Thursday, August 14, 2008

தெருப் பெயர்...


வர வர சென்னையில் தெருப் பெயர்கள் சென்னைத் தமிழில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அல்லது இந்தத் தெருவில் ஒருவர் சண்டிகரில் இருந்து டோபா வாங்கி வந்திருக்க வேண்டும். பின்னே இருக்கும்  பழைய தெருப்பெயர் இன்னும் தமாஷ்...

சதங்கா - பாருமய்யா - தெருத்தெருவாக spell check செய்து கொண்டிருக்கிறேன்.

Wednesday, August 13, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 28

சினிமா விமர்சனம் எழுதி ரொம்ப நாள் ஆயிடுச்சு அதனால இந்த வாரம் சில படங்களைப் பாத்தி கட்டி வகுந்திடலாம்னு இருக்கேன். முதலில், தசாவதாரம் பத்தி நான் எதுவும் சொல்லப் போறதில்லை, சொன்னால், "ஏன்யா அதுதான் ஒருத்தர் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாரே அதுகூட உனக்கு பொறுக்கலையா"ன்னு யார் யாரெல்லாம் என்னை கட்டம் கட்டி திட்டுவார்களோ தெரியவில்லை அதனால் Me NO Comments on தசாவதாரம்.

10000 BC
கதை அரத பழசு. நம் வாத்தியார் நடித்த ஆயிரத்தில் ஒருவன் கதை. என்ன இதில் நம்பியார், ராமதாஸ் வில்லன்கள் இல்லை, ஜெயலலிதாவின் காதல் கதை இல்லை, எம்.ஜி.ஆரின் கத்தி சண்டை இல்லை, நாகேஷின் காமெடி இல்லை, மற்றபடி கதை அதே அடிமைகள் கதை, ஜெயலலிதாவின் கன்னித்தீவுக்கு பதிலாக நைல் நதி ஓரத்தில் எகிப்தியர்களின் ப்ரமீட் கட்ட அடிமைகளை பிடித்துக் கொண்டு செல்கிறார்கள். நடுவே டைனோசர் குடும்பத்தைச் சார்ந்த சில பறவைகள் (டெரொடாக்டைல் வகை), பெரிய பல்லுடன் கூடிய புலி (சாபர் வகை), பெரிய யானைகள் (மாமொத்) எல்லாவற்றையும் சேர்த்து கலந்து கட்டி ஒரு படம் பண்ணியிருக்கிறார்கள். கதையில் வரும் பலர் காட்டுவாசிகள். நல்ல வேலை இயக்குனர் பாரதிராஜா இல்லை, இருந்திருந்தால் கதாநாயகிக்கு கவர்ச்சியாக ஒரு உடை கொடுத்து, பார்க்கும் அருவியெல்லாவற்றிலும் முக்கி எடுத்திருப்பார். இந்த இயக்குனர் அப்படி எந்த அபத்தமும் செய்யாமல் கதாநாயகியை ரொம்ப நயமாக காண்பித்திருக்கிறார். கதாநாயகன் ஊர் விட்டு ஊர் வந்து என்னமோ செய்து கதாநாயகியைக் காப்பாற்றுகிறானா இல்லையா என்பதுதான் கதை. ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம். ஆனால் குழந்தைகளோடு பார்க்காதீர்கள், வன்முறை நிறைய இடங்களில் பளீரென தாக்குகிறது கண்டிப்பாக பயப்படுவார்கள்.

பாட்மேனின்
டார்க் நைட்
இது முதலில் குழந்தைகள் படமில்லை. குழந்தைகளோடு பார்க்கலாம் என்று இருப்பவர்கள் தயவு செய்து அதைத் தவிர்க்கவும். ஹீத் லெட்ஜர் அருமையாக நடித்திருக்கிறார். இவருடைய அகால மறைவு இந்தப் படத்தின் வெற்றிக்கும் ஒரு காரணம் என்று பேச்சு. ஆனால் இவர் திரையில் என்ன செய்தாலும் விசில் பறக்கிறது. எது நடந்தாலும் இவருக்கு ஒன்றும் ஆவதில்லை, பெரிய ட்ரக் தலைகீழாக விழுகிறது அதிலிருந்து பல்லி அல்லது பாச்சை குட்டி போல தொபேல் என்று விழுகிறார் ஒன்றும் ஆகவில்லை, போலீஸ் ஸ்டேஷனில் பாட்மேன் அவரை அடித்து நொறுக்குகிறார் ஒன்றும் ஆகவில்லை. இப்படி என்ன ஆனாலும் அவர் ஒரு சின்ன கீறல் கூட இல்லாமல் தப்பி வந்து கிக் கிக் என்று சிரிக்கிறார். நம்மூர் ரஜனி, சரத்குமார், விஜயகாந்த் சண்டைகளைப் பற்றி இனி யாராவது எதாவது சொல்லுங்க அப்பால இருக்கு வேடிக்கை. பாட்மேனாக நடிக்கும் கிரிஸ்டன் பேல் ரொம்பவே சுமாராகத்தான் நடித்திருக்கிறார். இதற்கு முந்தைய பாட்மேனில் அவர் இதைவிட நன்றாக நடித்திருந்தாக நினைவு. கதையை ஒரு 40 நிமிடங்கள் அதிகமாக இழுத்து அதை ஜவ்வு ஜவ்வுன்னு ஜவ்வி "யோவ் படத்தை முடிங்கைய்யா, வீட்டுக்கு போகனும்" னு எல்லோரும் அவஸ்தைப் பட வைத்து விட்டார்கள். இதில் இந்தப் படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறது என்று சமீபத்தில் செய்தி வந்திருக்கிறது. என்னத்தை சொல்றது இதை கேள்வி பட்ட போது என்னை மாதிரி பல பேர் போய் ஏமாந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. மேலும் இந்த மாதிரி படங்களில் மார்கன் ப்ரீமேனையும், மைக்கேல் கெய்னையும் வீணாக்கியிருப்பதை தவிர்க்க ஒரு சட்டமே வர வேண்டும். எனக்கு வர வர பாட்மேனையும் ஸ்பைடர் மேனையும் சூப்பர் மேனையும் பிடிப்பதில்லை இவர்கள் கதைகள், குழந்தைகளுடன் படிக்க கூடிய காமிக் புத்தகங்கள் ஆனால் திரையில் வரும்போது தாங்க முடியாத வயலன்ஸ் திணிக்கப் பட்டு குடும்பத்தோடு பார்க்க முடியாதபடி செய்து விடுகிறார்கள்.

Apocalypto
இது மெல் கிப்ஸனின் படம் என்பதைத் தவிர வேறு எந்த ஒரு நல்ல விஷயமும் இல்லாத படம். பார்த்தால் குமட்டலே வரும் அளவுக்கு வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. ஒரு நிலையில் "யோவ் என்னய்யா படம் எடுக்கறாங்க " என்று கோபமே வருகிறது. இதையெல்லாம் காசு கொடுத்து வாங்கி வந்து பார்க்கின்ற என்னைப் போல ஆளுங்கள என்ன சொல்றது. இந்தப் படத்தைப் பார்க்காமல் தவிர்த்தால் தப்பேயில்லை.

சீனி கம் (ஹிந்திப் படம்)
இப்படி படம் எடுக்க ரொம்ப தைரியம் வேண்டும். அது இந்த இயக்குனருக்கு இருக்கிறது. ஒரு 60 வயது பெரியவர் (அமிதாப்) 30 வயது பெண் (தபு) இருவருக்கும் வரும் சின்ன மோதல் பின் காதல் இதை அனுமதிக்க மறுக்கும் தபுவின் தந்தை (பரேஷ் ராவல்), அமிதாபின் வயதான தாய், பக்கத்து வீட்டு குட்டிப் பெண் அவளுடைய அப்பா என சின்னஞ்சிறு குழுவை வைத்து ஒரு படம். கதையின் முன்பகுதி லண்டனில் நடக்கிறது பின் பகுதி டெல்லியில் என்று கலந்து கட்டி தந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் அமிதாப் சண்டை போட ஒரு சந்தர்ப்பம் வந்ததும் சரிதான் இதுவும் சராசரி மசாலா லாஜிக்கில் மாட்டிகிட்டு முழிக்குதேன்னு நினைத்த போது அதை சாமர்த்தியமாக சமாளித்து விட்டு டிக்கி சாப்பிட போய்விடுகிறார் அமிதாப். முடிவு கொஞ்சம் மெலோ ட்ரமாடிக்காக இருந்தாலும், பரவாயில்லை ரசிக்கலாம் டைப் தான். இப்படிப் பட்ட படங்களில் வரும் குழந்தைகளுக்கு கடுமையான நோய் என்று காட்டுவதை தடுக்க யுனிசெஃப்பில் ஒரு புகார் கொடுக்கலாமா என்று இருக்கிறேன்.

இனி கொஞ்சம் தமிழ்நாட்டு அரசியல்.
''பாஜக மீண்டும் அம்மாவுடன் (ஜெயலலிதா) கூட்டணி சேருமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அம்மா, அய்யா (கருணாநிதி) இரண்டு பேருமே ஒன்று தான். அரசியலில் எங்களுக்கு எதிரிகளே கிடையாது''(வெங்கையா நாயுடு)
இதுக்கு பதிலா எங்களுக்கு வெக்கம் மானம் ரோஷம் எதுவும் கிடையாதுன்னு சொல்லியிருக்கலாம்.
******************************************************************************************
''தனது பிறந்த நாளில், தமிழக முன்னேற்றத்துக்கு இதுவரை எந்த கட்சியும் அறிவிக்காத மிகப்பெரிய திட்டத்தை விஜயகாந்த் அறிவிப்பார். திட்டமிட்டபடி 'கேப்டன் டிவி' துவக்கப்படும்'' (தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா)
அது என்ன திட்டம் அரசியல் சினிமா ரெண்டிலிருந்தும் விலகி டிவி ஒளிபரப்பு துவக்கி நீங்களே எல்லா தொடர்களிலும் நடிக்கரதா. சூப்பர்!!!
******************************************************************************************
''என் வீட்டில் 10 நிமிடம் கரண்ட் இல்லை என்றாலும் கூட என் மனைவி என்னங்க மின்சார அமைச்சராக இருந்து கொண்டு என்ன செய்கிறீர்கள் என்று கேட்கிறார். இதனால் கஷ்டப்பட்டு அவரை காசிக்கு அனுப்பி வைத்தேன். அங்கு போய் விட்டு வந்த பின்னர் அவர், நம்ம ஊர் சொர்க்கம், அந்த இடம்தான் நரகம் போல இருக்கிறது என்கிறார்.''(ஆற்காடு வீராசாமி)
என்னங்க இது பகுத்தறிவு பாசறையில படிச்சவங்கன்னு வாய் கிழிய பேசட்டு, காசிக்கா போவாங்க கோபாலபுரம்தானே போயிருக்கனும். ஆமா என்ன ஆட்சி கவிழப் போகுதா சொர்க்கம் நரகம் எல்லாம் பேச ஆரம்பிச்சிடீங்க
******************************************************************************************
''12 சமாஜ்வாடி எம்.பிக்கள் அரசை எதிர்த்து வாக்களிப்பார்கள். நானும் வாக்களிப்பேன். இதையடுத்து கட்சியிலிருந்து வெளியேற்றுவார்கள். பின்னர் நான் மாயாவதி முன்னிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து விடுவேன்'' (அதிருப்தி சமாஜ்வாடி எம்.பி. முனவர் ஹசன்)
ஹைய்யா கட்சி விட்டு கட்சி தாவறதுக்கு இப்படி ஒரு சாக்கா?
******************************************************************************************
''மழை பெய்தால் தமிழக மக்கள் நல்ல சகுனம் என்பார்கள். என் கணவர் போகும் இடமெல்லாம் மழை பெய்கிறது. இது நாட்டுக்கு நல்ல சகுனம்''(சரத்குமாரின் மனைவி ராதிகா)
பார்த்துங்க மழை கொஞ்சம் அதிகமாயிட்டாலும் எல்லாருக்கும் கஷ்டம்தான். அப்புறம் சகுனத்தடையாயிடப் போறாரு.
******************************************************************************************
''அணுசக்தி ஒப்பந்தம் குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்களவையில் நடந்த முழு விவாதத்தையும் நான் கவனித்தேன். ஆனாலும் கூட எனக்கு தலையும் புரியலை, வாலும் புரியலை''(சமாஜ்வாடி எம்பி அதீக் அகமத்)
என்னங்க காமடி பண்றீங்க, நீங்கள்ளாம் தேர்தல் சமயத்தில பேசரது, அதுக்கு அப்புறம் பேசரது எதாவது எங்களுக்குப் புரியுதா, நாங்க அதைப் பத்தி என்னிக்காவது வருத்தப் பட்டிருக்கோமா?
******************************************************************************************
''அத்வானியை அவரது ஜோதிடர்கள் தவறாக வழி நடத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன். நாட்டின் நலனுக்காக அவர் முதலில் தனது ஜோதிடரை மாற்றிக் கொள்வது நல்லது'' (பிரதமர் மன்மோகன் சிங்)
அதேபோல அவரும் நீங்கள் உங்கள் ஆலோசகரையும், உங்கள் கட்சித் தலைவரையும் மாற்றிக் கொள்ளச் சொன்னால் கேட்பீர்களா?
******************************************************************************************
''கம்ப ராமாயணத்தில் சேது பாலத்தின் புனிதத்தன்மை குறித்து குறிப்பிடும் ராமர், 'இந்தப் பாலத்தை பார்த்தால் அனைத்து தீமைகளும் விலகும்' என்கிறார். பாலம் இல்லாவிட்டால் இது எப்படி சாத்தியமாகும்?''(விஸ்வ இந்து பரிஷத் சர்வதேச தலைவர் வேதாந்தம்)
என்னங்க இது சின்னப் புள்ளத் தனமா இருக்கு, வால்மீகி ராமாயணமே புருடான்னு சொல்றவங்க கிட்ட சூப்பர் டூப்பர் கதை கம்பராமாயணத்தைப் பத்தி சொல்றீங்க.
******************************************************************************************
''பாமக குழி பறிக்கிறது, குழி பறிக்கிறது என்கிறார்கள். நேற்று கூட மரம் நடுவதற்காக குழி பறித்தோம்''(பாமக நிறுவனர் ராமதாஸ்)
பேசரவங்க பேசட்டுங்க அவங்கள விட்டுத் தள்ளுங்க, இப்ப நட்ட மரங்களை எப்போ வெட்டித் தள்ளப் போறீங்கன்னு சொல்லுங்க?
******************************************************************************************
''இளைஞர்கள் விலகி போகிறார்கள் என்று அதிமுக இளைஞர் பாசறையை தொடங்கியுள்ளது. அதில் கட்சிக்கு ஆள் சேர்ப்பதற்காக லேப்டாப் தருகிறோம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர்''(திமுக எம்பி கனிமொழி)
அவங்க கட்சி படிச்சவங்களை குறி வெச்சி காய் நகத்துராங்க, நீங்க பாவம் இன்னும் புடவை, வேட்டி, சட்டை, பல்பொடி, செருப்பு தரேன்னு சொல்லி எப்படி ஆள் சேர்க்க முடியும், பேசாம கட்சியில சேர்ந்தா கார் தருவோம்ன்னு சொல்லிப் பாருங்க.
******************************************************************************************
''அரசியல் மிகவும் கெட்டுபோய் விட்டது. அரசியலை சரி செய்ய இன்னொரு மகாத்மா காந்தி வர வேண்டும்''(கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி)
இன்னொரு மகாத்மா வந்து அரசியலை சரிசெய்யரதுக்கு பதிலா உங்களைப்போன்ற எல்லா அரசியல்வாதிகளும் அரசியலை விட்டு விலகிட்டாலே போதும் நாடு உருப்பட்டுவிடும்.
******************************************************************************************
''ஓகேனக்கல் பிரச்சனையில் முதலமைச்சர் கருணாநிதி, கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பிறகு பேசலாம் என்று அறிவித்திருந்தார். தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி அமைத்து பல மாதங்கள் ஆகியும் இது குறித்து கருணாநிதி வாய் திறவாமல் மௌனம் சாதிப்பது ஏன்?'' (இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன்)
அவர் எந்த வருடத்தியத் தேர்தல்ன்னு சொல்லலையே!!!
******************************************************************************************
''பிரதமர் பதவியில் என்னை அமர வைப்பதற்கான இயக்கம் தொடங்கிவிட்டது. மக்களின் இந்த கனவும் நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும். நான் பிரதமராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.'' (உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி)
மக்களின் கனவா, கண்டிப்பா பொது மக்களா இருக்க முடியாது, வேற எந்த மக்கள், ஓ உங்க சொந்தக்கார மக்களா, சரி சரி.
******************************************************************************************
''சமூக விரோதிகளுக்கு அரசியல்வாதிகள் பாதுகாப்பு அளிக்கக் கூடாது. கட்சியிலும் இடமளிக்கக் கூடாது''(இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன்)
இப்படி பொத்தாம் பொதுவா சொன்னா எப்படி புரியும், எந்தக் கட்சின்னு பளிச்சுனு சொல்லிடுங்க.

பித்தனின்
கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com

Tuesday, August 12, 2008

சென்னை

  1. சென்னை!

எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது சென்னை! செல்போன்(மன்னிக்கவும் - அலைபேசி) எங்கெங்கும் வியாபித்திருக்கிறது. வீட்டு வேலைக்காரி கையில், கோயிலில் பெருக்கும் ஆயா கையில், திருவண்ணாமலையில் தாலி கட்டி முடித்தவுடன் மணமகன் கையில்... இவ்வளவு நாள் ஒரு போன் இணைப்புக்கே அல்லாடியவர்கள் ஒரு கொலைவெறியுடன் தழுவியிருக்கும் சாதனம் அலைபேசி. அப்பாவின் முகவரிப் புத்தகத்தில் முகவரிகள் எல்லாம் போய் ஒரே போன் நம்பர்களாகத்தான் இருக்கின்றன. போனில் இதுவரை பதில் மட்டுமே பேசிவந்த அம்மா சித்தியின் செல்போன், வீட்டு போன் எல்லாவற்றையும் நினைவிலிருந்தே போடுவதை பார்த்து அசந்து விட்டேன்.

செல்போனிலேயே வினாடிகளில் உங்கள் அக்கவுண்டை டாப்- அப் செய்து விடுகிறார்கள். கல்லூரி மற்றும் பள்ளிகளில் இருக்கும் மாணவர்களிடம் உங்கள் அலைபேசி எண்ணைக் கொடுக்காதீர்கள். குறுஞ்செய்தி வந்து குவிந்து விடும். அண்ணன் மகன் தினத்துக்கு நூறு செய்திகளுக்கு மேல் அனுப்புகிறான். இரவு பனிரெண்டு மணிக்கு என்ன செய்கிறாய் என்று குறுஞ்செய்தி அனுப்புகிறான் என்று இன்னொரு அண்ணன் மகள் புகார் செய்தாள். இன்னொரு அண்ணன் மகன் இவன் செய்திகளுக்கு பயந்து எண்ணையே மாற்றிவிட்டான். இன்னொரு அண்ணன் மகன் இன்னும் செல்போன் பாவிக்கும் வயதுக்கு வரவில்லை. அவன் என்ன செய்யப் போகிறானோ? என்னிடம் முறைத்துக் கொள்பவர்களின் அலைபேசி எண்களை அவனுக்கு கொடுப்பதாக உத்தேசம்.

அண்ணன் சுஜாதா அஞ்சலி வந்த பத்திரிக்கைகளை சேர்த்து வைத்திருந்தான். சதங்காவின் கவனத்திற்கு - ராமகிருஷ்ணன் மூன்று பக்கத்துக்கு மேல் அஞ்சலி எழுதியிருக்கிறார்.

இவ்வளவு நாள் அமெரிக்காவில் இருந்து வந்து பொருட்களின் விலையைப் பார்த்து 'ஆ ஸம்' என்று வாங்கி குவித்தவர்கள், இப்போது நாற்பதால் வகுத்து பார்த்துவிட்டு அம்மாடி என்று ஓடுகிறார்கள். சரவணா, நெல்லி, சென்னை சில்க்ஸில் வாடிக்கையாளர்களை விட பணியாளர்கள் அதிகமாக காணப்படுகிறார்கள். எது எதற்கோ ஆடி தள்ளுபடி. ஆடி மாதத்தில் பிரிந்திருக்கும் புதுத் தம்பதிகள் SMS செய்துகொள்ள ஆடி அட்டகாச தள்ளுபடி!

திருமண மேடையில் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள், மணமக்கள், புரோகிதர் தவிர மற்ற அனைவரும் செருப்பணிந்து இருக்கிறார்கள்.

சென்ற மறுதினம் மதிமுகவின் கூட்டம் நடந்து கொண்டு இருந்தது சேலையூரில். ஓபாமாவுடன் வைகோவின் படம் பெரிய பேனரில்.

ஒரு பேச்சில்: அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஓபாமாவை சந்தித்து கை குலுக்கி, கட்டித் தழுவி முத்தமிட்ட முதல் தமிழன் என்று எங்கோ போய்விட்டது பேச்சு. ஓபாமாவும் வைகோவும் கேட்டிருந்தால் நெளிந்திருப்பார்கள்... குடியரசுக் கட்சியினருக்கு இந்த பேச்சு போயிருந்தால் வரும் தேர்தலில் ஓபாமாவுக்கு எதிராக பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. என்னை அசர வைத்த இன்னொரு பேனர் பாண்டிச்சேரியில்.

எந்த பேனரிலும் இவர் பெயரே கிடையாது. புதுவையின் காமராஜர் என்று ஆரம்பித்து ஒரே அடைமொழிதான். அவ்வளவு பிரபலமா என்று வியந்தேன். புதுவை முழுவதும் இவர் பிறந்தநாள் பேனர்தான். சில பேனர்களில் இவர் அமர்ந்திருக்க பக்கத்தில் சிங்கம், புலியெல்லாம். நிறைய பேனர்களில் அந்த வட்டார கட்சி பிரமுகர்கள் அனைவர் முகமும் போட்டு ஒரே அட்டகாசம். எந்த காங்கிரஸ் முதல்வர் இவ்வளவு பிரபலமாகியிருக்கிறார்? அதனால்தான் போலிருக்கிறது காங்கிரஸின் தேசிய விளையாட்டான உட்கட்சி பூசல் அதிகமாகி இப்போது டெல்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நீங்கள் இதை படிக்கும்போது முதல்வராக இருக்கிறாரா என்று பார்ப்போம்.

எல்லா கடைகளிலும் கம்ப்யூட்டர் பில்லிங்தான். ஒரு மளிகை கடையில் சில பொருட்கள் வாங்கிவிட்டு பில்லைப் பார்த்தால் அதில் ஒரு வஸ்து: Burpy. என் மகன் சிரி சிரி என்று சிரித்தான். அது என்ன என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? பெட்ரோல் பங்குகள், பண்ருட்டி மளிகைக் கடைகள், ரிலையன்ஸ் ப்ரஷ் என எங்கிலும் பெண்கள்தான். இந்திய ராணுவத்திலும் பெண்களைச் சேர்த்துக் கொள்ளப் போகிறார்களாம்.திருமண வயதில் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்கள் பெண் தேடி அல்லாடுகிறார்கள்.

எஃப் எம் ரேடியோ தமிழ் கலக்குகிறது. அதாவது நம் பித்தன் என் பேச்சை சொன்னமாதிரி, ஆங்கிலத்தில் கொஞ்சூண்டே கொஞ்சூண்டு தமிழ் கலந்து பேசுகிறார்கள். சில DJகள் குரலைக் கேட்டால் நம்ப ஊர் லாவண்யா ராம்கி போலவும், பார்கவி கணேஷ் மாதிரியும் இருக்கிறது. ரிச்மண்டில் எஃப் எம் ரேடியோ ஆரம்பிக்கவிருக்கிறவர்கள் கவனிக்கவும். இதைவிட மோசம் மெகாசீரியல் தமிழ். பார்ப்பவர்கள் அனைவருக்கும் மூளை வளர்ச்சி குறைவு போல மெதுவாகப் பேசுகிறார்கள். பிற்காலத்தில் ஒரு ஆராய்ச்சி பண்ணி இதனால் தமிழர்களின் மூளை அவ்வளவு விரைவாக வேலை செய்யாது என்று டாக்டரேட் செய்யாமல் இருந்தால் சரி.

குசேலன் படப் போஸ்டரில் ஒன்றிலும் அந்தப் படத்தின் கதாநாயகனைக் காணமுடியவில்லை. பாவம் பசுபதி! அனைவர் வீட்டிலும் கம்ப்யூட்டர் இருக்கிறது. நாம்தான் இங்கே நின்டென்டோ விற்கும் சாதனங்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு இருக்கிறோம். சென்னையில் கம்ப்யூட்டரில் gameboy advance, DS எமுலேடர் புரோகிராம் வைத்து அந்த விளையாட்டுகளை பைசா செலவு இல்லாமல் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

போக்குவரத்து மிக மிக அதிகமாயிருக்கிறது. சாலையில் சென்றால் எண்திசைகளிலிருந்தும் வருவதால், ஜாக்கிரதையாக ஓட்ட தும்பி மாதிரி கூட்டுக்கண்தான் வேண்டும். இன்னும் மேலே கீழே இருந்துதான் போக்குவரத்து வரவில்லை. அடுத்த முறை அதுவும் வந்துவிடும். நண்பனின் மாமனார் அவருடைய காரை எடுத்துக் கொண்டு போகச் சொன்னார். நான் எடுத்துக் கொண்டு போனால் அவர் காரை திரும்ப 'எடுத்துக் கொண்டுதான்' வரவேண்டும் என்று மறுத்துவிட்டேன். டாடாவின் நேனோ வராமலே இந்த கதி! நானோ வந்துவிட்டால் உலகின் அனைத்து பிரச்னைகளுக்கும் புஷ் நானோவை காரணமாக சொல்லுமளவுக்கு பிரச்னை வரப் போகிறது....


இனி உங்களுக்கு சில கேள்விகள்....

1. இது என்ன பூ?




2. இது எந்த மலைக்கோட்டை?


3. இந்த மலைக்கோட்டை?

4. இந்த மலை அடையாளம் தெரிகிறதா? - மேலே கோயிலோ கோட்டையோ கிடையாது....



5. கீழ்காணும் அமைப்பு என்ன? படத்தை பெரிதாக்கிப் பார்க்காமல் சொல்லவும் :-)


பண்ருட்டி தன்வந்திரி பெருமாள் கோயில் சுவற்றில் இருக்கும் சித்திரம்.
சிலோத்துமத்தில் சிலோத்துமம் மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது முற்றினால் மருந்து கிடையாது. (கிளிக் செய்து பெரிய படத்தில் பார்க்கவும்).

6. கடைசி கேள்வி - எனக்கு எத்தனை அண்ணன்மார்? :-)

தொடரும்...

Saturday, August 09, 2008

என்ன விலை அழகே - தொடர்கதை

என் இனிய ரிச்மண்ட் தமிழ் மக்களே !

சமீபத்தில ஒரு கதை, உண்மையை மையமாக வைத்து ஆரம்பித்து, கடைசியில் ஒரு அழகிய காதல் கதையாக மாற்றி எழுதியிருக்கிறேன். வந்து வாசித்து சொல்லுங்கள்.

என்ன விலை அழகே

சுட்டிய அழுத்தி, வரும் பக்கத்தில், கடைசிப் பதிவில் இருந்து வாசித்து வாருங்கள். முதல் பாகத்தில் இருந்து பக்கத்தில் ஆரம்பிக்க, blog default மாற்ற முடியுமா எனத் தெரியவில்லை. அறிந்தவர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும் :))