Thursday, June 21, 2007

வைராக்கியம் - இருநூறாவது பதிவு!

தஞ்சைப் பெரிய கோவிலின் மணி டாங், டாங், டாங்கென அடித்து அன்றைய சாயங்கால பூசையை ஊருக்கு உரைத்தது.

விபூதிப் பிரசாதம் வாங்கி அணிந்து கொண்டு வெளியில் வந்தார் பரமசிவம். சிலு சிலுவென வீசிய காற்றில் சுற்றுப் பிரகாரத்தில் இருந்த மரங்களின் இலைகள் சிற்றருவியென சலசலத்தன. தென்றலின் தீண்டலில் கோவிலுள் இருந்த புழுக்கம் குறைந்து ஒருவித வேதியல் மாற்றம் நிகழ்ந்து தேகத்தில் குளுமையை உணர்ந்தார் பரமசிவம்.

பெரிய வளாகம் என்பதால், ஓரளவுக்கு மக்கள் இருந்தும் கூட்டமாகத் தெரியவில்லை.



வெளிச்சம் மெல்ல விடைபெற துவங்கியது. வலக்கையை மேல்தூக்கி மலைமுகடாய்ப் புருவங்களின் அருகில் வைத்து நந்தி மண்டபத்தைப் பார்த்தார். 'நாவன்னா' நேரத்துக்கு வந்திட்டானே என வியந்து, அத்திசையை நோக்கி நடையை சற்று துரிதப்படுத்தினார். சக வயதுடையோர் வட்டத்தில், நாராயணபிள்ளையை நாவன்னா என்று தான் அழைப்பார்கள். எனக்கென்ன அவ்வளவு வயதா ஆகிவிட்டது, அந்தக்காலத்து ஆளுக மாதிரி கூப்பிடறீங்களே என்று அன்பாய்க் கடிந்து கொள்வார். அப்படி ஒன்றும் வயோதிகர் இல்லை நாவன்னா, வருகிற ஆவணியில் அவருக்கு வயது 65.

தெய்வ நம்பிக்கை கொண்டவர்தான் நாவன்னா. ஆனால் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டு யாரும் பார்த்ததில்லை. வெளிப்பிரகாரத்தோடு சரி. சாமியை வெறும் கல் என்று நினைத்தாரோ, இல்லை அர்ச்சகர்களை வெறுத்தாரோ தெரியவில்லை.

நாவன்னாவை நெருங்கிய பரமசிவம், "என்ன ஓய், மேல்சட்டையில அங்கங்கே அழுக்கு படிந்து இருக்கு" என்றார்.

ஒன்னுமில்லவோய், இன்னிக்கு வேலையில சுந்தரபாண்டி பயல காணோம். வெஷம் குடிச்சிக் கெடக்கானாம். அவன் ஆத்தா செல்லம்மா வந்து சொல்லி அழுதுட்டுப் போறா. இன்னிகுனு பாத்து ஒரு கல்யாண ஆர்டர். அதான் வெறகு மண்டில நானே வெறகு அள்ளி போடவேண்டியதாப் போச்சு. குனிஞ்சு நிமிந்ததில முதுகு தான் கொஞ்சம் வலிக்குது.

துள்ளிக்குதிக்கிற வயசுனு நெனைப்பாய்யா உமக்கு. இன்னோரு ஆளப் போட்டு வேலையப் பாக்கவேண்டியது தானே. என்ன வெறகு மண்டி வச்சு நடத்தறே ? ஊரோட இலவசமா கேஸ் அடுப்பு வேற கவுருமெண்டு கொடுக்குது. வெறகு விக்கிறாராம் வெறகு. நாவன்னாவைப் பார்க்கும்போதெல்லாம் பரமசிவம் புலம்பும் புலம்பல் தானிது.

வந்திட்டாரு சிவம். சிவய்யா, நீயும் சொல்லிகிட்டே தான் இருக்கே. நானும் கேட்டுக்கிட்டே தான் இருக்கேன். கையக் கால மடக்கி, ஒடம்ப வளச்சி, வேல பாத்து சாப்பிட்ட உடம்புய்யா. சும்மா உக்காந்து சாப்பிட மனம் வரமாட்டேங்குது.

மேல்துண்டை உதறி படிக்கல்லில் போட்டு நாவன்னாவின் அருகில் பரமசிவமும் அமர்ந்தார். இப்பவாவது சொல்லுமய்யா, ஸ்ரீவிமானத்தின் உச்சியில் இருக்கும் 80 டன் கல், ஒரே கல்லா ? நமக்குத் தெரிஞ்சு அது ஒரே கல்லுனு தான் படிச்சிருக்கோம். ஆனா அது இரு கற்கள் என்றும், ஆரஞ்சுச் சுளையென ஆறேழு கற்கள்னும் ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்களே என்றார்.

உம்ம குசும்பு உம்ம விட்டுப் போகுமாய்யா. என் தம்பி மக கற்பகம் புகுந்த வீடு மூலமா, கணபதி ஸ்தபதி சொந்தக்காரன்னு சொன்னதில இருந்து கோவிலப் பத்தி ஏதாவுது கேட்டுக்கிட்டே இருக்கியே. ஸ்தபதி அவர்களயே ஓரிரு முறைதான் பாத்துருக்கேன். அவுக பாட்டன் பூட்டன் கட்டுன கோவில் பத்தி எனக்கு என்னய்யா தெரியும் என்று சீறித்தள்ளினார் நாவன்னா.

சரி விடுமய்யா. என்னத்த சொல்லிப்புட்டேன். இம்புட்டுக் கோபம் வருது இந்த வயோதிக வாலிபருக்கு என்று மீண்டும் சீண்டினார் பரமசிவம்.

என்னவிட நீர் ரெண்டு வருசம் மூப்புன்றத மறக்காம இருந்தாச்சரி என்றார் நாவன்னா புன்முறுவல் பூத்தபடி.

வட்ட பல்புகளும், நீள ட்யூப்லைட்டுகளும் மினுக்கி கோவில் வளாகம் முழுதும் ஒளி பரவியது. கம்பீரமாகக் காட்சி அளித்தது ஸ்ரீவிமானம். நந்தியின் மேல் தடவிய எண்ணையின் பளபளப்பில் மேலும் மின்னியது நந்தி மண்டபம். கோவிலிருந்து ஓரிருவராக வெளியேறத் துவங்கினர்.

நம்ம நக்கல் பேச்சு கெடக்கட்டும். என்னவாம் அந்த பயலுக்கு, எதுக்கு வெஷம் குடிச்சானாம் என்று நாவன்னாவைக் கேட்டார்.

வா நடந்துகிட்டே பேசிக்கிட்டு போகலாம் என்று நாவன்னா எழுந்தார். பரமசிவமும் அவரைத் தொடர்ந்தார். மண்டபத்தை விட்டு இறங்கி இருவரும் நடக்கத் தொடங்கினர்.

மராத்தியர் கட்டிய கோட்டைச் சுவர் வாயிலில் சுந்தரபாண்டியனின் தாய் நின்று கொண்டிருந்தாள். அவளைக் கண்டு கொண்ட நாவன்னா, என்னம்மா பய எப்படி இருக்கான் இப்போ என்றார். அழுத அவளின் கண்களால் வீங்கியிருந்தது ஒட்டிப்போன கன்னங்கள்.

நைந்துபோன முந்தானையை வாயில் வைத்தபடி
, கண்களில் நீர் பெருக்கெடுக்க "அப்படியே தான் கெடக்கான். சோறு தண்ணி எறங்க மாட்டேங்குதுய்யா". நெலக்குத்தின தேர் மாதிரி விட்டத்தை வெறித்த படி கெடக்கான்யா என்று தாங்கமுடியாத அழுகையை அடக்கிக் கொண்டாள்.

சுப்ரமணிக்குச் சேதி தெரியுமா என்று கேட்டார் பரமசிவம்.

ஊர் ஊரா போற பொளப்பு அவருக்கு. எப்ப வருவாருனு தெரியல. இப்ப எந்த ஊர்ல இருக்காருன்னும் தெரியல. எப்பவாவுது பக்கத்து வீட்டு போன்ல கூப்பிட்டு பேசுவாரு. அவரா கூப்புட்டாத்தான்யா என்று விம்மினாள்.

ஏதாவுது பேசறானா ? நான் என்ன செய்யட்டும் என்றார் நாவன்னா.

படிக்கனும், படிக்கனும்னு சொல்லிக்கிட்டே இருக்கான்யா. ஆயிரத்துக்கு மேல மார்க் எடுத்து என்னய்யா ப்ரயோசனம். மேலே படிக்க வைக்க முடியாத வசதியற்ற என் வயிற்றில் பொறந்து இப்படிக் கஷ்டப்படுறானே என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

படிக்கும்போதே உங்க வெறகு மண்டில வேலை செஞ்சுகிட்டே தானய்யா படிச்சான். அதையே முழுசா செய்யிடானு சொன்னாலும் கேக்க மாட்டேன்கிறான்யா என்று தளுதளுத்தாள்.

சரி சரி கண்ண தொடச்சுக்கவே. பெத்தவ கஷ்டம் எங்களுக்கும் புரியுது. நாங்க நாளைக்கு அவன வந்து பாக்குறோம் என்று சொல்லி, கையில் தொங்கிய மஞ்சப் பையில் கையைவிட்டு, சில நூறு ரூபாய்த்தாள்களை உருவி, செல்லம்மாளிடம் நீட்டினார் நாவன்னா. மேல்படிப்புக்கு நாங்க உதவி பண்றோம்னு சுந்தரபாண்டி கிட்ட சொல்லு. வேற ஏதாவுது உதவி தேவைனா சொல்லு என்று சொல்லி அவளை அனுப்பிவைத்தனர் பரமசிவமும் நாவன்னாவும்.

சோகம் அப்பிய செல்லம்மாளின் விழிகள் வியப்பில் ஆனந்தக் கண்ணீர் சிந்தியது முதல் முறையாய். கைகூப்பி இருவரையும் வணங்கி வீடு நோக்கி விறைந்தாள்.

சிறிது தூரம் நடந்து, யாரும் அவர்கள் அருகில் இல்லை என்று அறிந்து, "ஏய்யா நாவன்னா, புத்தி மழுங்கிப் போச்சாய்யா உமக்கு. நல்லாப் படிக்கிற பையனையா வேலைக்கு வெச்சிருந்தே ?" கையக் கால மடக்கி வேல செஞ்சு சாப்பிட்டா மட்டும் போதுமா ? அந்த வைராக்கியம் செய்யற செயல்லயும் இருக்க வேணாமா ? ஒன்னுமில்லாத பயலெல்லாம் ஓகோனு இருக்க இந்தக் காலத்தில படிக்கிற ஒரு பய அழியலாமா ? அதுக்கு நாமலும் உடந்தையா இருக்கலாமா ? என எண்ணையிலிட்ட எள்ளாய்ப் பொறிந்து தள்ளினார் பரமசிவம்.

படிப்புச் செலவுக்கு எங்க வருமானம் பத்தல. நீங்க உதவி பண்ணி அவனுக்கு வேல போட்டுக் கொடுங்க. அந்த சம்பளத்தில அவன் படிச்சிக்கிருவான் என்று ஆத்தாளும், அப்பனும் விழுந்து கெஞ்சினதுக்கு நான் பண்ணின காரியம் அது. என்ன பண்ணச் சொல்றே இப்போ என்று சீறினார் நாவன்னா.

கோவிலைச் சுற்றி வந்து தற்போது சிவகங்கைக் குளத்தருகே இருந்தனர் இருவரும். குப்பையும், முட்புதர்களும் அண்டி இருந்தது. ஒருகாலத்தில் அரண்மனைக்கு இணையாக பராமரிக்கப் பட்ட இடமாக இருக்கலாம் ! குப்பையில் தான் மாணிக்கம் இருக்கும் என்பதால் குளமெங்கும் குப்பையோ என்னவோ !

நாளைக் காலை நேரா சுப்ரமணி வீட்ல சந்திப்போம் என்று சொல்லி இருவரும் விடைபெற்றனர்.

குடியானவர் தெரு, வெறித்த கண்கள் விலகாமல் மேல் பார்த்துக் கிடந்த சுந்தரபாண்டியனின் அருகில் செல்லம்மாள் விரித்த கிழிந்த பாயில் அமர்ந்திருந்தனர் பரமசிவமும், நாவன்னாவும்.

முட்டாப்பய மவனே, இப்படிப் பண்ணிப்புட்டியேடா. மார்க் எடுக்கத் தெரிஞ்ச உனக்கு மத்த விசயம் தெரியலையேடா. படிச்சா மட்டும் போதுமா? உன்கிட்ட வசதியில்லேன்ற காரணத்துக்காக உசிரக்குடுக்கத் துணிஞ்ச நீ, அந்த வைராக்கியத்தை உங்க ஆத்தா சொல்ற மாதிரி முழுநேரம் வேலை செஞ்சு நாளப்பின்ன ஒரு பெரிய ஆளா ஆகிக் காமிக்க வேண்டாமா ?

தமிழ் நாட்டையே ஆண்ட காமராசர் எந்தப் பள்ளிக்கூடத்தில படிச்சாருனு தெரியுமா உனக்கு. பள்ளிக்கூடத்தில் மழையைப் பார்த்துக்கொண்டு படிக்காமல் போன கி.ரா. ஒரு பல்கலைகழகத்துல சிறப்புப் பேராசிரியரா இருந்திருக்கார். கண்ணதாசன் படிச்சாரா என்ன ? எத்தனையோ கவிஞர்கள் இன்னிக்கு இருந்தாலும் உலகம் பூரா அவரத் தான இன்னும் கவியரசர்னு சொல்லுது. இப்படியே சொல்லிகிட்டே போகலாம் படிக்காத மேதைகளைப் பத்தி. வைராக்கியத்துல வேகமா இருக்கத விட விவேகமா இருக்கனும். பாடத்தவிட இதையல்லவா நீ படிச்சிருக்கனும் மொதல்ல. யோசிக்கறதே இல்ல, இந்தக் காலப் பசங்க சட்டுபுட்டுனு முடிவெடுக்கறீங்க. வாழ்ந்து காட்டணும், அது தான் வைராக்கியம்.

செல்லம்மாள் கொடுத்த நீர்க்காபியை அருந்திக் கொண்டே பரமசிவம் சொன்ன சொற்கள் காபியைவிடச் சூடாய் இருந்தது.

நாவன்னா கிட்ட பேசி உன்னோட படிப்புச் செலவுக்கு உதவி பண்ணச் சொல்லியிருக்கேன். நடந்தத மறந்துட்டு நல்லாப் படிச்சு, வேலைக்குப் போய்ட்டு பிற்பாடு நாவன்னாவுக்கு settle பண்ணிடு. என்ன நாஞ்சொல்றது என்று கேட்டார் பரமசிவம்.

கண்கள் மெல்லத் துடிக்க, உடலை சற்று நெளித்து எழுந்து அமர்ந்தான் சுந்தரபாண்டி. நாவன்னாவிடம், எப்ப வரணும்னு சொல்லுங்கய்யா வேலைக்கு என்றான் !

நாற்பது வருடம் முன்பு இவ்வுலகைவிட்டுப் பிரிந்த தன் தமையன் வேலுச்சாமியின் எண்ணம் பரமசிவத்தின் கண்களில் முத்துக்களாய் உதிர்ந்தது.

மார்ச் 30, 2009 யூத்ஃபுல் விகடனில்

-------------

இது எங்க சங்கத்து இருநூறாவது (200) பதிவு. அத பதியறதுல முதல்ல பெருமைப்படறேன். இந்த எண்ணிக்கைகு உழைத்த எங்க சங்கத்து மக்கள் அனைவருக்கும் என்னோட நன்றிய தெரிவிச்சுக்கிறேன்.

இதுவரைக்கும் படித்து, பின்னூட்டம் இட்டவர்களுக்கும் இனிமேலும் படிக்கப் போகிறவர்களுக்கு நன்றிகள் பல.

தஞ்சைப் படம், நம்ம தமிழ் ப்ளாக்ல இருந்து எடுத்து போட்டிருக்கேன். அதன் உரிமையாளருக்கு என் நன்றி.

கதை பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

என்றும் அன்புடன்
சதங்கா

15 comments:

  1. ஆஹா - டபுள் செஞ்சுரி அடிச்சாச்சு ஒரு வருஷத்துக்குள்ளே. கலக்கிப்போட்டிங்க சதங்கா!

    அருமையான கதை. தஞ்சை கோவிலுக்கே கொண்டு போயிட்டிங்க. 200வது பதிவு நல்ல கதையா அமைஞ்சதுல ரொம்ப சந்தோஷம். ரெண்டு வாரத்துக்கு சுதேசியா மாறியிருக்கும் பரதேசியார் வரட்டும். விழா எடுத்துரலாம்.

    ReplyDelete
  2. சதங்கா,

    அருமையான பதிவு. கொஞ்சம் நுனிப்புல் மேய்ந்திருக்கிறேன். இன்றிரவு, நன்கு விரிவாக பின்னூட்டமிடுகிறேன்.

    ஏனுங்க நாகு, விளாவில கெடா கிடா வெட்டுவீங்கலா?

    அன்புடன்,

    முரளி

    ReplyDelete
  3. 200க்கு வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  4. சதங்கா,

    ஒருவரின் முன்னேற்றத்துக்கு வைராக்கியம் முக்கியம் என்பதை நன்கு தெளிவாக சொல்லியிருக்கின்றீர்கள். வட்டார வழக்கு கதை முழுவதும் தெளித்திருப்பது உங்கள் திறமைக்கு ஒரு சான்று. சிற்சில இடங்களில் தவறவிட்டிருந்தாலும், ஊன்றி கவனித்தாலன்றி தெரியவில்லை. கணபதி ஸ்தபதி பற்றிய செய்தி சற்று இடைச்செறுகல் போல இருக்கிறது. கதையின் நீளத்தை பெருக்க இணைக்கப் பட்டதோ?

    கடைசி 2 பத்திகள் சற்று நாடகத்தனமாக இருந்தது. அதில் கடைசி பத்தியின் நோக்கம் என்ன?

    நமக்கு நல்ல படியா கத எழுத வராட்டியும், கேள்வி கேட்ருவோமில்ல.

    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete
  5. சதங்கா, அருமையான கதை. அதைவிட அருமை - இது நமது சங்க ப்ளாகின் 200வது பதிவு. அந்த பெருமையும் உங்களையே சாறும். மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள். நாகு, முரளி சொன்னபடி விழா எடுக்கும் நேரம் வந்துவிட்டது. முன்பே நான் நாகுவிடம் ரிச்மண்ட் ப்ளாகிகள் மாநாடு (மாநாடு இல்லாவிட்டாலும் ஒரு எளிய சந்திப்பாவது) ஏற்பாடு செய்யலாமா என்று கூட கேட்டிருக்கிறேன். இது நல்ல தருணம். நான் திரும்பி அமெரிக்கா வருவதற்குள் 250ஐ தாண்டிவிடக்கூட சாத்தியக்கூறு இருக்கிறது. அது மேலும் பெருமை. நாகு, நான் திரும்பி வரும் வரை பொருத்திருக்க எண்ணியதற்கு நன்றி.

    ReplyDelete
  6. நாகு,

    //அருமையான கதை. தஞ்சை கோவிலுக்கே கொண்டு போயிட்டிங்க. 200வது பதிவு நல்ல கதையா அமைஞ்சதுல ரொம்ப சந்தோஷம். //

    ஒரு நச் பதிவ போடனும்னு நெனச்சி இந்தக் கதையை எழுதினேன். எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லைனாலும் (அந்த அளவுக்கு நச் இல்லியோ என்னவோ !) நம் மக்களைக் கவர்ந்ததில் சந்தோசம்.

    ReplyDelete
  7. முரளி,

    என்னங்க முரளி, விரிவா பின்னூட்டமிடுறேன்னு சொல்லிட்டு, ரொம்ப விரிவா பின்னிட்டீங்க ;-)

    //வட்டார வழக்கு கதை முழுவதும் தெளித்திருப்பது உங்கள் திறமைக்கு ஒரு சான்று. சிற்சில இடங்களில் தவறவிட்டிருந்தாலும், ஊன்றி கவனித்தாலன்றி தெரியவில்லை.//

    திறமை எல்லாம் இல்லீங்க. to be frank, எனக்குத் தஞ்சை slang தெரியாது. internet தான் குரு. நேரம் செலவிட்டேன். அந்த உழைப்புக்குக் கிடைத்த வெற்றியா இத எடுத்துக்கறேன்.

    //ஸ்தபதி பற்றிய செய்தி சற்று இடைச்செறுகல் போல இருக்கிறது. கதையின் நீளத்தை பெருக்க இணைக்கப் பட்டதோ?//

    கோவிலை வைத்து ஒரு செய்தி சொல்லனும்னு நெனைச்சேன். நீளப்படுத்த அல்ல. கதையோடு ஒட்டவில்லையோ ?

    //கடைசி 2 பத்திகள் சற்று நாடகத்தனமாக இருந்தது. அதில் கடைசி பத்தியின் நோக்கம் என்ன?//

    உங்களோட பழகினதோ என்னவோ தெரியலயே ;-) just kidding !

    நம்மல முரளி ரொம்ப நோண்டாம இருக்கனுமேனு சேர்த்த பத்தி தான் அது. "பரமசிவத்துக்கு அப்படி என்ன அக்கரை சுந்தரபாண்டியிடம்"னு நீங்க கேக்கமாட்டீங்கன்னு யோசிச்சு சேர்த்தேன். இருந்தாலும் நீங்க விடற மாதிரி தெரியல ;-)

    ReplyDelete
  8. பரதேசி,

    // சதங்கா, அருமையான கதை. அதைவிட அருமை - இது நமது சங்க ப்ளாகின் 200வது பதிவு. அந்த பெருமையும் உங்களையே சாறும்.//

    மிக்க நன்றி பரதேசி. நான் என்னங்க பண்ணிட்டேன். ஒரு பத்தோ, பன்னிரண்டோ பதிவு தான் போட்டிருக்கிறேன். 200 எண்ணிக்கைக்குக் காரணம் நீங்களும் மற்ற நண்பர்களும் தான். பெருமை உங்களுக்கே.

    //மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள். //

    ரொம்ப சந்தோசம். முடிந்த வரை எழுதுகிறேன்.

    //நாகு, முரளி சொன்னபடி விழா எடுக்கும் நேரம் வந்துவிட்டது.//

    கெடா, கிடா வேற வெட்டுவீங்களானு கேக்கறாரு முரளி. நாகு என்ன பதில் சொல்றாருனு பார்ப்போம்.

    ReplyDelete
  9. முரளி - வட்டார வழக்கு இருக்கட்டும். தஞ்சாவூர்ப் பையனுக்கு சுந்தர பாண்டியன்னு பேர் வச்சிருக்கறத கவனிச்சீரா? க்ளூ கெடச்சிருக்கனுமே? அதுவும் சோழர்களிடமிருந்து மதுரைய மீட்ட தலைவர் பேரு... வீர சைவர் வீட்ல கூட முரளின்னு பேர் வச்சு பாக்கலாம். தஞ்சாவூர்ல சுந்தர பாண்டியா? இது ஏதோ 'பாண்டிய ஒற்றன்' வேலயாதான் இருக்கனும்.

    கெடா, கிடா வெட்றமோ இல்லையோ - கண்டிப்பா முரளிக்கு காது குத்து உண்டு.

    பரதேசி இல்லாத ப்ளாக் மாநாடா? (நம்ப நாலஞ்சு பேரு சேர்ந்தாலும் மாநாடுதான்). குத்துயிரும், குலையுயிருமா இருந்த நம்ப ப்ளாக லொள்ளு ஆக்சிஜன் (CPR?) கொடுத்து காப்பாத்தி வச்ச பரதேசி இல்லாமலா...

    ReplyDelete
  10. வணக்கம் - தங்களின் மற்ற பதிவுகளான கண்ணதாசன், எண்ணங்கள், மற்றும் வெண்பா ( பூனைக்குட்டி அழகு) ஆகியவையையும் படித்துப் பிறகு பின்னூட்டம் இடுகிறேன்.

    இக்கதை பற்றி : அருமையாக அழகாக எளிமையாக இயல்பாக சொல்லப்பட்ட கதை. 80 டன் கல், கணபதி ஸ்தபதி, எண்ணையின் பளபளப்பில் நந்தி, குப்பையிலே மாணிக்கம் போல குளத்தினிலே குப்பை, படிக்கமுடியவில்லையே என்ற விரக்தியில் தற்கொலை, காமராசர், பேராசிரியர் கி.ரா, கவியரசர் பற்றிய ஆறுதலாகச் சொல்லப்பட்ட செய்திகள் - அனைத்தும் இன்பமூட்டுபவை. இரு முறை படித்தேன். நல்ல கதை - வாழ்த்துகள் - தொடர்க - வாழ்க

    ஒரு சிறு ஐயப்பாடு : கதையின் முடிவு என்ன ?? வேலை செய்து தாயைக் காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்து சுந்தர பாண்டி எப்போ வேலைக்கு வர வேண்டும் எனக் கேட்கிறானா ? அல்லது உதவி பெற எப்போ வரணும்னு கேட்கிறானா ??

    ReplyDelete
  11. //இரு முறை படித்தேன். நல்ல கதை - வாழ்த்துகள் - தொடர்க - வாழ்க//

    வயதில் பழுத்த அனுபவம் உள்ள உங்களின் இந்த வரிகளை ஆசீர்வாதமாக எடுத்துக் கொள்கிறேன்.

    உங்கள் ஐய்யப்பாடு குறித்து ... சுந்தர பாண்டி, வேலைக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறேன். ரொம்ப குழப்பி விட்டேனோ ?

    ReplyDelete
  12. சொல்ல மறந்து விட்டேன் சீனா ஐயா, காலதாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  13. ஒரு நல்ல கதையை வாசிக்கும் அனுபவத்துக்கு எனை இட்டு வந்தமைக்கு நன்றி சதங்கா. ஏழை மாணவனின் ஏக்கத்தைப் போக்க பரமசிவமும் நாவன்னாவும் முன் வந்த மாதிரி நாடும் கல்வித்துறையும் ஏங்கி நிற்கும் ஏழை வர்க்கத்துக்கு ஏதேனும் செய்வார்களா என்பதே என் ஏக்கம்.

    வட்டார வழக்கையும் வெகுவாகு ரசித்தேன். காமராஜர், கண்ணதாசன், கி.ரா ஆகியோரைக் குறிப்பிட்டுக் கூறப் பட்ட அறிவுரைகளும் அருமை! இதே போலக் காதல் தோல்வி, வேலையின்மையால் தற்கொலை எண்ணத்துக்குத் தள்ளப் பட்ட இளைஞனைப் பற்றி 20 வருடங்களுக்கு முன் நான் எழுதிய சிறுகதையை வலையேற்றும் போது வந்து உரலிடுகிறேன் (url-உரல் சரிதானே, :-) வந்த ஒரு மாதத்தில் கற்றுக் கொண்ட வலை பாஷைகளில் இதுவும் ஒன்று) இதே பதிவில் பின்னூட்டமாக..!

    ReplyDelete
  14. ராமலக்ஷ்மி மேடம்,

    அழைப்பின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. எல்லா வழிகளிலும் மாற்றம் வரணும். அரசியல்வாதிங்க என்று இல்லை, நாமும் பிறருக்கு உதவணும் என்று நிறைய பணம் படைத்தவர்கள் முன்னுக்கு வரணும்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!