Sunday, May 24, 2009

இன்னொரு மலை ஏறினோமே....

இன்று காலை எழுந்தவுடன் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். தலைவர் முரளியின் எச்சரிக்கை நினைவுக்கு வந்தது. சரி செய்ய ஒன்றுமில்லையென்றால் அவருக்காவது இன்னும் கொஞ்சம் பூஜை நடக்கவைக்கலாமென்று குடும்பத்தோடு கிளம்பிவிட்டேன் எங்களுடைய நீலத் தொடர்ச்சி மலைகளுக்கு. எங்கள் ப்ளூ ரிட்ஜ் மலைத்தொடர் மிகவும் அழகானது. வசந்தமாகட்டும், வெயில்காலமாகட்டும், இலையுதிர்காலமாகட்டும் - எல்லாக் காலங்களிலும் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் இடம் இது.

இன்றைய குறி ஹம்ப் பேக் ராக்ஸ் சிகரம் - Humpback Rocks! நடப்பது நிறைய இல்லாவிட்டாலும் சற்று கடினமான ஏற்றமென்றும் மேலிருந்து காட்சி ரொம்ப அழகானதென்றும் கேள்விப்பட்டிருந்தேன். 'கடினமான ஏற்ற' விஷயம் மனைவியிடம் சொல்ல 'மறந்து'விட்டு கிளம்பியாயிற்று. ஹம்ப்பேக் ராக் நிறுத்தத்தை அடைந்த போது மழை வருகிறமாதிரி இருந்தது. கொண்டு போயிருந்த சாப்பாட்டு சமாச்சாரங்களை கொஞ்சம் கவனித்துவிட்டு அங்கிருக்கும் பண்ணை நிலத்து வழியே நடந்தோம். அந்தக் காலத்தில் வர்ஜினியா கடல்கரைப்பக்கம், நடுப்பகுதியில் மட்டும் மக்கள் குடியேறினார்கள். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மேற்குப்பகுதியில் குடியேற்றம் நடந்தது. அப்படி குடியேற்றத்தை ஊக்குவிக்க நிறைய நிலமெல்லாம் கொடுத்தார்கள். அந்தக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பண்ணையை அப்படியே வைத்திருக்கிறார்கள்.

பண்ணையில் நுழைந்தவுடன் நம்மை வரவேற்கிறார் இவர்.


அந்தக் காலத்து பண்ணைவீடு.

உள்ளே நுழைந்து பார்த்தோம். அட நம்ம ஊர் கை ராட்டினம்.

இவர்கள் எதற்கு பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. அந்தக் காலத்து உடையணிந்த இருவர் வீட்டில் வேலை செய்வது போல பாவ்லா காட்டிக் கொண்டிருந்தார்கள்.

நெருப்புமூலைக்கு மேலே பார்த்தால்....

சின்ன வயசில் நான் தொலைத்த சிலேட்டு! பின்னாடி ஒரு கட்டைத் துப்பாக்கி! வீட்டுப் பரணில் ஏழு குழந்தைகள் தூங்கும் இடமாம். பையன்களை மட்டும் எட்டிப் பார்க்க சொல்லிவிட்டு ஜகா வாங்கினோம். வெளியே வழியில் அந்த காலத்து ஸ்டோர் ரூம். பக்கத்தில் அந்தக் காலத்து ஃப்ரிட்ஜ்!

இந்த அறையின் கீழே ஒரு ஓடை ஓடுகிறது. அது இந்த அறையைக் குளுமையாக வைத்திருக்குமாம். அதுதான் ஃப்ரிட்ஜ்.

அப்படியே பண்ணையிலிருந்து ரோட்டைத் தாண்டினால் ஹம்ப்பேக் ராக் மலைக்கான பாதை ஆரம்பித்தது. மொத்தம் ஒரு மைல்தான் என்றாலும், செங்குத்தாக ஆரம்பிக்கிறது ஏற்றம். கொஞ்ச தூரம் ராஜபாட்டை மாதிரி கற்கள் கொட்டிய பாதை. பிறகு கல்லும் பாறையும் காலுக்கு மெத்தை....

வழி நெடுக அதே கதைதான்...

இடையே மழை தூற ஆரம்பித்தது. நாம்தான் இந்த விஷயத்தில் அனுபவசாலிகளாயிற்றே. பையில் வைத்த பாஞ்சோவை எடுத்து மாட்டிக் கொண்டோம். மழை உடனே நின்று விட்டது. எதிரில் வந்தவர்கள் எல்லாம் எங்களைப் பார்த்து பயந்து விலகிப் போனார்கள். உடனே பாஞ்சோவைக் கழட்டிவிட்டோம். மேகமூட்டமாகவே இருந்ததால் மலையேற்றம் சூடில்லாமல் இதமாக இருந்தது. அவ்வப்போது திறந்த வானத்தில்...
நாமும் கொஞ்சம் பாலுமகேந்திரா ஆகிக் கொண்டோம்.
ஒரு வழியாக பாதைத் தவறாமல் உச்சியை அடைந்தோம்.

நிறையக் கூட்டம் மேலே. திருச்சி உச்சிப் பிளளையார் கோவில்தான் நினைவுக்கு வந்தது...
நாமும் பாறைகள் மீது ஏறி உட்கார்ந்தோம். அந்தப் பாறைகளைத் தவிர சுற்றும் பச்சைப் பசேல்தான்.


இதோ சுற்றிக் காண்பிக்கிறேன், நீங்களே பாருங்கள்.



கொஞ்ச நேரம் மலையுச்சியில் காற்று வாங்கிவிட்டு கீழே இறங்கினோம். செங்குத்தாக இறங்கும் பாதை சுலபமாக இருந்தாலும், நம் கால்களின் அதிர்ச்சி குறைப்பான்கள்(shock absorber) பலவீனமாக இருப்பதால் உருண்டோடுவதைத் தவிர்ப்பதற்காக கொஞ்சம் மெதுவாகவே வந்தோம்.

கீழே பார்த்தால் ஒரு பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு ஞாயிறு மாலையும் மூன்றிலிருந்து நாலு வரை கச்சேரியாம். எட்டுப் பட்டி நாட்டாமைகளும் நாற்காலி எல்லாம் கொண்டுவந்து உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.



ஏற்கனவே களைத்திருந்ததால், இந்த புல்புல்தாரா வெல்லாம் நமக்கு வேண்டாம் என்று கிளம்பிவிட்டோம்.

படங்களை பெரிதாக பார்க்க, இங்கே செல்லவும்.

3 comments:

  1. "நாமும் கொஞ்சம் பாலுமகேந்திரா ஆகிக் கொண்டோம்."

    உங்க கேமரா பாலுமகேந்த்ராவை விட நல்லா இருக்கு. அருமையான படங்கள். அடிக்கடி பல இடங்கள் போய் வந்து படங்கள் போடுங்க. நாங்க உட்கார்ந்த இடத்திலேயே எல்லாத்தையும் பார்த்திடறோம்.:-)

    ReplyDelete
  2. நானும் ஒரு முறை நண்பர்களுடன் பிக்னிக்கிற்காக இந்த இடத்திற்கு சென்றேன். ஆனால் மலை மேலே ஏறவில்லை. நல்ல இடத்தை மிஸ் பண்ணிவிட்டேன். அடுத்த முறை கண்டிப்பா மலை ஏற வேண்டும்.

    ReplyDelete
  3. //சென்றேன். ஆனால் மலை மேலே ஏறவில்லை. நல்ல இடத்தை மிஸ் //


    உங்க மாதிரி இளசுகளுக்கு அரைமணி கூட ஆகாது அந்த மலையேற. நீங்கள் போனது ஹம்ப்பேக் ராக்ஸ் பிக்னிக் ஸ்பாட். அது வேறு இது ஹம்ப்பேக் ராக்ச் விசிட்டர் செண்டர் பார்க்கிங். பிக்னிக் இடத்திலிருந்து சிகரம் கொஞ்சம் தூரம் - மூன்று மைல் என நினைக்கிறேன்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!