் கணக்கு. இதுதான் சரி என்று சொல்வதற்கில்லை ஆனால், சரவணாஸ் போல சொத்தைக் கடையில் பொருட்களை வாங்க எனக்கு விருப்பமில்லை. சரவணாஸில் வேலைப்பார்க்கும் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

“ஏங்க உங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வேலை”

“10 மணி கண்டிப்பா உண்டு, இந்த மாதிரி க்ரிஸ்மஸ், தீபாவளி, பொங்கல் டைம்ல 12-14 மணிநேரம் உண்டு”

“சம்பளம்”

“தராங்க சார்”

“அதில்லைங்க. எவ்வளவு தராங்க”

“புதுசுன்னா 3000 ரூ”

“உங்களுக்கு”

“எனக்கு 6000 ரூ”

“எப்படி பத்துது உங்களுக்கு”

“கஷ்டம்தாங்க”

“வேற வேலை ட்ரை பண்றதுதானே”

“எல்லா இடத்திலேயும் இதே சம்பளம்தாங்க”

இந்த உரையாடல் எனது நண்பர் ஒருவரைப் பார்த்து விட்டு மின்ரயிலில் வரும் போது சரவணாஸ் பணியாளர் ஒருவரிடம் பேசியது. நல்ல வேளை இந்த உரையாடல் சரவணாஸ் கடையின் உள்ளே நடைபெறவில்லை. அங்கு சாதா உடையில் பல மேற்பார்வையாளர்கள் சுற்றி சுற்றி வந்து கண் கொத்திப் பாம்பைப் போல பணியாளர்களை கண்காணிப்பதிலிருந்து, வாடிக்கையாளர்களை நோட்டம் பார்ப்பதுவரை செய்கிறார்களாம், அங்கு இப்படி யாராவது வாடிக்கையாளர்களிடம் பேசியிருந்தால், சீட்டைக் கிழித்து உடனே வீட்டிற்கு அனுப்பிவிடுவார்களாம்.

ஆந்திராவில் கொத்தடிமைகள் இருக்கிறார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன், சரவணாஸில் நேரில் பார்க்கமுடிகிறது. இது அனேகமாக ரத்னாஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் போன்ற கடைகளிலும் இருக்கிற ஒன்று.

ரங்கநாதன் தெருவில் இரண்டு கடைகள்தான் இருக்கிறது ஒன்று சரவணாஸ், இரண்டு ஜெயச்சந்திரன். ரங்கநாதன் தெருமுழுவதும் ஒரு 10-12 கடைகளில் வியாபித்திருக்கிறார்கள், உஸ்மான் ரோடிலும் தலா 3-4 கடை இருக்கிறது. உணவகம், இனிப்பகம், பர்னிச்சர், பாத்திரம், நகை, துணி என்று ஆளுக்கு 5-6 கடை வைத்திருக்கிறார்கள். நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்த பல கடைகளை வாங்கி இந்த இரண்டு பேரும் ராஜாங்கம் நடத்துகிறார்கள்.

பக்தி

கோவில்களில் இருக்கும் கூட்டத்தை பார்த்தால், பக்தியைத் தாண்டி எல்லோருக்கும் குற்றவுணர்ச்சியும், பயமும் அதிகமாகியிருக்கிறதோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ரிச்மண்ட் நண்பர் ஒரு தகவல் தந்தார். தமிழ்நாட்டில் பல கோயில்கள் அவர்களுக்கு வரும் வரும்படியை என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறார்கள் என்றார், நிஜமா என்று தெரியவில்லை. சபரிமலை சீசனில் கோவில்களில் பூஜையென்பது ஒரு சாதாரண நிகழ்வாக இருந்தது, இப்போது பெரிய்ய்ய்ய்ய பானர், பானரில் பாதியிடத்தை மறைத்து 8-10 பேர் புகைப்படம், தெருவை அடைத்து மெல்லிசை கச்சேரி, ஆடம்பர விளம்பரம் அதோடு நன்கொடை கேட்டு விண்ணப்பம் என்று படாடோபமாக இருக்கிறது. இதில் ஹரிஹர சுதன் விடுபட்டு போய் விட்டார். குரு பெயர்ச்சிக்கு ஸ்பெஷல் பூஜை 75 ரூ, ரெகுலர் பூஜை 25 ரூ என்று விளம்பரம் கோவில் கோவிலா பானர் வைத்து இருக்கிறார்கள்.

பிச்சைக்காரர்கள்:

சென்னையில் பிச்சைக்காரர்கள் புதிய உத்தியைக் கையாளுகின்றனர். ஒரு பெரிய கர்சீஃப் சைஸ் ஒரு மஞ்சள் துணியை(பைக் துடைக்க உபயோகப் படுத்தலாம் என்று என் நண்பன் சொன்னான்) அல்லது காது குடையும் பட்ஸ் அல்லது அ, ஆ, இ, ஈ தமிழ் புத்தகம் அல்லது ABCD புத்தகம் ஆளுக்குத் தகுந்தாற்போல் 5 ரூ – 10 ரூ வரை விற்கிறார்கள். வேண்டாம் என்றால், “ஐய்ய்யா சாசாசாப்பிட்டு ந்நாநாநாளு ந்நாநாளாச்சுய்ய்ய்யா, ஏதாதாதாவது தர்மம் பண்ணுங்கைய்ய்ய்ய்யா” என்று உரத்த குரலில் வேற்று மொழிக்காரர்கள் தமிழில் பேசுவது போல இழுத்து இழுத்து பிசிரில்லாமல் பேசி பிச்சையெடுக்கிறார்கள். மறுத்து அவர்களைத் தாண்டி நடக்க முயன்றால், அழுக்க்க்க்க்கான கையால் உங்கள் சொக்காயை நன்கு கறை படும் அளவுக்கு பிடித்து இழுத்து மீண்டும், “ஐய்ய்யா ….” என்று ஆரம்பிக்கிறார்கள். “போம்மான்னு சொல்றேன்ல” என்று நகர்ந்தால், பச்சை பச்சையா திட்டாமல், வானவில் மாதிரி விதவிதமா திட்டத்துவங்குகிறார்கள். இவர்களைப் பார்த்து பரிதாபப் படுவதா அல்லது கோபப்படுவதா என்று தெரியவில்லை. பரிதாபப்பட்டு ஒருவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்தால் போச்சு, அடுத்த அரை நொடியில் உங்களைச் சுற்றி ஒரு 100 பேர் கை நீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு மூதாட்டி, கொஞ்சம் உரிமையோடு நம் கன்னத்தையும் தடவி பிச்சை கேட்கிறார். இப்படி ஒரு மூதாட்டிக்கு 5 ரூ கொடுத்தவுடன், “ஹூம் 5 ரூபாயா, இதுல என்ன கருமத்தை வாங்க முடியும், காபியே 10 ரூபா விக்கராங்க” என்று எனக்கு இலவசமாக ஒரு எகானமி க்ளாஸ்வேறு எடுத்துவிட்டு போனார்.

தொடரும்

Thursday, January 14, 2010

இந்தியப் பயணம் - பகுதி - 3

வாசன் ஐ கேர்

இது இப்போது ஒரு பெரிய நிருவனமாக வியாபிக்க ஆரம்பித்திருக்கிறது. தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்சர் செய்வதிலிருந்து பலப் பல வழிகளில் முன்னேற ஆரம்பித்திருக்கிறது. எனது தாயாரின் கண் பார்வையை பரிசொதிக்க வழக்கமாக செல்லும் மருத்துவரை விடுத்து இவர்களை போய் பார்க்கலாம் என்று முடிவெடுத்து குரோம்பேட்டையிலேயே இருக்கும் இவர்களது கிளைக்கு போயிருந்தேன். சற்று நச நசவென்று மழை பெய்து கொண்டிருந்தது. ஆட்டோவிலிருந்து இறங்கி உள்ளே நுழைய எத்தனிக்கையில், ஒருவர்

“சார் செருப்பை வாசலிலேயே விட்டுட்டு உள்ளே வாங்க” என்றார்

“ஏன்”

“ரூல்ஸ் சார்”

“நீங்க ஷு போட்டிருக்கீங்களே”

“எங்களுக்கு அலொவுட் சார்”

வேண்டா வெருப்பாக செருப்பை கழட்டி விட்டு உள்ளே நுழைந்தால், ஹொட்டல் ரிசப்ஷன் போல இருக்கும் கவுண்டரில் இருந்த நாலு பெண்மணிகளில் ஒருவர் “முதல் தடவையா வரீங்களா”

“ஆமா”

“இந்த படிவத்தை நிரப்பி ரூ.100 கொடுங்க”

“எதுக்கு, செக்கப் ப்ரீன்னு போட்டு இருக்கீங்க”

“அது இந்த கிளையில இல்லைங்க”

“ஹூம்.”

“சார்”

“என்னப்பா”

“காபியா, டீயா என்ன வேணும்”

“சூடா ஒரு ப்ளேட் பக்கோடாவும், மசால டீ”யும் சொல்லாம் என்று நினைத்த போது இது மருத்துவமனை என்ற நினைவு வந்தது.

இந்த இத்யாதிகள் நடந்து கொண்டிருக்கும் அதே நேரம், மருந்து விற்பனையாளர் (அதாங்க மெடிகல் ரெப்ரசென்டேடிவ்) ஷூ எல்லாம் சகதியாக உள்ளே வர எனக்கு தலையில் கொம்பு முளைத்தது.

“ஏங்க நான் செருப்பை கழட்டி விட்டு வரனும்னு சொன்னீங்க இப்போ உள்ளே சகதியோட ஒருத்தர் போறாரே அது பரவாயில்லையா?” என்று கேட்கலாம் என்று நினைக்கையில் எங்களை வரச்சொன்னார்கள்.

நாங்கள் இருந்தது தரை மட்டத்தில். எங்களை வரச்சொன்னது முதல் மாடிக்கு, மிந்தூக்கி (எலிவேட்டர்) இல்லாமல் படிகளும் செங்குத்தாக இருந்தது. 5 நிமிட மெதுவான படியேற்றத்திற்கு பிறகு முதல் மாடிக்கு வந்தால், அங்கே ஒரு 40 சேர் போட்டு டீவியில் இந்தியா இலங்கை ஒரு நாள் மேட்ச் காட்டிக் கொண்டிருந்தார்கள். உட்கார்ந்த 5 நிமிடத்தில் சுவரோரமாக ஒரே மாதிரி சேலை உடுத்திக் கொண்டு நின்றிருந்த 20-30 பெண்மணிகளில் ஒருவர் எங்களை அழைத்து ஒரு அறைக்குள் அனுப்பினார் அங்கு 10 நிமிடம் சில பரிசோதனைகள், பிறகு மீண்டும் 10-15 நிமிடம் காத்திருப்பு, வேறு ஒரு அறையில் 15 நிமிடம் பரிசோதனை, கண்களில் மருந்து, பிறகு 30-50 நிமிடம் காத்திருப்பு, நடு நடுவே ஒரு காபி, பிறகு ஒரு டீ, பிறகு 5 நிமிடம் ஒரு மருத்துவரின் தரிசனம், மீண்டும் 20 நிமிடம் காத்திருப்பு, பிறகு இன்னொரு மருத்துவரின் 3-4 நிமிட தரிசனம், பிறகு கவுன்சிலிங் (இது எதுக்கு?).

“சார் உங்க அம்மாவுக்கு கண்ல காடராக்ட் ஆபரேஷன் செய்யனும், அதை நீங்க இங்க தைரியமா செய்துக்கலாம். நாங்க தினம் ஒரு 30-40 காடராக்ட் ஆபரேஷன் செய்யறோம். ஏறக்குறைய ஒரு 35 ஆயிரம் செலவாகும் அவ்வளவுதான், என்னிக்கு பண்ணிக்கரீங்கன்னு சொல்லுங்க நான் உங்களுக்கு தியேட்டர் புக் பண்ணிடறேன்” என்று என்னவோ புதுசா ரிலீசான படத்துக்கு டிக்கெட் புக் பண்றது மாதிரி சொன்னார்கள்.

வாசனில் எனக்கு புரியாத பல விஷயங்கள்:

1. சிப்பந்திகள் அனைவரும் ஒரே மாதிரி சீருடை போட்டுக் கொண்டு சரவணா ஸ்டோர்ஸில் அலுமினிய/பித்தளை பாத்திரம் எடுத்துக் கொடுப்பவர்கள் போல இருக்கிறார்கள்

2. ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வரவில்லை (வடிவேலு போல சுட்டதுக்கு அப்பரம் எப்படியா ஆங்கிலம் வரும் என்று கடிக்காதீர்கள்) ஆனால், அவர்கள் நவீன உபகரணங்கள் வைத்து கண்களை பரிசோதித்து ஒரு முடிவு எடுக்கிறார்கள், எத்தனைப் பேர் கண்களை நோண்டப் போகிறார்களோ.

3. மருத்துவர் அறைக்குள் சிப்பந்திகள் சர்வ சாதாரணமாக நுழைகிறார்கள், நோயாளி இருக்கிறார் என்ற ப்ரக்ஞயே இல்லை. நோயாளி இல்லை என்றால் 4-5 சிப்பந்திகளாக (பெண்களும் அடக்கம்), சுதந்திரமாக மருத்துவர் அறையில் சிரித்து சிரித்து விளையாடியபடி இருக்கிறார்கள்.

4. சிப்பந்திகள் நோயாளிகளின் நிலையை அவர்களிடம் மற்ற நோயாளிகள் காத்திருக்கும் இடத்திலேயே உரத்த குரலில் விவாதிக்கிறார்கள், இதில் நோயாளிகளின் பணவசதியும் அடக்கம்.

5. எல்லா சிப்பந்திகளும், பார்க்கின்ற எந்த சின்ன குழந்தையையும் முதலில் அவர்கள் கன்னத்தைக் கிள்ளிவிட்டுத்தான் பெயர் கேட்கிறார்கள். இது வாசனில் மட்டும் இல்லை எந்த கடைக்கு போனாலும் இதே நிலைதான்.

6. இங்கும் கூட்டம் அலை மோதுகிறது. எப்படி என்பதுதான் தெரியவில்லை.

தொடரும்

இந்தியப் பயணம் - பகுதி - 2


என்னதான் வாரத்திற்கு ஒருமுறை அவர்கள் குரலைத் தொலைபேசியில் கேட்டாலும், சென்னையில் இறங்கி தாய் தந்தையரை நேரில் பார்க்கும் அந்த நேரம், அவர்கள் முகத்தில் வழியும் சந்தோஷம், வாஞ்சை எழுத்தில் வடிக்கமுடியாத ஒன்று.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் அப்பா அடித்த ஜோக் “சீக்கிரம் கதவை சாத்துடா கொசு வந்துடும்” அதை அவர் சொல்லி முடிக்கும் முன்பு எனக்கு முன்னால் ஒரு நூறு கொசு எல்லாம் பெரிய வண்டு சைசில் வீட்டிற்குள் இருந்தது. அவைகள் தங்கள் பாஷையில் “பெரிய கூட்டமா வந்துட்டாங்கப்பு, வாங்க வந்து ஒரு சாம்பிள் பார்க்கலாம்”னு பேசி வெச்ச மாதிரி சரமாதிரியாக கடிக்கத் துவங்க, நான் ஒரு ப்ரேக், குச்சுப்புடி, கராத்தே, களரி பயட் எல்லாம் கலந்து கட்டி ஆடத்துவங்க அப்பா சாவகாசமாக, “என்ன கொசு கடிக்குதா, இந்தா இதால அடி” என்று ஒரு ப்ளாஸ்டிக் டென்னிஸ் ராக்கெட்டைத் தந்தார், அதில் ஒரு பொத்தானை அழுத்தினால் விளக்கு ஒன்று எரிகிறது, இன்னொரு பொத்தானை அழுத்தியபடி விஷ்க் விஷ்க் என்று நம் முன்னால் சுற்றினால் ஒரு 20—30 கொசு அதில் மாட்டி பட பட என்று எரிந்து பொத் பொத் என்று விழுகிறது. அதைப் பார்த்ததும் என் பெரிய பெண் குஷியாகி “ஐ, அப்பா மை டர்ன்” என்று சொல்லி வாங்கிக் கொண்டு கொஞ்ச நேரம் அவளுடைய டென்னிஸ் திறமையைக் காட்டினாள். பிறகு அடிப்பதற்கு கொசு இல்லாமல், சிலந்தி, எறும்பு, இந்தப் பூச்சி அந்தப்பூச்சி என்று தேடித் தேடி அடிக்க ஆரம்பித்தாள். ஆமாம், இந்தக் கொசுவை ஒழிக்க ஏன் ஒரு வழியும் இல்லை என்று தெரியவில்லை. இந்தக் கொசு அழிக்கும் மட்டையை எதற்கும் இருக்கட்டும் என்று நானும் ஒன்று வாங்கி வந்திருக்கிறேன். கோடையில் வீட்டின் பின்புறம் டெக்கில் சென்று ஒரு பத்து நிமிடம் உட்கார முடியாது கொய்ங் என்று ஒரு லட்சம் பூச்சிகள் வந்து தாக்குகின்றது இந்த முறை எனக்காச்சு அவைகளுக்காச்சு, பார்த்துவிடுவோம்.

குரோம்பேட்டை, இது நான் பிறந்து வளர்ந்த ஊர். மண்வாசனை, மர வாசனை என்று ஜல்லியடிக்காமல் சொன்னால் கொஞ்சம் அமைதியான ஊர், அகரம் நாராயணன் என்ற ஒரு ரௌடி எம்.ஜி.ஆர் காலத்தில் அட்டகாசம் செய்த ஒரு நிகழ்வு, பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அடிதடிகளைத் தாண்டி பெரிய வெட்டுக் குத்து கொலை எதுவும் இல்லாத ஒரு அமைதிப் பூங்காவனம். “அப்பா! எப்படியெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டியிருக்கு, ஹும்.”

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த குரோம்பேட்டை முகம் மாறி செல்வ செழிப்பில் மின்னுகிறது. நான் வளர்ந்த எங்கள் தெருவில்மட்டும் 6-7 அடுக்குமாடி குடியிருப்புகள், அதில் ஒரு 10-15 பேரிடம் கார் இருக்கிறது. இதைத் தவிர, தெரு முழுவதும் ஒரு 10 ட்ராவல் கார்கள் 4 டூரிஸ்டர் வேன் என்று ஆங்காங்கே நிறுத்தி வைத்திருக்கிறார்கள். குரோம்பேட்டை ஸ்டேஷன் ரோட் நிறையவே மாறி இருக்கிறது, இந்த மாற்றம் சென்னையின் பல பாகங்களிலும் பளிச்சிடுகிறது. ஆட்டோகாரர்கள் ராஜ்ஜியம் கொடி கட்டி பறக்கிறது, அவர்கள் வைத்ததுதான் சட்டம், கேட்பதுதான் ரேட், இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். கொஞ்சம் காலை பரப்பி வைத்து நின்றால் பட்டென்று உங்கள் கால் பக்கம் போர்ட் வைத்து ஒரு ஆட்டோ ஷெட் போட்டு விடுவார்கள். மறக்காமல் அதில் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் போட்டோ இருக்கும். ஆட்சி மாறினால் இருவரையும் அழித்துவிட்டு அம்மா படம் இருக்கும், நல்ல பொழப்புய்யா இது.

தனி வீடு வைத்து இருக்கும் அனைவர் வீட்டிலும் ஒரு அடி பம்ப் இருக்கிறது. கேட்டால், “பாலாறு கனெக்ஷன் இருக்கு இல்ல அது ஒரு தொட்டில வந்து பிறகு அதிலிருந்து வீட்டு மாடில இருக்கர பெரிய டாங்குக்கு மோட்டார் போட்டு ஏத்திடுவோம், வேணும்னா அடி பம்ப் வழியா டக்குன்னு பிடிச்சுடலாம்” இது என்ன லாஜிக் என்பது தெரியவில்லை.

சென்னையில் நிறைய மாதுக்கள் கார் ஓட்டுகிறார்கள். ஹூண்டாய்(5 லட்சம்), டாடா இண்டிகா(3-4 லட்சம்) தூள் பறக்கிறது, பலர் ஹொண்டா சிடி(10 லட்சம்) வைத்திருக்கிறார்கள் என்று அசால்ட்டாக சொல்கிறார்கள். டொயோட்டா காம்ரி 25 லட்சம், எனக்குத் தெரிந்த பல வங்கி மேளாளர்கள் வைத்திருக்கிறார்கள். அவ்வளவு சம்பளமா வங்கிகளில் தருகிறார்கள்? அமெரிக்காவில் இருக்கிறோம், கார், வீடு எல்லாம் இருக்கிறது என்றாலும், சென்னை போனால் ஒரு ஓட்டை சைக்கிள்கூட இல்லை என்பது சற்று கேவலமாகத்தான் இருக்கு.

ரெண்டு தெரு தாண்டி இருக்கும் கோயிலுக்கு போக 25 ரூ ஆட்டோ சார்ஜ் கேட்கிறார்கள். காரணம் பெட்ரோல் லிட்டர் 50 ரூபாய், வீட்டிலிருந்து கோவில் 500 அடிதூரம், ஒரு லிட்டர் பெட்ரோலில் 45 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கிறது ஆட்டோவில், பேசாமல் சென்னைக்கு போய் ஆட்டோ அல்லது கால் டாக்ஸியில் கார் ஓட்டினா நல்ல பைசா பார்க்கலாம். 5 மணி நேரம், 50 கி.மீக்கு 500ரூபாய் வாங்குகிறார்கள். போய் இறங்கிய 4-5 நாட்களுக்கு, பெரிய பருப்பு மாதிரி “ஏங்க ஏ.சி. போடுங்க” என்றால், மறுபேச்சு பேசாமல் போட்டு விடுகிறார்கள், இறங்கும்போது,

“சார் பில் 1200 ரூபாய்”

“எப்படிங்க”,

“என்ன சார் இப்படி கேக்கரீங்க, ஏ.சி. போட்டா டபுள் சார்ஜ் சார்”

“அது சரி, இந்தாங்க”

“...”

“இன்னும் என்ன”

“ட்ரைவர் பேட்டா சார்”

“ஏங்க கார் உங்க சொந்த கார்னு சொன்னீங்க”

“ஆமாம் சார், சொந்த வண்டியா இருந்தாலும் ட்ரைவர் வேலை பார்த்தால் ட்ரைவர் பேட்டா உண்டு சார், அதுதான் கம்பெனி ரூல்.”

“ஆமா உங்க ‘கம்பெனி’ ல எத்தனைபேர் வேலை செய்றாங்க”

“நான் ஒண்டிதாங்க”

“!!!!??”

தொடரும்.

Tuesday, January 12, 2010

இந்தியப் பயணம்

இந்தியா பயணம் பற்றி போன தடவை போய் வந்த பிறகு எழுதலாம் என்று பெரிய படமெல்லாம் போட்டுட்டு வழக்கம் போல ஒரு மண்ணும் எழுதலை. இந்த முறை அப்படி இல்லாமல், சொல்லாமலேயே எழுத ஆரம்பிச்சாச்சு.

“அது சரி சொல்லுங்க சொல்லுங்க நீங்க எது சொன்னாலும் கேட்டுக்கறோம்.”

“யாருப்பா அது, ஓ நாகுவா, ஏன் என்ன ஆச்சு”

“தடயம்ன்னு ஒரு கதை யாரோ எழுத ஆரம்பிச்சாங்க ஒரு 2-3 வருஷமா தேடியும் தடயம் கிடைக்கலைன்னு ஊர்ல நாட்டுல பேச்சு அடிபடுது......”

“தடயம் கதை என்ன ஆச்சா, அது சரி, நம்ம மக்களுக்கு தமிழ் நாட்டை விட்டுட்டு அமெரிக்கா வந்து பொட்டி தட்ட ஆரம்பிச்ச உடனே ஞாபகசக்தியும் எக்கச்சக்கமா ஆயிடுத்து. அண்ணே உங்க ஞாபகசக்தில ஈயத்தைதான் காச்சி ஊத்தனும். தமிழ் நாட்டில இருந்த வரை ரூபாய்க்கு மூனு படி அரிசி, ஆளுக்கு ஒரு கலர் டீவி, இலவச நிலம் தரோம்ன டைலாக்லாம் மறந்து போய் ஜாலியா இருந்தீங்க, நம்ம கிட்ட வந்து தடயம் என்ன ஆச்சு, குறிச்சிப்பூ என்ன ஆச்சு, கூப்பர்டினோவில குஞ்சம்மா என்ன ஆச்சுன்னு சும்மா கொடையரீங்க.! ஒரு படைப்பாளிங்கரவங்க சுயமா சிந்திச்சு கதை விடலாம்னா விட மாட்டீங்களே. சரி சரி தடயம் இன்னும் ஒரு 10-15 நாட்களுக்குள்ள முடிச்சுடறேன்.”

இனி இந்தியப் பயணம்.

போன மாதம் 5ம் தேதி ஜாம் ஜாம்னு இந்தியா கிளம்ப தயாரா இருந்தோம். என் நண்பர் காலையில் சூப்பரா பேகிள்ஸ், காபி எல்லாம் வாங்கிண்டு வந்து கண்டிப்பா இன்னிக்கு ஊருக்கு போயிடுவோமான்னு மறக்காம கேட்டுகிட்டார். நானும் என் பங்கிற்கு “இப்படி டிபன் காபி எல்லாம் வாங்கி தரது இன்னிக்கு மட்டுமா இல்லை டெய்லி கிடைக்குமா”னு கேட்டேன். அதுக்கு அவர், “தினம் இந்தியா போனா தினம் கிடைக்கும்” என்றார். நான் உடனே “நீ தினமும் வாங்கிட்டு வருவேன்னா நானும் தினமும் இந்தியா போய்ட்டு வரேன், மறக்காம நாளைக்கும் வாங்கிட்டு வா” ன்னு உதார் விட்டேன். அப்போ என் நாக்கில சனி சும்மா உக்காராம சூப்பரா, ஒரு ஆடு நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தார் போல இருக்கு, அப்போ அது எங்களுக்கு தெரியலை. அவர் கிளம்பி வீட்டுக்கு போனவுடன் அவசர அவசரமா மிச்சம் இருக்கர பாக்கிங் முடிச்சுட்டு, மதியம் ஒரு மணிக்கு விமானம் சரியான நேரத்திற்கு கிளம்புகிறதான்னு செக் பண்ணி பார்த்தால், மழைகாரணமாக நாங்கள் செல்ல வேண்டிய விமானம் ரத்தாகியிருப்பது தெரிந்தது. அதன் பிறகு நடந்ததை சொல்ல ஒரு 10-15 பக்கம் வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இன்று ரத்தாகிவிட்ட விமானத்திற்கு பதில் 6ம் தேதி விமானத்திற்கு போனா போகுதுன்ற ரேஞ்சில் டிக்கெட் போட்டு கொடுத்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் எங்களை விமான நிலையத்தில் விட்டு விட்டு எங்களுடன் ஒரு 6 மணி நேரம் இருந்து இந்த தமாஷை பக்கத்தில் இருந்து அனுபவித்து பார்த்தவர் எங்களுக்கு காலையில் டிபன் காபி வாங்கி வந்த அதே நண்பர்.

6ம் தேதி சொன்ன படி விமானம் இந்தியா நோக்கி கிளம்பியதும்தான் “அப்பாடி நிஜமாவே இந்தியா போறோம்” னு இருந்தது.

என் நண்பர் சொன்ன படி 6ம் தேதி டிபன் காபி வாங்கிட்டு வரலை, அதை உங்களுக்கு நான் சொல்லலை, நீங்களும் நான் சொல்லி தெரிஞ்சுக்கலை சரியா.

சென்னை

எங்கள் விமானம் தோஹாவிலிருந்து கிளம்பும் போதே தமாஷ் ஆரம்பமாகிவிட்டது. என் இருக்கைக்கு முன் இருந்தவர் விமானம் ரன்வேக்கு செல்லும் வரை கைப்பேசியில் பேசி தீர்த்துவிட்டார். “ராஜு வீட்டுக்கு வந்தா அவன் போன வாரம் வாங்கிட்டு போன ரெண்டு டஜன் முட்டை இன்னும் திருப்பித் தரலைன்னு கேளு, அஹமத் நாளைக்கு வருவான் அவனை ரெண்டு நாளைக்கு தேவையானத சமைக்க சொல்லு, பக்கத்து ரூம்புகாரங்க வந்தா ஓசில சாப்பிட்டுட்டு போக விடாதே” அவர் தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன் அப்புறம் பேசிக்கொண்டிருந்த போது தெரிந்தது அவர் பேசிக் கொண்டிருந்தது அவருடைய ரூம் மேட் என்றும், அவருடைய குடும்பம் தென் தமிழ்நாட்டில் வசிக்கிறது என்றும். அவர்களை தன்னுடன் வைத்துக் கொள்ள இவருடைய விசாவில் வசதி இல்லையென்று. இருந்தாலும் ஒரு சந்தேகம் அவர் நண்பர் வாங்கி சென்ற அதே முட்டையை எப்படி திருப்பித் தருவார், அதை வெச்சு ஆம்லட் போட்டிருக்கமாட்டாரோ? இவரைக் கேட்டால் அடிப்பார் போல இருந்ததால் கேட்கவில்லை.

விமானம் சென்னையில் தரையைத் தொட்ட உடன் படக் படக்கென்று சீட் பெல்ட் அவிழ்க்கும் சத்தம் காதைத் துளைக்கிறது. விமான சிப்பந்திகள் கெஞ்சுவது எதுவும் யார் காதிலும் விழுவேயில்லை. பெரிய தமாஷ், என்னவென்றால், விமானம் கடைசியாக நின்றவுடன் ஒட்டு மொத்த கும்பலும் யாரோ கத்தி வெச்சு மிரட்டின மாதிரி படாரென்று எழுந்து நிற்கிறார்கள். எல்லோர் கையிலும் ஒரு பெரிய பெட்டி, எப்போது ஒவர் ஹெட் கம்பார்ட்மெண்டை திறந்தார்கள் எப்போது சாமான் செட்டை எடுத்தார்கள் என்பது பெரிய ஆச்சர்யம். அடுத்து எல்லோரும் ஒரே சமயத்தில் கதவை நோக்கி செல்ல முயல்கிறார்கள். வழியில் நிற்பது வயதானவரா, குழந்தையா என்பதெல்லாம் அவர்களுக்கு அனாவசியம், ஒரு தள்ளு அல்லது ஓங்கி ஒரு இடி, அதற்கு எந்த வருத்தமும் இல்லை. இதே கும்பல் தோஹாவில் பள்ளிக்கூட குழந்தைகள் போல பவ்யமாக வரிசையில் நின்று விமானம் ஏறினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் H1N1 பரிசோதனைக்காக இரண்டு காமிரா வைத்திருக்கிறார்கள். அதனை நோக்கி நடக்கையிலேயே ஒருவருக்கு ஸ்வைன் ப்ளு (பன்றிக் காய்ச்சல்) இருக்கிறதா இல்லையா என்பதை தெளிவாக சொல்லிவிடுகிறது. அந்த பரிசோதகர் அருகில் சென்றதும் எங்கள் இளைய மகள் லொக்கு லொக்கு என்று இறும, அந்த பரிசோதகர், “என்னங்க இப்படி இருமராங்க, ஒன்னும் ப்ரச்சனை இல்லையே” என்று கேட்டு கொஞ்சம் டென்ஷன் பண்ணி விட்டார். லஞ்சம், அன்பளிப்பு, இனாம் எல்லா கண்ராவியும் சென்னைல விமானம் இறங்கியதுமே ஆரம்பிச்சுடுச்சு. என்ன ஒன்னு விமான சிப்பந்திகள் ஏதும் இனாம் கேக்கல அவ்வளவுதான்.

ஒரு வழியாக விமான நிலையம் விட்டு வெளியில் வந்தால் ஜிவ் என்று மஹா மஹா சைசில் ஒரு பெரிய மேம்பாலம் மிரட்டுகிறது. அதன் அடியில் ஒரு கொசு மாதிரி நாங்கள் இருந்த மினி வேன் இருந்தது. தாம்பரம் நோக்கி எங்கள் வேன் திரும்ப எத்தனிக்கையில் திடீர் என்று ஒரு பெரிய லாரி லைட்டில்லாமல் ஹாரன் மட்டும் அடித்துக் கொண்டு ஒரு இன்ச் வித்தியாசத்தில் எங்களை ‘டாய்’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றது. அதை அத்தனை கிட்டத்தில் பார்த்ததில் ரத்தம் ஜிவ் என்று தலைக்கு மேல் எகிறி கண்ணெல்லாம் பளிச் பளிச்சென்று மின்னல் மாதிரி வெட்டியது. வேன் ட்ரைவரோ "இதெல்லாம் சகஜமப்பா" என்ற ரேஞ்சில் எதுவுமே நடக்காதது போல இருந்தார். “என்னங்க இப்படி போராங்க” என்று கேட்டதற்கு, “ஏங்க என்ன ஆச்சு” என்று கேட்டு அவர் பங்கிற்கு அதிரடித்தார்.

பல்லாவரம் பக்கத்தில் எப்போதும் குண்டும் குழியுமாக இருக்கும் அது மாறி விடியற்காலை 4 மணிக்கே ட்ராஃபிக் ஜாம் ஜாம் என்றிருக்கிறது. இப்படியாக எங்கள் சென்னை விஜயம் ஆரம்பமாகியது.

தொடரும்.

Friday, June 12, 2009

அனத்தல் அப்பா!

1987.. அதுவரை தமிழ் நாட்டையே தாண்டாத எனக்கு.. வேலை நிமித்தமாக ஜப்பான் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஒரு மாதமாய் பிரயாணத்திற்கு ஏற்பாடு நடந்தது. பயண நாளும் வந்தது. இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானம். பெட்டியெல்லாம் எடுத்து வாகனத்தில் ஏற்றி ஆகியது. ஆரம்பித்தார் அப்பா! பாஸ்போர்ட் எடுத்துக்கிட்டியா? சிங்கையில் இருக்கும் நண்பரின் தொலைபேசி எடுத்துக் கொண்டாயா? ஜப்பானில் குளிர் காலமாம்.. நல்ல கம்பளி எடுதுகிட்டயா? என்று ஏற்கனவே வேர்த்து ஒழிகி பதட்டத்துடன் இருக்கும் என்னிடம் கேள்வி மேல் கேட்டு மேலும் பதட்டம் ஊட்டினார் . என்னோடு விட்டால் பரவாயில்லை. ஏற்கனவே மகன் வெளிநாடு போகிறான் என்ற மகிழ்ச்சி கலந்த ஒரு விதமான பதட்டத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த என் அம்மாவிடம்.. அவன் வழியில் சாப்பிட ஏதேனும் கொடுத்தாயா? வேண்டிய அளவுக்கு துணி மணி எடுத்து வச்சானான்னு பார்த்தாயா? என்று அப்பாவின் அனத்தல் தொடர்ந்தது.

கடந்த 22 வருடத்தில் பலப்பல பிரயாணங்கள் சென்றும்.. ஓவொரு பிரயாணத்தின் போதும் எதாவது ஒன்றை மறந்து போய் அவஸ்தை பட்டதுண்டு. ஒருமுறை.. பயணத்திற்கு முக்கியமான பாஸ்போர்ட் கூட எடுக்க மறந்து விமான நிலையத்தில் இருந்து திரும்பி வந்ததுண்டு. அதனால், ஒவ்வொரு பிரயாணத்தின் போதும் அதற்கு முன்பும் அப்பாவின் "அனத்தல்" வந்து மனதை நெருடும். ரிச்மண்டில் இருந்து ஒரு பெரிய கல்யாண கும்பல் சென்னை பிரயாணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்.. யாருக்காவது அது போன்ற அப்பாவின் அனத்தல் கேட்கனும்னு ஏக்கம் இருந்தா.. இதோ உங்களுக்காக!!

ஏம்பா! ரொம்ப நாள் வெளியூர் போறியே.. காற்று குளிர்விப்பானை 80 F க்கு மாத்தியோ இல்ல நிறுத்தியோ வச்சியா? தண்ணீர் சூடு செய்யும் பாய்லரை குறைந்த சூட்டிற்கு மாற்றியோ.. இல்லை நிறுத்தியோ வைத்தாயா? எரிவாயுவும் மிச்சம். ஆளில்லாத நேரத்தில் வீட்டிற்கும் பாதுகாப்பும் கூட. முக்கிய மின்சார பலகையில் தெரு விளக்கு மற்றும் குளிர் பதனப் பெட்டி தவிர மற்றனவற்றை நிறுத்தி வைத்தாயா? மின்சார செலவும் மிச்சம். வீட்டிற்கு பாதுகாப்பும் கூட. குளிர் பதன பெட்டியில் உறையும் அறையை ஓட விட்டு குளிரும் அறையை நிறுத்தி வைத்தாயா? தானாக புல்வெளிக்கு தண்ணீர் விடும் இயந்திரம் சரியாக வைத்து உள்ளதா? வீட்டிற்குள் இருக்கும் செடிக்கெல்லாம் அவ்வபோது தண்ணீர் விட யாருக்காவது சொல்லியிருக்கியா?

காலம் கெட்டு கிடக்கு.. நகை போன்ற விலையுயர்ந்தனவற்றை வங்கியின் பூட்டு அறையில் வைத்து விட்டாயா? நம்பாளுங்க வீட்டில் எங்க நகையை ஒளித்து வைப்பார்கள் என்று திருடர்களுக்கு நல்லாவே தெரியுதாம். இப்பல்லாம் விமானத்தில் கொடுக்கும் சாப்பாடெல்லாம் நல்லாவே இருக்கறதில்லை.. வழியில சாப்பிட நாலு இட்லியும் நல்ல காரமா கொஞ்சம் தக்காளி தொக்கும், மிளகா பொடியும் எடுத்துகிட்டியா? ஐரோப்பாவில் அடுத்த விமானத்திற்காக காக்கும் நேரத்தில் சாப்பிட்டா அதில் கிடைக்கும் சுகமே அலாதி.

"அப்பா! கிளம்புற நேரத்தில் போதும்பா உங்க அனத்தல்" என்று அன்று அப்பாவிடம் சொன்னது ஞாபகம் வரவும் "சரி.. போதும்யா உன்னுடைய அனத்தல்" என்று ஏகப்பட்ட குரல்கள் இன்று மானசீகமாக காதில் கேட்கவே, இத்தோடு நிறுத்திக்கறேன்.

உங்கள் அனைவருக்கும் பயணம் இனிதே அமையவும், அனைத்து கனவுகளும், சபதங்களும் நலமே நிறைவேற வாழ்த்துக்கள்!!

வசந்தம்