Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sunday, January 22, 2012

ரயில் பயணங்களில்

இந்த மாதம் 7-ம் தேதி நியூயார்க் டைம்ஸ்  தினசரி பத்திரிகையில் ஒரு செய்தி.

நியூயார்க் நகரத்தில் மெட்ரோ ரயிலில் கூட்டம் அதிகம் இல்லாத விடியற்காலத்தில் நான்கு மணி அளவில் ஒரு பிரயாணி பயணம் செய்த கொண்டிருந்தார். கூட்டம் அதிகம் இல்லாததாலும்  எதிர் வரிசை காலியாக இருந்ததாலும்  ஒரு காலை எதிர் சீட்டில் வைத்தபடி தூங்கிவிட்டார். அப்படி பயணம் செய்வது குற்றம் என்று கூறி காவல்துறை அதிகாரி அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்தார். மாஜிஸ்டிரேட்டிடம்  அந்த பிரயாணியை ஒப்படைத்து  12  மணி நேரம் கழித்துதான் அவரை விடுதலை செய்தனர். அவர்  அபராதத் தொகையாக  50 டாலர் கட்டினார்.

            பயணம் செய்யும்போது இங்கிதம் இல்லாமல் நடந்து கொண்டு சக பிரயாணிகளுக்கு இடையூறு செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதாம். காவல்துறையினர் இது போன்ற விஷயங்களில் கடுமையாக நடந்துகொண்டு  சிறிய குற்றங்களுக்கு கூட நடவடிக்கை எடுப்பது தொடர்ந்து நடப்பதாக புகார்  எழுந்துள்ளது.  இப்படி நடவடிக்கை எடுப்பதால் மெட்ரோ ரயிலில் குற்றங்கள் குறைந்திருப்பதாக காவல்துறை தரப்பில் பேசப்படுகிறது.


          சென்ற நவம்பர் மாதத்தில் இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பிரயாணி கைது செய்யப் பட்டார். அவர் ஒரு சர்க்கரை நோயாளி. காலியாக இருந்த எதிர் சீட்டில் கால் வைத்துக் கொண்டு உட்கார்ந்த நிலையில் இன்சுலின் போட்டுக் கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அந்த நேரத்தில்தான் காவல்துறையினர் அவரைக் கைது செய்திருக்கின்றனர். ஆகையால் சில மணி நேரம் அவர் இன்சுலின் இல்லாமல் இருக்க நேர்ந்தது. அவர் மயக்கமடைந்து கீழே விழ காவல் துறையினர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். மூன்று நாள் மருத்துவமனை வாசத்துக்கு  பிறகு வீடு திரும்பியிருக்கிறார். அது விஷயமாக அரசாங்கத்துக்கு 150,000 டாலர் செலவானது என்றும் அந்த பத்திரிகைச் செய்தி கூறுகிறது.


       இந்தியாவிலிருந்து வந்திருக்கும் எனக்கு இந்த செய்தி கேட்கவே வேடிக்கையாக இருந்தது. சிரித்து முடித்த பிறகு எனக்கு ஏற்பட்ட ரயில் பயண அனுபவங்கள் நினைவுக்கு வந்தன. இந்தியாவில் எதிர்  சீட்டில் உட்கார்ந்திருப்பவர் மேலே கூட கால் போட்டுவிட்டு  கவலைப்படாமல் இருக்கும் பிரயாணிகளை நிறையவே பார்த்திருக்கிறேன். இது சம்பந்தமாக  பயணிகளுக்கு இடையில்  வாக்குவாதமோ சண்டையோ வந்தால் பக்கத்தில் இருக்கும் ரயில்வே ஊழியர்கள் கூட நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிவிடுவார்கள். தொடரும் சண்டை சில சமயம் ஊர் போய்ச் சேரும் வரை கூட நீடிப்பதுண்டு. வடநாட்டு பகுதிகளில் ரயில் சண்டை இன்னும் உக்கிரமாக இருக்கும். அசந்தால் சாமான்களைக் கூட  ஆட்கள் மேல் அடுக்கிவிடும் வேடிக்கை நடப்பதுண்டு.


     இரண்டாம் வகுப்பு பயணத்தைப் பொறுத்தவரை வடநாட்டு பகுதிகளில்  ரிசர்வேஷன் பெட்டிகளுக்கும் ரிசர்வேஷன் இல்லாத பொதுப் பெட்டிகளுக்கும் (ஜெனரல் கம்பார்ட்மென்ட்) இடையில் அதிக வித்தியாசம் இருக்காது. ரிசர்வ் செய்தவர்களும் ரயிலில் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்யலாம். அவ்வளவுதான். முதல் வகுப்பு பயணம் இன்னும் அந்த அளவுக்கு மோசமாகி விடவில்லை.


        ரயில்வேயில் பணி செய்தவனாகையால் நிறைய ரயில்பயணம் செய்யும் அனுபவமும் அந்த பயணங்களில் வகை வகையான மனிதர்களைப் பார்த்து வேதனைப் பட்ட அனுபவமும் எனக்கு உண்டு. நேரடியாக பாதிக்கப்பட்டபோது சங்கடப்பட்டதும் உண்டு. ஒரு அனுபவத்தை மட்டும் இங்கே குறிப்பிடுவது சரியாக இருக்கும்.


          பதினைந்து வருடங்களுக்கு முன் திருப்பதி போயிருந்தேன். திரும்பி வரும்போது ரயிலுக்காக ஸ்டேஷனில் காத்திருந்தேன். திருப்பதியில் கூட்டத்திற்கு  கேட்கவா வேண்டும். முதல் வகுப்பு பயணிகள் தங்குவதற்கான தங்கும் அறையில் ஓய்வாக  சில நிமிடம் உட்காரலாம்  என்று எண்ணினேன். மனைவியை பெண்களுக்கான தங்கும் அறையில் உட்காரவைத்துவிட்டு முதல் வகுப்பு தங்கும் அறைக்குள் நுழைந்தேன். எல்லா நாற்காலியிலும் பயணிகள் உட்கார்ந்த்ருந்தார்கள். சிலர் குடும்பத்தோடு இருந்தார்கள்  சற்று கணித்து பார்த்தபிறகு குடும்பமாக உட்கார்ந்திருந்த ஒரு மேஜையைச் சுற்றி இருந்த ஒரு நாற்காலி காலியாக இருந்ததை கவனித்தேன். அந்த நாற்காலியில் போய் உட்காரலாமென்று அந்த இடத்தை நெருங்கினேன்.


      ஓரளவு வட்டமாக இருந்த அந்த மேஜையைச் சுற்றி போடப்பட்டிருந்த நாற்காலியில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அடுத்த நாற்காலியில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அந்த பெண்ணின் தாயாக இருக்கலாம். அதற்கடுத்த  நாற்காலியில் ஒரு பன்னிரண்டு வயது சிறுவன் உட்கார்ந்திருந்தான். அடுத்த நாற்காலியில் ஒரு நடுத்தர வயது நபர் அமர்ந்திருந்தார்.  அந்த பெண் அருகில் இருந்த நாற்காலி மட்டுமே காலியாக இருந்தது. நான் நெருங்கிச் சென்றதும் அதில் உட்கார வருகிறேன் என்பதை புரிந்துகொண்ட அந்த பெண் ஒரு காலைத் தூக்கி காலியாக இருந்த அந்த நாற்காலியில் வைத்துக் கொண்டாள்.


         நான் அந்த நாற்காலியை சற்று நகர்த்தி போட்டுக் கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு மேல் பகுதியில் கை வைத்த அதே நேரத்தில்தான் அந்த பெண் நாற்காலியில் உட்காரும் பகுதியில் காலை வைத்தாள். நான் இதை எதிபார்க்கவில்லை. கையை எடுக்காமல் அந்த பெண்ணை  பார்த்தேன். நாற்காலியை என்பக்கம் இழுக்கலாமா என்று  யோசித்தேன். ஆனால் அப்படிச் செய்யாமல் சற்று நேரம் பேசாமலிருந்தேன். பாதம் தொடும்  வகையில் ஸ்கர்ட் அணிந்திருந்த அந்த பெண்ணுக்கு பதினைந்து அல்லது சற்று கூடுதலான வயது இருக்கலாம். காலைத் தூக்கி நாற்காலியில் வைத்ததால் சற்று சரிந்த உடையை சரி செய்த கொண்டு என்னைப் பார்த்தாள்.நான் அந்த பெண்ணையே உற்று கவனித்தேன். உடனே அந்த பெண் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். பக்கத்தில் அமர்ந்திருந்த தாயும் நிலைமையை புரிந்து கொண்டாள். நான் உட்காருவதை தவிர்க்கவே காலைத் தூக்கி நாற்காலியில் வைத்த பெண்ணிடம் எதுவும் சொல்லாமல் அவளும் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த சிறுவன் சுவாரஸ்யமாக ஏதோ தின்பண்டத்தை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இவ்வளவும் ஒரு நிமிடம் நீடித்திருக்கும். நான் நாற்காலியில் கை வைத்தபடியே நின்றிருந்தேன்.

         சிறுவனுக்கு அடுத்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த நபர், அந்த பெண்ணின் தந்தை என்று நினைக்கிறேன். அவர் தன் இருக்கையை விட்டு எழுந்திருந்து என் அருகில்  வந்தார். நான் அதைப் பொருட்படுத்தாமல் நின்றேன். அருகில் வந்தவர் நாற்காலியில் வைத்திருந்த அந்த பெண்ணின் காலில் ஓங்கி ஒரு அடி வைத்தார்; அடி சுளீரென்று நன்றாகவே விழுந்தது. உடனே அந்த பெண் எழுந்துகொண்டு சற்று பின்னே சென்றாள். உடனே அந்த பெண்ணின்  தாயும் எழுந்திருந்து கணவரிடம் ஏதோ சத்தம் போட்டாள் தெலுங்கு மொழியில்  பேசியதால் எனக்கு எதுவும் புரியவில்லை. அவரும் கோபமாக சில வார்த்தைகளை பதிலுக்கு பேசிவிட்டு என்னிடம் நெருங்கினார். என்னிடம் நாற்காலியை காட்டிஉட்காரச் சொல்லி தெலுங்கில் பேசினார். நான் எனக்கு தெலுங்கு தெரியாது என்று ஆங்கிலத்தில் சொன்னேன்.


        அந்த பெண் காலி செய்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு என்னையும் உட்காரச்
சொல்லி என்னிடம் கூறினார் சரளமான ஆங்கிலத்தில்பேசினார். நானும் ஒப்புக்காக சில
வார்த்தைகள் பேச வேண்டுமென்று அவரை சமாதானப் படுத்தினேன். என்ன இருந்தாலும் பெண்ணை நீங்கள் அடித்திருக்கவேண்டம் என்றேன். இதுவெல்லாம் தலைமுறை (generation gap) பிரச்னைகள்  என்றேன். என்ன தலைமுறைக் கோளாறோ, வயதில் பெரியவருக்கு இடம் கொடுத்து உட்காரவைக்க வேண்டும் என்ற அடிப்படை பண்பாட்டைக்  கூட இழந்து கொண்டிருக்கிறோம் என்று உண்மையாகவே  ஆதங்கத்துடன் கூறினார்.

      நீங்கள் ரொம்பவும் வேதனைப்பட்டீரா  என்று கேட்டார். அதெல்லாம் ஒன்றுமில்லை பொதுவாகவே இப்பொழுதெல்லாம் இது போல நடந்துகொள்ளும் இளைய தலைமுறையினர்தான் அதிகம் என்றேன்.  அந்த பெண் கண்ணை கசக்கிக் கொண்டு சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தாள் அவர் எழுந்திருந்து  அந்த பெண்ணிடத்தில் போய்  ஏதோ சொன்னவுடன் அவருடைய மனைவி பெரிய குரலில் அவரிடம் எதிர்குரல் கொடுத்தாள். நான் அவரை திரும்ப அழைத்து பிரச்னையை இத்துடன் விடுங்கள் என்று கூறி வேறு விஷயத்தை பேசத் தொடங்கினேன்  அவருடைய பெயரைக் கேட்டேன்,  ஊரைக் கேட்டேன்.

          மனிதர் பண்பானவராகத் தெரிந்தார். சற்று நேரம் உலக நடப்பை மற்ற ஏதோ விவரங்களைப் பேசினார் நான் புறப்பட வேண்டிய ரயில் வரும் நேரத்தில் அவரிடம் சொன்னேன், உங்கள் பெண்ணுக்கு நான் உண்மையிலேயே நன்றி சொல்ல வேண்டும் ஒரு நல்ல மனிதரை சந்திக்க இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது உங்கள் பெண்தானே என்றேன். அவர் சிரித்துக் கொண்டே என்னிடம் விடை பெற்றுக் கொண்டார்.

               சற்று தள்ளி நின்ற அவருடைய மனைவியும் அந்த பெண்ணும் இன்னும் சமாதானமாகவில்லை என்று தெரிந்துகொண்டேன். அவர்களிடமும் சிரித்தபடியே போய் வருகிறேன் என்று சொல்லி புறப்பட்டேன். இரண்டு பேரிடத்திலும் எந்த அசைவும் இல்லை.
- மு.கோபாலகிருஷ்ணன்

Saturday, August 27, 2011

ரிச்மண்ட் மகாத்மியம் - 1

ரிச்மண்டா? எங்கேயிருக்கிறது அது??

தொலைபேசியில் நடந்த வேலைக்கான தேர்வில் நான் கேட்ட முதல் கேள்வி. அதுவும் சற்று வடக்கே மேரிலண்ட் மாநிலத்தில் உட்கார்ந்து கொண்டு... அடுத்த பக்கத்தில் இருந்து ஒரு சிரிப்பு.

மேரிலண்டில் இருந்து தெற்கே எங்காவது போயிருக்கிறாயா?
போயிருக்கிறேனே. வட கரோலைனா சாபல் ஹில்லுக்கு.
அப்படியானால் நீ ரிச்மண்ட் வழியாகத்தான் போயிருப்பாய்.
மெய்யாலுமா?

அதுதான் ரிச்மண்ட், வர்ஜினியா குறித்து நான் முதலில் கேள்விப்பட்ட விதம். ரிச்மண்டில் இருக்கிறேன்  என்று சொன்னவுடன் மற்றவர்கள் கேட்டவை:

"அப்படியா. மைக்ரோசாப்டிலா வேலை உனக்கு".
"அது ரெட்மண்ட்யா, ரிச்மண்ட் இல்லை"

கொஞ்சம் விவரம் தெரிந்த கலிபோர்னியா வளைகுடா மக்கள்:
"பரவாயில்லையே, இங்க ஈஸ்ட் பே-ல தான் இருக்கியா இப்போ"
"இது ரிச்மண்ட், வர்ஜினியாப்பா, ரிச்மண்ட கலிபோர்னியா இல்லை"

ரிச்மண்ட்,வர்ஜினியா!

இந்த ஊரிலிருக்கும் இந்தியர்கள் தவிர மற்ற இந்தியர்களுக்கு தெரியாத ஊர். ஜனத்தொகையிலோ, நிலப்பரப்பிலோ அமெரிக்க பெரிய நகரங்கள் பட்டியலில் வராத ஊர்.  வேறு ஊரிலிருக்கும் நண்பர்களும், சுற்றமும் ஊரைச் சுற்றிப் பார்க்க வராத ஊர். வந்தால் எங்களைப் பார்க்கத்தான் வரவேண்டும். ஆனால் அமெரிக்க சரித்திரத்தில் ஒரு பெரும் பங்கு வகித்திருக்கின்றன ரிச்மண்டும் அருகில் இருக்கும் இடங்களும்.

நான் ரிச்மண்ட் பற்றி ஒன்றும் கேள்விப்படாமல், எந்த மடமும் சொந்த மடம் என்று வாழ்ந்த நாட்களில் இங்கே வந்து உட்கார்ந்து விட்டேன். வந்த சில நாட்களில் அலுவலகத்தில் சக ஊழியனுடன் பேச்சு இப்படி போனது.

என்னய்யா, இந்த ஊர்ல என்ன ஃபேமஸ்?

என்ன அப்படி கேட்டு விட்டாய்? இரண்டு போர்களிலும் ரிச்மண்ட் எரிந்தது தெரியுமா?

அப்படியா? முதல் போரைப் பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் இரண்டாவது போரில் இந்த நாட்டில் ஹவாயில் மட்டும்தானே குண்டு போட்டார்கள். இது என்ன புதுக்கதையாக இருக்குதே?

ஹவாயா? நீ எந்தப் போர்களைப் பற்றி சொல்கிறாய்?

உலகப்போர்களைத்தானே சொல்கிறாய் நீ?

இல்லையப்பா. சுதந்திரப் புரட்சிப் போர், உள்நாட்டுப் போர் (civil war) இரண்டையும் பற்றித்தான் நான் சொன்னேன்.

சுதந்திரப் போர், உள்நாட்டுப் போர் - யாரவர்?

நான் சமச்சீர் கல்வி வராத நாட்களில் தமிழக அரசுப் பள்ளி பாடத்திட்டத்தில் படித்தவன். எனக்கு மூவேந்தர்களும்,  சாளுக்கியர்கள், அசோகர், ஹர்ஷர், மௌரியர்கள் தவிர வேறு எந்த சரித்திரமும் தெரியாது. அப்படியாக ஆரம்பித்தது எனது ரிச்மண்ட் வரலாறு குறித்த ஆர்வம்.

அப்படி இருந்தவனிடம் பாண்டிச்சேரியில் ஒரு முதியவர் கேட்டார்: ரிச்மண்டா - வர்ஜினியா டொபாக்கோ! என்னையும் என் பிள்ளைகளையும் அப்படித்தான் அழைக்கிறார் அவர் இன்றும். அமெரிக்க மூன்றாம் ஜனாதிபதி தாமஸ் ஜெஃபர்ஸன் மாநில சுயாட்சிகளை காற்றில் பறக்கவிட்டு லூசியானாவை வாங்கிய கதையெல்லாம் புட்டு புட்டு வைத்தார்.  வெட்கமாகப் போய்விட்டது.

மேலும் தொடரும் என்று போட ரொம்ப யோசனையாக இருக்கிறது. நம்முடைய பதிவுகளுக்கும் தொடர்களுக்கும் பொருத்தமில்லையே? :-)

சமீபத்தில் நடந்த தமிழ்ச் சங்க வனபோஜனத்தில்(அதாங்க பிக்னிக்) தலைவர் முத்து ரிச்மண்ட் குறித்து எழுதுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.  அதற்கான எனது ஆரம்பம் இது.  நான் மேலே எழுதுவதற்காக யாரும் காத்திருக்க வேண்டாம். அனைவரையும் தங்கள் ரிச்மண்ட் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன். இந்த ஊரைப் பற்றியோ, அருகில் இருக்கும் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றியோ, இந்த ஊர் வாழ் தமிழர், இந்தியர் சமூக அனுபவங்களையோ எதை வேண்டுமானாலும் எழுதுங்கள்.  வெளியே ஐரீன் அம்மா வெளுத்து வாங்குகிறார். உங்களுக்கு வேறு என்ன வேலை. எழுதுங்கள்.



Sunday, May 24, 2009

இன்னொரு மலை ஏறினோமே....

இன்று காலை எழுந்தவுடன் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். தலைவர் முரளியின் எச்சரிக்கை நினைவுக்கு வந்தது. சரி செய்ய ஒன்றுமில்லையென்றால் அவருக்காவது இன்னும் கொஞ்சம் பூஜை நடக்கவைக்கலாமென்று குடும்பத்தோடு கிளம்பிவிட்டேன் எங்களுடைய நீலத் தொடர்ச்சி மலைகளுக்கு. எங்கள் ப்ளூ ரிட்ஜ் மலைத்தொடர் மிகவும் அழகானது. வசந்தமாகட்டும், வெயில்காலமாகட்டும், இலையுதிர்காலமாகட்டும் - எல்லாக் காலங்களிலும் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் இடம் இது.

இன்றைய குறி ஹம்ப் பேக் ராக்ஸ் சிகரம் - Humpback Rocks! நடப்பது நிறைய இல்லாவிட்டாலும் சற்று கடினமான ஏற்றமென்றும் மேலிருந்து காட்சி ரொம்ப அழகானதென்றும் கேள்விப்பட்டிருந்தேன். 'கடினமான ஏற்ற' விஷயம் மனைவியிடம் சொல்ல 'மறந்து'விட்டு கிளம்பியாயிற்று. ஹம்ப்பேக் ராக் நிறுத்தத்தை அடைந்த போது மழை வருகிறமாதிரி இருந்தது. கொண்டு போயிருந்த சாப்பாட்டு சமாச்சாரங்களை கொஞ்சம் கவனித்துவிட்டு அங்கிருக்கும் பண்ணை நிலத்து வழியே நடந்தோம். அந்தக் காலத்தில் வர்ஜினியா கடல்கரைப்பக்கம், நடுப்பகுதியில் மட்டும் மக்கள் குடியேறினார்கள். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மேற்குப்பகுதியில் குடியேற்றம் நடந்தது. அப்படி குடியேற்றத்தை ஊக்குவிக்க நிறைய நிலமெல்லாம் கொடுத்தார்கள். அந்தக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பண்ணையை அப்படியே வைத்திருக்கிறார்கள்.

பண்ணையில் நுழைந்தவுடன் நம்மை வரவேற்கிறார் இவர்.


அந்தக் காலத்து பண்ணைவீடு.

உள்ளே நுழைந்து பார்த்தோம். அட நம்ம ஊர் கை ராட்டினம்.

இவர்கள் எதற்கு பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. அந்தக் காலத்து உடையணிந்த இருவர் வீட்டில் வேலை செய்வது போல பாவ்லா காட்டிக் கொண்டிருந்தார்கள்.

நெருப்புமூலைக்கு மேலே பார்த்தால்....

சின்ன வயசில் நான் தொலைத்த சிலேட்டு! பின்னாடி ஒரு கட்டைத் துப்பாக்கி! வீட்டுப் பரணில் ஏழு குழந்தைகள் தூங்கும் இடமாம். பையன்களை மட்டும் எட்டிப் பார்க்க சொல்லிவிட்டு ஜகா வாங்கினோம். வெளியே வழியில் அந்த காலத்து ஸ்டோர் ரூம். பக்கத்தில் அந்தக் காலத்து ஃப்ரிட்ஜ்!

இந்த அறையின் கீழே ஒரு ஓடை ஓடுகிறது. அது இந்த அறையைக் குளுமையாக வைத்திருக்குமாம். அதுதான் ஃப்ரிட்ஜ்.

அப்படியே பண்ணையிலிருந்து ரோட்டைத் தாண்டினால் ஹம்ப்பேக் ராக் மலைக்கான பாதை ஆரம்பித்தது. மொத்தம் ஒரு மைல்தான் என்றாலும், செங்குத்தாக ஆரம்பிக்கிறது ஏற்றம். கொஞ்ச தூரம் ராஜபாட்டை மாதிரி கற்கள் கொட்டிய பாதை. பிறகு கல்லும் பாறையும் காலுக்கு மெத்தை....

வழி நெடுக அதே கதைதான்...

இடையே மழை தூற ஆரம்பித்தது. நாம்தான் இந்த விஷயத்தில் அனுபவசாலிகளாயிற்றே. பையில் வைத்த பாஞ்சோவை எடுத்து மாட்டிக் கொண்டோம். மழை உடனே நின்று விட்டது. எதிரில் வந்தவர்கள் எல்லாம் எங்களைப் பார்த்து பயந்து விலகிப் போனார்கள். உடனே பாஞ்சோவைக் கழட்டிவிட்டோம். மேகமூட்டமாகவே இருந்ததால் மலையேற்றம் சூடில்லாமல் இதமாக இருந்தது. அவ்வப்போது திறந்த வானத்தில்...
நாமும் கொஞ்சம் பாலுமகேந்திரா ஆகிக் கொண்டோம்.
ஒரு வழியாக பாதைத் தவறாமல் உச்சியை அடைந்தோம்.

நிறையக் கூட்டம் மேலே. திருச்சி உச்சிப் பிளளையார் கோவில்தான் நினைவுக்கு வந்தது...
நாமும் பாறைகள் மீது ஏறி உட்கார்ந்தோம். அந்தப் பாறைகளைத் தவிர சுற்றும் பச்சைப் பசேல்தான்.


இதோ சுற்றிக் காண்பிக்கிறேன், நீங்களே பாருங்கள்.



கொஞ்ச நேரம் மலையுச்சியில் காற்று வாங்கிவிட்டு கீழே இறங்கினோம். செங்குத்தாக இறங்கும் பாதை சுலபமாக இருந்தாலும், நம் கால்களின் அதிர்ச்சி குறைப்பான்கள்(shock absorber) பலவீனமாக இருப்பதால் உருண்டோடுவதைத் தவிர்ப்பதற்காக கொஞ்சம் மெதுவாகவே வந்தோம்.

கீழே பார்த்தால் ஒரு பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு ஞாயிறு மாலையும் மூன்றிலிருந்து நாலு வரை கச்சேரியாம். எட்டுப் பட்டி நாட்டாமைகளும் நாற்காலி எல்லாம் கொண்டுவந்து உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.



ஏற்கனவே களைத்திருந்ததால், இந்த புல்புல்தாரா வெல்லாம் நமக்கு வேண்டாம் என்று கிளம்பிவிட்டோம்.

படங்களை பெரிதாக பார்க்க, இங்கே செல்லவும்.

Monday, November 26, 2007

எச்சரிக்கை

அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
காலம் கடந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

சமீபத்தில் சென்னை சென்று வந்த அனுபவத்தை 'பரணீதரன்' அளவுக்கு தரமாக இல்லாவிட்டாலும், 'மணியன்' அளவுக்காவது எழுதலாம் என்று இருக்கிறேன். உங்கள் அபிப்ராயங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், பின்னூட்டங்களைப் பொருத்து இதைச் செய்யலாம் என்று இருக்கிறேன். தேவையில்லை என்று நினைத்தால் தெரிவித்து விடுங்கள். நாகு இதை வெளியிடும் சமயம், தடயம் மர்ம நாவலையும் முடித்து வெளியிட்டு விடுகிறேன் எனவே அதைப் பற்றி பின்னூட்டத்தில் கேட்டு குடைய வேண்டாம்.

சதங்கா:
உங்கள் கவிதைகளை நேற்று படித்தேன், அருமை. பதிவுகளில் நிறைய மாற்றங்கள் தெரிகிறது, வார்த்தைகள் நன்கு பண் பட்டிருக்கிறது. வாஷிங்டன் பற்றிய பதிவில் வார்த்தைகளின் எளிமை மிக அழகு.

பரதேசி: படம் பாரு கடி கேளு உங்களின் ஏக போக சொத்தாகி விட்டது. இனி உங்களைப் போல இதை யாரும் எழுத முடியாது என்று நினைக்கிறேன். செல்வி(நாய்)க்கு தாலி கட்டிய செல்வகுமாரின் பதிவு அருமை. இந்த மேட்டர் சீரியஸ்னெஸ் செல்விக்கு மட்டும் புரிஞ்சுது, செல்வகுமார் கதை கந்தல்தான்.

அன்புடன்,

முரளி.

Monday, October 29, 2007

கிராமத்து பேருந்துப் பயணம்

என்றைக்குமே பழைய நினைவுகள் இனிமையானதே. அப்படி கிராமத்தின் பயணத்தைப் பற்றி எழுதிய கவிதையை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

http://vazhakkampol.blogspot.com/2007/10/blog-post_28.html

Tuesday, August 15, 2006

வருக! வருக!!

அமெரிக்காவின் வர்ஜினியா மாநிலத்தில் உள்ள ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் வலைப்பதிவுக்கு உங்களை வரவேற்கிறோம். இங்கு ரிச்மண்டின் தமிழ் சங்கத்து விழாக்கள் மற்றும் போட்டிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிச்மண்ட்வாழ் தமிழ் சங்கத்தினர் தங்கள் கதை, கவிதை போன்ற தமிழ் படைப்புகளை இந்த வலைப்பதிவில் காண விழைந்தால், யுனிகோடில் எழுதி எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். எங்கள் மின்னஞ்சல் முகவரி: richmondtamilsangam@yahoo.com
சிறார்கள் ஆங்கிலத்திலும் எழுதி எங்களுக்கு அனுப்பலாம்.

Welcome to Richmond Tamil Sangam's blog. You can read about Richmond Tamil Sangam activities here. If Richmond Tamil Sangam members would like to publish their writings in this blog site, please email us your work to richmondtamilsangam@yahoo.com. We prefer Tamil articles in unicode. We also welcome articles in English from kids.