Monday, January 07, 2013

காப்பிபுராணம்


 இலக்கிய மன்றக் கூட்டத்திற்கு எழுத்தாளர் பொன்னீலன் அவர்களை அழைத்திருந்தோம். அவர் பேசும்போது தன்னுடைய இளமைப் பருவத்தில் பேராசிரியர் ஆ. சீனிவாசராகவன் வீட்டிற்கு போன அனுபத்தைப் பற்றி கூறினார். பேராசிரியர் சீனிவாசராகவன் முந்தைய தலைமுறையின் மிகச் சிறந்த இலக்கிய விமர்சகர். திருநெல்வேலி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பனி புரிந்தவர். கம்பராமாயணம், பாரதி இலக்கியங்களை கற்றுத் தெளிந்த சிறந்த தமிழ் அறிஞர்.

 அவருடைய வீட்டுக்குப் போனால் தனக்கு கிடைக்கும் காப்பியைப் பற்றிக் கூறினார். பேராசிரியரின் மனைவி அற்புதமான ருசியுடன் கூடிய காப்பியை கொடுத்து உபசரிப்பார், என்று கூறினார். அந்த அனுபவத்தைக் கூறிவிட்டு மேலும் தொடர்ந்தார். திருச்சிக்கு வந்தால், நல்ல ருசியுள்ள காப்பிக்கு நான் எங்கே போவேன் கோபால கிருஷ்ணன் வீட்டுக்குத்தான் போக வேண்டும். என்றார். கூட்டத்தில் ஒரே சிரிப்பு.

 மேலும் தொடர்ந்தார், அது என்ன மாயமோ இந்த பிராமணர்கள் இவ்வளவு ருசியுடன் காப்பி தயாரிக்க எங்கே கற்றுக் கொண்டார்களோ தெரியவில்லை என்றார். அரங்கம் சிரிப்பில் அதிர்ந்தது.

பொன்னீலன் என் வீட்டுக்கு ஒரு முறை வந்திருக்கிறார். என் மனைவி கொடுத்த காப்பியை அப்பொழுது வாயாரப் புகழ்ந்தார். அவர் சொன்னது என்னவோ உண்மைதான். பொதுவாக பிராமணர்கள் வீட்டில் காப்பி நல்ல ருசியாக இருப்பதாக பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.கேட்கும்போது ஒரு வகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

 இந்த நாட்டின் பாரம்பரியப் பெருமை பேசும் பிராமணர்கள் வெளிநாட்டுச் சரக்கான காப்பியை எப்படி இவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொண்டார்கள், அந்த பானத்தை தன்வயப் படுத்திக் கொண்டு ரசனையோடு தயாரிக்கிறார்கள் என்பது ஒரு தனிக் கதை.

 இருபதாம் நூற்றாண்டு தொடக்க காலம் வரை பிராமணர்கள் வீட்டில் காப்பி கிடையாது. விசேஷ நிகழ்ச்சிகளில் கூட காப்பி கிடையாது. நகரங்களில் இன்று காணப்படும் காப்பிக் கடைகள் கூட அன்று இல்லை. சோத்துக் கடை என்று கூறப்படும் சில விடுதிகளில் உணவு கிடைக்கும். பிராமணர்களும், பிள்ளைமார் போன்ற சாதி இந்துக்களும் அந்த விடுதிகளுக்குப் போக மாட்டார்கள். ஆச்சாரக் குறைவு என்று கூறி அந்த விடுதிகளுக்குள் நுழைவதை தவிர்த்துவிடுவார்கள். நகரத்துக்குச் செல்லும் காலங்களில் வீட்டில் தயாரித்த உணவை கையில் எடுத்துச் செல்வார்கள். தன சாதிக் காரர்
வீட்டைத் தேடி அங்கே உட்கார்ந்து கையில் கொண்டு போன உணவை சாப்பிட்டு விட்டு அந்த வீட்டில் நீர் வாங்கிக் குடிப்பார்கள்.

 இதுதான் அன்று நிலவிய பழக்கம்.சமூகச் சீர்திருத்தப் பிரச்சாரம் செய்ய சுற்றுப்பயணம் மேற்கொண்ட தலைவர்கள் கூட தன்னுடன் தன சாதியைச் சேர்ந்த ஒரு சமையற்காரனை உடன் அழைத்துக்கொண்டு போவது வழக்கமாக இருந்தது. அந்த சமையற்காரரை தவசிப் பிள்ளை என்று குறிப்பிடுவார்கள்.

 நகரங்களின் அளவும்,நகரங்களுக்கு அடிக்கடி செல்வோரின் எண்ணிக்கையும் வளரத் தொடங்கிய பின் நிலைமை சற்று மாறியது. அத்தகைய பயணிகளின் தேவைக்காக காப்பி கிளப்புகள் தோன்றத் தொடங்கின. அங்கே காப்பியை தவிர வேறு சில பலகாரங்களும் கிடைத்தன.இப்படி வளர்ந்த காப்பி கிளப்புகள்தான் காப்பி குடி பழக்கத்தை நாட்டில் எல்லா பகுதி மக்களிடமும் வளர்த்தது.

 ஒரு காலத்தில் ஐரோப்பியர்களின் பானமான காப்பி இன்று எல்லா சாதி மக்களின் பானமாக வளர இந்த காப்பி கிளப்புகள் தான் காரணமாக அமைந்தது. எல்லா சாதியச் சேர்ந்த மத்தியதர வர்க்க குடும்பங்களிலும், காலை உணவு காப்பியி லிருந்து தான் தொடங்குகிறது. சிலர் பல் துலக்கக் கூட காத்திருப்பதில்லை. படுக்கையிலிருந்து எழுந்த வுடன் காப்பியை குடிக்கும் நாகரீகமும் (?)உண்டு.

 இந்த காப்பி கிளப்புகளை பெரும்பாலும் பிராமணர்களே நடத்தினார்கள். அவர்களுக்கு கிடைத்த புதிய தொழிலாக ஹோட்டல் தொழில் அமைந்தது. அந்த கிளப்புகளில் எல்லா சாதியாரும் ஒரே பந்தியில்உட்கார்ந்து உணவு அருந்தும் பழக்கம் வளர்ந்தது. சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்ய காலத்தில் தமிழ்நாட்டில் ரயில்கள் ஓடத்தொடங்கிய போது எல்லா சாதியாரும் ஒரு சேர உட்கார்ந்து பயணம் செய்வதால் சாதிக் கலப்பு ஏற்படுகிறது, என்று பிராமணர்கள் அங்கலாய்த்துக் கொண்டது உண்டு. தங்கள் சாதி ஆச்சாரம் கெடாமல் பயணம் செய்ய ரயிலில் தங்களுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று பிராமணர்கள் அரசாங்கத்துக்கு மனு கொடுத்தது உண்டு. அதே பிராமணர்கள் தான் இன்று காப்பி கிளப் தொடங்கி சகல சாதியாரும் கலந்து அமர்ந்து உணவு அருந்தும் நிலையை உருவாக்கினார்கள்.

 தொழில் திறமையும் சாமர்த்தியமும் உள்ள பிராமணர்கள் காப்பி கிளப் தொடங்கினார்கள்.படிக்க வசதியில்லாத,கல்வியைத் தொடர முடியாத பிராமணச் சிறுவர்கள் கிளப்புகளில் சர்வர்களாக சமையல்காரர்களாக பிழைப்பைத் தொடங்கினார்கள்.ஆகக் கூடி காப்பி கிளப் என்ற புதிய வர்த்தக அமைப்பு பெரும்பாலும் பிராமணர்கள் வசம் இருந்தது என்னவோ உண்மைதான்.

 ஆனால் பழமைவாதம் பேசும் எல்லா சாதியாரும் கிளப்புகளில் உணவு அருந்துவதை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளவில்லை.பல நூற்றாண்டுகளாக தான் உணவு உண்பதை வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் பார்க்கக் கூடாது என்ற நம்பிக்கையில் வளர்ந்தவர்கள் இந்த நாட்டு மக்கள். இந்த நம்பிக்கைக்கு எந்த சாதியாரும் விலக்கு அல்ல. காப்பி கிளப்புகளில் கிடைக்கும் உணவு வகைகள் பிராமணர்களால் தயாரிக்கப்பட்டவை என்ற உத்திரவாதம் சில பழமைவாதிகளை திருப்திபபடுத்தலாம். அவர்கள் காப்பிகிளப் உணவை ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில்தான் பிராமணாள் காப்பி கிளப் என்ற பெயர்ப் பலகையுடன் விளம்பரம் செய்யப்பட்டது.

 இந்த அறிவிப்பு சாதி வெறி யை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி பெரியார் ஈ.வே. ரா. 1950 களில் எதிர்ப்பு இயக்கம் தொடங்கினார். அவருடைய தொண்டர்கள் பெயர்ப் பலகையில் இருந்த பிராமணர் என்ற சொல்லை தார் பூசி அழித்தனர்.ஆகையால் பெரும்பாலான ஹோட்டல்களில் பிராமனாள் என்ற சொல் விளம்பரப் பலகையிலிருந்து நீக்கப்பட்டது. ஆனால் இன்று தமிழ்நாட்டில் பல நகரங்களில் ஐயங்கார் பேக்கரி என்ற விளம்பரப் பலகையைப் பார்க்கலாம்.எந்த கட்சி தொண்டனும் அதற்கு எதிர்க்குரல் கொடுக்கவில்லை. தார்ச் சட்டி களையும் காணவில்லை.

 இந்த பேக்கரிகளுக்கும்,அங்கே விற்பனையாகும் தின்பண்டங்களுக்கும் அய்யங்கார்களுக்கும் எந்த வகை ஓட்டும் இல்ல, உறவும் இல்லை என்பது வேறு விஷயம்.

 ஆனால் வைதீக பிராமணர்கள் பலர் இன்று வரை கிளப்பில் காப்பியோ இதர உணவு வகைகளையோ சாப்பிடுவதை தங்களுக்கு ஆச்சாரக் குறைவு என்றே நினைக்கிறார்கள்.

 சர்க்கார் உத்தியோகத்தை கைப்பற்றுவதில் பிராமணர்கள் முன்னே நிற்பதை எதிர்த்து பகுத்தறிவுவாதிகள் கிளர்ச்சி செய்தனர். அதனால் சர்க்கார் வேலை வாய்ப்பை இழந்த பிராமண இளைஞர்கள் ஹோட்டல் தொழிலில் இறங்கினார்கள். அவர்களையும் பகுத்தறிவு வாதிகள் விட்டு வைக்கவில்லை. அதன் ஒரு அம்சம்தான் தார்ச்சட்டி, பெயர்ப்பலகை அழிப்பு எல்லாம்.புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் காப்பிக் கடை முண்டங்கள் என்று பாப்பாரச் சிறுவர்கள் மீது கவிதையில் வசை பாடினார்.

 ஹோட்டல் முதலாளிகளும் சரி அடுப்படியில் நெருப்பில் வெந்து பிழைப்பு நடத்தும் சமையல் காரர்களும் சரி எல்லோருமே சுரண்டல்காரர்கள்தான், ஏனென்றால் அவர்கள் எல்லோரும் பார்ப்பனர்கள். இதுதான் பகுத்தறிவுப் பார்வை.

 கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் சமூக மாற்றங்களில் மிக முக்கியமான ஒன்று இந்த காப்பிகிளப் தொடர்புடையதுதான்.இன்று பிராமணர்கள் ஹோட்டல் தொழிலில் கொண்டிருக்கும் பங்கு குறைவு. பல்வேறு சாதி இந்துக்கள் ஹோட்டல் தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திருச்சி, மதுரை, கோவை போன்ற பெரிய நகரங்களில் பிராமணர்கள் நடத்தும் ஹோட்டல்களைத் தேடி காண்பது அரிது. ஹோட்டல் சமையல்காரர்களாக இருப்பவர்களிலும் பிராமணர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. சென்ற தலைமுறையில் பிராமண சமையல்காரர்கள் தயாரித்த தின்பண்டங்களையும்,உணவு வகைகளையும் இதர சாதியைச் சேர்ந்த சமையல்காரர்கள் இன்று நல்ல முறையில் தயாரிக்கிறார்கள். சுருங்கச் சொன்னால் காப்பி கிளப்புகளிலும் பார்ப்பன ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது.

 இன்று தமிழ்நாட்டில் சகலரும் குடிக்கும் பானமான காப்பி ஆப்பிரிக்காவில் உள்ள எதியோப்பியாவில் உதயமானது என்ற செய்தி பலருக்கு அதிசயமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. அந்த நாட்டின் சில பகுதிகளில் வளர்ந்த காப்பிச் செடிகளின் விதைகளை தின்ற பறவைகள் கூடுதலான உற்சாகத்தோடு பறந்து திரிவதை அந்த நாட்டு மக்கள் கூர்ந்து கவனித்தார்கள். அந்த காபிச் செடியின் விதைகளை எப்படி உணவாகத் தயாரிக்கலாம் என்று பல முயற்சிகளைச் செய்தனர்.

 அந்த நாட்டின் ஒரு சிறு இனக்குழுவைச் சேர்ந்த மக்கள் காப்பிச் செடியின் விதை களை நீரில் போட்டு கொதிக்க வைத்து தயாரித்த பானத்தைக் குடித்தார்கள். இந்த பானம் பசியைக் குறைப்பதையும் சற்று சுறுசுறுப்பை ஏற்படுத்துவதையும் உணர்ந்தார்கள். தங்களுடைய சமயச் சடங்குகளில் இந்த பானத்தை விநியோகம் செய்தார்கள். தங்களுடைய நாட்டிலிருந்து காப்பிச் செடி விதைகள் வெளிநாடுகளுக்குகொண்டு செல்வதற்கு தடை விதித்தனர்.

 17ம் நூற்றாண்டில் மைசூர் பகுதியைச் சேர்ந்த பாபா புதன் என்ற முஸ்லீம் துறவி ஹஜ் யாத்திரை மேற்கொண்டார். மெக்காவிலிருந்து திரும்பி வரும்போது அவர் கள்ளத்தனமாக ஏழு காப்பி விதைகளை கொண்டு வந்தார். தன இடுப்பில் கட்டிய சிறிய துணியில் மறைத்து வைத்து கொண்டு வந்த அந்த
காப்பி விதைகளை மலை பாங்கான சிக்மகளூர் பகுதியில் விதைத்து பயிர் செய்தார். படிப்படியாக பல பகுதிகளில் பயிர் செய்யப்பட்டன. நாளடைவில் மலைப் பாங்கான பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பளவு நிலங்களில் பயிர் செய்யப்பட்டது.

 அப்படி பயிர் செய்யப்பட காப்பி கொட்டை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.மிகச் சிறிய அளவிலான காப்பி கொட்டையை இந்தியாவில் வாழ்ந்த பிரிட்டிஷ், மற்றும் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் வாங்கினார்கள். இந்தியர்கள் யாரும் அந்த காப்பிக் கோட்டையை வாங்கியதில்லை. காலப் போக்கில் மைசூர் பகுதியில் (இன்றைய கர்நாடகம்) மிகப் பெரிய வாணிபப் பயிராக வளர்ந்தது. ஆயிரக் கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.

 இப்படி காப்பி விதைகளை வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து பயிர் செய்து ஆயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திய பாபா புதன் என்ற துறவியின் மீது மக்கள் அன்பு பாராட்டினர் அவர் காலத்துக்குப் பிறகு அவருக்கு எழுப்பப்பட்ட சமாதி இன்று எல்லா சமயத்தவரும் தொழுகை செய்யும் தர்க்காவாக வளர்ந்திருக்கிறது

 இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் விவசாயப் பொருள்களில் காப்பிக் காப்பிக் கொட்டை மிக முக்கிய இடத்தை பிடித்துவிட்டது. இன்று கணிசமான அளவுக்கு அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிறது.


 இதுதான் காப்பி இந்தியாவுக்கு வந்த கதை.

 (இரண்டாம் பாகம்)

- மு.கோபாலகிருஷ்ணன்

2 comments:

  1. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா.

    காப்பி புராணம் படித்துவிட்டு இந்த அர்த்தராத்திரியில் சூடாக ஒரு காபி குடிக்கவேண்டும் போலிருக்கிறது.

    ஆரம்பத்தில் மக்களை காபி குடிக்க வைக்க காபிக் கம்பெனிகள் எப்படி அவதிப்பட்டன, என்னவெல்லாம் செய்தன என்று கி.ரா. கரிசல் காட்டுக் கடுதாசியில் சுவையாக எழுதியிருக்கிறார்.

    ReplyDelete
  2. அருமையான, புத்துணர்வூட்டும் பதிவு உங்கள் காப்பிபுராணம்!!! நிங்கள் சொல்வதைப்போல் நான் நேரிடையாகவும் திருநெல்வேலியில் பலகைகளை பார்த்திருக்கிறேன் - "பிராமணாள் காப்பி ஹோட்டல்" , "சைவாள் ஓட்டல்" என்று. தொடர்ந்து இது போன்ற பதிவுகளைப பகிரவும்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!