Showing posts with label குவீன்ஸ் ஏஞ்சல். Show all posts
Showing posts with label குவீன்ஸ் ஏஞ்சல். Show all posts

Tuesday, August 11, 2009

நியூயார்க் குவீன்ஸ்'ல் ஒரு ஏஞ்சல்!


ஒவ்வொரு வார நாளிலும் காலை ஏழு மணி முதல் மாலை ஏழு மணி வரை நியூயார்க்'ல் குவீன்ஸ் நகரத்தில் பலர் வீதியோரங்களில் கட்டிட வேலை, தோட்ட வேலை போல பல வேலைகளுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் பலர் முறையாக குடியேற்றம் அல்லது விசா பெறாமல் வந்த லத்தினிய, தென்-அமெரிக்க மக்களாவார்கள், மற்றும் பலர் தமது குடும்பத்தை விட்டு இங்கு பணம் சேர்க்க வந்தவர்கள். இவர்களுக்கு இந்த கடின காலத்தில் வேலை கிடைப்பது மிக அரிதாகிவிட்டது. வேலை கிடைக்காவிடில் அந்த நாளில் உணவும் கிடையாது.
கடந்த 2004- முதல் இவர்களுக்கு தினமும் இரவு ஒரு வேளையாவது சூடான உணவு கிடைத்துவருகிறது. அதற்கு காரணம் 21 வருடத்திற்கு முன் கொலம்பியாவிலிருந்து முறையாக குடியேற்றம்/விசா பெறாமல் இங்கு வந்து கஷ்டப்பட்டு முன்னேறிய 43 வயதான ஹொர்ஹெ (ஜோர்ஜ்) முனோஸ், இவரை எல்லோரும் 'கார்டியன் ஏஞ்சல்' என்று புகழ்கின்றனர்! மேலும் படித்தால் நீங்களும் அதை ஆமோதிப்பிர்கள்.
ஒவ்வொரு இரவும் சரியாக 9:30 மணிக்கு குவீன்ஸ் நகரத்தில் 73 வது தெருவிற்கு தனது வெள்ளை வேனில் வீட்டில் சமைத்த உணவுடன் ஜோர்ஜ் முனோஸ் வந்துவிடுவார். சுமார் 100 முதல் 150 பேர் இந்த உணவுக்காக காத்திருப்பார்கள். பல நியூயார்க் மக்கள் நன்றியளிக்கும் நாள் (Thanksgiving) அன்று தங்கள் சர்ச்'ல் ஒரு வேளை உணவு அளிப்பது வழக்கம். ஆனால் ஜோர்ஜ்க்கு அது மற்றுமொரு சாதரண நாள்!

“ஒவ்வொரு இரவும் ஜோர்ஜ் இங்கு தவறாமல் வந்துவிடுவார்.,” என்கிறார் ஒரு தொழிலாளி. “மழை, புயல், காற்று, என்ன ஆனாலும் தவறாமல் வந்துவிடுவார். எங்களுக்கு ஒரு வேளை உணவாவது தருவது முக்கியம் என நினைக்கும் ஜோர்ஜ், எங்களை பொருத்தவரை ஒரு ஏஞ்சல்.”
“கடவுள் உங்களை காக்கட்டும்,” என வாழ்த்தி கண் கலங்குகிறார் ஒரு பெரியவர். “நான் மூன்று நாட்களாக உணவில்லாமல் தவித்தேன்.”. உடனே ஜோர்ஜ் அவரிடம் புன்னகையுடன், "இனி நீங்கள் ஒவ்வொரு நாளும் 9:30 மணிக்கு இங்கு வந்தால் உணவு கண்டிப்பாக கிடைக்கும்" என்கிறார்.
ஜோர்ஜ்'கும் அங்கு வரும் பலருக்கும் இடையே உள்ள நட்பு மேலும் நெருக்கமானது! "யுரிப், உனக்கு இன்னும் கொஞ்சம் காபி வேண்டுமா?" என்று ஒருவரை பார்த்து கேட்கிறார். மற்றொருவரிடம், "சைமன், இன்னும் கொஞ்சம் பாஸ்தா வேண்டுமா? " என்கிறார்.
ஒருவகையில், இவர்களுக்கு ஜோர்ஜ் எவ்வளவு முக்கியமோ அதைவிட ஜோர்ஜ்'கு இவர்கள் முக்கியம். இவர்களால் தான் தனது வாழ்கைக்கு ஒரு அர்த்தம் இருப்பதாக கூறுகிறார் ஜோர்ஜ்.
“எனக்கு தெரியும், இவர்கள் எனக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறார்கள் என்று. இவர்களிடம் நான் கொடுக்கும் உணவினை உண்டபின் காணும் மகிழ்ச்சி எனக்கு இந்த சேவைக்கு கிடைக்கும் பரிசாக நினைக்கிறேன்!" நெகிழ்கிறார் ஜோர்ஜ்!

இந்த சேவைகளை செய்ய நல்ல மனது மட்டும் போதுமா?! இதற்காகும் செலவுகள் எல்லாம் ஜோர்ஜ்'இன் $600 பள்ளி பேருந்து ஓட்டுனர் வேலை செய்து வரும் வார சம்பளத்திலிருந்து வருகிறது என்பது மேலும் ஆச்சர்யம்! இவருக்கு உதவியாக 66-வயதான தாயாரும், ஒரு சகோதரியும் மட்டுமே!
ஒவ்வொரு நாளும் காலையில் 4:30 மணிக்கு எழுந்து தன்னிடம் இருக்கும் உணவு பொருட்களை கணக்கு எடுத்து தேவையானவற்றை குறித்துகொள்கிறார். வேலையிலிருந்து வீட்டிற்கு வரும் வழியிலே தாயிடம் அன்றைய இரவு மெனுவிற்கு தேவையானவற்றை கூறிவிடுகிறார். வேலைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது தேவையானவற்றை வாங்கி வந்துவிடுவார். வீட்டிற்கு வந்தவுடன் சமையல் ஆரம்பமாகிறது.
இவருக்கு சில நண்பர்கள் உண்டு. ஆனால் எந்த பொழுதுபோக்கும் கிடையாது! இதை ஆரம்பித்ததிலிருந்து ஒரு சினிமா கூட போனதில்லை என்கிறார்! இவரது சகோதரி "அவருக்கு இதை தவிர வேறு வாழ்கை இல்லை. ஆனால் மிக பெரிய மனது இருக்கிறது!" என்கிறார்.

இவருக்கு சில மெக்சிகன் உணவகங்கள் தங்களிடம் மீதமுள்ள உணவுகளை கொடுத்து உதவுகிறார்கள். பல நண்பர்கள் உணவிற்கு தேவையான பொருட்களை கொடுத்து உதவுகிறார்கள்.
“எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நல்ல காலை உணவும் கொடுக்க இயலும். ஒவ்வொரு நாளும் கடவுள் உதவ எனக்கு கொடுக்கும் நல்ல வாய்ப்பாக இதை நினைக்கிறேன்" என்று புன்னகைக்கிறார் ஜோர்ஜ். உதவி செய்ய பணம் இருந்தால் போதாது, மனம் இருப்பது முக்கியம் என்பதற்கு ஜோர்ஜ் முனோஸ் சிறந்த எடுத்துகாட்டு. இவருக்கு கடவுள் நல்ல ஆயுளை கொடுக்க வேண்டுவோம்.
இவரது அறக்கட்டளை விபரங்கள் www.anangelinqueens.org என்ற தளத்தில் காணலாம்.

மேலும்:
http://www.cnn.com/SPECIALS/cnn.heroes/archive09/jorge.munoz.html
http://www.facebook.com/group.php?gid=14835060244