Tuesday, February 14, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 3 - காதல் ஸ்பெஷல்





பட்டுக்கோட்டையாரின் திருமணம்



மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?

பொதுவா பொதுவுடமைக் கருத்துக்களை எழுதுபவர்களால் காதல் கவிதைகள் படைக்க இயலாது. அப்படியே படைத்தாலும் அதிலும் ஏதாவது அறிவுரையும், ஆதங்கமும் வெளிப்படலாம். ஆனால், இவற்றிற்கு நேர்மாறாக, பொதுவுடமைக் கருத்துக்களின்பால் அதிகம் நாட்டம் கொண்ட நம் கவிஞர் இயற்றிய காதல் பாடல்கள், ஒவ்வொரு சாமான்யனின் மனதிலும் ஏறி அமர்ந்து கொள்ளும். இரு வரி உதாரணம் மேலே.

கடந்த இரண்டு பாகங்களில் பறந்த கனலைக் கொஞ்சம் தனல் தணித்து பட்டுக்கோட்டையாரின் 'காதல்' வரிகளை இந்தப் பாகத்தில் வாசிக்கலாம். நம்மளும் ஒரு பாட்டு, அதுவும் காதல் பாட்டு எழுதலாம் என அமர்ந்தால், விரல் அச்சுப் பலகையத் தட்டுதோ இல்லையோ, வெறும் காத்துத் தான் வருது ;) மானே, தேனே, மயிலே, ஒயிலே, கண்ணே, கருவிழியே எல்லாம் போட்டு பிரமாதமா ஒன்னு எழுதிடனும்னு ஒரு கமிட்மென்ட் இல்லாம, மனசு பாட்டுக்கு அது போக்குல போகுது :)

என்னதான் பயிற்சி எடுத்தாலும், சிலரை சில போட்டிகளில் விஞ்ச முடியாது. அதுவும் முக்கியமாகக் கலைத்துறையில். அன்றைய கவிஞர்கள் மனதில் தங்கும் கருத்துக்களை எழுதினார்கள். இன்றைய அநேக கவிஞர்கள் மனதைக் கெடுக்கும் கருத்துக்களை எழுதுகிறார்கள். எழுதிவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல, 'இது படத்துல வர்ற சிட்டுவேஷன், யாரையும் புண்படுத்தறதுக்கு இல்ல'னு தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள். பட்டுக்கோட்டையார் இதில் முதல் வகை என்பது நாமெல்லாம் அறிந்ததே ! 'செருப்பறுந்து போனதற்கா சிந்தை கலங்குவேன் ?' என்று தன்னிலையைப் பாடியவர், அவரெல்லாம் எங்கே ரூம் போட்டு யோசித்திருப்பார். தான் கொண்ட கருத்தில் நேர்மை, எதிலும் எங்கும் சிறு வக்கிரம் தொனிக்காமல் காதல் வரிகள் படைத்த விதம், எளிமையாக இயற்கையோடு ஒன்றிக் காதலைச் சுமந்து வரும் பாடல்கள் என நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட கள்வன் அவர். இது கவிஞரின் கேள்வி பதில் காதல்.

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?

ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனொ?

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?

(திரைப்படம்: இரும்புத்திரை 1960)

இதுவரையிலும் பேசாத தென்றல் (காற்று) இன்று மட்டும் வந்து இன்பம் என்று சொல்வது ஏனோ ? ... என்னே ஒரு கற்பனை ! 'வெறும் காத்துத் தான் வருது' என்ற நகைச்சுவைக் காட்சி இங்கிருந்து தான் பிறந்திருக்குமோ ? மேற்கண்ட பாடலில் காதலி காதலனிடம் கேள்விகளால் துளைக்கிறாள். பொறுமையாக சூசகமாகப் பதிலுரைக்கிறான் காதலன். மரக்கிளையையும், கொடியையும் இணைத்துக் காதலி கேட்ட கேள்வியும், அதற்குக் காதலன் அளித்த பதிலும் அதி அற்புதம். இன்றைக்கு இது போல எங்காவது காதலர்களைக் காண முடியுமா? இதைப் பற்றி பதிவு பதிவா எழுதலாம் :) ஆனால், இதுவல்ல இடம்.

பொதுவாகக் காதலுக்குத் தூது போவது என்பது தொன்று தொட்டு வரும் பழக்கம். சக தோழமைகளை நம்பித் தூது அனுப்பி, கவிழ்ந்த காதல்கள் பற்றி ஏராளமான தமிழ் திரைப்படங்கள் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம் ;) மனிதனை நம்பினால் இதான் கதி. இது கவிஞருக்கு அன்றே தெரிந்திருக்கிறது :) அதான் அடுத்த பாடலில் வெண்ணிலாவைத் தூது அனுப்புகிறார்.

நான் பேதையாய் இருந்தேன், என் இதயத்தைத் திருடிவிட்டாள், அதை அவளிடம் இருந்து பறித்து என்னிடம் திருப்பிக் கொடு என்று வெண்ணிலாவை அழைக்கிறார் பட்டுக்கோட்டையார். அதுவும், சும்மா போய் கெஞ்சினால் தரமாட்டாள், பறித்து வந்து தந்துவிடு, பயம் கொள்ளத் தேவையில்லை, இது அவள் தந்த பாடம் என்று கூறும் அற்புத வரிகள். இது கவிஞரின் தூதுக் காதல்.

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
...
கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே – ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே – அந்த
வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே – அதை
வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே – நீ
கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே – இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே – இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
(திரைப்படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960)


காதலியின் முகத்திற்கு ஒரு வர்ணனை எழுதச் சொன்னால், கண்ணாடி மாதிரி, பளிங்கு மாதிரி, இன்னும் அதீதக் கற்பனையில் தக்காளி மாதிரி என்றெல்லாம் தான் இன்று கவிஞர்கள் எழுதுகிறார்கள். ப‌ட்டுக்கோட்டையாரோ, முகத்தையே ஒப்பிடுகிறார்.

முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
...
இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே
(திரைப்படம்: தங்கப் பதுமை 1959)

புற அழகைச் சுமந்து வந்த பாடலில், அக அழகையும் சொல்லி, எத்தனை சுகமானாலும் இருவருக்கும் பொதுவாக்கலாம் என காதலில் பொதுவுடமையைப் பாடியது மற்றவர்களில் இருந்து நம் கவிஞரை சற்றே தள்ளி நின்று வியக்க வைக்கிறது. இது கவிஞரின் பொதுவுடமைக் காதல்.

ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
(திரைப்படம்: அமுதவல்லி 1959)
இயற்கையோடு இணைத்து கவிஞர் எழுதிய மேற்காணும் பாடல் வரிகளில் மயங்காதவர் உண்டோ. 'தேமதுரத் தமிழோசை' என்றான் பாரதி. இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் இன்பத் தமிழோசை வந்து நம் செவிகளில் பாயுமே ! இது கவிஞரின் அழகுக் காதல்.

அழகு நிலாவின் பவனியிலே
அமைதி கொஞ்சும் இரவினிலே
அல்லி மலர்ந்தே ஆடுதே
ஆடும் காரணம் ஏதோ

களங்கமிலா என் மனதினிலே
கலையழகே உமதன்பாலே
இன்ப உதயம் ஆவது போலே
இதய உறவினினாலே
அல்லி மலர்ந்தே ஆடுதே
(திரைப்படம்: மஹேஸ்வரி 1955)

'அமைதியான இரவில் அல்லி மலர்ந்து ஆடுதே. காரணம் ஏதோ ?' என வினவுகிறாள் காதலி. இரவில் அல்லி மலர்வதற்கான காரணத்தை அன்பு உறவின் மூலம் அழுத்தமாக எடுத்துரைக்கும் இப்பாடல், கவிஞரின் இயற்கைக் காதல்

இப்பொழுதெல்லாம் காதலியர் என்ன மாதிரி கேள்விகள் கேட்கிறார்கள் எனச் சிந்தித்தால், அதாவது நம் இன்றைய கவிஞர்கள் என்ன எழுதுவார்கள் என்றால் ... சிறந்த ஒரு உதாரணம், நம்மை எல்லாம் துள்ளி ஆட்டம் போட வைத்த 'கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா ? ... இல்ல ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா? ...' பாடலின்றி வேறேது !

புற அக அழகை, இயற்கையை, பண்பை, நானத்தை, பொதுவுடமையைக் காதலில் எழுதிய நம் கவிஞர், துள்ளி ஆட்டம் போட வைக்கும் காதலையும் சொல்லியிருக்கிறார். தினம் நம் வீட்டில் இன்றும் நடக்கும் சின்னச் சின்ன ஏச்சுப் பேச்சுக்களை, கொஞ்சல்களை மையமாகக் கொண்ட காதல் வரிகள். இது கவிஞரின் கிராமியக் காதல்.

உன் அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
...
உன்னை மலை போல நினைச்சிருக்கேன்
நீ அசையாமல் இருக்காதே...
உன்னையும் தங்க சிலை போல நினைச்சிருக்கேன்
.. உம்ம்.. . பேசாமல் இருக்காதே...
கண்ணு... என் கண்ணூ.......
உன்னாட்டம் புத்திசாலி உலகினில் ஏது... (ஓஹோ.....)
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது...
உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது..
என்னாளும் நமக்கு இனி கிடையாது
சுந்தரியே .. அடி சுந்தரியே...
கண்ணு சுந்தரியே..
அந்தரங்கமே
மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே...
சுந்தரியே அந்தரங்கமே...

(திரைப்படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957 )
கிராமியக் காதலின் காணொளி


க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...

Monday, February 13, 2012

சதுரங்கப் போட்டி முடிவுகள்

சமீபத்தில் நமது தமிழ்ச் சங்கம் நடத்திய சதுரங்கப் போட்டிகளின் முடிவுகள்:

பத்து வயதுக்குட்பட்ட பிரிவு:

சக்தி ராமசாமி - முதல் இடம்
ராகுல் பழனி    - இரண்டாம் இடம்
விஸ்வநாதன் சுப்பிரமணியன் - மூன்றாம் இடம்

பத்திலிருந்து பதினைந்து வயது பிரிவு:

அவிஜித் ராஜன் - முதல் இடம்
சத்யா வடிவழகு - இரண்டாம் இடம்
வருண் நடராஜன் - மூன்றாம் இடம்

பெரியவர்கள் பிரிவு:

சீனு ஐயர் - முதல் இடம்
அழகப்பன் அருணாசலம் - இரண்டாம் இடம்



போட்டியில் பங்குபெற்ற மற்ற குழந்தைகள்:
அஞ்சு நடராஜன், ஆதித்யா பரமேஸ்வரன், ஆகாஷ் சுகுமாரன், ஐஸ்வர்யா சுகுமாரன், குகன் சுந்தரேசன், ஹம்சினி முரளிகிருஷ்ணன், சக்தி குப்புசாமி, ஷ்ரேயஸ் முத்துசாமி, ஸ்ருதி வெங்கடேசன், சிவா சரவணன், தேஜஸ் முத்துசாமி, வைஷ்ணவி ரங்கநாதன்


போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

Sunday, February 05, 2012

அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சாமி

அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சாமி

படித்தவர், பண்டிதர், பொருளாதார வல்லுநர், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசியராக இருந்தவர். IIT டெல்லியில் பொருளாதாரப் பேராசிரியர். கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ என்று குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்த சந்திர சேகரின் மந்திரி சபையில் அமைச்சர். இவரது நல்ல பக்கம் இவையே. இவை அனைத்தும் சிறந்த சாதனைகள் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை.

ஆனால், இவரைப் பற்றிக் கேட்டல் உடன் ஞாபகம் வருவது, கலங்கிய குட்டையில் மீன் பிடித்துக் குளிர் காயும் இவரது தான் தோன்றித் தனமான செயல்பாடுகள் தான்.

2G வழக்கில் ராஜாவைக் கைது செய்யும் வரை இவர் புத்திசாலி. அதில் இவரது பங்கை மறுக்க முடியாது. ஆனால் சிதம்பரத்தைக் கைது செய்ய வைக்க முயன்று இன்று முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு இருக்கிறார். ஆனால் வெட்கப் பட மாட்டார், இன்னும் ஏதாவது குழப்பங்களை எங்காவது செய்து கொண்டு காலத்தை ஒட்டி விடுவார் இந்த புத்தியுள்ள மடையர்.

ஜெயலலிதாவின் ஆட்சியில் அவரைப் பகைத்துக்கொண்டு நீதி மன்றத்தின் முன்பு சேரிப் பெண்களின் ஆபாச நடனத்தில் அவமானப் பட்டவர். முகத்தில் அமிலம் வீசியது ஜெயலலிதாவின் உத்தரவில்தான் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய சந்திர லேகாவுடன் சேர்ந்து கோமாளிக் கட்சி ஒன்றை ஆரம்பித்து கொஞ்ச நாள் ஓட்டினார். கருணாநிதியோடு மேடையில் ஏறி விட்டு அவர் ஒரு சிறந்த தலைவர் என்று கூச்சம் இல்லாமல் பாராட்டினார்.

பின்பு அதே ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொண்டு சோனியா காந்தியின் உதவியோடு வாஜ்பாயின் ஆட்சியைக் கவிழ்த்து நாரதர் கலக்கம் செய்தார்.

ராமதாஸ் போன்றவர்கள் கட்சி மாறினாலோ, ஆட்சியைக் கவிழ்த்தாலோ நாம் கண்டு கொள்ளப் போவதில்லை. ஆனால் புத்திசாலி என்ற போர்வையில் யாருக்கும் பிரயோஜனம் இல்லாத வெறும் குழப்ப அரசியலில் ஈடு பட்டு கோமாளிகளாகச் சுற்றிக் கொண்டிருக்கும் இவரைப் போல புத்திசாலி முட்டாள்கள்தான் நம் நாட்டின் சாபக் கேடு.

Thursday, February 02, 2012

வழக்கமாக உபயோகத்தில் இல்லாத சில பழமொழிகள்

வழக்கமாக உபயோகத்தில் இல்லாத சில பழமொழிகள்

சில வித்தியாசமான பழமொழிகளை கிராமங்களில் கேட்கலாம், அல்லது பழைய பாரதிராஜா படங்களைப் பார்க்கும்போது கேட்கலாம். கேட்ட பலரும் இவற்றை விரும்பியதுண்டு, அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

"என் ராசிக்கு ஆயிரங்கால் மண்டபம் கட்டி ஆண்டாலும் வெயிலுதானே அடிக்கும்" - தொடர்ந்து வரும் ஏமாற்றங்களில் சலித்துக்கொள்ள உதவும். அலுவலகத்தில் உத்தியோக உயர்வு கிடைக்காத பொது, இதைக் கூறி சமாதானப்படுத்திக் கொள்ளலாம்.

"அங்கயும் இருப்பான் இங்கயும் இருப்பான், திங்கிற சொத்துல பங்கும் கேட்பான்" - ஒரு வேலையும் செய்யாமல் வெட்டியாக இருக்கும் நபர்களைக் கரித்துக் கொட்ட உபயோகிக்கும் சொல். நமது ஒய்வு பெற மறுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல பழமொழி.

"அரிசின்னு அள்ள விட மாட்டேங்கிற, உமின்னு ஊத விட மாட்டேங்கிற" - எது கேட்டாலும் சாக்குப் போக்குச் சொல்லித் தட்டிக் கழிக்கும் நபர்களுக்குக் கூறப்படும் சொல். நமது அலுவலக மேலாளர்களுக்கு சிறந்த பழமொழி.

"எமனுக்கு வாக்கப் பட்டா எரும மாட்ட மேச்சு தானே ஆகணும்" - வழியில்லாமல் மாட்டிக் கொண்டு தவிக்கும் போது அலுத்துக் கொள்ளளலாம். (உதாரணம் - பயிற்சி - நீங்களே சொல்லுங்கள்?)

"நெல்லுக்குப் போறது புல்லுக்கும் போகட்டும்" - ஒரு இடத்தில நடக்கும் விஷயம் திட்டம் இடாமல் இன்னொரு விஷயத்திற்கும் உதவும்போது சொல்லல்லாம். அடுத்தவரின் வெற்றியில் குளிர் காணும் நபர்களுக்கு நல்ல உதாரணம்.

"கூரையில சோத்தப் போட்டா ஆயிரம் காக்கா" - ஒன்ன நம்பி நா இல்லன்னு சவால் விடறதுக்கு உபயோகிக்கும் பழமொழி. நம் கிரிக்கெட் வீரர்கள் டீம்ல இருந்து தூக்கிட்டாலும் IPL இருக்குனு ஒரு தெனாவட்டுல இருக்கிறது ஒரு உதாரணம். இன்னொரு வேலை வாங்கி விட்டு மேலாளரிடம் இதைச் சொல்லி சவாலும் விடலாம்.

"நீ அரிசி கொண்டு வா, நா உமி கொண்டு வாரேன், கலந்து ரெண்டு பேரும் ஊதி ஊதிச் சாப்பிடலாம்" - ஒரு முதலீடும் செய்யாமல் அடுத்தவரின் முதலீட்டில் சுகம் காணும் நபர்களுக்குக் கூறப்படும் சொல். கூட்டணிக் கட்சிகளின் ஓட்டை மட்டும் வாங்கிக் கொண்டு சீட்டு கொடுக்காமல் நாமம் சாத்தும் அரசியல் தலைவர்களுக்குப் பொருந்தும் சொல். (இதயத்தில் இடம் இருக்கிறது?)

"மகன் செத்தாலும் பரவாயில்ல, மருமக தாலி அறுக்கணும்" - எனக்கு ரெண்டு கண் போனாலும், பரவாயில்ல, எதிரிக்கு ஒரு கண்ணாவது போகணுங்கிற ஒரு ஆவேசம்