Showing posts with label க்ரூய்ஸ். Show all posts
Showing posts with label க்ரூய்ஸ். Show all posts

Thursday, August 23, 2012

அலாஸ்கா பயணக் கட்டுரை - 1

காஸ்ட்கோவில் போனவாரம் ஒரு சிறிய உரையாடல்:

ரவி திருவேங்கடத்தான்: "ஹேய் முரளி, என்னப்பா அலாஸ்காலாம் போயிட்டு வந்தாச்சா, இல்லை இனிமேதான் போகப் போறியா?"

நான்: "போயிட்டு வந்தாச்சுப்பா, ஏன் என்ன திடீர்ன்னு கேக்கர?"

ரவி: "என்னமோ இதோ அடுத்த வாரம் அதப் பத்தி எழுதப் போறேன்னு சொன்னியே, அப்படி சொல்லி 7-8 வாரம் ஓடி போச்சே, அதான் கேட்டேன்.  ஒரு சின்ன தடயம் கதையே 5-6 வருஷமா நம்ம ப்ளாகுல ஓடுது, இது என்ன ஜுஜுபி."

நான்:  "இருப்பா ஆஃபீஸ்ல ஆணி புடுங்கர வேலை கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு, அதுக்குள்ள இப்படி பப்ளிக்கா மானத்தை வாங்காதே.."

ரவி: "உங்க ஆஃபீஸ்ல ஆணி புடுங்கர வேலை ஜாஸ்தியா, யார் கிட்ட காது குத்தரே, என் தம்பியும் அங்கதான் வேலை செய்யரான்.  இந்த சம்மர் லீவுல பாதி பேர் வேலைக்கே வரப்போரதில்லை.  ஹூம் நீயும் நல்லா கதை விடர, நானும் நம்பறமாதிரி கேட்டுக்கரேன். "

நான்: "யப்பா இன்னும் ஒரு வாரத்துல ஆரம்பிச்சுடரேன்.  போதுமா?"

ரவி:  "தடயம் கதை மாதிரி, ஆரம்பிச்சா மட்டும் போதாது ஒழுங்கா முடிக்கனும்."

ரவி அடுத்த விஷயம் பேச ஆரம்பிக்கரதுக்குள்ள வுடு ஜூட்.

பூர்வாங்க வேலைகளை பத்தி ரொம்ப சொல்லாம, டைரக்ட்டா அலாஸ்கா டிரிப் பத்தி சொன்னா க்விண்டின் டராண்டினோ படம் மாதிரி இருக்கும் அதனால ரவியோட நடந்த ஒரு சின்ன பேச்சை மொதல்ல போட்டுட்டேன், இப்ப மெயின் கதைக்கு வருவோம்.

அலாஸ்கா க்ரூய்ஸ் டிரிப் போகலாம்னு மொதல்ல ஒரு பிட்டை போன வருஷம் ஆகஸ்ட்-செப்டம்பர்ல போட்டது,  என் வீட்டுக்காரம்மாவோட அம்மாவோட அக்காவோட ரெண்டாவது பையன்(அதாவது மாலதியோட கசின், சுருக்காமா சொன்னா சுவாரசியமா இருக்காதுன்னு கொஞ்சம் இளுத்து புடுச்சு எளுதிட்டேன்).  அவன் ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்.  வடிவேலு மாதிரி ஒரு பெரிய பிட்டை போட்டுட்டு, சும்மா இருந்த சங்கை நல்லா ஊதி விட்டு, அமெரிக்காவுல இந்தக் கோடியில எங்க வீடும், அடுத்த கோடி கலிஃபோர்னியாவுல ஒரு 7 வீட்டு மக்களும், சியாட்டில்ல ஒரு வீடும் சேர்ந்து பேசிப் பேசிப் பேசிப் பேசிப் (நிஜமாவே அவ்வளவு பேசியிருக்காங்க) பேசி ஒரு வழியா 44 பேர் சேர்ந்து க்ரூய்ஸ் போகலாம்னு முடிவு பண்ணினாங்க.

(நாகு: "என்னது முடிவு பண்ணினாங்கன்னு எழுதர அப்போ நீ முடிவு பண்ணலையா? "

நான்: "நானும் சேர்ந்து முடிவு பண்ணலா மா?  சொல்லவே யில்லை!!!!  அடுத்த வாரம் காஸ்ட்கோ போய் பால், தயிர் பர்ச்சேஸ் பண்ணும் போது நானே முடிவு பண்ணி ஒரு செட் சாக்ஸ் வாங்கிட்டு வரப்போறேன் அப்பதான் இவங்களுக்கு நம்ம பவர் என்னன்னு தெரியும், எப்ப்புடி?"

நாகு: "சூப்பர் இப்படியே இரு,  வெளங்கிடும்.... " )

உடனே இருவர் குழுவை ஃபார்ம் பண்ணி அவங்க ரெண்டு பேர் மட்டும் காஸ்ட்கோ கிட்ட பேசி நல்லா  திட்டம் போட்டு, தேவையான ரூமெல்லாம் புக் பண்ணி ஒரு வழியா புக்கிங் விஷயம் முடிச்சதும், எதிர்பாராத விதமா சில பேர் வரமுடியாத சூழ்நிலை உருவாகி, கடைசியா 18 பேர் மட்டும் க்ரூய்ஸ் போகலாம்னு முடிவு பண்ணினோம்.  இதுல காமெடி என்னன்னா,  க்ரூய்ஸ் போகலாம்னு பிட்டை போட்ட மகானுபாவன் ஜகாவாங்கிட்டு, பி.எஸ். வீரப்பா மாதிரி ஒரு சிரிப்பு சிரிச்சான், அவனை அப்பால பாத்துக்கலாம்னு விட்டுட்டேன். (வேற வழி).

காஸ்ட்கோ நல்லாவே டிரிப்பை மேனேஜ் பண்ணினாங்க.  அப்பப்போ என்ன கேள்வி கேட்டாலும், டக்குன்னு பதில் சொல்லி, தேவையானதை தேவையான நேரத்துல செஞ்சு கொடுத்தாங்க.  மொதல்ல புக் பண்ணும் போது ஒருத்தருக்கு  100$ ந்னு வாங்கிட்டு இந்த வருஷம் ஏப்ரல் மாசம் மொத வாரம் மொத்த பணத்தையும் கட்டினா போதும்னு சொல்லிட்டாங்க.  இது ரொம்ப சவுகரியமா இருந்தது, மாசா மாசம் கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சு வெச்சுட்டு அதை ஏப்ரல் மாசம் கட்டிட்டோம்.

க்ரூய்ஸ் ஸ்டார்ட் பண்றது சியாடில்லருந்து அதுக்கு நாலு பேருக்கு டிக்கெட் போட்டு அதெல்லாம் பக்காவா ரெடி பண்ணினா, ரிச்மண்ட் ஏர்போர்ட் போனதும் அதுக்கு ஒரு கேட்டை போட்டுடானுவ.  எங்க டிரிப் ரிச்மண்ட் - சார்லேட் - சியாடில், அதுல ரிச்மண்ட் - சார்லேட் ஃப்ளைட் சார்லேட்லயிருந்து வரும்ம்ம்ம்ம்ம்ம் ஆனா வராதுன்னு ப்ளைட் கிளம்பர டைமுக்கு 5 நிமிஷம் முன்னாடி சொன்னானுவ,  சொல்லிட்டு, இங்க வாங்க நாங்க நாளைக்கு ஃப்ளைட்டுக்கு டிக்கெட் போட்டு கொடுக்கறோம்ன்னு சொல்லி ஒரு லைன் ஃபார்ம் பண்ண சொன்னாங்க.  குடும்பமே கெளண்டர் முன்னாடி லைன்ல நின்னுகிட்டே மெதுவா ஹரே ராமா மஹா மந்திரம் சொல்ல ஆரம்பிச்சோம்.  5 நிமிஷம் கூட சொல்லியிருக்க மாட்டோம், நம்ம நாட்டுகாரர் ஒருத்தர் திடீர்ன்னு வந்து "நான் யு.எஸ் ஏர்வேஸ்லதான் வேலை செய்யரேன், வாங்க நான் ஏற்பாடு பண்றேன்" சொல்லி யார் யாரையோ பிடிச்சு 15 நிமிஷத்துல ஃபிலடெல்ஃபியா வழியா சியாட்டில் போக ஏற்பாடு செஞ்சு தந்தார்.  மஹா மந்திரத்துக்கு பலன் உண்டுன்னு மனப்பூர்வமா நம்பர ஆளுங்க நாங்க, ஆனா இப்படி சொன்ன 5 நிமிஷத்துல பலன் கை மேல கிடைச்சதும், ஏர்போர்ட்ல டான்ஸ் ஆடாத குறைதான்.  டிக்கெட் போட்டு கொடுத்ததும், அவருக்கு தாங்க்ஸ் சொன்னா, "முரளி என்னை தெரியலையா, நான் உன்னை நிறைய தடவை நம்ம கோவில்ல பாத்திருக்கேன்.  உனக்கு என்னை நியாபகம் இல்லை போல இருக்குன்னு" போற போக்குல ஹிந்தில அடிச்சு விட்டார்.

ஒருவழியா ஃபிலி வழியா சியாட்டில்ல மாலதியோட கஸின் (சிஸ்டர்) வீட்டுக்கு ராத்ரி 1:30 மணிக்கு போய் சேர்ந்தோம்.  காலைல 10:30 மணிக்கு கிளம்பி சியாட்டில் ஹார்பர் போய் நாங்க போக வேண்டிய நார்வேஜியன் க்ரூய்ஸ் கப்பல்ல ஏறினோம். 



மஹிமா இழுத்து பிடிச்சு கட்றாளே இந்த கப்பல்தான் அது.  இந்தக் கப்பல மொத்தம் 14 மாடி அதுல 13, 14 மாடி கொஞ்சம் பெருந்தனக்காரங்களுக்காம்,  என்னைய மாதிரி ஏழை பாழைங்களுக்கு கிடையாதாம், சீசீ அலாஸ்கா குளிர்ல 14ம் மாடில போயி எவன் இருப்பான்னு நாங்களும்  போகல.

ஆக, அலாஸ்கா கப்பல்ல ஏறியாச்சு.  அடுத்து, அலாஸ்காவோட காபிடல் ஜுனு போன கதை அடுத்த பாகத்துல பாக்கலாம்.

முரளி இராமச்சந்திரன்.

Monday, July 09, 2012

எச்சரிக்கை - அலாஸ்கா பயணக்கட்டுரை

சமீபத்தில் அலாஸ்கா சென்று வந்த பயணத்தைப் பற்றி எழுதுன்னு சில கோடி  நண்பர்கள் (கேடி இல்லை, நல்லா பார்த்துப் படிங்க) அன்பாக மிதிச்சு, சாரி மதிச்சு கேட்டதால அடுத்த வாரத்துல இருந்து எழுதலாம்னு இருக்கேன், உங்களுக்கு ஒரு 5-6 நாள் டைம் இருக்கு அதுக்குள்ள இந்த எச்சரிக்கைக்கு பதில் எழுதி என்னை எழுத வேண்டாம்னு சொன்னா மன்னாப்பு கொடுத்து விட்டுடுவேன். இல்லை, உங்க தலை எழுத்து அம்புட்டுதேன்.

போன தடவை போன பஹாமாஸ் ட்ரிப் 4 நாள் சொகுசு கப்பல் ப்ரயாணம், இந்த தடவை போன அலாஸ்கா பயணம் 7 நாள் சொகுசு கப்பல் ப்ரயாணம்.

அடுத்தவாரம் உங்களுக்கு டைம் சரியா இல்லைன்னா சந்திப்போம்.

முரளி இராமசந்திரன்.

Thursday, March 03, 2011

பஹாமாஸ் விஜயம் - 2

நாங்க போன கப்பல் ராயல் கரீபியன் கப்பல். கார்னிவல், டிஸ்னி, நார்வேஜியன் என்று பல கப்பல்கள் இருக்கு. அதில் இது கொஞ்சம் நல்லதுன்னு செவி வழி செய்தியை கேட்டு நாங்களும் டிக்கெட் வாங்கினோம்.

க்ரூய்ஸ் கப்பலில் நுழையரதுக்கு பல வழிமுறைகள் போட்டு, பல வசதிகளைச் செய்து வா வா என்று எதிர் கொண்டழைக்க சில ஆட்களைப் போட்டு நம்மள சும்மா திணரடிக்கராங்க. துறைமுகத்திலேயே கார் நிறுத்துமிடமும், அதற்கு முன்னாடியே நமது பெட்டி படுக்கைகளை வாங்கி வைத்துக் கொள்ளவும் வசதி செய்திருக்கிறார்கள். அவர்களிடம் எல்லா சாமான் செட்டையும் கொடுத்துட்டு ஹாயாக கையை வீசிகிட்டு உள்ளே போகலாம். அடுத்த நாட்டுக்குச் போவதாக இருந்தால் மறக்காமல் பாஸ்போர்ட்டை கையிலேயே வெச்சுக்கங்க. இல்லை போகவே முடியாது, ஜாக்கிரதை. கொஞ்சம் தின்பண்டம் ஏன்னா, எப்போ, எந்த குழந்தை, எப்படி, எதுக்கு கத்துமோ தெரியாது கப்புன்னு வாயில அடைச்சு ஒரு கப் தண்ணி ஊத்தி அடக்கிடலாம், தேவையான மருந்துகள், காமெரா, லேப்டாப் கம்ப்யூட்டர் இதை லக்கேஜ்ஜோடு அனுப்பினால் அது கையில் வந்து சேர்ந்து ஒழுங்காக வேலை செய்யுதான்னு தெரியர வரைக்கும் ஒரு மாதிரி அவஸ்தையா இருக்கும்.

நம்ம போர்டிங் பாஸ் கொடுக்கர இடம் ஏர்போர்டை ஞாபகப் படுத்தும் அதே சமயம், எந்த மாதிரி டிக்கெட் வாங்கியிருக்கீங்களோ அதுக்கு ஏத்த மாதிரி சீக்கிரமாகவோ அல்லது லேட்டாகவோ உங்களை செக்கின் பண்ணுவார்கள். குழந்தைகளுக்கு முதலில் ஒரு கைப் பட்டை போட்டு இதுங்க ரெண்டும் உங்க கூட வருதாங்கர ரேஞ்ஜில கேள்வி கேட்டுட்டு, அப்புறம்தான் “O they are so cute” ன்னு ஒரு மொக்கையை போட்டுட்டு, முக்கியமான விஷயத்துக்கு வருவார்கள். அது வேற ஒன்னும் இல்லைங்க கப்பல் உள்ளே திங்கர சோறு, காபி, டீ, எலுமிச்சை தண்ண்ண்ணீ ஜூஸைத் தாண்டி எதைச் சாப்பிட்டாலும் அதாவது மஹா ஜனங்களே இந்த லாகிரி வஸ்துகள் எதைச் சாப்பிட்டாலும் வேறு எதை வாங்கினாலும், போட்டு தாளிக்கரதுக்கு அப்பப்ப க்ரெடிட் கார்டை நீட்டு தேய் தேய்ன்னு தேய்க்க வேண்டாம், அதை செக்கின் பண்ணும் போதே வாங்கி ஒரே ஒரு முறை தேய்த்து விட்டு (அப்பாடி என்ன சவுகர்யம் இல்லை) அத நம்ம ரூம் கார்டோடு கோர்த்து விட்டுடுவாங்க. அப்படின்னா, ரூம் கார்ட் தொலைஞ்சு போனாலோ, கொஞ்ச நேரம் காணாம போனாலோ, அடி வயித்தில கரைக்கிர புளில சூப்பரா ஒரு கப்பல் கும்பலுக்கே சாம்பார் வெக்கலாம் ஜாக்கிரதை. நாங்க கொஞ்சம் முன் ஜாக்கிரதை முத்தண்ணா பரம்பரை, குழந்தைகள் கார்டில் அதைக் கோக்கவேண்டாம்னு சொல்லிட்டு, அது மட்டும் இல்லை குழந்தைகள் நாங்க இல்லாம எதுவும் வாங்க முடியாதுன்னும் சேர்க்கச் சொல்லிட்டோம். சரி, சரி, உங்க ஆதங்கம் எனக்குப் புரியுது. வீட்டுக்காரம்மா கார்டை அப்படி கண்ட்ரோல் பண்ண முடியுமான்னு நான் கேக்கலை, அவங்க பக்கத்திலேயே இருக்கரச்சே எப்படி அதெல்லாம் ஒரு சாத்வீகமான மனுஷன் கேக்க முடியும்ன்னு உங்களுக்குத் தோண வேண்டாம். மொதல்ல ஒன்னு தெரிஞ்சுக்கங்க, கேள்வி கேக்கரது ரொம்ப ஈசி, கேள்விகளுக்கு பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்.

ஒருவழியாக இதெல்லாம் கடந்து கப்பல் உள்ளே வந்தா முதல் மரியாதைல ராதா படகுல இருந்து இறங்கினதும் இழுத்து கிட்டு இருக்கும் சிவாஜி படக்குன்னு ஒரு பட்சி கொத்தினமாதிரி வெடக்குன்னு காலை உதறுவாரே அது போல ஏதாவது இருக்கும்ன்னு நினைச்சா ஒரு மண்ணும் இல்லை. ஒரு வரவேற்பாளி மாயாஜால படத்துல வர்ர மாதிரி திடீர்ன்னு தோன்றி (என்ன, டொய்ய்ய்ங் ன்னு ஒரு பேக்ரவுண்ட் ம்யூசிக்தான் இல்லை) ஒரு சூப்பர் அன்னாசி பழ ஜுஸ் கப்பை கொடுத்து குடிக்கிறியான்னு கேட்டு “நல்லா இருக்குமா”ன்னு கேக்க வாயெடுக்கரதுக்குள்ள நம்ம ரூம் கார்டை வாங்கி ஒரு தேய் தேச்சு 8 டாலர் ஆச்சுன்னு சொல்லிட்டாங்கப்பு. அப்பால நாம எப்பேர்பட்ட ராஜ பரம்பரை, ஒரே ஒரு கப்பு போதும், நிறைய பேர் வராங்க எல்லாருக்கும் வேணுமில்லையான்னு பெருந்தனமையா அவங்ககிட்ட நடந்துகிட்டு விடு ஜீட்.

இப்படியாக படாத பாடு பட்டு சொகுசு கப்பலேறிய ஒரு தமிழன் என்ற பெயரை வேறுயாரும் எடுத்துக்கரதுக்குள்ள எனக்கு நானே கொடுத்துக் கொண்டேன்.

காலை 11 மணிக்கு கப்பலுக்குள்ள வந்தா சட்டுபுட்டுன்னு நாலு எடத்த பார்த்தமா, நம்ம ரூமுக்கு வந்தமா, சின்னதா ஒரு த்யானம் செய்தமான்னு இல்லாத குறைக்கு, மதியம் 1 மணிக்குத்தான் ரூமுக்குள்ள போக முடியும்ன்னு சொல்லி வெளியிலேயே நிறுத்திட்டாங்க. “ஏண்டா என்னடா ஆச்சு உங்களுக்கு இவ்ளோ நேரம் நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு” ன்னு கேட்டே விட்டேன்.

அதுக்கு “கப்பலை நல்லா சுத்திப் பாருங்க, ராவிக்கு ஜூப்பர் ஷோ இருக்கு எங்க ஏதுன்னு தெரிஞ்சுக்க வேணாமா”ன்னு அன்பா சொல்லிட்டு போய்கிட்டே இருந்தானுங்க. இவனுங்களுக்கு எங்கள பத்தி அவ்வளவா தெரியாது, இவங்களோட மிட்நைட் ஷோ எதுக்கும் போகாம நாம ஏன் வரலைன்னு இவனுங்க வருத்தப் பட வெக்கனும்னு மனசுக்குள்ளேயே கறுவிக்கிட்டோம்.

நாங்க போன கப்பல் 10 தளம் கொண்டது. எங்க ரூமும் 10வது தளத்திலதான். 11வது தளத்தில் நீச்சல் குளமும், கப்பலின் முன் பக்கம் 12வது தளத்தில் சாப்பாடும் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. கப்பலில் எங்களைப் போல பயணித்த 3000 பேருக்கு 850 சிப்பந்திகள்ன்னா பாத்துக்கங்க. சும்மா சொல்லக்கூடாது, கப்பலுக்குள்ளே ஒரு சின்ன நகரமே இருக்குங்க. பெரிய சூதாட்ட விடுதி, 3 சாப்பாடு ஹோட்டல், சின்ன மால், 2 ஸ்பெஷல் ‘தண்ணி’ கிடங்கு, ஒரு பெரிய இரண்டடுக்கு ஆடிட்டோரியம், குழந்தைகள், சிறுவர் சிறுமிகளை கண்காணித்துக் கொள்ள இடம், லைப்ரரி, முடிதிருத்தும் இடம், கூடைப் பந்தாட இடம், டேபிள் டென்னிஸ் ஆட இடம் என்று அசத்தோ அசத்துன்னு அசத்ராங்க. கொஞ்சம் அசந்து மறந்து எங்கெயாவது நின்னா போச்சு ஒன்னு “என்னங்க ஏதாச்சும் வேணுமா, ஏதாச்சும் தெரியனுமா, என்னைய கேளுங்க நான் சொல்றேன்” னு வந்துடரானுங்க, இல்லை “ஏதாச்சும் சாப்பிடரீங்களா, கொண்டுவரட்டுமா”ன்னு கேக்கராங்க. இப்படியெல்லாம் நம்மள கவனிச்சா நாம திரும்பத் திரும்ப கப்பல் பயணத்துக்கு வருவோம்னு எந்தப் பயபுள்ளையோ போட்டு கொடுத்திருக்குன்னு நினைக்கிறேன்.
ஒருவழியா ரூமுக்கு நம்மள அனுப்பி அதப் பார்த்தா கொஞ்சம் மலைப்பாத்தான் இருந்துச்சு. காசுக்கேத்த தோசைன்னு சும்மாவா சொன்னாங்க.
ஒரு கிங் சைஸ் பெட்

ஒரு சோபா அதைப் பிரிச்சு குயின் சைஸ் பெட்டாக்கி ரெண்டு பேர் தூங்கலாம்,
Add Image

ஒரு சின்ன பார்

ட்ரெஸ்ஸிங் டேபிள்

சின்ன குளியலறை

பால்கனி
என்று ரொம்ப தாராளமாகவே இருந்தது.
இதையெல்லாம் அனுபவிக்கரத்துக்குள்ள ரூம் சர்வீஸ்ன்னு ஒருத்தன் வந்து கதவை இடிச்சு, “என்ன ஏழரை மணி ஷோவுக்கு போகலையா”ன்னு கேட்டு கழுத்தைப் பிடிச்சு தள்ளாத குறையா அனுப்பிட்டான். அப்பதான் தெரிஞ்சுது எங்களை வெளியில அனுப்பினாதான் அவன் ரூமை க்ளீன் பண்ணி பளிச்சுன்னு வெக்க முடியுமாம். நேரம்டா சாமின்னு, அந்த ஷோவுக்குப் போனோம்.
இவங்க எல்லோருக்கும் ஒரு விஷயம் நல்லாத் தெரியுது, எதை வேணும்னாலும், பேசிப் பேசியே வித்துடுவானுங்க. இப்படித்தான் 25 டாலருக்கு ஒரு கூப்பன் புத்தகம் வித்தானுங்க அத வாங்கினா நமக்கு 1000 டாலர் லாபம்ன்னு சொல்லி சொல்லி வித்தானுங்க. ரஸல் பீட்டர் ஸ்டாண்டப் காமெடி கேட்டீங்கன்னா ஒன்னு சொல்வான், ரெண்டு பேர் வியாபாரத்துல மீட் பண்ணக்கூடாது, இந்தியனும் சீனனும். இந்தியன் எதையும் பேரம் பேசாம வாங்க மாட்டான், சீனன் எந்த பேரத்துக்கும் ஒத்துக்க மாட்டான். இது இவங்களுக்கு நல்லாத் தெரியும் போல இருக்கு. அப்படி புத்தகம் வாங்கினவங்கள்ள(ஹி ஹி என்னையும் சேர்த்து) பாதி பேர் இந்தியர்கள். அந்தப் புத்தகத்தில நாளான்னிக்கு நாம நசாவு (பஹாமாஸ்) போய் எல்லோரும் மூட்டை மூட்டையா வைரமும் வைடூரியமும்மா வாங்கிட்டு வரணும்ன்னு அவனுக்கு ஆசையா இருக்குன்னு சொல்லி சொல்லி கிளப்பி விட்டு “எலேய் வேலையப் பாருடா வெண்ணை”ன்னு நான் கத்தலாம்னு எழுந்ததும் டக்குன்னு கடைய மூடிக்கிட்டு ஓடிப் போயிட்டான். ரூமுக்கு வந்து அந்தப் புத்தகத்தை ஒழுங்கா படிச்சதும் தெரிஞ்சுது 1000$க்கு வாங்கினா 50$ இனாம்னு ஒரு கூப்பன் அதுமாதிரி பலதும் சேர்த்தா உங்களுக்கு 1000$ லாபமாம். அதுக்கு ஒரு 8000-10000 டாலர் செலவு பண்ணனுமாம். நாங்க இதுமாதிரி சீப்பா 1000$ லாபமெல்லாம் பாக்காம, ஸ்ட்ரெய்ட்டா 10000 டாலர் லாபமே பாத்துட்டோம். அந்த கதை 4ம் பாகத்தில வருது.
அந்தப் பயபுள்ள எழுந்து ஓடினதும் கப்பலின் நிகழ்ச்சிகளின் இயக்குனர் வந்து எல்லோருக்கும் அவரோட பல பல முறை சொன்ன ஜோக்ஸை எங்களுக்கு முதல் முறையா சொல்றாப்ல சொல்லி அவரே சிரிச்சுகிட்டு ஒரு ஸ்டாண்டப் காமெடியனை அறிமுகம் செய்துட்டு போனார். அந்த ஆள் பாவம், ஆபாச ஜோக் சொல்லவும் முடியாம, சொல்லாம இருக்கவும் முடியாம, “என்ன கொடுமை சரவணா”ன்னு தலைல அடிச்சுகிட்டே ஜோக் சொன்னான். அதையெல்லாம் இப்ப சொல்லப் போரதில்லை அதெல்லாம் சேத்து வெச்சு நானும் ஒரு நாள் மேடைல ஸ்டாண்டப் காமெடி செய்ய வேண்டி வந்தால் சொல்றேன்.
சரியாக 8:30 மணிக்கு எங்களுக்கு சாப்பாடு போடுவதாக டைம் தந்திருந்தார்கள். சரின்னு அந்த ஹோட்டலுக்குள்ள போனா, முக்காவாசி பேர் இந்தியர்கள், மீதி சீனர்கள். எங்களுக்கு சர்வரும் சீனன் அவனோட உதவியாளியும் சீனள்.
அவளுடைய வேலை சூப்பர் ஈசி.
அவள்: “மேம், வாட்டர்ர்ர்ர்ர்”
மாலதி: “யா, வாட்டர் வித் ஐஸ் அண்ட் லெமென்”
அவள்: “ஓஓஓ ஓகே ஒன் லெமனெட்”
நான் குறுக்கிட்டு: “நோ, ஷி வாண்ட் வாட்டர் வித் ஐஸ் அண்ட் லெமென்”
அவள்: “ஓகே சர்ர்ர்ர், ஒன் லெமனெட் அண்ட் வாட்டர்”
நான்: “நோ, ஒன்லி வாட்டர் வித் லெமன் அண்ட் ஐஸ்”
அவள்: “ஓகே சர்ர்ர்ர், வாட்டர் அண்ட் லெமனெட், ஐஸ் க்ரீம் ஆஃப்டர் ஃபுட்.
மாலதி: “டு யூ ஹாவ் எனிதிங் அதர்தன் லெமனெட்”
அவள்: “மேம், யு வாண்ட் அனதர் லெமனெட்”
நான் (தமிழில்): “கிழிஞ்சுது போ, அம்மா, நீ இவகிட்ட அதிகம் பேசாதே, அப்புறம் அவ பேசரமாதிரி உன் இங்லீஷும் ஆகிடப் போகுது பாத்துக்க”
அவள்: “சர்ர்ர்ர் யு வாண்ட் சம்திங் டு டிரிங்”
நான்: “லெமனெட்”
அவள்: (முகமெல்லாம் பல்லாக) “ஓ, லெமனெட் வெரி குட்”
இவள் இப்படின்னா சர்வர் அதுக்கும் மேல ஒரு படி போயிட்டான். அவன் பெயர் ஜார்ஜ். சீனனுக்கு எப்படி ஜார்ஜ்ன்னு பேர் வெச்சாங்கன்னு எனக்குத் தெரியலை அதை அவன் கிட்ட கேட்டு அவன் சொல்ற பதில் எனக்குப் புரியரதுக்குள்ள மாதுரி காலேஜ்க்கே போயிடுவாளோன்னு பயம் வந்துடுச்சு.

ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, ஆங்கிலம் சுத்தமா தெரியாம, இவங்க எல்லாம் என்ன தைரியத்தில அமெரிக்காவுக்கு வேலைக்கு வராங்கன்னு தெரியலை, நம்ம அப்பா அம்மா வராங்களேன்னு சொன்னா அவங்க இங்க வேலைக்கு வரலை (நம்ம வீட்டுல குழந்தைகளை பாத்துக்கர வேலைக்கு வராங்கன்னு சொல்லி சிண்டு முடியாதீங்க சொல்லிட்டேன்). நம்மளோட இருக்கரதுக்குத்தான் வராங்க அதனால அவங்களுக்கு நல்லா ஆங்கிலம் பேச வரலைன்னா பரவாயில்லை. இவங்க எல்லாம் இப்படி வரதுக்கு அவங்க வருமானமும், அவங்களோட சர்வைவல் எண்ணமும்தான்னு நினைக்கிறேன். அந்த பெண்ணுடன் நடந்த டைலாக்கை கொஞ்சம் காமெடிக்காக இங்க போட்டாலும், அந்தப் பெண்ணையும் ஜார்ஜையும் நினைச்சா பாவமாவும் இருக்கு, பாராட்டவும் தோணுது.
இப்படியாக எங்களின் முதல் நாள் கப்பலில் முடிந்தது.

அடுத்தப் பதிவில கோகோகே பீச்சுக்கு கூட்டிகிட்டு போய் சுத்தி காமிக்கறேன்.
-முரளி இராமச்சந்திரன்.

Tuesday, March 01, 2011

பஹாமாஸ் விஜயம் - 1

“எங்கள் பஹாமாஸ் விஜயம் (பாமா விஜயம் இல்லைங்க, தமிழ் ரொம்ப நுணுக்கமான மொழி அதனால நல்லா பார்த்து படிங்க) முதலில் பஹாமாஸுக்கு என்று ஆரம்பிக்கவில்லை. சும்மா ஒரு ரவுண்டு க்ரூய்ஸ் அதாங்க சொகுசு கப்பல்ல போய்ட்டு வரலாம்னு ஆரம்பிச்சது.”

“கோடிவீட்டு கோமளா மாமி போயிட்டு வந்துட்டாஹ, பக்கத்து தெரு பரிமளா மாமி போயிட்டு வந்துட்டாஹ, எனக்கும் அவங்க மாதிரி நாலு எடம் போய் பார்க்கனும்னு ஆசை இருக்காதா, எல்லாம் என் தலையெளுத்து, என்னை நல்லா ஆசை ஆசையா வளர்த்து இப்படி ஒரு களிமண் பொம்மைகிட்ட மாட்டி விட்டுட்டாங்களே” ன்னு உங்க வீட்டுல சொல்ற மாதிரி என் வீட்டிலயும் சொன்னாங்கன்னு நீங்க நினைச்சா “சாரி அப்படி எந்த பிட்டும் போடாம, என் நண்பன் போன வருஷம் இப்படி ஒரு ப்ரயாணம் போயிட்டு வந்து எப்படி இருந்ததுன்னு சொன்னதும் எனக்கே அப்படி ஒரு ப்ரயாணம் போயிட்டு வரணும்னு தீ பிடித்துக் கொண்டது.”

ரிச்மண்ட்டில் சிலரிடம் பேசியபோது “அதுவா, அது ஒன்னும் காசு அதிகமான விஷயம் இல்லை, ஒரு 800$ல் எல்லோரும் போயிட்டு வந்துடலாம், சும்மா சூப்பரா இருக்கும்” என்று அவர்கள் பங்கிற்கு கொஞ்சம் விசிறிவிட்டார்கள். தீ கணன்று கணன்று எரிந்து, எந்த க்ரூய்ஸ் நல்லது, எதில் என்ன கிடைக்கிறது, நம் ப்ளானுக்கு எந்த க்ரூய்ஸ் ஒத்து வரும், என்றெல்லாம் பார்த்து பிறகு ஒன்றை முடிவு பண்ணினோம். அதுவரை இது கொஞ்சம் விலை அதிகமான ஒரு சமாச்சாரம் என்பது டிக்கெட் விலையை பார்க்கும் வரை உறைக்கவில்லை. பார்த்ததும் திடீர்ன்னு ஒரு பக்கெட் பச்சை தண்ணியை தலைமேல ஊத்தினா மாதிரி ஆயிடுச்சு. இதுக்குள்ள என் பெண்கள் ரெண்டு பேரும் அவங்களுக்கு தெரிஞ்சவங்க எல்லோருக்கும் இப்படி க்ரூயிஸ் போகப் போவதாக சொல்லிட்டதாக சொல்லவும், சரி நாமதான் முன் வெச்ச காலை பின் வெக்க மாட்டோமேன்னு எங்களை சமாதானம் செய்து கொண்டுடோம் (வேற வழி). அதிலேயும் பால்கனி இருக்கனும், ரெண்டு கிங் பெட் இருக்கனும், அது இருக்கனும், இது இருக்கனும்னு வீட்டில எல்லோரும் பலப் பல கண்டிஷன்ஸ் போட்டு அதெல்லாம் இருக்கரமாதிரி ஒரு நல்ல சுப மூஹூர்த்த தினத்தில் டிக்கெட் புக் பண்ணினோம்.

என்னய்யா ஒரு ப்ரயாணத்திற்கு டிக்கெட் வாங்கிட்டு இப்படி அலுத்துகரான் இவன்னு சீப்பா நினைக்காதீங்க. டிக்கெட் வாங்கினதும்தான் தெரிஞ்சது பஹாமாஸ்ல சுத்தரதுக்கு தோதா நல்ல அரைநிஜார் இல்லை, அது இல்லை இது இல்லைன்னு சொல்லி ஒரு டப்பா சினிமால தனுஷ் பாடின மாதிரி ‘துண்ட காணோம் துணிய காணோம், தூங்கும் போது துட்ட காணோம்”ங்கர கதையா செலவுமேல செலவு செய்து ஒரு வழியா ப்ரயாணத்துக்கு தயாரானோம். இதர செலவுகளை கணக்கு பண்ணினா, ஆனை அரை காசு, அங்குசம் ஆறு காசுங்கர கதையானது ஒரு தனிப் பதிவே போடக்கூடிய சமாச்சாரம்.

நல்ல வேலையா இங்கிருந்து ஃப்ளோரிடாவில் கேப் கானவரல்ங்கர இடத்துக்கு எங்களோட வேனிலேயே போகலாம்னு முடிவு செய்தோம். இந்த இடத்தில இருந்துதான் அமெரிக்க விண்வெளி ராக்கெட்கள் செலுத்தப் படுகிறது. இவர்களுக்கும் நமக்கும் (இந்தியாவிற்கும்) என்ன வித்தியாசம்ன்னா இவங்க விண்வெளி ராக்கெட்கள் எப்போதாவது வெடிக்கிறது, நம்மூரில் எப்போதாவது வெடிக்காமல் விண்வெளிக்கு போகிறது. இதிலிருந்து தெரியும் உண்மை, இந்தியாவில்தான் நல்ல வெடிக்கும் ராக்கெட்டுகள் இருக்கிறது, பின்ன என்னங்க எத்தனை வருஷமா நாம தீபாவளிக்கு வெடிக்கர ராக்கெட், பூவாண ராக்கெட்ன்னு விட்டுகிட்டு இருக்கோம். இவ்ளோ செலவு பண்ணி ஒரு ராக்கெட் வெடிக்காம சும்மா மேல போனா, பாக்கரவன்லாம் என்ன கேணையங்களா.

எல்லா ஏற்பாடுகளும் செய்யரதுக்கு முன்னாடி, என் மனைவியும் குழந்தைகளும் ஒரு கவுண்ட் டவுன் காலெண்டர் தயாரித்து தினம் ஒரு நாளை அடித்து அடித்து அவங்க பங்கிற்கு எதிர்பார்ப்பை அதிகப் படுத்திக் கொண்டே வந்தார்கள். இதுக்கு நடுவில நானும் கோபால் பல்பொடி விக்கரவன் மாதிரி வாரா வாரம் ஊர் ஊரா போய் வாரக் கடைசியில் வீட்டிற்கு வந்ததும் முதலில் அந்த காலெண்டரைப் பார்த்து இன்னும் எத்தனை நாள் இருக்கு என்று என் பங்கிற்கு கொஞ்சம் ப்ரெஷர் ஏத்தி விட்டேன்.

இதற்கு நடுவில் நான் மேற்பார்வை செய்து கொண்டிருந்த வேலை ஒரு வாரம் முன்னாடியே முடிந்துவிட என்னை ப்ரயாணம் போக இருந்த வாரம் தலைநகரத்தில் வேலை செய்ய சொல்லி அனுப்பிவிட்டார்கள். வேலை ஒன்னும் பெரிசில்லை பிடிங்கின ஆணிகள் சரியா வந்து சேர்ந்ததா, ஆணி கணக்கு சரியா இருக்கா, சேதாரம் எவ்வளவு, செய்கூலி எவ்வளவுன்னு கணக்கு போட்டு கணக்கு போட்டு எல்லாம் சரியா இருக்கா, இல்லைன்னா என்ன ஆச்சுன்னு கதை விட்டு காதுல பூசுத்தர வேலை. காலைல 8:30க்கு ஆஃபீஸ் உள்ள போனா ஹோட்டலுக்கு திரும்பி போக இரவு 10-10:30 ஆகிடும். இதுக்கு நடுவில அந்த வாரம் பனி மழை பொழியப் போகுதுன்னு சொல்லப்பட வீட்டுல எல்லாரும் கவலைப்பட ஆரம்பித்தார்கள் - அது என்ன எதுக்கெடுத்தாலும் எல்லாரும் சொல்றாங்க, சொன்னாங்க ன்னு எல்லாரும் சொல்றாப்பல நீயும் எல்லாரும்னு சொல்ல வரேன்னு நீங்களும் சொல்லாதீங்க, அப்புறம் யார் அந்த எல்லாரும்னு, எல்லாரும் கேக்கர மாதிரி நானும் கேட்பேன். மேல என்ன எழுதினேன்னு எனக்கே புரியலை உங்களுக்கும் புரியலைன்னா கவலைப் படாதீங்க. அடுத்து படிங்க.

என்ன சொல்லிகிட்டு இருந்தேன், வீட்டுல கவலைப் பட ஆரம்பிச்சாங்கன்னுதானே, கரெக்ட், ஆனா அவங்க கவலைப் பட்டது நான் எப்படி தலைநகரத்தில இருந்து கொட்டர பனில வீடுவருவேன்னு இல்லை, எப்படி ப்ரச்சனை இல்லாம கப்பல்ல போகப் போறோம்ன்னு. என்ன, எல்லா வீட்டிலயும் இதே கதைதானா. சரி சரி அத வேற ஒரு பதிவுல பார்க்கலாம். ஒருவழியா ஒரு 8 மணிநேரம் ப்ரயாணம் செய்து தலைநகரத்தில இருந்து ஃப்ளோரிடா போக இருந்த தினத்திற்கு முன் தினம் வீடு வந்து சேர்ந்தேன். மட மட வென்று எல்லா ஏற்பாடுகளும் செய்து மறுதினம் மதியம் கிளம்பி மேளதாளங்கள் எதுவும் இல்லாமல், நான் எப்போது ஊருக்கு போனாலும் வீடு வரை வந்து கண்டிப்பாக இவன் ஊருக்கு போகிறானா, குறைந்த பட்சம் 10 நாளாவது இவன் தொல்லை இல்லாமல் இருக்கலாமா என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் என் ‘ஆத்மார்த்த’ நண்பர்களும் வழியனுப்பாமல் ஃப்ளோரிடா நோக்கி எங்களது ரதத்தை செலுத்தினோம்.

மறுதினம் மதியம் சொகுசு கப்பல் கிளம்பர போர்ட்டுக்கு பக்கத்திலேயே ஒரு நல்ல தங்கும் இடம் போய் சேர்ந்தோம்.

பக்கத்தில் இருந்த பீச்சில் காலார நடக்கும் போது ஒரு ஸ்டிங் ரே கிடக்க, அதை தொட்டால் ‘கதை கந்தலாயிடும்’ என்று மனைவியும் குழந்தைகளும் பயப்பட, அதி பயங்கர தைரியசாலியான நான் அவர்களுக்காக என் தைரியத்தை மறைத்துக் கொண்டு ஒரு புகைப் படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். ஒரு சின்ன நடுக்கம் கூட இல்லாமல் எப்படி துல்லியமாக படமெடுத்திருக்கிறேன், என்னை பார்த்து பயம் பயந்து ஓடிடும்.
இப்படி இரண்டு நாட்கள் கொண்டாட்டமாக இருந்து விட்டு மூன்றாம் நாள் மதியம் மேலே இருக்கும் கப்பலுக்கு போய் சேர்ந்தோம்.

மீதி அடுத்த பதிவில்.

முரளி இராமச்சந்திரன்.