Friday, June 12, 2009

அனத்தல் அப்பா!

1987.. அதுவரை தமிழ் நாட்டையே தாண்டாத எனக்கு.. வேலை நிமித்தமாக ஜப்பான் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஒரு மாதமாய் பிரயாணத்திற்கு ஏற்பாடு நடந்தது. பயண நாளும் வந்தது. இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானம். பெட்டியெல்லாம் எடுத்து வாகனத்தில் ஏற்றி ஆகியது. ஆரம்பித்தார் அப்பா! பாஸ்போர்ட் எடுத்துக்கிட்டியா? சிங்கையில் இருக்கும் நண்பரின் தொலைபேசி எடுத்துக் கொண்டாயா? ஜப்பானில் குளிர் காலமாம்.. நல்ல கம்பளி எடுதுகிட்டயா? என்று ஏற்கனவே வேர்த்து ஒழிகி பதட்டத்துடன் இருக்கும் என்னிடம் கேள்வி மேல் கேட்டு மேலும் பதட்டம் ஊட்டினார் . என்னோடு விட்டால் பரவாயில்லை. ஏற்கனவே மகன் வெளிநாடு போகிறான் என்ற மகிழ்ச்சி கலந்த ஒரு விதமான பதட்டத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த என் அம்மாவிடம்.. அவன் வழியில் சாப்பிட ஏதேனும் கொடுத்தாயா? வேண்டிய அளவுக்கு துணி மணி எடுத்து வச்சானான்னு பார்த்தாயா? என்று அப்பாவின் அனத்தல் தொடர்ந்தது.

கடந்த 22 வருடத்தில் பலப்பல பிரயாணங்கள் சென்றும்.. ஓவொரு பிரயாணத்தின் போதும் எதாவது ஒன்றை மறந்து போய் அவஸ்தை பட்டதுண்டு. ஒருமுறை.. பயணத்திற்கு முக்கியமான பாஸ்போர்ட் கூட எடுக்க மறந்து விமான நிலையத்தில் இருந்து திரும்பி வந்ததுண்டு. அதனால், ஒவ்வொரு பிரயாணத்தின் போதும் அதற்கு முன்பும் அப்பாவின் "அனத்தல்" வந்து மனதை நெருடும். ரிச்மண்டில் இருந்து ஒரு பெரிய கல்யாண கும்பல் சென்னை பிரயாணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்.. யாருக்காவது அது போன்ற அப்பாவின் அனத்தல் கேட்கனும்னு ஏக்கம் இருந்தா.. இதோ உங்களுக்காக!!

ஏம்பா! ரொம்ப நாள் வெளியூர் போறியே.. காற்று குளிர்விப்பானை 80 F க்கு மாத்தியோ இல்ல நிறுத்தியோ வச்சியா? தண்ணீர் சூடு செய்யும் பாய்லரை குறைந்த சூட்டிற்கு மாற்றியோ.. இல்லை நிறுத்தியோ வைத்தாயா? எரிவாயுவும் மிச்சம். ஆளில்லாத நேரத்தில் வீட்டிற்கும் பாதுகாப்பும் கூட. முக்கிய மின்சார பலகையில் தெரு விளக்கு மற்றும் குளிர் பதனப் பெட்டி தவிர மற்றனவற்றை நிறுத்தி வைத்தாயா? மின்சார செலவும் மிச்சம். வீட்டிற்கு பாதுகாப்பும் கூட. குளிர் பதன பெட்டியில் உறையும் அறையை ஓட விட்டு குளிரும் அறையை நிறுத்தி வைத்தாயா? தானாக புல்வெளிக்கு தண்ணீர் விடும் இயந்திரம் சரியாக வைத்து உள்ளதா? வீட்டிற்குள் இருக்கும் செடிக்கெல்லாம் அவ்வபோது தண்ணீர் விட யாருக்காவது சொல்லியிருக்கியா?

காலம் கெட்டு கிடக்கு.. நகை போன்ற விலையுயர்ந்தனவற்றை வங்கியின் பூட்டு அறையில் வைத்து விட்டாயா? நம்பாளுங்க வீட்டில் எங்க நகையை ஒளித்து வைப்பார்கள் என்று திருடர்களுக்கு நல்லாவே தெரியுதாம். இப்பல்லாம் விமானத்தில் கொடுக்கும் சாப்பாடெல்லாம் நல்லாவே இருக்கறதில்லை.. வழியில சாப்பிட நாலு இட்லியும் நல்ல காரமா கொஞ்சம் தக்காளி தொக்கும், மிளகா பொடியும் எடுத்துகிட்டியா? ஐரோப்பாவில் அடுத்த விமானத்திற்காக காக்கும் நேரத்தில் சாப்பிட்டா அதில் கிடைக்கும் சுகமே அலாதி.

"அப்பா! கிளம்புற நேரத்தில் போதும்பா உங்க அனத்தல்" என்று அன்று அப்பாவிடம் சொன்னது ஞாபகம் வரவும் "சரி.. போதும்யா உன்னுடைய அனத்தல்" என்று ஏகப்பட்ட குரல்கள் இன்று மானசீகமாக காதில் கேட்கவே, இத்தோடு நிறுத்திக்கறேன்.

உங்கள் அனைவருக்கும் பயணம் இனிதே அமையவும், அனைத்து கனவுகளும், சபதங்களும் நலமே நிறைவேற வாழ்த்துக்கள்!!

வசந்தம்

2 comments:

  1. நல்ல அனத்தல். அப்பா/அம்மாவை முன்னால் நிறுத்திட்டீங்க...

    கிளம்பற நேரத்துல சபதத்த ஞாபகப்படுத்தி விட்டுட்டீங்க... பாக்கலாம் என்ன ஆகுதுன்னு...

    ReplyDelete
  2. இதெல்லாம் இல்லாமல் பிரயாணாம் சுகப் படாது!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!