Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Thursday, August 07, 2014

நாயோட்டு மந்திரம் ...


அனைத்தும் மறந்த‌ அவ‌ச‌ர‌ உல‌கில், ஒரு ந‌ண்ப‌ருக்குத் தொலைபேசி, க‌தைக்க‌லாம் என்றால் கூட‌ முடிவ‌தில்லை.  ஒன்று ந‌ம‌க்கு நேர‌மிருப்ப‌தில்லை, அப்படியே அழைத்தாலும் ம‌றுமுனையில் ந‌ண்ப‌ருக்கு நேர‌மிருப்ப‌தில்லை.  எங்கூருப் ப‌க்க‌ம் கிழ‌விக‌ள் கூறும் ஒரு ப‌ழ‌மொழி தான் நினைவிற்கு வ‌ருகிற‌து.  'நாய்க்கு நிற்க நேரமில்லை உட்கார இடமில்லை', என்ப‌து போன்ற‌ ஒன்று!  இன்றைய‌ வாழ்விற்கு இது எத்துனை பொருத்த‌ம்.  சமீபத்தில், வெகு நாள் க‌ழித்து அழைத்த‌ ந‌ண்ப‌ர், ரிச்ம‌ண்ட் மிடில் ஏஜ் மார்க‌ண்டேய‌ரிட‌ம் இது ப‌ற்றி பேசிய‌போது, 'அத‌ ஏன் ஓய் ஞாப‌க‌ப்ப‌டுத்தரீர், இதோ, இப்ப‌க் கூட‌ அங்க‌ இங்க‌னு ஓடிகிட்டு இருக்கேன், எதுவும் உருப்ப‌டியா இல்ல'னு அங்க‌லாய்த்துக் கொண்டார் :)

இது இப்ப‌டி இருக்க‌, இவ்வ‌ச‌ர‌த்தில் ந‌ம‌து ர‌சிப்புத் திற‌னும், சிந்தனைத் திற‌னும் எப்ப‌டித் தாக்குப் பிடித்து நீடிக்கும்?  ப‌த்தாத‌ற்கு, சித்த‌ர்க‌ள் த‌ங்க‌ள் பாட்டுக்க‌ளில், 'இலை ம‌றை காய் மறை'யாக‌ப் பாடிச்சென்ற‌ க‌ருத்துக்க‌ள் தான் எத்த‌னை ?!  அவ‌ற்றை எல்லாம் ஆய்ந்து ப‌டித்து இன்புற‌ ந‌ம‌க்கெல்லாம் நேர‌மெங்கே ?  ந‌ம்ம‌ அவ‌ச‌ர‌ம் அவ‌ர்க‌ளுக்கு தெரியாம‌ல் போன‌தே, ப‌டித்த‌வுட‌ன் புரிய‌ற‌மாதிரி எழுத‌ வேண்டாம் :)

ச‌மீப‌ கால‌மாக‌க் கேட்டுத் திளைக்கும் அரும‌ருந்து, திருமூல‌ரின் திரும‌ந்திர‌ம்.  'த‌ண்ணீர் வாளிக்குள் த‌லையைக் க‌விழ்த்து' பின்னாளில் ந‌ட‌க்க‌ப் போவதை முன்னாளில் க‌ண்ட‌தாக‌ நாஸ்ட்ர‌டாம‌ஸைச் சொல்வ‌ர் சில‌ர்.  அதுபோல‌ திருமூல‌ரும் ஏதாவ‌து டெக்னிக் ப‌ய‌ன்ப‌டுத்தியிருப்பாரோ ?  சாதார‌ண‌ ம‌னித‌ன் எழுதும் பாட‌ல்க‌ள் அன்று அவை.  மேலோட்ட‌மாக‌ ஒரு க‌ருத்தும், ஆழ்ந்து உட்செல்லச் செல்ல‌ ... இன்றைய அறிவிய‌ல் விய‌க்கும் வ‌ண்ண‌ம் அன்றே எழுதி அருளிய‌வ‌ர்.

நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம்
நாயோட்டு மந்திரம் நாத னிருப்பிடம்
நாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி
நாயோட்டு மந்திரம் நாமறி யோமன்றே.

என்ற பாட‌லை ப‌ல‌முறை கேட்டிருந்தாலும், 'நாயோட்டு ம‌ந்திர‌ம்' என்றால் என்ன‌ ?  இப்ப‌டி ஒரு திருமுறைப் பாட‌லில், கேவ‌ல‌ம் நாயின் ம‌ந்திர‌ம் என்று சொல்லியிருக்கிறாரே என்று விய‌ந்த‌துண்டு.  அது என்ன‌வென்று அறிந்து கொள்ள‌ நேர‌மின்றி, ப‌ல‌ நாட்க‌ள் சென்று, எப்ப‌டியோ நேர‌ம் ஒதுக்கி, இணைய‌க் க‌ட‌வுளிட‌ம் முறையிட்ட‌தில், இத‌ன் பொருள் கிட்டிய‌து.  அது,

"நயப்பது நாய். நயக்கப்படுவோன் நாயன். நாயானது உயர்ந்த பண்பை உடையது. அவை தலைவனை அறிதல், தலைவன் உடைமையை உயிரினும் சிறப்பாக ஓம்புதல், தலைவன் துன்புறுத்தினும் இன்புறுத்தல், தலைவன் ஏவிய வழிநிற்றல், நன்றி மறவாமை, தலைவன் பொருட்டுத் தன்னுயிரையும் கொடுத்தல், மோப்பம் உணர்தல் முதலிய பலவாம். அத்தகைய நாய் மறந்து பிறரில் புகுமேல் அதனை ஓட்டுதற் பொருட்டு இகழ்ச்சிக் குறிப்பாகச் சொல்லும் சொல். 'சீ' என்பதாகும்."

இன்னும் சற்றே ஆழ்ந்து பொருள் கொள்ள மற்றொரு வலைத்தளம் தரும் தகவல்,



"மகா காரண பஞ்சாக்கரமாகிய `சி` என்னும் ஓர் எழுத்தே நான்கு வேதப் பொருள்களாய் விரிந்தது. அதுவே கடவுளது இருப்பிடம் எனவே, தத்துவாதீதமான ஒளிப்பொருளும் அதுவேயாம். ஆகவே, சித்தர்கள் `நாய் ஓட்டும் மந்திரம்` என நகை விளைக்குமாறு மறைத்துக் கூறுகின்ற அம்மந்திரத்தைப் பிறர் `இன்னது` என அறிதல் இயலாது."

இது போல‌ ப‌ல‌ நுண் க‌ருத்துக்க‌ளை உள்ள‌ட‌க்கி ந‌ம்மை என்றும் வ‌சீக‌ரிக்கும் திரும‌ந்திர‌ம்.  நேர‌ம் விளைகையில், மேலும் சில பாடல்கள் பார்க்கலாம்!

Thursday, May 16, 2013

திருக்குறள் கணிணி மென்பொருள் - 2

சமீபத்தில் பதிந்த திருக்குறள் கணிணி மென்பொருள் பதிவின் தொடர்ச்சியாக, சில நண்பர்களின் வேண்டுகோளின் பேரில், சிறிது மேம்படுத்தப்பட்ட மென்பொருளைக்  கீழ்க்கண்ட சுட்டியில் தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.  மேல் விபரங்களுக்கு, மென்பொருளின்  F1 விசையை அழுத்தினால், தகவல் பெறலாம்.





நம் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல.


திருக்குறள் கணிணி மென்பொருள் முந்தைய பதிப்பு

http://blog.richmondtamilsangam.org/2013/05/blog-post.html




Monday, May 06, 2013

திருக்குறள் ‍- கணிணி மென்பொருள்

அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு மனித வாழ்விலும் ஏதோ ஒருவகையில் கூடவே வரும் பழம் தமிழ் இலக்கியங்களுள் திருக்குறள் மிக முக்கியமான படைப்பாகும்.

மனனத்தில் தொடங்கிய கல்வி, எழுத்துக்களாய் உருப்பெற்று, ஏடுகளில் அழுந்தி, தாள்களில் தவழ்ந்து, இன்று மின்னணுவியலில் பயணிக்கும் இக்காலத்தில், என்னால் ஆன ஒரு சிறு முயற்சியே இது !

திருக்குறளை தமிழிலும் ஆங்கிலத்திலும், வரிசையாகவோ, அல்லது குறிப்பான வரிசை அன்றியோ, சிறு கட்டமைத்த‌ கால அவகாசத்தில் காட்டுவதே இத் திருக்குறள் மென்பொருளின் திட்டம். குறிப்பிட்ட எண் கொண்ட குறள் தேடும் ஆற்றலும் இதில் கண்டு பயன் பெறலாம்.

கீழ்க்கண்ட சுட்டியில், இம்மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணிணியில் முயற்சித்துப் பாருங்கள்.


671 முதல் 680 குறள்களுக்கான ஆங்கில விளக்கம் கிடைக்கப் பெற‌வில்லை. தகவல் இருந்தால்/அறிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

இம்மென்பொருளின் சில திரைக்காட்சிகள்:

முதல் பக்கம்

குறிப்பிட்ட குறள் எண் தேடல் பக்கம்

அசைவூட்டக் கட்டமைப்புப் பக்கம்


தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரப்புவோம் !

நன்றி !!

Wednesday, March 21, 2012

தலபுராணங்கள் வளர்ந்த கதை


பெங்களூரில் இருந்த போது என் கர்நாடக நண்பர் ஒருவர் திருச்சிக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் போய்விட்டு வந்ததாகச் சொன்னார். உங்கள் பயணம் எப்படி இருந்தது என்று கேட்டேன்.  அருமையான ஊர், காவிரி நதி, ஸ்ரீரங்கம், திருவானைக்கோயில், மலைக்கோட்டை எல்லாம் பார்க்க அற்புதமாக இருந்தது, எங்கு பார்த்தாலும் பசுமையான காட்சிகள் என்று அடுக்கிக் கொண்டே போனார். எனக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. சொந்த ஊரை ஒருவர் புகழ்ந்து பேசுவதைக் கேட்டால் யாருக்குதான் மகிழ்ச்சியாக இருக்காது?

 அடுத்து அவர் திருச்சி நகரம் பற்றி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னேன்.தாயுமானவர் கோயிலைப் பற்றி கேட்டார். அவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் விளக்கமாக ஒரு கதையைச் சொன்னேன்..

 திருச்சியில் வணிக சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், குடும்பத்தில் அனைவரும் சிவபக்தர்கள்.இளைய தலைமுறையைச் சேர்ந்த பெண் ஆழ்ந்த பக்தி கொண்டவள். திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, அந்த பெண் கருத் தரித்திருக்கிறாள். பெண் கரு தரித்திருக்கும் செய்தி அறிந்த பெண்ணின் பெற்றோர்கள் திருச்சிக்கு வந்து பெண்ணைப் பார்த்து நலம் விசாரித்தார்கள். திரும்பவும் பிரசவ சமயத்தில் முன்பாகவே வந்திருந்து எல்லா உதவிகளையும் செய்வேன் என்று பெண்ணிடம் கூறிவிட்டு காவிரியின் வட கரையில் உள்ள சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்.

 பிரசவ காலம் நெருங்கிவிட்டது. காவிரி நதியில் பெரும் வெள்ளம், கரை புரண்டு ஓடும் வெள்ளப் பெருக்கினால் நதியில் படகுப் போக்குவரத்து நின்று போய்விட்டது, பெண்ணின் தாயார் வெள்ளம் சீக்கிரமே வடிந்து சரியான நேரத்தில் திருச்சி போய் பெண்ணுக்கு அருகில் இருக்க கருணை புரியும்படி சிவபெருமானை வேண்டுகிறாள்.

 பெண்ணுக்கு பிரசவ வலி ஆரம்பமாகிவிட்டது. சரியான நேரத்தில் உதவிக்கு வந்து சேராத தாயை நினைத்து வருந்தினாள் சற்று நேரத்தில் தாயார் வந்து சேர்ந்தாள்.சரியான நேரத்தில்தான் வந்திருக்கிறேன் என்று கூறியபடியே உள்ளே நுழைந்தாள். வலியில் துடித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு அம்மா மேல் கோபம். தாயிடம் சரியாக பேசவே இல்லை. நல்ல வேளையாக சற்று நேரத்தில் குழந்தை பிறந்தது. குலம் தழைக்க ஒரு ஆண்மகவை பெற்று எடுத்தாள்.

ஒரு பெண்ணுக்கு பிரசவ காலத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் தாயார் செய்து முடித்தாள். இரண்டு, மூன்று நாள் ஓடியது.

காவிரியில் வெள்ளம் வடிந்த பிறகு தொடங்கிய முதல் படகில் புறப்பட்டு தாய் திருச்சிக்கு வருகிறாள். வீட்டில் குழந்தையின் குரலைக் கேட்டு மகிழ்ச்சியோடு உள்ளே நுழைகிறாள் எல்லாம் நல்லபடியாக முடிந்ததா என்று கேட்கிறாள்.கையில் குழந்தையுடன் இருந்த பெண் எந்த பதிலும் சொல்லவில்லை. சரியான நேரத்தில் வந்து சேராததால் பெண் தன் மேல் கோபமாக இருக்கிறாள் என்று நினைத்து தாய் கேட்டாள்.

 நான் என்ன செய்யமுடியும் காவிரியில் சில நாட்களாக நல்ல வெள்ளம். படகு போக்குவரத்து அறவே இல்லை, வெள்ளம் வடிந்தவுடன் புறப்பட்டு இப்பொழுது தான் வர முடிந்தது, இதற்காக என்மேல் கோபப் படலாமா என்று கேட்டாள்.

 பெண்ணுக்கு ஒன்றுமே புரியவில்லை. திகைத்துப் போனவளாக, நீதான் ரெண்டு நாட்களாக இங்கேதானே இருக்கிறாய்? பிரசவ நேரத்தில் நீதான் பக்கத்தில் இருந்தாயே, ஏன் திடீரென்று இப்படி பேசுகிறாய்? என்று கேட்டாள்.

 ஊரிலிருந்து வந்த தாயாருக்கு எதுவும் புரியவில்லை. நான் இப்பொழுதுதானே உள்ளே நுழைகிறேன். வேறு யார் இங்கே வந்தார்கள் என்றாள். சிறிது நேர குழப்பத்துக்குப் பிறகு இரண்டு நாளாக இருந்து பணிவிடை செய்த தாயாரை தேடினார்கள், காணவில்லை.

 தாய்க்கும் மகளுக்கும் உண்மை விளங்கியது. தாயும் மகளும் வேண்டியபடியே இறைவன் கருணையோடு அந்த பெண்ணுக்கு தாயாக வந்திருந்து பிரசவம் பார்த்திருக்கிறான் என்ற உண்மை விளங்கியது.

 அதனால் சிவபெருமான் திருச்சியில் தாயுமானவராக பக்தர்களுக்கு அருள் செய்கிறார். ஆண்டுதோறும் திருச்சி தாயுமானவர் கோயிலில் செட்டிப் பெண்ணுக்கு இறைவன் மருத்துவம் பார்த்த திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

 இந்த கதையை நான் நண்பரிடம் விரிவாக சொன்னதும் அவர் மனம் நெகிழ்ந்து போனார். இது காலம்,காலமாக திருச்சியில் வழங்கி வருகிறது. இந்த கதை எந்த புராணத்தில் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது.

 இது போன்று பல ஊர்களில் அந்த ஊரில் எழுந்தருளியிருக்கும் இறைவன் தன் பக்தனுக்கு நெருக்கடி காலத்தில் அருள் செய்து காப்பாற்றிய கதை வழங்கப் படுகிறது. இது போன்ற கதைகளைக் கொண்ட பல தலபுராணங்கள் தமிழ் மொழியில் நிறைய உண்டு.

 மதுரையில் சோமசுந்தரக் கடவுள், தன் பக்தர்களை காத்து அருளிய பெருமையை விரிவாகப் பாடுவதுதான் திருவிளையாடல் புராணம். இந்த திருவிளையாடல்களை ஐந்து புலவர்கள் பல்வேறு தலைப்புகளில் பாடியிருக்கிறார்கள். ஆனால் இலக்கிய நயத்திலும் கதை சொல்லும் திறனிலும் சிறந்து விளங்கி இலக்கிய வரலாற்றில் இடம் பெற்ற நூல் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம்தான்.

 இறைவன் புட்டுக்கு மண் சுமந்த கதை, ஏமநாதன் கதை இவையெல்லாம் இந்த திருவிளையாடல் புராணத்தில்தான் வருகிறது. திருவாரூரில் உள்ள சிவபெருமான் தியாகராஜருடைய பெருமையைப் பேசும் தியாகராஜ லீலை என்ற நூலும் உண்டு. இது போன்று பல ஊர்களில் உள்ள இறைவனைப் பற்றி பாடும் நூல்களை தலபுராணம் என்று குறிப்பிடுகிறோம்.

 17, 18, 19 ம் நூற்றாண்டுகளில் மட்டும் ஏறக்குறைய இருநூறு தல புராணங்கள் எழுதப்பட்டன என்று கூறுகிறார்கள். எல்லா புராணங்களும் அந்த ஊரின் சிறப்பு, நிலவளம், அந்த ஊரில் கோயில் கொண்டுள்ள இறைவனின் பெருமை அவர் பக்தனை காக்க நிகழ்த்திய அற்புதம் இவை பற்றி பேசும். அந்த புராணங்களிலிருந்து சில வரலாற்றுச் செய்திகளையும் அறிய முடியும்.

 பொதுவாக முஸ்லீம் படையெடுப்பு தமிழ்நாட்டில் நிகழ்ந்த பிறகுதான் இத்தகைய தல புராணங்கள் தோன்றின என்று இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த கருத்து சரியானதல்ல என்பது வேறு சிலர் கருத்து. பதினான்காம் நூற்றாண்டில்தான் முஸ்லீம்கள் படையெடுத்து வந்து மதுரை, ஸ்ரீரங்கம் கோயில்களைக் கொள்ளையடித்தார்கள் ஆனால் 10,11-ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட தல புராணங்களும் உண்டு. ஸ்ரீரங்க மகாத்மியம் என்ற நூலை உதாரணமாகக் கூறலாம். மேலும் பல நூல்கள் உண்டு.

16,17-ம் நூற்றாண்டுகளில் சிற்றிலக்கியங்கள் என்று கூறப்படும் பல நூல்கள் தோன்றின. அந்த வகையில் குறவஞ்சி, பிள்ளைத்தமிழ்,பரணி, தூது, இப்படி பல வகைகளில் புலவர்கள் தமிழ் மொழியில் எழுதினார்கள். இவையனைத்தும் 96 வகைப் பிரபந்தங்கள் என்று குறிப்பிடப்படும். இவற்றில் நல்ல சுவை உள்ள நூல்களும், இலக்கிய வளம் சற்று குறைநத நூல்களும் உண்டு. முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் கற்பனை வளம் மிக்க படைப்பு. குற்றாலக் குறவஞ்சி உழவர் வாழ்வைப் பற்றி சொல்லும் நாட்டிலக்கியம்,

 சிற்றரசர்கள் தன்ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஊருக்கு தல புராணம் எழுதப்பட வேண்டும் என்று போட்டி, போட்டுக் கொண்டு புலவர்களை ஆதரித்தார்கள். அதனால்தான் எராளமான தல புராணங்கள் தோன்றின. 19ம நூற்றாண்டில் வாழ்ந்த வாழ்ந்த மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் ஆறு தலபுராணங்கள் எழுதியிருக்கிறார்.

 பிற்காலத்தில் தல புராணங்கள் தோன்றின என்றாலும் அதற்கான கருப் பொருள் நீண்ட காலமாகவே தமிழ் இலக்கியத்தில் உண்டு என்று சொல்ல வேண்டும். பக்தி இலக்கியங்களான தேவாரம், திவ்யப்பிரபந்தம் ஆகிய நூல்களில் தல புராணக் கூறுகளைக் காணமுடியும். ஒரு பாடலில் முதல் இரு அடிகளில் இறைவன் எழுந்தருளியிருக்கும் ஊரின் வளத்தையும், பெருமையையும் பாடி விட்டு அடுத்த இரு அடிகளில் இறைவன் பெருமையைப் பாடும் பாடல்களை தேவாரத்தில் பார்க்கலாம். வைணவ இலக்கியமான திவ்யப்பிரபந்தத்திலும் பார்க்கலாம்.


"கங்கையிர்ப்புனிதமாய காவிரி நடுவு பாட்டுப்
பொங்குநீர்பரந்துபாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள்மால்,இறைவன் ஈசன், கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்கனம் மறந்து வாழ்வேன் ஏழையேன் ஏழையேனே" 

 உதாரணத்துக்கு மேலேகண்ட ஆழ்வார் பாடல் ஒன்று போதும். இது போன்ற பாசுரங்களின் கருப்பொருள் பிற்காலத்தில் தல புராணமாக வளர்ந்தது.

இன்னும் சற்று பின் நோக்கிப் பார்த்தால் சங்க இலக்கியங்களிலும் ஊர்ப் பெருமையை பாடும் பாடல்களை பார்க்கலாம். பத்துப்பாட்டில் உள்ள பட்டினப்பாலையும், மதுரைக் காஞ்சியும் ஒரு வகயில் தல புராணக் கருத்துகளைக் கொண்டது என்று சொல்லலாம். ஆனால் இந்த இரு நூல்களும் இறைவன் பற்றி பாடாமல் ஊரின் வளத்தையும், பெருமையும் பற்றி மட்டும் பாடும்.

இந்த கருப்பொருள்தான் பிற்காலத்தில் பக்தி இலக்கியத்தில் விரித்து தல புராணமாக இறைவன் பெருமை பேச பயன் படுத்தப்பட்டது.

எங்கோ கைலாயத்திலும் வைகுந்தத்திலும் இருக்கும் இறைவனை தனக்கு பக்கத்தில் இருப்பதாக பக்தனை உணரச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தலபுராணங்கள் எழுதப்பட்டதாக கூறலாம். தமிழ்நாடு மாறி மாறி பல சிற்றரசர்களிடம் சிக்கி, அமைதியும் ஒழுங்கும் இல்லாமல் தவித்துக் கொடிருந்த காலத்தில் இறைவன் அவர்களுக்கு அருகில் இருப்பதாக நினைப்பது ஒரு வகையான ஆறுதலாக இருந்திருக்கும். ஆகையால் அன்றைய மக்களின் ஆன்மீகத் தேவையை பூர்த்தி செய்ய தலபுராணங்கள் தேவைப் பட்டிருக்கலாம்.  இதுப்போல கணக்கில்லாத தல புராணங்கள் தோன்றின.

இலக்கிய உரைகல்லில் உரைத்துப் பார்த்தால் திருவிளையாடல் புராணம் மட்டும் சிறந்து நிற்கிறது என்று கூறவேண்டும்.


மு.கோபாலகிருஷ்ணன்



Monday, May 12, 2008

தோட்டக்காரன்

விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்தேன். கசக்கிய கண்களுடன், வாசற் கதவை திறந்து வெளியே பார்த்தேன். ஒருவரும் இல்லை. வானம் மட்டும் லேசாக தூறிக் கொண்டிருந்தது. காற்று தான் கதவைத் தட்டியதோ என்று எண்ணியவாறே சுற்றிலும் நோட்டம் விட்டேன். யாரும் வந்து போனதற்கான அறிகுறி எதுவும் இல்லை. சிறிது நேரம் அங்கேயே நின்று எதிர்த்தாற் போல இருந்த மரத்தைப் பார்த்தேன். ஆஹா என்ன அழகு! கழுவினாற் போல் ஒரு அழகிய பச்சை நிறத்துடன் நின்றிருந்தது. இறைவனின் படைப்பில் எது தான் அழகு இல்லை?

மீண்டும் படுக்கப் பிடிக்காமல், காலைக் கடன்களை முடித்து விட்டு, குளித்து விட்டு பூஜை புனஸ்காரங்களை முடித்து அலுவலகத்திற்கு செல்ல தயாராகி இருந்தேன். சிறிது நேரத்தில் அருமை மனைவி, காலை சிற்றுண்டியுடன் வந்தாள். சாப்பிட்டு விட்டு அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

என் சக நன்பன் ஒருவன் அவனது மேஜையில் இருந்த ரோஜா செடியின் காய்ந்த இலைகளை கிள்ளி விட்டு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். அவன் பராமரிக்கும் விதத்தை வியந்து பார்த்தவாறே இருந்தேன். என் வீட்டின் முன் நின்றிருந்த மரத்தின் அதே கழுவிய பச்சை நிறம் இப்பொழுது அந்த செடியில் இருந்தது. சிறிது நேரம் நன்பனிடம் உரையாடி விட்டு என் மேஜைக்கு வந்து உட்கார்ந்தேன். என் கவனம் மீண்டும் அந்த மரத்தை சுற்றியே வந்தது. யார் அந்த மரத்துக்கு இலைகளை கிள்ளி விட்டு, தண்ணீர் விடுகிறார்கள்? என் மனம் விசுவரூபம் எடுத்து உலகெங்கும் பரவியது. இந்த மரம் மட்டும் இல்லை, மலைகளிலும், காடுகளிலும், ஆற்றோரங்களிலும் வளரும் மரங்களை யார் பராமரிக்கிறார்கள்?

இயற்கையா? இறைவனா?
யோசித்துப் பார்க்கிறேன், ஒன்றும் முடிவுக்கு வர முடியவில்லை. காற்றும் மலையும் தான் இலைகளை கிள்ளி விட்டு, தண்ணீர் ஊற்றுகிறதோ? என்ன தான் உரம் போடுகிறார்கள்? யார் போடுகிறார்கள்? யார் படைத்தார் இந்த காலங்களை? காற்றின் அசைவுகளை?
இறைவன் என்னும் தோட்டக்காரனோ?
அப்படி என்றால் "வறட்சி" என்பது என்ன? அவனின் சோம்பேறித்தனமா? புயல், வெள்ளம் என்பது அவனின் படைப்பு பிடிக்கவில்லை என்று அழிக்கும் விதம் தானோ? இது தான் அவன் பராமரிக்கும் விதம் என்றால், நாம் காண்பது அவனின் தோட்டத்தைத் தானே. அவன் தோட்டக்காரன் என்றால் அந்த தோட்டம், நாம் வாழும் உலகம் தானோ? அப்படி என்றால் அந்த தோட்டத்திற்கு யார் சொந்தக்காரன்?
இயற்கையா? இறைவனா?

தோட்டத்தின் பலனை அனுபவிப்பவன் தானே, அதன் சொந்தக்காரன். அப்படி என்றால், இந்த உலகை அனுபவிப்பவர்கள் நாம் தானே? ஆக நாம் தானே தோட்டத்திற்கு சொந்தக்காரர்கள். நாம் தோட்டத்தின் சொந்தக்காரன் என்றால் இறைவன் நம் தோட்டக்காரனோ?

நாம் யார்? இறைவன் யார்?

- வெங்கடேசன் செட்டியார்

ரிச்மண்டில் 2002ல் நடந்த இலக்கியப் போட்டியில் பங்கேற்ற படைப்புகளில் என்னைக் கவர்ந்த ஒன்று. இதை அவ்வப்போது படித்துக் கொண்டிருப்பேன். மற்ற படைப்புகளை இங்கே காணலாம்.

Monday, June 18, 2007

பொல்லாதவன்


பொல்லா தவனெறி நில்லா தவனைம் புலன்கடமை
வெல்லா தவன்கல்வி கல்லா தவன்மெய் யடியவர்பாற்
செல்லா தவனுண்மை சொல்லா தவனின் திருவடிக்கன்
பில்லா தவன்மண்ணி லேன்பிறந் தேன்கச்சி யேகம்பனே.


சத்தியமாக இது நான் எழுதியதல்ல. கிண்டலாக வேறு யாரும் சமீபத்தில் யாரும் எழுதியதுமல்ல. நம் வெண்பா வேந்தர் சதங்காவையே கொந்தளிக்க வைக்கும் ரஜினி படத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை :) நம்மை பட்டினத்தார் சில நாட்களுக்கு முன் அலைக்கழித்தார் இல்லையா? அதிலிருந்து அவ்வப்போது அவரைக் கொஞ்சம் கண்டுகொள்வது வழக்கமாயிருக்கிறது. அப்படி கண்டுகொள்ளும்போதுதான் கண்டுபிடித்தேன் திருவேகம்பமாலையில் ஒளிந்திருக்கும் பொல்லாதவனையும், பில்லாவையும். மண்சோறு உண்டுவிட்டு பால்குடம் சுமந்து செல்லும் வழியில் இதைப் பாடிக்கொண்டு சென்றால் கொஞ்சம் புண்ணியம் கிட்டும்.

மேலே இருக்கும் பாடல் எளிமையானதுதான். இதை நீங்கள் உங்களுக்கு தெரிந்த பாடல் மெட்டில் பாட முயற்சித்தால் நான் பொறுப்பில்லை.(இரண்டாவது வரியிலேயே சித்து விளையாட்டு ஆரம்பித்து விடுகிறார் பட்டினத்தார்). இந்தப் பாடலுக்கு விளக்கம் தேவையென்றால் தமிழை நீங்கள் சன் டீவியோடு நிறுத்திக்கொல்வது உத்தமம்.

இன்னொரு பாடலைப் பார்ப்போம்.


வேதத்தி னுட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப்
போதித்த வன்மொழி கேட்டிலை யோசெய்த புண்ணியத்தால்
ஆதித்தன் சந்திரன் போலே வெளிச்சம தாம்பொழுது
காதற்ற வூசியும் வாராது காணுங் கடைவழிக்கே.


இதில் மூன்றாம் அடிக்குத்தான் கொஞ்சம் உதவி வேண்டும். சூரிய சந்திர வொளிபோல ஆத்மா ஒளிமயமாகிற பொழுது(இறங்குங்காலத்தில்) மரணத்தின் பின்னுள்ள வழித்துணைக்குக் காதறுந்த ஊசியும் உடன் வாராது.

பட்டினத்தார் பாடல்கள் - திரு.வி.க. விளக்கவுரை. பொழிப்புரையும், விருத்தியுரையும் எழுதியிருக்கிறார். பல இடங்களில் மற்ற இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டியிருப்பதும் சுவையைக் கூட்டுகிறது. காதற்ற ஊசி பற்றி சொல்லும்போது, "பண்டம் பெய்கூரை பழகி விழுந்தக்கால், உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார், கொண்ட விரதமும் ஞானமும் அல்லது, மண்டி அவருடன் வழிநடவாதே" திருமந்திரம்.

அன்னையின் தேகத்தை வாழைமட்டைகள் மேலிட்டு எரியச் செய்த பாடல்:


முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே
பின்னை யிட்டதீ தென்னி லங்கையில்
அன்னை யிட்டதீ யடிவ யிற்றிலே
யானு மிட்டதீ மூள்க மூள்கவே.


தாயைப் பற்றி உருகி உருகி பாடிய பட்டினத்தார் ஏன் பெண்களை போட்டுத் தாக்குகிறார்? தாயும் ஒரு பெண்தான் என்பதை மறந்ததேனோ?
இன்னும் நிறைய இருக்கிறது. ஒரு சில பாடல்களைப்பற்றி அவ்வப்போது எழுத உத்தேசம். ரிச்மண்ட் மக்கள் கரும்பு கொண்டு நம்மை புடைக்காமலிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

கங்கை புத்தக நிலையத்தாருக்கு ஒரு வேண்டுகோள். இப்படி பொ-ரை, வி-ரை என்று சுருக்கவேண்டாம். சுருக்கவேண்டுமென்றால், பொ:, வி: என்று எழுதினால் போதும்.

Sunday, September 17, 2006

உயிருள்ள சொற்றொடர்கள்

Sept 16, 2006
நடராஜமூர்த்தி சுப்ரமணியம்

உயிருள்ள சொற்றொடர்கள் - 'தீண்டுவீராகில் எம்மைத் திருநீலகண்டம்'

நம் இலக்கியங்கள், பாடல்கள், ஏன் சினிமாவில் கூட வரும் சில சொற்றொடர்கள் நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விடுகின்றன. கதைப்போக்கும், கதாபாத்திரங்கள் அச்சொற்களைப் பயன்படுத்திய நோக்கமும், அதன் விளைவுகளும், அந்தச் சொற்றொடருக்கு ஒரு உயிரையே அளித்து விடுகின்றன. உதாரணங்களாக, 'அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்', 'எடுக்கவோ, கோர்க்கவோ', 'சபாஷ், சரியான போட்டி' இவைகளைச் சொல்லலாம். இந்த வகையில் வருவது தான், சேக்கிழாரின் பெரிய புராணத்தில் கூறப்படும் 'தீண்டுவீராகில் எம்மைத் திருநீலகண்டம்'. அதன் விளக்கம் இதோ.

சிவனடியார்களில் சிறந்த 63 நாயன்மார்களின் சரிதம் பெரிய புராணம். அவர்களில் ஒருவர் திருநீலகண்ட நாயனார். மண் பாண்டங்கள் செய்து விற்று வாழ்க்கை நடத்தி வந்த அவர், சிவபெருமானிடத்திலும், சிவனடியார்களிடத்திலும் மிகுந்த அன்பு கொண்டு தொண்டு செய்து வந்தார். சிவனிடத்தில் இருந்த பற்றினால் எந்த ஒரு காரியம் செய்தாலும், 'திருநீலகண்டம்' என்று கூறிக்கொண்டே செய்வது அவர் வழக்கம். இதனாலேயே திருநீலகண்ட நாயனார் எனப் பெயரும் பெற்றார்.

நல்ல குணங்கள் நிறைவாகப் பெற்ற அவரிடத்தில் ஒரு குறை இருந்தது. தன் மனைவி அல்லாத மற்ற மாந்தர்களிடம் பழக்கம் கொண்டிருந்தார் (இன்பத் துறையில் எளியராய் - சேக்கிழார்). இத்தனைக்கும் அவர் மனைவி குணத்திலும் அழகிலும் மிகச் சிறந்தவர் (உருவில் திருவை ஒத்தார் - சேக்கிழார்). கணவரின் செய்கையால் மனம் நொந்த அவர், திருநீலகண்டரைத் தன்னைத் தொட அனுமதிக்கவேயில்லை. அவர்கள் வாழ்க்கை இவ்வாறு நடந்து வந்தது.

ஒரு நாள், இயற்கை வேகத்தால் உந்தப்பட்டு, திருநீலகண்டர் மனைவியைத் தொட முயன்றார். தூர விலகிய அவர் மனைவி, அது மட்டுமல்லாமல் 'தீண்டுவீராகில் எம்மைத் திருநீலகண்டம்' என்று கூறினார். இதற்கு 'திருநீலகண்டர் மீது ஆணை, எம்மைத் தொடாதீர்' என்று பொருள். அவர் சொல்ல நினைத்ததோ, 'என்னைத் தொடாதீர்' என்று. சொன்னதோ 'எம்மைத் தொடாதீர்' என்று நடைமுறை வழக்கப்படி பன்மையில் (நம்ம கிட்டே விளையாடாதே என்பது போல்). இது திருநீலகண்டருக்கு 'எம்மைத் தொடாதீர்' என்று பன்மையில் உரைத்ததாகத் தோன்றியது. 'திருநீலகண்டர் மீது ஆணை, என்னைப் போல் எந்த ஒரு மாதரையும் தொடாதீர்' என்ரு கூறியதாக அவர் பொருள் கொண்டார். அது இறைவனின் திருவிளையாடல் தான். சிவபெருமான் மீது ஆணையிட்டுக் கூறப்பட்ட இவ்வாக்கியத்திற்குக் கட்டுப்பட்ட அவர் 'இந்தக் கணம் முதல் உன்னை மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணையும் தொட மாட்டேன்' என்று உறுதி செய்து அதன் படியே வாழ்ந்தார். அவர் குணத்திலிருந்த மாசு நீங்கியது.

சிவபெருமானே ஒரு சிவனடியார் உருக்கொண்டு வந்து அவ்விருவர்களையும் மீண்டும் சேர்ந்து வாழ வகை செய்து அருளியது, திருநீலகண்டரின் அதன் பின் வரும் வரலாறு.

---------

சைவமா? வைஷ்ணவமா?

Sept. 16, 2006
நடராஜமூர்த்தி சுப்ரமணியம்

காளமேகம் என்று ஒரு புலவர் இருந்தார். சிறந்த சிவபக்தர். ஊர் ஊராகச் சென்று அவ்வூர்க் கோவிலுள்ள இறைவனைத் துதித்துப் பாடுவது அவர் வழக்கம்.

ஒரு சமயம் அவர் திருக்கண்ணபுரம் என்ற ஊரின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். உச்சி வேளை. நல்ல பசி அவருக்கு. சாப்பாடு கிடைக்கும் என்று கோவிலுக்குச் சென்றார்.

அந்தக் கோவில் பெருமாள் கோவில். வைஷ்ணவர்களால் நடத்தப் படுவது. அங்கிருந்தவர்கள் இவர் பட்டை பட்டையாக விபூதி அணிந்திருப்பதைப் பார்த்து முதலில் முகம் சுளித்தாலும், ஆள் யாரென்று தெரிந்ததும், “பெருமாளின் பேரில் ஒரு பாட்டுப் பாடு, பிறகு தான் சாப்பாடு”, என்றனர்.

காளமேகமோ, “ஆஹா, அதனாலென்ன, கட்டாயம் பாடுகிறேன், எனக்கு ஹரியும் சிவனும் ஒன்று தான், ஆனால் பாடி முடித்தபின் நீங்கள் சாப்பாடு போட மறுத்து விட்டால்? அதனால் பாதி பாட்டு பாடுகிறேன், சாப்பாடு போடுங்கள், பிறகு மீதி பாட்டு பாடுகிறேன்.” என்றார்.

“சரி, பாட்டை ஆரம்பி”.

காளமேகம் பாட ஆரம்பித்தார்.

“கண்ணபுரத்து மாலே, கடவுளில் நீ அதிகம் …”

“பசி அதிகமாக இருக்கிறது ஸ்வாமி”.

கடவுளில் நீ அதிகம் , பெருமாளை உயர்த்தித்தான் பாடுகிறான் என்று நல்ல புளியோதரை, திருக்கண்ணமுது, ததியமுது என்று அருமையான சாப்பாடு கிடைத்தது.

“சரி, மேலே பாடு”.

“கண்ணபுரத்து மாலே, கடவுளில் நீ அதிகம்,
உன்னிலும் நான் அதிகம் ….”

“என்ன, திமிரா ?”

“இருங்கள், பாடி முடிக்கவில்லையே, அவசரப்பட்டால் எப்படி?”

“மேலே பாடு”.

“கண்ணபுரத்து மாலே, கடவுளில் நீ அதிகம்,
உன்னிலும் நான் அதிகம் ,
உயர் சிவனுக்கோர் பிறப்பில்லை,
உன் பிறப்போ பத்து,
என் பிறப்போ எண்ணித் தொலையாது.”

“இந்து மதத்தில் சிவபெருமான் பிறவியெடுப்பதாகப் புராணம் கிடையாது. திருமாலுக்கோ பத்து பிறவிகள். ஆனால் நானோ எத்தனை பிறவி எடுத்தேனோ, இன்னும் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ, தெரியாது. இதைத்தான் கடவுளில் நீ அதிகம், உன்னிலும் நான் அதிகம் என்று பாடினேன்.” என்று சொல்லி ஏப்பம் விட்டுக்கொண்டே நடந்தார் காளமேகம்.

-------------

Tuesday, August 29, 2006

இது எப்படியிருக்கு?

புதன் கிழமை மாலை. பீட்டர் வீட்டில் ஒரே பரபரப்பு. பீட்டரின் அப்பா தாமஸ் லிவிங் ரூமில் குறுக்கும் நெடுக்கும் போய்க்கொண்டிருக்கிறார். நடு நடுவே வாசல் கதவைத்திறந்து பார்க்கிறார். ஏதாவது கார் சப்தம் வாசலில் கேட்டாலே ஓடிச்சென்று கதவைத்திறந்து பார்க்கிறார். இதன் நடுவில் பீட்டரின் அம்மா எலிசபெத் சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்து "என்ன பீட்டர் இன்னும் வரவில்லையா?" என்கிறாள். 'வரும் நேரம் தான்' என்கிறார் தாமஸ்.

வாசலில் ஏதோ சப்தம் கேட்கவே தாமஸ் ஓடிச்சென்று பார்க்கிறார். பீட்டரின் தாத்தா ஜான் வாக்கிங் ஸ்டிக்கை சுழற்றியபடியே வந்து கொண்டிருக்கிறார். தாமஸ் கதவைத்திறக்க ஜான் உள்ளே வந்து "என்ன பீட்டர் இன்னும் வரவில்லையா? அவன் வருவதற்குள் என் வாக்கிங்கை முடிக்கவேண்டுமென்று வேகமாக நடந்தேன் இன்று" என்கிறார் ஜான். பீட்டரின் பாட்டி மேரி மாடியிலிருந்து மெதுவாக இறங்கி வந்து 'பீட்டர் வந்த மாதிரி இருந்ததே. மாடியிலிருந்து வேகமாக இறங்கி வந்தேன். வந்தது நீங்கதானா?" என்று கூறி ஜானைப்பார்த்து முகத்தை சுளிக்கிறார்.

வாசலில் மறுபடியும் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்கிறது. எல்லோரும் வாசலுக்கு சென்று பார்க்கின்றனர். "பீட்டர் வந்து விட்டான் பீட்டர் வந்து விட்டான்" என்று தாமஸ் கத்துகிறார். எல்லோரும் வாசலில் காத்திருக்கின்றனர். பீட்டர் காரிலிருந்து இறங்கி வலது கை கட்டை விரலைத்தூக்கி "தம்ப்ஸ் அப்" சைகை காட்டிக்கொண்டே உள்ளே வருகிறான்.

எல்லோருக்கும் முகத்தில் மகிழ்ச்சி. "என்ன பீட்டர் இண்டர்வியூ எப்படி?" என்று தாமஸ் கேட்கிறார். "Success Daddy" என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறான் பீட்டர். "என்ன interview வில் select ஆகி விட்டாயா?" என்கிறார் தாத்தா ஜான். "அவங்க ரொம்ப impress ஆகி எனக்கு வேலையும் கொடுத்து விட்டார்கள். "அப்பாடா, இவ்வளவு வருடம் கஷ்டப்பட்டு படித்த படிப்பெல்லாம் வீண் போகவில்லை" என்றார் தாமஸ். "நான் ஆரம்பத்திலிருந்தே சொன்னேனே பீட்டரை Computer Engineering படிக்க வை டாக்டர் வக்கீல் என்று நினைக்காதே என்று. பார்த்தியா இன்று பீட்டருக்கு வேலையும் கிடைத்து விட்டது" என்று தாத்தா ஜான் கூறுகிறார். "சரி மட மடவென்று அடுத்து நடக்க வேண்டியதைப்பார்க்கவேண்டும்" என்கிறார் தாமஸ். "சரி பீட்டர், இண்டர்வியூவில் பாஸாகி செலெக்ட் ஆகி வேலையும் கிடைத்து விட்டது. ஆனால் எப்போ ஜாயின் பண்ண வேண்டும்?" என்று கேட்கிறார் தாத்தா ஜான். "தாத்தா அவர்களுக்கு immediate requirement இருக்கிறதாம். உடனே ஜாயின் பண்ணவேண்டுமாம்." என்கிறான் பீட்டர். "சரி, வெளி நாட்டுக்குப்போக டிக்கட் எல்லாம் எப்போ கிடைக்கும்?" என்கிறார் தாமஸ். "Consulate க்கு சென்று விசா வாங்க எல்லா பேப்பர்களும் கொடுத்து விட்டார்கள். நாளைக்கு விசாவுக்கு சென்று விசா வாங்கி விட்டால் உடனே ப்ளேன் டிக்கட்டுக்கு அரேஞ் பண்ணுவார்கள். உடனே ஒரு வாரத்தில் கிளம்பவேண்டும்" என்கிறான் பீட்டர். "சரி consulate ல் கும்பல் அலை மோதும். காலையில் 4 மணிக்கெல்லாம் போய் queue வில் நிற்கணும். எல்லோரும் படுக்கப்போகலாம் இப்போ" என்று கூறுகிறார் தாத்தா ஜான்.

வெள்ளிக்கிழமை காலை. பீட்டர் லிவிங் ரூமில் உட்கார்ந்திருக்கிறான். அவனைச்சுற்றி பெட்டிகள், துணிகள். அவசர அவசரமாக பாக்கிங் செய்து கொண்டிருக்கிறான். "இது என்ன டப்பா?" என்று கேட்டுக்கொண்டே ஒரு டப்பாவைத்திறந்து பார்க்கிறான். வாசனை மூக்கைப்பிளக்கிறது. "அம்மா, என்னம்மா இவ்வளவு sweets பண்ணி வெச்சிருக்கே? Customs ல பார்த்தா பிடிச்சு வீசிப்போட்டு விடுவான். கொஞ்சம் குறைவாக வை." என்கிறான் பீட்டர். "அதெல்லாம் ஒண்ணும் பண்ண மாட்டார்கள். பீட்டர், ரொம்ப தூரம் போகப்போகிறாய். அதுவும் வேறு நாட்டுக்கு. ஏதோ என்னால் முடிந்தது செய்திருக்கிறேன்" என்று குரல் கொடுக்கிறாள் பாட்டி மேரி. "ரொம்ப thanks பாட்டி. 2 நாளில் முடித்து விடுகிறேன்." என்கிறான் பீட்டர். "பீட்டர், பாஸ்போர்ட், டிக்கட் எல்லாம் செக் பண்ணிக்கோ" என்கிறார் தாமஸ். "எல்லாம் OK Daddy" என்கிறான் பீட்டர். பாக்கிங்கும் முடிந்தது. "நாளை காலை எத்தனை மணிக்கு flight உனக்கு?" என்கிறார் தாத்தா ஜான். "10 மணிக்கு. 6 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் சரியாக இருக்கும்" என்கிறார் தாமஸ்.

சனிக்கிழமை காலை. பீட்டர் செக் இன் எல்லாம் முடித்து எல்லோருக்கும் விடை சொல்கிறான். "பீட்டர், ஜாக்கிரதையாகப்போ. புது இடம். கவலையாக இருக்கிறது. அடிக்கடி E-Mail செய்." என்கிறாள் அம்மா எலிசபெத். "Web Cam ல் என்னுடன் chat செய்வாயா பீட்டர்" என்று கேட்கிறாள் பாட்டி மேரி. பாட்டிக்கு பீட்டரிடம் மிகுந்த பிரியம். "கட்டாயம் chat செய்கிறேன் பாட்டி" என்கிறான் பீட்டர். "Telephone அடிக்கடி செய்யாதே. முக்கியமாக prime-time ல் செய்யாதே. Off-time ல் செய். ஆனால் போய் சேர்ந்தவுடன் போன் பண்ணு. அங்கே Guest House ல் தானே இருப்பாய்?" என்கிறார் தாமஸ். "Apartment வாடகைக்குப்பார்த்தவுடன், address, phone number எல்லாம் உடனே தெரியப்படுத்து" என்கிறாள் அம்மா எலிசபெத்.

"பீட்டர் ஊருக்கு சென்று 1 வருடம் ஆகி விட்டது. அடிக்கடி E-Mail செய்கிறான். நல்ல apartment, எல்லா வசதியும் இருப்பதாக எழுதியிக்கிறான். வேலையும் பிடித்திருக்கிறதாம்." என்கிறார் தாமஸ். "அடுத்தது பீட்டருக்கு கல்யாணம் தான்" என்கிறாள் பாட்டி மேரி. "அதைப்பற்றி தான் உங்களிடம் பேச இருக்கிறேன்" என்று ஜானிடமும் மேரியிடமும் கூறுகிறார் தாமஸ். "என்ன, அவனே பெண் பார்த்து விட்டானா?" என்று கேட்கிறார் தாத்தா ஜான். "அதெல்லாம் இல்லை. அவனுக்கு நாம் பார்க்கும் பெண் தான் சரிப்படுமாம். கல்யாணம் செய்தால் arranged marriage தான் செய்வானாம்." என்றாள் எலிசபெத். என் நண்பன் ஜோசப்பை இன்று பார்த்தேன். அவன் பெண்ணை உங்களுக்கு நினைவிருக்கிறதோ?" என்றார் தாம்ஸ். "லீசா சின்ன பெண்ணாக இருந்தாள் அப்போது. இப்போ வளர்ந்து பெரியவளாகி இருப்பாளே". "ஆமாம் நம் பீட்டருக்கு ஏற்ற ஜோடி" என்றாள் எலிசபெத். "அப்போ மடமடவென்று பேசி ஒரு முடிவெடுக்க வேண்டியது தானே" என்கிறார் ஜான்.

பீட்டர் வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. "பீட்டர் 2 வார லீவில் வருகிறான். அவன் வருவதற்குள் இவ்வளவு வேலைகள் நடந்தது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. பெண் பார்த்தல் கூட நாம் தான் செய்தோம்" என்றார் தாமஸ். பீட்டர்-லீசா கல்யாணமும் முடிந்து பீட்டரும் ஊர் திரும்ப கிளம்பி விட்டான். "லீசாவின் விசா கிடைக்க இன்னும் ஒரு மாதம் ஆகுமா?" என்றார் தாத்தா ஜான். "ஆமாம், ஆபிஸிலிருந்து லெட்டர், bank statement, affidavit of support, டிக்கட் எல்லாம் அனுப்ப 1 மாதம் ஆகுமாம்" என்கிறாள் எலிசபெத். "பீட்டர், உனக்கு permanent residence application எந்த stage ல் இருக்கிறது?" என்கிறார் தாமஸ். "இப்பொழுது தான் regional labor முடிந்து national labor stageல் இருக்கு" என்கிறான் பீட்டர். "லீசா labor வருவதற்கு முன் உன் labor முடிந்து விடுமல்லவா" என்கிறார் தாத்தா ஜான். இதைக்கேட்டு பீட்டரை ஓரக்கண்ணால் பார்த்து புன்முறுவல் செய்கிறாள் லீசா.
பீட்டர் ஊருக்கு சென்று விட்டான். ஒரு மாதமும் முடிந்து விடுகிறது. லீசாவுக்கும் விசா கிடைத்து விட்டது. அவளும் கிளம்பி விட்டாள் கணவனைச்சேர.

Plane ல் இருந்து வெளியில் வந்து customs, immigration எல்லாம் முடிந்து வெளியில் வருகிறாள் லீசா. Airportல் நசநசவென்று ஒரே கும்பல். Placardல் பெயரை எழுதி மேலே துக்கி அங்கேயும் இங்கேயும் ஆட்டிக்கொண்டு முன் பின் தெரியாதவர்கள் வருகைக்காக காத்திருக்கிறார்கள் சிலர். Vacation முடிந்து குழந்தைகளுடன் திரும்பி வரும் மனைவிகளை வரவேற்க சோகத்துடன் காத்திருக்கும் சிலர். இந்த கும்பலில் பீட்டரின் உருவத்தைத்தேடுகிறது லீசாவின் கண்கள். வெளியே வந்து நின்று வருவான் வருவான் என்று காத்திருந்து 45 நிமிடங்கள் ஆகிவிட்டன. புதிய ஊர் வேறு. பீட்டரைக்காணவில்லை. லீசாவிடம் செல் போன் இல்லை. யாரிடமாவது பேசி செல்போனில் பீட்டரை கூப்பிடலாம் என்று நினக்கும் பொழுது பீட்டர் வேகமாக ஓடி வருவது தெரிகிறது. பீட்டர் ஓடி வந்து லீசாவைக்கட்டித்தழுவுகிறான். "Immigration ல் எவ்வளவு மாதம் stamp கொடுத்தான்" என்கிறான். "ஆறு மாதம்" என்கிறாள் லீசா. "பரவாயில்லை extend பண்ணிக்கலாம். அதற்குள் permanent residency கிடைத்துவிடும்" என்கிறான் பீட்டர். "அது சரி நீங்கள் ஏன் லேட்? நான் பயந்து விட்டேன்" என்கிறாள் லீசா.

"சாரி லீசா. என்ன செய்வது. கிண்டி ப்ளை ஓவர், சைதாப்பேட்டை டன்னல் எல்லா இடத்திலும் பயங்கர ட்ராபிக் ஜாம். எப்படியோ சந்து பொந்தெல்லாம் பூந்து வந்து விட்டேன்." என்கிறான் பீட்டர். லீசாவுக்கு பீட்டருடன் சேர்ந்ததில் இருந்த கவலையெல்லாம் மறந்து விட்டது. காரில் ஏறி ஏர்போர்ட் பார்க்கிங் லாட்டை விட்டு வெளியே வருகின்றனர். 'சென்னை உங்களை வரவேற்கிறது" என்ற போர்ட் அவர்களை வரவேற்கிறது. என் ஆர் ஏ (நான் ரெஸிடெண்ட் அமெரிக்கன்) க்களான பீட்டரும் லீசாவும் புது வாழ்க்கை துவக்க வந்து விட்டார்கள்.

இது எப்படியிருக்கு? இது தான் இந்த கதையின் 'கால்ப்பு'

இந்த கதைக்கு தலைப்பு எங்கே என்று கேட்கிறீர்களா?

காலம் மாறிவிட்டதால் கதைக்கு 'தலைப்பு' கிடையாது. 'கால்ப்பு' தான் உண்டு.

Monday, August 21, 2006

இலக்கியப் போட்டி 2006

நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி! ரிச்மண்ட் நகரவாசிகளின் தமிழ் புலமையை காண்பிக்க இன்னொரு சந்தர்ப்பம் இதோ வருகிறது, தமிழ் சங்கத்தின்

இலக்கியப் போட்டி 2006


பத்து வயதுக்குட்பட்ட இளையர்களுக்கு ஒரு போட்டியும், அதற்கும் மூத்த இளையர்களுக்கு(11-20) ஒரு போட்டியும், இருபது வயதை தாண்டியவர்களுக்கு ஒரு போட்டியும் நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு வயதுக்குரிய போட்டியிலும் இரண்டு விதமான படைப்புகள் சமர்ப்பிக்கலாம்: கவிதை, கதை அல்லது கட்டுரை(கவிதையில் சேர்க்கமுடியாத படைப்புகள்)

இளையர்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். தமிழ் படைப்புகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்(தமிழ் சங்கம் நடத்தற போட்டியில அது கூட இல்லாட்டி எப்படி?). மூத்தவர்கள் மட்டும் தமிழிலேதான் எழுத வேண்டும். அப்படியும் பிடிவாதமாக ஆங்கிலத்தில் எழுதும் மூத்தவர்கள் தங்கள் படைப்புடன் தங்கள் பதின்ம(teen) வயதை நிருபிக்கும்வண்ணம் பிறந்தநாள் சான்றிதழ் இணைக்குமாறு வேண்டப்படுகிறார்கள்.

தமிழில் எழுதுபவர்கள் யுனிகோடு எழுத்துருவை உபயோகித்தால் வசதியாக இருக்கும்.தமிழில் தட்டச்சு செய்வது குறித்து இந்த வலைத்தளத்தில் கற்கலாம்(http://buhari.googlepages.com/anbudan.html#UnicodeTamil)

தமிழில் எழுத முடியாதவர்கள் அவர்களின் படைப்பின் பிம்பத்தை(scanned image)அனுப்பலாம். அல்லது பிரதியை நிர்வாகக் குழுவினரிடம் கொடுக்கலாம்.

உங்கள் படைப்புகள் எங்களுக்கு ரிச்மண்ட் நேரப்படி 2006 செப்டம்பர் 30 இரவு 12 க்குள் வந்து சேர வேண்டும். ஒவ்வொரு பிரிவில் முதல் இடம் பெறும் கவிதை மற்றும் கதைக்கு ஆயிரம் பொற்..... ஹி.. ஹி... மன்னிக்கவும். நிர்வாகக்குழுவில் ஜனநாயகம் வலுத்துவிட்டதால், இன்னும் பரிசு குறித்து சர்ச்சை நடந்து கொண்டு இருக்கிறது.

நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். அவை உங்கள் சொந்தப் படைப்புகளாக இருக்கவேண்டும். மண்டபத்தில் யாரோ எழுதி வாங்கிக்கொண்டு வரலாம். எங்களுக்கு தெரியாமலிருக்க வேண்டும். அவ்வளவே.

உங்கள் படைப்புகளை மின்னஞ்சல் மூலம்
rts_lit@googlegroups.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தவறாமல் படைப்பாளியின் பெயர், வயது, மின்னஞ்சல் முகவரிகளை குறிப்பிடவும்.

சரியா?

அன்புடன்

ரிச்மண்ட் தமிழ் சங்கம்

பி.கு: உங்கள் படைப்புத் திறனை உதைத்து ஆரம்பிக்க(அதாங்க கிக் ஸ்டார்ட்) இந்த தளத்தைப் பார்க்கவும். http://richmondtamilsangam.blogspot.com



How to write in Tamil: http://buhari.googlepages.com/anbudan.html#UnicodeTamil

To convert Tscii/Tab files to unicode: http://www.suratha.com/atamil.htm

To write Tamil without installing any software: http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm (click on Thaminglish and type away!)