Tuesday, May 19, 2009

என் தமிழுக்கு ஒரு தளமா?

நல்லா கண்ணை கசக்கி விட்டுட்டு பார்த்தேன் ....... ஹுஉம்.....எதுக்கும் ஒரு தரம் கண்ணில் தண்ணீர் போட்டு அலம்பி விட்டுட்டு பார்த்துடலாம் னு செய்து பார்த்தா, இன்னமும் அப்படி தான் தெரியுது. என்னைத்தான் ரிச்மண்ட் தமிழ் சங்கம் ப்ளாகில் எழுத கூப்பிட்டிருக்காங்க!

ரொம்ப யோசனை பண்ணி பார்த்தப்புறம் எனக்கு இப்போ புரிஞ்சு போச்சுங்க. நல்ல தோழர் நாகு அன்னிக்கு ஒரு தரம் பேசிண்டு இருந்த போது வருத்தமாக சொன்னார். "நம்ம தமிழ் சங்கம் ப்ளாக படிக்கறது மொத்தமா நாலு பேரு தான்" அப்படின்னு. நான் எழுதி இனி படிப்பவர்கள் எண்ணிக்கை குறைய வழியில்லன்னு நிச்சயமா தெரிஞ்சப்பறம் தான் என்னைய எழுத கூப்பிட்டிருக்காங்க. நம்ம ரிச்மண்ட் தமிழர்களின் அறிவுத்திறனை மெச்சாமல் இருக்க முடியவில்லை. அப்படியே நம்மை நம்பி கூப்பிட்ட நல்ல உள்ளங்களின் நம்பிக்கையில் மண் விழாமல் இருக்க வினை தீர்க்கும் விநாயகனுக்கு மானசீக (ஏன் நாலடி நடந்து போய் பூஜை அறையில் நிஜமாகவே போடக்கூடாதா ன்னு கேக்கறது காதுல விழுதுங்க ..இது கொஞ்சம் ஈசின்னு பார்த்தேன்...ஹி ஹி) தோப்புக்கரணம் போட்டுவிட்டு ஆரம்பிக்கிறேன்.

கடந்த சில வாரங்களில் ஏதாவது பொது நிகழ்ச்சியில் இதர பல தமிழ் குடும்பங்களை பார்க்க நேர்திருந்தால் உங்களுக்கு இந்நேரம் ஒரு விஷயம் தெரிந்திருக்கும். உங்களுக்கு தெரிந்த பத்து குடும்பங்களில் ஐந்து பேராவது இன்னும் மூன்று வாரங்களில் வெய்யில் கால விடுமுறைக்கு இந்தியா செல்ல விறுவிறுவென்று ஏற்பாடுகள் செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்று. எங்கள் குடும்பமும் அதில் ஒன்று. ஆனால் இன்னும் நாங்கள் ஒரு பெட்டி கூட தூசு தட்டி வீட்டின் மேல் தளத்திலிருந்து இறக்கவில்லை. இதில் ஆச்சிரியப்பட ஒன்றும் இல்லைங்க ஏன்னா எங்க வழி சற்று தனி வழிங்க. விமானத்தளத்திற்கு கிளம்ப இரண்டு மணி நேரத்துக்கு முன் நாங்க ஒரு வித்யாசமான டெக்னிக் உபயோகித்து தயாராகிடுவோம். உங்களுக்கு மட்டும் அந்த டெக்னிக் சொல்லறேங்க. கடைகளில் இருந்து வாங்கி வந்த பைகளை திறந்து சாமான்களை பெட்டியில் பரத்திக்கொட்டவேண்டும். பிறகு உங்கள் குடும்பத்தினரின் உடைகளை அதன் மேல் கவிழ்த்து கொட்ட வேண்டும். பெட்டி நிரம்பும் வரை இதை ரிபீட் செய்யுங்கள். அதன் பிறகு ஒரு குழந்தையை பெட்டியின் மேல் ஏறி உயர குதிக்கச்சொல்லி பெட்டியை மூடவும். ஒவ்வொரு முறையும் நாங்கள் உபயோகப்படுத்தும் நம்பிக்கைக்குகந்த டெக்னிக் இது. :-)

வால்மார்ட், காஸ்ட்கோ கடைகளில் இந்தியா செல்லும் மக்களுக்காகவே மெமோரியல் டே விடுமுறையில் இருந்து ஓட்ஸ், ஜிப்லாக் பைகள், சாக்லேட், ஹனி பஞ்சஸ் ஒப் ஓட்ஸ் மற்றும் பௌன்ட்டி பேப்பர் துண்டுகள் ஸ்டாக் அதிகரித்துள்ளார்களாம். கேள்விப்பட்டேங்க. அது மட்டுமா, பள்ளி விடுமுறை விட்டவுடன் சுமார் பத்து தமிழ் குடும்பங்கள் எங்களுடன் சேர்ந்து ரிச்மண்டிலிருந்து ஒரே விமானத்தில் இந்தியாவுக்கு பயணம் செய்கின்றனர். சிறு வயதில் கலந்த சாதம், சிப்சை கையில் கட்டிக்கொண்டு பத்து பதினைந்து குடும்பத்தினரோடு ரயில் பயணம் செய்த சுவையான நினைவுகளை தவிர்க்க முடியவில்லை.

கொஞ்சம் சீக்கிரமே விமானத்தளத்திற்கு சென்று கர்சீப் போட்டு எல்லா சக ரிச்மண்ட் தமிழ் குடும்பத்தினருக்கும் பக்கத்து பக்கத்தில் எடம் போடனும்னு பிளான் இருக்கு. பார்ப்போம். இப்போது உங்களிடம் விடை வாங்கிக்கொண்டு நான் போய் அந்த பத்து குடும்பங்களையும் அணுகி யார் யார் எந்த எந்த சாப்பாடு கட்டி கொண்டு வருவார்கள்னு விசாரிக்க வேண்டும். அந்த விமானத்தில் பணி செய்பவர்கள் இது போல் ஒரு கலாட்டா கும்பலை இதுவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை.

ரிச்மண்ட் தமிழ் சங்க ப்ளாக் படிப்பவர்களின் எண்ணிக்கை என்னால் குறையாமல் இருக்குமாயின் மீண்டும் உங்களை சந்திக்க வருவேன்.

-மீனா சங்கரன்

18 comments:

  1. Welcome Meena!! I think you are the first blogger (RTS) that posted on the same day of invite!! Keep it going!

    ReplyDelete
  2. very humorous meena.Adhu namma familike undanathu.i too read some few posts of this site and some other tamil sites also.good that u people r doing this job.

    ReplyDelete
  3. Thank you Jayakanthan. I appreciate the invitation to write on this blog page. Writing in Tamil is kind of new to me so hopefully I will figure it out soon.

    ReplyDelete
  4. Hey Jeyashree,

    Good to see you here at the RTS site. There are several very good writers who contribute regularly to this blog page. You should check them out too. Thanks for stopping by.

    ReplyDelete
  5. சபாஷ் மீனா! முதல் பதிவே அமக்களமா இருக்கு.
    உங்க பீட்டர் பதிவும் பிரமாதம். தமிழ் பதிவு அதவிட பிரமாதம்!!

    நாங்க இதுவரை ரிச்மண்ட்ல இருந்து தனியா இந்தியாவுக்கு போனதே இல்ல. ரிச்மண்ட் குடும்பங்களின் சிறப்புல இதுவும் ஒன்னு. ஒருதடவ நாலு குடும்பம் ஒன்னா போயி ஒன்னா வந்தோம்.


    இனிமே ரிச்மண்டுல படிக்கறவங்க கண்டிப்பா ஜாஸ்தியாயிடுவாங்க. இல்லாட்டி உங்க திருப்புகழ் வகுப்புல ஒரு பத்து நிமிஷம் நம்ப பிளாக் படிக்கனும்னு சொல்லிடுங்க.
    நிறைய பதிவு எதிர்பார்க்கிறேன் உங்க கிட்ட இருந்து. மீனாவை அழைத்த ஜெயகாந்தனுக்கும் நன்றி.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் மீனா. வருக வருக. என்னது தமிழ்ல இப்ப தான் தட்டச்ச பழகிருக்கீங்களா ??? எப்படி நாகு கிட்ட இருந்து இத்தன காலம் தப்பீச்சீங்க :))))

    ReplyDelete
  7. நாகு,

    உங்களோட ஊக்கத்துல தான் முயற்சி செய்யலாம்னு ஆரம்பிச்சிருக்கேன். எப்படி போகுதுன்னு பார்ப்போம். :-) படித்து பின்னூட்டம் இட்டதுக்கு நன்றி.

    ReplyDelete
  8. சதங்கா,

    'வருக வருக' அப்படின்னு உங்களோட அமோக வரவேற்ப்புக்கு நன்றி. ரொம்ப காலமா எனக்கு தமிழ் தட்டச்சு பற்றி சொல்லி புரிய வைக்க முயற்சி செய்து நொந்து நூலாப்போன நண்பர்களில் நாகுவும் ஒருவர். ஏதோ கூகிள் புண்ணியத்தில் இப்போ எனக்கும் தமிழில் தட்டச்ச முடிகிறது. :-)

    ReplyDelete
  9. நன்றி திகழ்மிளிர்.

    ReplyDelete
  10. ரிச்மண்ட் தமிழ் சங்க ப்ளாக் படிப்பவர்களின் எண்ணிக்கை என்னால் குறையாமல் இருக்குமாயின் மீண்டும் உங்களை சந்திக்க வருவேன்.//

    வருக!! வருக!!

    ReplyDelete
  11. தேவான்மயம்,

    இப்படி ஒரு வரவேற்ப்புக்கு பிறகு வராமல் இருக்க முடியுமா? கண்டிப்பாக சீக்கிரம் வருவேன். வருகைக்கும், அழைப்புக்கும் ரொம்ப நன்றி. :-)

    ReplyDelete
  12. மீனா,

    முதலில் உங்களின் நகைச்சுவையான எழுத்துக்கு நன்றி. இரண்டாவது நன்றி ஜெயகாந்தன் அவர்களுக்கு உங்களள எழுதச்சொல்லி அதைச் செயல் படுத்தியதற்கு. மூன்றாவது நன்றி நாகு அவர்களுக்கு, உங்களை தொல்லை மேல் தொல்லை செய்து உங்களை ஒரு வழியாக பீட்டரிலிருந்து தங்கத் தமிழுக்கு கொண்டு வந்ததற்கு. அதைச் செய்வதில் அவருக்கு நிகர் அவரே.

    உங்கள் பதிவு அமர்க்களமாக இருக்கிறது. எடுத்துக் கொண்ட விஷயம் இலகுவானது போல தோன்றினாலும், அதை பேச்சு வழக்கில் படிக்கின்றபோது அருமையாக இருக்கிறது. இதை ஒரு ஓரங்க நாடகமாகவே யாராவது மேடையேற்றலாம். ஆமாம் நீங்கள் ஏன் நகைச்சுவை நாடகம் எழுதக் கூடாது?

    உங்கள் பீட்டர் பதிவுகள் சிலவற்றைப் படித்தேன். தமிழில் இருக்கும் அதே எளிமை ஆங்கிலத்திலும் இருக்கிறது அது மிகப் பெரிய ஆச்சர்யம். இது போன்ற எளிமையை நான் ஆர். கே. நாராயணன் எழுத்தில் அதிகம் படித்திருக்கிறேன்.

    வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்.

    பித்தன் பெருமான்.

    ReplyDelete
  13. வாங்க மீனா! ...அதிகமால்ல ஆகியிருக்கு! இன்னும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புடன்... :)

    ReplyDelete
  14. பித்தன் பெருமான் அவர்களே,

    உங்களோட ஊக்குவிக்கும் வார்த்தைகளுக்கு என்னுடைய முதல் நன்றி. நான் மதிக்கும் திரு ஆர். கே. நாராயணன் அவர்களின் எழுத்துக்களுடன் என் கிறுக்கல்களை (இதை வேறு எப்படி கூப்பிடறதுன்னு தெரியலை :-) ) ஒப்பிட்டு வாழ்த்தியதற்கு இன்னும் ஒரு நன்றி.

    சுவையாக ஏதாவது சொல்ல இருப்பின் நிச்சயம் இந்த தளத்திற்கு வந்து சொல்லுவேன்.:-)

    ReplyDelete
  15. கவிநயா,

    எதிர்பார்ப்பு அப்படின்னெல்லாம் சொல்லி பயமுடுத்தாதீங்க........:-)

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  16. ஆஹா - மீனா, காணாமல் போன பித்தரை கண்டுபிடித்து கூப்பிட்டு வந்ததே உங்கள் பதிவுக்கு பெரும் வெற்றி.

    பித்தரே - மீனா பீட்டரிலிருந்து தமிழுக்கு கொண்டுவரவில்லை. அவர் தொடர்ந்து அமர்க்களமாக பீட்டரிக் கொண்டிருக்கிறார். இரண்டும் அமர்க்களம்தான். அவர் ஊருக்குப் போவதால் இவை தடப்படக்கூடாது என்றுதான் கவலையாக இருக்கிறது.

    ReplyDelete
  17. நட்சத்திர வாழ்த்துக்கள் காலம் கடந்து :0

    ReplyDelete
  18. நன்றி பிரபா. ஊருக்குப் போய்கொண்டிருக்கிறீர்களா. உங்கள் பதிவுக்கு சுட்டியுடன் ஒரு பதிவு போட்டிருக்கிறேன்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!