Showing posts with label குற‌ள். Show all posts
Showing posts with label குற‌ள். Show all posts

Tuesday, October 06, 2009

திருக்குறளின் வாரிசாக "திருக்குற‌ள் காவியா"!



திருவள்ளுவர் தவமாய் தவமிருந்து எழுதிய அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாக அலசி ந‌ம்மை மூக்கில் விர‌ல்வைக்க‌ வைக்கிறார், இவர். பார்வையாள‌ர்க‌ள் ப‌குதியிலிருந்து இந்த‌க் குற‌ள் வ‌ருவ‌து எந்த அதிகார‌த்தில்? குற‌ள் எண் 412 எப்ப‌டி துவ‌ங்குகிற‌து? "இக‌லின் மிக‌லினி" என்று துவ‌ங்கும் குற‌ள் எந்த‌ அதிகார‌த்தில் வ‌ருகிற‌து? அத‌ன் குற‌ள் எண் என்ன? "முய‌ங்க‌ப்பெறின்" என்று முடியும் குற‌ள் எத்த‌னையாவ‌து குற‌ள்?.....இப்ப‌டிப் ப‌ட‌ப‌ட‌வென‌ பார்வையாள‌ர்க‌ள் வினாக்க‌ளை விசிறிய‌டித்து வாய் மூடும் முன் வாய் திற‌க்கிறார் மிகச்ச‌ரியான‌ விடையுட‌ன்!

திருவள்ளுவர் இன்றைக்கு இருந்தால் இவரையே தன் வாரிசாக அறிவித்திருப்பார்.

யாரிந்த‌ப் பெரும்புல‌வ‌ர் என்று உங்க‌ள் புருவ‌ம் ச‌ற்றே விரிகிற‌தா? ஒரு சிறுமி என்றால் வியந்து விரியாம‌ல் என்ன‌ செய்யும்? இன்னும் இதில் விய‌ப்பு என்ன‌வென்றால், தாய்த் த‌மிழ‌க‌த்தில் அன்றாடம் தமிழ் பேசி வளர்ந்த சிறுமியல்ல;தும்மினால் ஆங்கிலம்; இருமினால் ஆங்கிலம் என்ற அமெரிக்க மண்ணில் வளர்ந்தசிறுமி என்பது தெரிந்தால் பெருவியப்பே ஏற்படும் அல்லவா?

சிகாகோ தமிழ் பள்ளிகள் இணைந்து நடத்திய‌ விழாவில் அசைந்தாடி மேடையேறிய அந்தச் சின்னஞ்சிறு சிறுமி,"தன் நினைவிலூறிய‌ திருக்குறளைப் பாடலாகப் பாடி, தனக்கு பிடித்த குறள்களைக் கூறி, அதன் அதிகாரங்கள் கூறி, கூடி இருந்தவர்களைக் கவர்ந்தார்.

பட்டம்....

சிறுமியின் திறமையை முற்றிலுமாக அறிய சோதனையில் ஈடுபட்ட மாணக்கர்கள் கேட்ட குறள் எண்களுக்கும், ஆசிரியர்கள் கேட்ட குறள் அதிகாரங்கள் எண்களுக்கும், பெற்றோர்கள் கேட்ட உதடு ஒட்டாத குறளையும், வானத்தையும், மலையையும், கடலையும் விட பெரியவை என்னென்ன எந்தெந்தக் குறளில் அமைந்துள்ளது? அந்தக் குறளின் பண்புப் பெருமைகளையும் சற்றும் பிசிறடிக்காமல் சொல்லி குறளில் தன் ஆழ்ந்த ஈடுபாட்டை குறையின்றி வெளிப்படுத்த அரங்கம் கரவொலியில் அதிர்கிறது. கரஒலி எழுப்பியவர்கள் இருக்கையிலிருந்து எழுந்து மீண்டும் கரஒலி எழுப்பி ஆரவாரிக்கிறார்கள். குறையின்றி நிறைவாகக் குறள் சொன்ன சிறுமிக்கு உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையின் இயக்குநர் இராம்மோகன் திருக்கரங்களால் "திருநிறைசெல்வச்சிட்டு" என்ற பட்டமளித்து மரியாதை செய்யப்படுகிறது.

குறளுக்கு ஒரு டாலர்

சிகாகோ, தமிழ் பள்ளி விழாவில் அதிக திருக்குறள்களை கற்று, நினைவில் பதிக்கும் மூன்று மாணாக்கர்களுக்கு ஒவ்வொரு குறளுக்கும் ஒரு டாலர் (dollar) அளிக்கப்படும் என்று காவியாவின் திறனை இங்கு தமிழ் கற்கும் ஒவ்வொரு மாணாக்கரும் அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த விழாவில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வாசிங்டன் தமிழ் சங்கம், டெக்சாசின் டல்லாஸ்ஃபெட்னா விழா,ஹூஸ்டன் பாரதி கலைமன்றம் விழா, ஆஸ்டின் தமிழ் சங்க விழா என்று தமிழ் மேடைகளில் திருக்குறள் புகழ்பாடிய காவியாவை இப்போது அமெரிக்காவில் "திருக்குறள் காவியா" என்றால் எல்லோரும் அறிகிற நிலைதனைப்பெற்றிருக்கிறார்.

''ஆறுவயதில் அமெரிக்காவுக்கு வந்துவிட்டேன். எல்லாம் ஆங்கிலம் என்றாகிவிட்ட பிறகு நம் தாய்மொழியை மறந்துவிடக்கூடாது என்பதற்காக என் பெற்றோர் தமிழை நாள்தோறும் சொல்லிக்கொடுத்தார்கள். திருக்குறளும் அவற்றில் ஒன்று. பத்துவயதில் ஒரேவாரத்தில் 45 குறள்களை மனப்பாடம் செய்தேன். அப்போது முயற்சி செய்தால் 1330 குறள்களையும் படித்துவிடலாம் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னதை ஒரே வருடத்தில் அத்தனை குறளையும் மனப்பாடம் செய்து 2005ம் ஆண்டு 1330 குறள்களையும் சொல்லும் திறன் பெற்றேன். முதன் முதலில் வாஷிங்டன் தமிழ்ச்சங்கவிழாவில் கலந்துகொண்டு சொன்னேன். சிகாகோவில் என்னை அழைத்து கெளரவப்படுத்தியதை நான் பெருமையாகக் கருதுகிறேன். 1330 குறள்களையும் ஆங்கிலத்திலும் படிக்கவேண்டும் என்று இப்போது அதில் பயிற்சி பெற்றுவருகிறேன். குறளோவியம் தீட்டிய முதல்வர் கலைஞர் அவர்களையும் கவிஞர்.கனிமொழி எம்.பி.அவர்களையும் சந்திக்கக்கூடிய பெருவாய்ப்பைப் பெற்றதை பெருமையாகவும் என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணமாகவும் கருதுகிறேன்'' என்றார்.

உங்கள் வாழ்க்கையின் இலட்சியம் என்ன என்று கேட்ட‌போது,"செய்யும் செயலை உண்மையாகவும் முழுமையான‌ ஈடுபாட்டுடனும் செய்வது. செய்யும் தொழிலும், ஈட்டும் பெருளும் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் நடப்பது" என்று சொல்லி அறிவின் முதிர்ச்சியையும் வெளிப்படுத்தினார் காவியா.

திருவள்ளுவர் கூறியுள்ள அறிவுரைகளில் எதையாவது நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறீர்களா? என்ற வினாவுக்கு,"செய் நன்றி அறிதல், பொறுமை, அடக்கம் முதலான நற்பண்புகளை பின்பற்றி நடக்கிறேன்" என்றார்.

உங்களையொத்த‌ வ‌யதுக் குழ‌ந்தைக‌ளுக்கு நீங்க‌ள் சொல்ல‌விரும்புவ‌து என்ன? என்று கேட்டு முடிக்கும் முன்,"பெற்றோர் சொல்படி நடக்க வேண்டும். பல்துறை திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் தாய் மொழியில் பேச வேண்டும்." என்று விடையளித்தார்.

10ம் வகுப்பு பயிலும் இவர், பள்ளியில் ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்ச் மொழிகளைக் கூடுதலாக‌ப் படிப்ப‌தாக‌வும், கர்நாடக இசை, புல்லாங்குழல்,பரத நாட்டியம் ஆகியவற்றின் மீது ஆர்வம் ஏற்பட்டு இவைகளை முறையாக கற்றுக்கொள்வதாகவும் ஓய்வு நேரங்களில் ஓவியம் தீட்டுவேன் என்றும் தம் எண்ணங்களை வெளிச்சமிட்டுக்காட்டினார்.

புறங்கூறுவது பிடிக்காது என்று கூறும் இவர், இயற்கை அதிசயங்கள், வரலாற்று முக்கியம் வாய்ந்த இடங்களை சுற்றிப்பார்ப்பது, பெற்றோரிடம் இரவு படுக்கும் முன் கதை கேட்பது எல்லாம் எனக்குப் பிடித்தமானது என்கிறார்.

சிகாகோ நகரில் மகளுக்கு பட்டம் கொடுத்தபோது தாயையும் பாராட்டிக் கெளரவித்தார்கள். "ஈன்ற‌ பொழுதின் பெரிதுவ‌க்கும் த‌ன் ம‌க‌னைச் சான்றோன் என‌க்கேட்ட‌ தாய்" என்பது குறள். இங்கே உங்கள் ம‌களால் அந்த‌ நிலையை நிச்சயம் எய்தியிருப்பீர்க‌ள். அந்த‌ச்சூழ‌லில் என்ன‌ நினைத்தீர்கள் என்று காவியாவின் அம்மா தேன்மொழியிடம் கேட்டபோது பிரகாசமாய்ச் சொன்னார். "சிகாகோ நகர விழாவில் காவியாவை கௌரவித்தது பெருமையாக இருந்தது. அதை விட, அடுத்து வரும் ஆண்டுகளில் திருக்குறள் ஒப்புவிக்கும் குழந்தைகளுக்கு குறள் ஒன்றுக்கு 1 டாலர் பரிசு அறிவித்து ஆர்வத்தை ஏற்படுதியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

காவியாவுக்கு என்ன‌ மாதிரியான‌ ஊக்க‌ம் த‌ந்து திருக்குற‌ளை ம‌ன‌ப்பாட‌ம் செய்ய‌வைத்தீர்க‌ள் என்று கேட்க‌,"

ஒரு வாரத்தில் 45 குறள்களை உன்னால் படிக்க முடியும் என்றால் 1330 குறள்களையும் கொஞ்சம் முயற்சி செய்தால் கண்டிப்பாக படித்துவிடலாம் என்றும், அது உனக்கு தன்நம்பிக்கையும் அளிக்கும் என்றும், முதலில் உற்சாகம் ஊட்டும் சில குறள்களை அவளுக்கு சொல்லி, அதற்கு சிறுகதைகளையும் சொல்லி ஆர்வத்தை ஏற்படுதினோம்," என்றார் பெருமித‌த்தோடு.

காவியா எதிர்கால‌த்தில் ஒரு ம‌ருத்துவ‌ராக‌, பொறியாள‌ராக‌...என்ன‌வாக‌ ஆக‌ வேண்டும் என்று த‌யார்ப‌டுத்துவீர்க‌ளா? அல்ல‌து ம‌க‌ள் விருப்ப‌த்துக்கு விட்டுவிடுவீர்க‌ளா? என்று காவியாவின் த‌ந்தை ப‌ன்னீர்செல்வ‌ம் அவ‌ர்க‌ளைக் கேட்க‌,"எதிலும் கட்டாயப்படுத்த மாட்டோம். அவள் விருப்பத்தை அறிந்து, அதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து, நாங்கள் மூவரும் கலந்து முடிவு செய்வோம்," என்றார்.

பொதுவாக‌ உங்க‌ள் மக‌ளைப்ப‌ற்றி நீங்க‌ள் பெருமைப்ப‌டுவ‌து எதில்? என்று கேட்க,"எதிலும் உண்மையாக இருப்பாள். எல்லோரிடமும் அன்பாக இருப்பாள். வீட்டில் நான் எதாவது சிறு தவறு செய்தாலும் தைரியமாக உடனே என்னை திருத்துவாள்," என்று சொல்லி காவியாவை பார‌தியின் புதுமைப்பெண்ணாக‌ ந‌ம் க‌ண்முன் கொண்டுவ‌ந்து நிறுத்தினார்.

உங்க‌ள் ம‌க‌ளுட‌ன் முத‌ல்வ‌ர் ம‌ற்றும் க‌னிமொழி எம்.பியைச் ச‌ந்திக்க‌ நேர்ந்த‌ நிக‌ழ்வு குறித்து....என்ற கேள்விக்கு,"திருக்குறளைப் படித்த காரணத்தினால் தான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என் மகள் மூலம் எனக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு...." என்று மகளின் பெருமை கண்க‌ளில் மின்ன‌லிட‌ச் சொன்னார், காவியாவின் அப்பா பன்னீர்செல்வம்!

சுப்ரபாதம்,கந்தசஷ்டி கவசம், திருப்புகழ், திருப்பாவை மற்றும் பல பக்திப்பாடல்களையும் சுலோகங்களையும் அடிபிறழாது சொல்லுவதில் வல்லவராக இருக்கிறார் காவ்யா. திருக்குறளில் புலால் மறுத்தல் அதிகாரத்தை என்றைக்கு படித்தறிந்தாரோ அன்று முதல் புலால் உண்பதையே அடியோடு நிறுத்திவிட்டார் என்பது கூடுதல் தகவல்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள காவியா விரைந்து உட‌ல் நல‌ம்பெற‌வும் அமெரிக்காவில் அமெரிக்கையாக‌ ஆங்கில‌த்தில் திருக்குற‌ளை விரைவில் ப‌ர‌ப்ப‌வும் வாழ்த்தி விடைபெற்றோம்
ஆல்ப‌ர்ட்,விஸ்கான்சின்,அமெரிக்கா
Thanks to Dinamani
காவியாவிற்கு உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை "திருநிறைசெல்வச்சிட்டு" விருது