Showing posts with label இருதயம். Show all posts
Showing posts with label இருதயம். Show all posts

Wednesday, March 11, 2009

உங்களுடைய செக் இஞ்சின் லைட் சரி செய்து விட்டீர்களா?

உங்களுடைய காரில் செக் இஞ்சின் லைட் எரிய ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் என்னை மாதிரி பயந்தாங்குளிகள் அடித்துப் பிடித்து ஓடிப்போய் மெக்கானிக்கிடம் காரை கொண்டுபோய் சொத்தை எழுதிக் கொடுத்து விட்டு வருவோம். அதே ஒரு கால்வலியோ, முதுகுவலியோ, நெஞ்சுவலியோ வந்தால் ஒழுங்காக டாக்டரிடம் போகாமல் காலத்தை ஓட்டிக்கொண்டு இருப்போம். ஒரு காருக்கு செலுத்தும் அக்கறை கூட நம் உடல் நலத்தில் செலுத்துவதில்லை.

சென்ற வாரம் ஒரு நண்பருக்கு இப்படித்தான். இரண்டு நாட்களாக நெஞ்சுவலி என்று உடல்வலி மாத்திரை சாப்பிட்டுக்கொண்டு இருந்தவரை, மூன்றாம் நாள் அவர் மனைவி காதைப் பிடித்து இழுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு போனார். அங்கே அவர் உடலை பரிசோதித்துவிட்டு உடனே எமர்ஜென்சிக்கு அனுப்பிவிட்டார்கள். அவருக்கு வந்தது மாரடைப்பு. மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு பிறகு ரத்தக்குழாயில் இருந்த இரண்டு அடைப்புகளை சரி செய்து அனுப்பியிருக்கிறார்கள். நாற்பதுகளில் இருக்கும் நண்பர் நிறைய டென்னிஸ் ஆடுபவர், சுறுசுறுப்பாக, இருக்கும் அனைத்து சங்கங்களிலும் ஈடுபட்டு நிறைய தொண்டு செய்பவர். அவருக்கு மாரடைப்பு வந்தது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

ஆகவே உங்களுக்கு எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். நல்ல உடல்நலத்தோடு இருந்தாலும் ஆண்டுக்கொரு முறை உடல்நலப் பரிசோதனை (annual physical checkup)செய்து கொள்ளுங்கள். அதுவும் நாற்பதை தாண்டிவிட்டால் இது மிகவும் கட்டாயம். கொழுப்பெடுத்து எது செய்கிறீர்களோ இல்லையோ - உங்கள் ரத்தத்தில் கொழுப்பின் அளவை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதுவும் இக்கால அன்றாட வாழ்க்கையில் நமக்கு நடப்பது, ஓடுவது எல்லாம் மிகவும் குறைந்திருக்கையில், நமது உணவு அதற்கேற்றார்போல மாறாதிருப்பது, ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக முக்கிய காரணம். இப்போதும் ஒன்றும் காலதாமதமாகவில்லை. இந்த சனிக்கிழமை மானுமென்ட் அவின்யுவில் பத்து கிலோமீட்டர் ஓடலாம் வருகிறீர்களா?