Monday, March 10, 2008

சுஜாதா

எழுத்தாளர் சுஜாதா காலமாகிவிட்டார் என்பதை நாகுவின் பதிப்பில் பார்த்தவுடன் எனக்கு சில நிமிடங்கள் ஏதும் செய்யத் தோன்றவில்லை. இது வெறும் வதந்தி என்ற செய்தி வரக்கூடாதா என்ற ஏக்கம் அடிமனதில் குடைந்து கொண்டிருந்தது நிஜம். காலனின் கணக்கை யார் அறிவர். அவர் சிவாஜி படத்தில் எழுதிய ஒரு வசனம், "சாகிற தேதி தெரிஞ்சுட்டா, வாழற காலம் நரகமாயிடும்". அது முற்றிலும் சரி. ஆனால் இதைத்தான் மயான வைராக்கியம் என்கின்றனர் பெரியோர்.


பொதுவாக கதை படிக்கும் ஆவலை எனக்குள் புகுத்தியது எனது சகோதரர்களும் எனது சகோதரியும் அது ஒரு சுவாரசியமான முயற்சி அதைப் பற்றி பிறகு ஒரு கிறுக்கலில் தொடருகிறேன். எனக்கு சுஜாதாவின் எழுத்தை அவர்கள் அறிமுகம் செய்தது நடந்து ஒரு 30 வருடங்களுக்கு மேல் இருக்கும். அவருடைய நைலான் கயிறு நாவல்தான் நான் முதலில் படித்த அவருடைய படைப்பு. கதையின் கட்டமைப்பு, அதில் தனியாக வரும் கணேஷின் புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு, வார்த்தைகளில் சொல்லி விளக்க முடியாதது. அவருடைய அந்தக் கதை அந்தக் காலத்தில் ஒரு மிகப் பெரிய திருப்புமுனை. மோர் குழம்பில் இருக்கும் வெண்டைக்காய் போல சவ சவ என எழுதி வந்த பலருடைய பதவிக்கு வேட்டு வைத்து தனக்கென மிக பெரிய ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்த ஒருவர் சுஜாதா.

இவருடைய படைப்புகள் ஏறக்குறைய எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். சில எனது கையிருப்பிலும் இருக்கிறது. என்னைப் போல பலருக்கும் கணிப்பொறியை (கம்ப்யூட்டர்) அறிமுகம் செய்து வைத்த புண்ணியவான். மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கை இப்போ சொல்றேன், அப்பறம் சொல்றேன்னு சொல்லி கடைசிவரை சொல்லாமல் ஏமாற்றியவர். கணேஷ் வசந்த் என்ற இரு கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்கள் நிஜம் என்று பலரையும் நம்ப வைத்தவர். அதில் வசந்த் கதாபாத்திரம் பற்றி பல அபிப்ராய பேதங்கள் இருந்த போதும் அதைப் பற்றி கவலைப் படாதவர். மேடை நாடகங்களில் மாற்றங்களை சர்வ சாதாரணமாக கொண்டு வந்தவர். இவருடைய மறைவு தமிழுக்கு கண்டிப்பாக ஈடு செய்ய முடியாத மிகப் பெரிய இழப்பு.

கணையாழியில் வந்த இவருடைய கடைசிப் பக்கங்கள் என்னை கிறுக்கல்கள் எழுதத் தூண்டியதும் நிஜம். இவரை தனது ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவராக என்னைப் போல பலரும் கருதுவதும் நிஜம். இவரது பாதிப்பில்லாமல் எழுதும் தமிழ் எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பதும் நிஜம். நாகு குறிப்பிட்டது போல், சிறுகதை, நாவல், நாடகம், சங்க இலக்கியம், அறிவியல் என்று எல்லாத் துறையிலும் கால் பதித்து தனக்கென ஒரு இடத்தை வைத்திருந்தவர்.

இவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்.

- பித்தன்.


2 comments:

  1. //மோர் குழம்பில் இருக்கும் வெண்டைக்காய் போல சவ சவ என எழுதி வந்த பலருடைய பதவிக்கு வேட்டு வைத்து தனக்கென மிக பெரிய ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்த ஒருவர் சுஜாதா.//

    சரியாக சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் வித்தியாசமாகவும் எளிமையாகவும் எழுதி அனைவரையும் கவர்ந்தவர். அவருடைய தாக்கம் பல எழுத்தாளர்களிடம் இருந்தது.

    ReplyDelete
  2. பித்தன் அவர்களே,

    நீங்க சுஜாதாவோட 30 நிமிடங்கள் சந்திச்சு பேசியிருக்கறதா சொன்னீங்களே, அந்த சந்திப்பைப் பத்திக் கொஞ்சம் எழுதுங்களேன்...

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!