Tuesday, March 16, 2010

மீனாவுடன் மிக்சர் - 19 {முன் நெத்தி வழுக்கையாகாமல் பீ.எச்.டீ. பட்டம் வாங்குவது எப்படி?}

டாக்டர் பட்டம் வாங்கணும்னு கொஞ்ச நாளாவே ஒரு நப்பாசை எனக்கு. டாக்டர் மீனா அப்படீன்னு சொல்லிக்க ஒரு கெட்டப்பா இருக்குமேன்னு பாக்கறேன். அதுக்காக பத்து வருஷம் கஷ்டப்பட்டு முன் நெத்தி வழுக்கையாற வரைக்கும் படிச்சு டாக்டர் பட்டம் வாங்குன்னு சிரமமான அறிவுரையெல்லாம் எனக்கு குடுக்காதீங்க. நடக்கற விஷயமா ஏதாவது பேசுவோம். சுலபமா டாக்டர் பட்டம் வாங்க ரெண்டு வழி தான் இருக்கு.

தமிழ்நாட்டு ஆளும்கட்சியில எம்.எல்.ஏவா சேர்ந்து ஏதாவது புது தனியார் பல்கலைகழகம் திறக்கும் போது போய் ரிப்பன் வெட்டி குடுத்தாக்க அவங்களே ஒரு ஜிலு ஜிலு பொன்னாடை போர்த்தி டாக்டர் பட்டமும் குடுத்திடுவாங்க. இது ஒரு வழி. ஆனா அரசியல் எனக்கு சரி வராது. ஏன்னா கட்சில சேர்ந்த உடனேயே எல்லோரும் மரியாதை காரணமா 'அம்மா மீனா' அல்லது 'மீனாம்மா'ன்னு பவ்யமா கூப்பிட ஆரம்பிப்பாங்க. அதெல்லாம் வயசை அனாவசியமா கூட்டி காமிக்கும். எனக்கு தேவையா சொல்லுங்க?

ரெண்டாவது வழி தினப்படி நாம பிரமாதமா செய்யற ஒரு விஷயத்தையே எடுத்து அதுல பீ.எச்.டீ குடுப்பாங்களான்னு ஆராயணும். எப்படியும் செய்யற ஒரு வேலைக்கு பட்டம் குடுத்தாங்கன்னா எவ்வளவு சுலபம்? இந்த வழி தான் சரின்னு எனக்குப்பட என்னோட தினசரி வேலைகளை அலச ஆரம்பித்தேன். உலகத்துல எந்த ஒரு பல்கலைகழகமும் பாத்திரம் தேய்ப்பது, சமைப்பது, வீடு சுத்தம் செய்வதுக்கெல்லாம் டாக்டர் பட்டம் குடுப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. அவசியம் குடுக்க வேண்டிய சில துறைகள் தான் இவைன்னு மனப்பூர்வமா நான் நம்பறேன். செய்து பார்த்தா தானே தெரியும் அந்த கஷ்டம்? கணக்கும், இலக்கியமும், விஞ்ஞானமும் ஒரு வீட்டு தலைவியோட வேலைகளோடு போட்டியிட முடியுமா? ஆனா டாக்டர் பட்டம் இதுல கொடுப்பாங்கன்னு நம்பறது நடப்புக்கு ஒத்து வராத முட்டாள்தனம்.

சரி வீட்டு வேலை இல்லாத, ஆனா தினமும் நான் செய்யற ஒரு விஷயம் என்னன்னு யோசனை பண்ணின போது தான் மண்டைக்குள்ள பளிச்சுன்னு ஒரு பல்ப் எரிஞ்சுது. அத்தி பூத்தா மாதிரி எப்பவாவது தான் எரியும் இந்த பல்ப் ஆனா எரிஞ்சா பிரகாசமா எரியும். தெனமும் கண் முழிச்சிருக்குற நேரத்துல பாதி நேரம் இதை தான் செய்யறேன். கடந்த ரெண்டு வருஷமா அரும்பாடு பட்டு இந்த துறையோட நெளிவு சுளிவுகளை எல்லாம் முழுசாக கத்து தேற முயற்சி செய்து வர்றேன். என்னை விட இந்த ஒரு கலையை எங்க ஊரில் இன்னும் பலர் பல வருஷங்களா ரொம்ப அருமையா செய்யறாங்க. அப்படி என்ன பெரிய கலைன்னு கேக்கறீங்களா?

கையில் நசுங்கின அலுமினியப் பாத்திரம், உடம்பில் கசங்கி கந்தலான துணி - இவை இல்லாமலேயே பிச்சை எடுப்பது. என்ன? இந்த கலையை பத்தி கேள்விப்பட்டதில்லையா நீங்க? கவலை டபேல். விலாவாரியா நான் சொல்லேறேன் கேளுங்க.

ஊரில் ஒரு புது கோவில் கட்ட திட்டமா? நிதி வசூல் செய்யாமல் கோவில் கட்ட முடியாதா? நம்ம அபிமானக் கடவுள் (அபிமான நடிகர்னு சொல்லி தான் இது வரை கேள்விப்பட்டிருப்பீங்க) சந்நிதி கொண்டு வர என்ன வேணா செய்ய தயாரா இருக்கோமா? எங்க பிச்சை தொழில் அப்படி தான் ஆரம்பிச்சது. அப்புறம் இந்திய கலாச்சாரத்தை வளர்க்க அருமையான கர்னாடக இசை கலைஞர்களை அழைத்து ஊரில் நிகழ்ச்சிகள் போட முடிவு எடுக்கப்பட்ட போது ஒரு சின்ன விஷயம் இடிச்சது. கஜானா காலி, வேறென்ன புதுசா? மறுபடியும் தூக்கினோமே கண்ணுக்கு தெரியாத அந்த அலுமினிய பாத்திரத்தை. இதையெல்லாம் தாண்டினா குழந்தைங்களோட பள்ளிக்கூடத்துக்கு நிதி திரட்டியாகணும். பள்ளிக்கூடத்துக்கு பாப்கார்ன் வித்து வித்து (பாதி பாப்கார்னை நாங்களே தின்னு தின்னு) வாய்ல எப்பவுமே உப்பு கரிக்கரா மாதிரி ஒரு பீலிங்.

முதல்ல நீங்க முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா, இந்த பிச்சைக் கலையை சிறப்பா செய்து வர்ற நாங்க எல்லோருமே சில பல கௌரவமான பிச்சை டெக்னிக்குகளை கையாளுவதில் வல்லவர்கள்னு. அனாவசியமா யாரும் எங்களை தெருவோரமா நின்னு போற வர வண்டிகளை நிறுத்தி 'அய்யா, அம்மா...பார்த்து கொஞ்சம் போடுங்க'ன்னு தலையை சொரியும் கும்பல்னு நினைச்சுடக் கூடாது பாருங்க. அப்படி என்ன பெரிய டெக்னிக்? தட்டை தூக்கிண்டு தெருவுல சுத்துவதுக்கு பதில் மாத்தி மாத்தி போன் மேல போன் போட்டு மக்கள் கழுத்தை அறுக்கறது தான். "கோவிலுக்கு அம்பது டாலர் தான் தர முடியுமா? அதுக்கென்ன நோ ப்ராப்ளம்ஸ். ஆனா கர்நாடக இசை வளர்க்கும் குழுவுக்கு மட்டும் ஒரு நூறு டாலர் குடுத்துடுங்க சரியா? உங்க வீட்டு பக்கமா இன்னிக்குஎனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நானே வந்து உங்ககிட்ட காசோலை வாங்கிக்கவா?" சிரிச்சு சிரிச்சே பணத்தை உருவிட மாட்டோம் நாங்க!

ஊர் மக்களை நினைச்சா சில சமயம் பாவமா கூட இருக்கு. எந்த பக்கம் திரும்பினாலும் அவங்க பேன்ட் பாக்கெட்ல கை விட்டு பர்ஸ் எடுக்க ஒருத்தர் ரெடியா இருக்கோம். என்ன தான் செய்வாங்க அவங்களும். அன்னிக்கு கூட தெரிஞ்சவங்களா தெரியுதேன்னு கை தூக்கி நான் ஹலோ சொல்லறதுக்குள்ள ஒரு குடும்பம் பயந்து போய் பின்னங்கால் பிடரில இடிக்க திரும்பி ஓடிட்டாங்க.

என் தமக்கை ஆங்கில இலக்கியத்துல பீ.எச்.டீ முடித்து டாக்டர் பட்டம் எடுத்தவள்னு இங்க ரொம்ப பெருமையோடு உங்ககிட்ட சொல்லிக்கிறேன். எங்க குடும்பத்தோட முதல் டாக்டர் அவள் தான். கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பு மேல் படிப்பை தொடர்ந்து எம்.பில் மற்றும் பீ.எச்.டீ எடுத்து எங்களுக்கெல்லாம் சொல்லொணா பெருமை சேர்த்தவள் அவள். எங்க குடும்பத்தோட டாக்டர் கோட்டா அவ தயவுல முடிஞ்சு போச்சு. ரொம்ப திறமைசாலி என் தமக்கை. முன் நெத்தி வழுக்கை ஆகாமலேயே பீ.எச்.டீ பட்டம் வாங்கிட்டான்னா பாருங்களேன்! பெரிய எதிர்ப்பார்ப்புக்கள் எதுவும் என்னிடம் இல்லாததால தான் குறுக்கு வழியில் சுலபமா பிச்சை எடுத்தே பீ.எச்.டீ எடுக்க முடியுமான்னு இன்னிக்கு நான் ஒரு ஆழ்ந்த சிந்தனைல இருக்கேன்.

எங்க ஊர் பக்கம் வர்றதா இருந்தீங்கன்னா, அடுத்த மாதம் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 16 ஆம் தேதி மாண்டலின் சகோதரர்கள் (ஸ்ரீநிவாஸ் மற்றும் ராஜேஷ்) கச்சேரிக்கு கண்டிப்பா வந்துட்டு போங்க. டிக்கட் விலை தலா இருபதே டாலர் தான். மேலும் விவரங்களுக்கு இங்கு சொடக்கவும் - www.richmondrasikas.org.

அப்புறம் எங்க ஊர் கோவில் கட்டி முடிச்சப்புரமா எப்படி இருக்கும்னு பார்க்க ஆசைப்பட்டீங்கன்னா இங்கே சொடக்குங்க - http://www.hinducenterofvirginia.org. நீங்களா ஆசைப்பட்டு இந்த கோவிலின் விரிவுபடுத்தும் பணிக்கு நிதி உதவி செய்ய விரும்பினீங்கன்னா நான் உங்களை தடுக்கவே மாட்டேன். உங்க சவுகரியம் எப்படியோ பார்த்து செய்யுங்க (பாத்து மேல போட்டு குடுப்பான்னு யாரோ எங்கயோ சொல்லி கேட்ட மாதிரி இல்லை??).

எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்கும்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?


-மீனா சங்கரன்

Friday, March 12, 2010

ஐ-பேட்/ஐ-போன் :

பல வருடங்களுக்கு முன் ஐ-பாட் வந்த போது ரொம்ப நாள் பொறுத்திருந்து அதை வாங்கினேன். வாங்கிய பின் தான் தெரிந்தது, அதன் முழு பயனும் பெற மேலும் பல உபகரணங்கள் தேவை என்று! சரி யானை வாங்கிய பின் சங்கிலி வாங்காமல் எப்படி என்று சில பல டாலர் செலவு செய்து, பாதுகாக்க ஒரு நல்ல case, வண்டியில் சார்ஜ் செய்ய ஒரு கருவி, FM Transmitter, டிவி-ல் அதன் விடியோ பார்க்க ஒரு 'டாக் ஸ்டேஷன்' என பலவற்றை வாங்கினேன். சில மாதங்கள் கழித்து ஐ-டச் / ஐ-போன் என அருமையாக இரு புதிய உபகரணங்கள் வந்தன! சரி நம்ம நோக்கியா போன் பழசாகிவிட்டதே ஐ-போன் வாங்கினால் ஐ-பாட் ஆகவும், போன் ஆகவும் உபயோகபடுத்தலாம் என எண்ணி அதையும் வாங்கினேன். விஷயம் என்னவென்றால் முன்பு வாங்கிய எந்த உபகரணங்களும் இதனுடன் பொருத்தமில்லாதவை என்று கூறிவிட்டார்கள். அதைவிட கொடுமை, இப்போது வரும் புதிய ஐ-போன் பழைய ஐ-போன் உபகரணங்களுடன் பொருத்தமில்லாதவை என்பதுவே! ஆனாலும் இவை அனைத்தும் பெரும் புரட்சிகரமான எலக்ட்ரானிக் பொருட்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.

சரி தலைப்பிற்கு சம்மந்தம் இல்லாத என் புலம்பல்களை விட்டுவிட்டு விசயத்திற்கு வருவோம். நீங்கள் பல் துலக்கும் முன் ட்விட்டர்ரை படிப்பவரா அல்லது கற்குகைக்குள் வாழாதவராயின், ஆப்பிள் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள "ஐ-பேட்" (i-Pad) பற்றிய செய்திகள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்! அதை பற்றி ஒரு சிறு அலசல் இது. சரி, புதிய ஐ-பேட் என்ன தான் செய்யும் என்று பார்க்கலாம். சென்ற வருடம் நெட்புக் எனப்படும் சிறிய லேப்டாப் வகை கணினிகள் பிரபலமாக துவங்கின. ஆனாலும் அவற்றில் நல்ல வீடியோ கார்டு இல்லாதது , வேகம் குறைவானவை, DVD-Drive இல்லை என பல குறைகள். அவற்றை இந்த புதிய ஐ-பேட் சில வகையில் நிவர்த்தி செய்யும் என குறிப்பிட்டுள்ளனர் (DVD-Drive தவிர). ஐ-பேட் சுமார் பத்து அங்குல நீள/அகலம், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய A4 வகை Processor உடன் ஐ-போனில் உள்ள operating சிஸ்டம் மீதே இயங்குகிறது! ஐ-போன் போல டச் ஸ்க்ரீன் (1024x768) பாவனை, GPS, இணைய தொடர்பு வசதி (Wi-Fi / 3G), ஸ்க்ரீனிலேயே கிபோர்ட் (அல்லது External Keyboard இணைப்பு வசதி), 10 மணி நேர பாட்டரி வசதி, ஐ-போனின் மென்பொருட்கள் பாவிக்கும் வசதி என அதிர வைத்துள்ளார்கள். மேலும் இ-புக் எனப்படும் பிரபலமாக விற்கும் மின்-புத்தகங்கள் இதில் மிக அழகான வடிவில் படிக்கலாம். சில புத்தகங்களை இது தானே ஒலிவடிவில் படிக்கும்!! நம்ம தமிழ் புத்தகங்களை கண்டிப்பாக படிக்காது! ஒரு பெரிய குறை அடோபே நிறுவனத்தின் பிளாஷ் எனப்படும் செயலி இதில் வேலை செய்யாது. பல தளங்கள் இந்த வகை வீடியோ டெக்னாலஜியை உபயோகபடுத்துகிறார்கள்! அனாலும் ஆப்பிள் இதை இன்னமும் மொபைல் உபகரணங்களிலிருந்து தள்ளியே வைத்துள்ளது! இந்த ஐ-பேட் $499 விலையில் ஆரம்பித்து $829 வரை விற்கிறார்கள்! ஏப்ரல் 3 அன்று தான் கையில் கிடைக்கும் என்றாலும், இன்று முதல் அவற்றை முன் பதிவு செய்யலாம் : http://www.apple.com/ipad/pre-order/

அடுத்து இதுபோல ஐ-போன் மற்றும் ஐ-பேட் முதலியவற்றில் தமிழ் எழுத்துகள் சரியாக தெரிவதில்லை என்று ஒரு பெரிய குறை உண்டு. சென்ற பதிவில் நாகு ஔவையார் எழுதிய ஆத்திசூடி மற்றும் பலவற்றை சிரமமில்லாமல் ஐ-போனில் படிக்க ஒரு நல்ல இலவச மென்பொருளை பற்றி எழுதியிருந்தார் (http://blog.richmondtamilsangam.org/2010/03/blog-post.html). அதுபோல திருக்குறள் மென்பொருளை (ஐ-போன்/ஐ-டச் மட்டும் ) தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்: (http://itunes.apple.com/us/app/thirukural-book/id333267284?mt=8)

அதுபோல மற்றொரு மென்பொருள் - செல்லினம். இதிலும் இலவசமாக பல நல்ல (தமிழ்) செய்தி தளங்கள் மற்றும் ப்ளாக் முதலியவற்றை ஒரே இடத்தில் சரியான வடிவத்தில் தமிழ் எழுத்துகளை படிக்கலாம்! இந்த மென்பொருளை பெற (ஐ-போன்/ஐ-டச் மட்டும் ) : http://itunes.apple.com/my/app/sellinam/id337936766?mt=8

2005ஆம் ஆண்டு பொங்கல் தினம், சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8-ன்ஆதரவில் முதன் முறையாக பொதுப் பயனுக்காக இந்தச் செயலிவெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து மேடையிலேயே பாடிய கவிதை, "நேற்றுவரை ​மூன்று தமிழ், இன்று முதல் நான்கு தமிழ் இதோ கைத்தொலைபேசியில் கணினித் தமிழ்"! உடனே செல்பேசியில் செல்லினத்தின் வழி தமிழில் கோர்க்கப்பட்டு, வானொலி நிலையத்திற்குக் குறுஞ்செய்தி மூலம் அனுப்பபட்டது!

Tuesday, March 09, 2010

ஐபோனில் அறம் செயும் தேவராஜன்

ஐபோனில் தமிழ் சரியாகத் தெரியாது என்ற குறை எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. அதே குறை எனக்குத் தெரிந்த பலருக்கும் உண்டு. ஆனால் அதற்காக ஒன்றும் செய்யவில்லை. நாம்தான் முருங்கையில் வீற்றிருக்கும் வேதாளம் ஆச்சே?

அந்த குறையைத் தீர்க்க வந்திருக்கிறார் தேவராஜன். ஐபோனில் ஆத்திச்சூடி காண்பிக்கிறார் இந்த அரக்கோண ஆப்பிள் வித்தகர்! ஒரு அற்புதமான ஐபோன் மென்பொருளைத் தயாரித்து அதை இலவசமாக வேறு வெளியிட்டிருக்கிறார் தேவராஜன்.

நீங்களே அவர் தளத்தில் மேலும் படித்துக் கொள்ளுங்கள். படிப்பது மட்டுமில்லாமல் உங்கள் ஐபோனிலோ,ஐபாட் டச்சிலோ இந்த மென்பொருளை நிறுவி பயனடையுங்கள்.

தேவராஜன் - சொல்ல வேறு வார்த்தையில்லை. தலை வணங்குகிறேன்!

Thursday, March 04, 2010

மீனாவுடன் மிக்சர் - 18 {நாற்காலியில் எனக்கு ஒரு கர்சீப் போடறீங்களா?}

உலகத்திலேயே கஷ்டமான சில வேலைகள் என்னென்னன்னு என்னை நீங்க கேட்டீங்கன்னா, இப்படித் தான் நான் பட்டியலிடுவேன்-:

* ரத்த அழுத்த வியாதியை வளர்த்துக்காமல் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லுவது.
* மசால் வடையை ஒதுக்கி விட்டு மேரி பிஸ்கட்டோடு டீ குடிப்பது.
* உஸ்மான் ரோட்டுக்கு போய் நல்லி கடைக்குள் நுழையாமல் வருவது.
* ஜொள்ளோழுகாமல் சாம்பார் வடையை பத்தி நினைப்பது.
* தாய் நாட்டை விட்டு வெளியேறி அயல் நாட்டில் வாழும் இந்திய மக்களுக்கிடையே சமுதாய உணர்வை வளர்க்கும்னு எதிர்பார்த்து தமிழ் சங்கம் போன்ற சமூக சங்கங்களை நிறுவி அதை கெட்ட பெயர் எடுக்காமல் நடத்துவது.

மரீனா பீச்ல நம்ம காந்தி சிலைக்கு பக்கத்துல இடம் கிடைச்சா வாங்கி போடலாம்னு ஒரு திட்டம் வச்சுருக்கேன். முதலமைச்சரோட கிருபை இருந்தா நடக்க வாய்ப்பிருக்கு. எதுக்கா? பல நாட்டு இண்டு இடுக்குகளிலே எல்லாம் பூந்து 'ஹலோ.......நாங்க இங்கயும் வந்துட்டோமே, இப்ப என்ன பண்ணுவீங்க?' ன்னு வில்லத்தனமான வெற்றி சிரிப்போடு சமூக சங்கங்களை நிறுவி நடத்தறாங்களே community volunteers, அவங்களுக்கெல்லாம் சிலை எழுப்ப தான்.

எதனால சிலருக்கு இப்படி ஒரு ஆசை? எங்கிருந்து இவங்களுக்கு வருது இந்த உந்துதல்? மாசா மாசம் குடும்பத்துக்கு படி அளக்குற கொட்டாவி விடும் உத்தியோகத்தையும் கஷ்டப்பட்டு செஞ்சுகிட்டு, வீட்டில் எந்நேரமும் விஸ்வரூபம் எடுத்து குஞ்சம்மாவா பிலிம் காட்டி கொண்டு, குழந்தைகளுக்கு முழு நேர (சம்பளம், பேட்டா இல்லாத அநியாயத்தை பத்தி இன்னொரு பதிவில் எழுதறேன்) டிரைவராவும் வேலை செய்துகிட்டு ஏன் இவங்களுக்கு இப்படி சமூகத்துக்கு குப்பை கொட்ட ஆசை? முக்கியமா எந்த கடை வைட்டமின் மாத்திரை சாப்பிடறாங்க இவங்கெல்லாம்? என்னடா இவ கேள்வி மேல கேள்வியா அடுக்கறாளேன்னு பாக்கறீங்களா? தருமி சிவன் கிட்ட சொன்னது போல எனக்கு கேள்வி மட்டும் தாங்க கேட்க வரும். ஹி ஹி.........

பல நாட்களா ஒய்வு கொடுத்து பாதுக்காத்து வச்சதுல நம்ம மூளை இன்னிக்கு வேலை செய்ய தயார்னு ஒரு இருமாப்புல இந்த புதிருக்கு விடை கண்டுபிடிக்க ரெண்டு கப் ஹார்லிக்ஸ் கலந்துண்டு உக்காந்தேன். அஞ்சே நிமிஷம் தான். அப்படியே சோர்ந்து போயிட்டேன். உருப்படியா ஒரு விடையும் கிடைக்கலை. ஹார்லிக்ஸ் மேல இருந்த நம்பிக்கையே போயிடுத்துன்னா பாருங்களேன்!

சரி போறது, நமக்கு தான் விடை கண்டுபிடிக்க துப்பில்லை, ஊர் மக்கள் அபிப்பிராயம் என்னன்னு பார்ப்போம்னு காது கொடுத்து கேட்டதுல இதை தெரிஞ்சுகிட்டேன். பதவி ஆசை மற்றும் புகழ் ஆசை தான் இவங்களோட முக்கியமான உந்துதல்ன்னு சிலர் நம்பறாங்க.

இருக்குமோ? நாற்காலி மேலே ஆசைப்பட்டு தான் இந்த மக்களெல்லாம் இப்படி சங்கத் தலைவர், செயலர், காசாளர், உறுப்பினர் அதிகாரி, நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக மற்றும் விளையாட்டு தொடர்பு இப்படிப்பட்ட வேலைகளுக்கு எல்லாம் கை தூக்கராங்களோ? இந்த வேலைக்கு பணம் கூரையை பிச்சுகிட்டு கொட்டுமா? தினமலர் பத்திரிகை முதல் பக்கத்தில் இவங்க (நிர்வாக குழுவின்) போட்டோ வருமா? சன் டிவியில் இவங்களை நேர்முக பேட்டி எடுப்பாங்களோ? இவங்க நடத்தும் கலாசார நிகழ்ச்சிகளை ஊர் மக்கள் வானளாவ புகழ்வாங்களா? மற்றுமொரு பெரிய கேள்விக்கணைக்கு மன்னிக்கவும். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் 'ஆமாம்'ன்னு நீங்க சொல்லறீங்களா? சமூக சேவை செய்ய முன் வர்றவங்களோட முக்கிய காரணங்கள் பதவி மற்றும் புகழ் ஆசை தான்னு நீங்க இன்னும் நம்பிநீங்கன்னா அடுத்த தேர்தல்ல எனக்கு ஒரு நாற்காலியில் கர்சீப் போட்டு வைங்களேன் ப்ளீஸ்? என் முகமும் தான் பத்திரிகையில் ஒரு தடவை வரட்டுமே!

வருஷத்தில் மூணு அல்லது நாலு முறை எங்க ஊர் தமிழ் சங்கம் அருமையான கலாசார நிகழ்ச்சிகள் நடத்துவாங்க. இதுக்கு ரிச்மன்ட் ஊர் பெண்கள் சார்பாக நான் நிர்வாக குழுவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றியை தெரிவிக்கிறேன். ஏன்னா நாங்க அப்புறம் எங்கே போய் எங்களோட புது புடவையை எல்லாம் கட்டி நாலு பேருக்கு காமிக்கறது?

போன மாசம் நடத்தின நிகழ்ச்சி எப்பவும் போல் கலக்கலாக இருந்தது. எத்தனை குழந்தைகள் பங்கேற்றாங்க தெரியுமா? நாட்டியம், நாடகம், பாட்டுன்னு ரொம்ப அருமையா இருந்தது நிகழ்ச்சி. நடுவில் நான் தான் கொஞ்சம் டென்சன் ஆயிட்டேன். தமிழ் dictionary கொண்டு போக மறந்துட்டேனா, பாத்தா குட்டி பசங்கல்லாம் சுத்த தமிழ்ல பேசி வயத்தில் கொஞ்சம் புளி கலக்கினாங்க. என் பள்ளி நாட்களோட செய்யுள் புத்தகங்களை தூசு தட்ட நேரம் வந்திடுச்சுன்னு நினைக்கிறேன். டிவி தொகுப்பாளர்கள் நல்ல தமிழ் பேச பயிற்சி எடுக்க டீச்சர் தேடறாங்கன்னு கேள்விப்பட்டீங்கன்னா எங்க ஊர் பசங்களுக்கு ஒரு போன் போட சொல்லுங்க.

இப்படி ஒரு மூணு மணி நேர நிகழ்ச்சி நல்லபடியா நடக்கணும்னா குறைஞ்சது ஒரு மூணு மாசமாவது தமிழ் சங்க நிர்வாக குழு அதுக்கு அசராமல் உழைக்கணும். எத்தனை எத்தனை வேலை! ஹால் எடுத்து, மைக் செட்டப் செய்து நிகழ்ச்சிக்கு நடுவில் மக்கள் சாப்பிட டீ, பலகாரம் ஏற்ப்பாடு செய்து.... இது போல இன்னும் பல பல வேலைகள். இந்த உழைப்புக்கு ஒரு குட்டி கல்யாணமே பண்ணிடலாம். ஆனால் இதில் வருத்தம் என்னன்னா சக மக்களுக்காக, அவர்கள் கண்டு களிக்க என்று இந்த குழு இவ்வளவு உழைத்தும் அவர்களுக்கு கிடைப்பது பெரும்பாலும் ஒரு முழ நீள குத்தப் பத்திரிகை தான். சமோசாவில் உப்பு தூக்கல், டீயில் சர்க்கரை குறைச்சல், பெரியவங்க நிகழ்ச்சி ரொம்ப குறைவு - இது போல குற்றங்களை அடுக்கும் ஊர் மக்களுக்கு எங்க சங்கத் தலைவர் நிகழ்ச்சிக்கு நடுவே "இது எங்க சங்கம் இல்லை, உங்க சங்கம்." ன்னு அழகாக சொன்னார். நாமெல்லாம் வெளியாட்களாய் நின்னு குத்தம் சொல்லாமல், எல்லோரும் சேர்ந்து பங்கேற்றால் தான் நம்ம ஒரு சங்கம்னு சொல்லி கொள்ளரதுல பெருமைப்பட முடியும்னு நான் நினைக்கிறேன்.

நிர்வாக குழுவுக்கு மட்டுமில்லாமல், அத்தனை குழந்தைகளையும் வாரத்தில் பல முறை practice க்கு சளைக்காமல் காரோட்டி அழைத்துப் போன பெற்றோர்களுக்கும் ரிச்மன்ட் தமிழ் சமுதாயம் சார்பில் நான் நன்றி தெரிவிச்சுக்கிறேன்.

-மீனா சங்கரன்