Tuesday, June 05, 2007

ரங்கநாதன் தெரு, சென்னை

எப்போது சென்றாலும்
தப்பாமல் வேறுவழி
மாற்றிவிடும் காவலர்
மாறிவிடும் மக்கள்

தெருவிற்குள் நுழைகையிலே
பல்லடுக்கு மாடிக்கடை
சிலபடிகள் கொண்டகடை
மணற்சாலைக் குட்டிக்கடை

இருபுறமும் கடைபரப்பி
நடுவகிடாய் மக்கள்வெள்ளம்
பண்டிகை என்றில்லை
என்னாளும் திருநாளே

பறவைப் பார்வையிலே
தார்ச்சாலை நெளிவதுபோல்
மாடியேறி கீழ்நோக்கின்
தலைச்சாலை ஆகும்தெரு

பாத்திரங்கள் பளபளக்க
அணிமணிகள் மினுமினுக்க
நகைக்கடைகள் ஜொலிஜொலிக்கும்
புகைமண்டலமாகும் தெரு

சுவாசிக்கும் நம்உள்ளம்
மாசென்று அறிந்தபோதும்
குப்பைக்குக் குறைவில்லை
சுத்தமா(க்)க வழியில்லை

குறுகிய இத்தெருவில்
கடுகிவழி நடந்தால்
தொண்டைக்குழி வறண்டிருக்கும்
தொப்பலாய் நனையும்உடை

ஒன்றை இரண்டுக்கும்
இரண்டை மூன்றுக்கும்
விற்பவர்கள் ஏராளம்
கற்றதில்லை அவர்பாடம்

வாலிபத்தைத் தாண்டியவன்
வசதியற்ற காரணத்தால்
காலம் கடந்தபின்
வாய்ப்பாடு கூவுகின்றான்

கடைகடையாச் சுத்திவர
கடைசிவரை நேரமில்லை
வேண்டியது வாங்கவில்லை
அண்டியது அயற்சிமட்டும்

மீண்டும் வந்திங்கு
தேவையான பொருள்வாங்க
எண்ணவே முடியவில்லை
இருந்தும் மக்கள்கூட்டம்.

மார்ச் 31, 2009 யூத்ஃபுல் விகடனில்

11 comments:

  1. ரங்கநாதன் தெரு எனக்கு பழக்கமில்லை. ஆனால் அதைப்போன்ற டெல்லி அஜ்மல்கான்ரோடும், பெங்களுர் அவின்யு ரோடும் பழக்கம். அப்படியே அந்த தெருவில் நடக்கிறமாதிரி கண்முன்னாலே கொண்டு வந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. உங்கள் கடைசி வரியை மனதில் வைத்தே எழுத அமர்ந்தேன். அந்த முயற்சி வீணாகவில்லை என்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. சதங்கா,

    அருமையான நடை. சில இடங்களில் வார்த்தைகள் 'எதுகை மோனை'-க்காக சேர்த்தது போல இருந்தது.

    உ-ம்:

    எப்போது சென்றாலும்
    தப்பாமல் வேறுவழி
    மாற்றிவிடும் காவலர்
    "மாறிவிடும் மக்கள்" - என்ன மாற்றம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

    ஒன்றை இரண்டுக்கும்
    இரண்டை மூன்றுக்கும்
    விற்பவர்கள் ஏராளம்
    "கற்றதில்லை அவர்பாடம்" - இதுவும் சற்று ஒட்டவே இல்லை.

    ஒரு பிஸியான தெருவை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டியது அற்புதம்.

    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete
  4. வாங்க முரளி,

    எதுகை மோனை அமைத்தது கொஞ்சம் பொருள்படத் தான். கீழே படித்துவிட்டுத் தவறிருந்தால் சொல்லுங்கள்.

    //மாற்றிவிடும் காவலர்
    "மாறிவிடும் மக்கள்"//

    தி.நகர், பனகல் பார்க் பக்கம், மற்றும் அப்பகுதியிலுள்ள முக்கிய சாலைகள்ல எப்போ போனாலும் வழிய மாத்திவிட்டுக்கிட்டே இருப்பாங்க. மக்களும் அதற்குத் தக்கவாறு மாறிக்கொள்வார்கள். போலீஸ்காரரிடம் யாரும்'இல்லை நேத்து இந்த வழியாப் போனேன், அதனால இன்னைக்கும் இந்த வழியாத்தான் போவேன்'னு வாக்குவாதம் செய்வதில்லை. நான் கடைசியாப் போனது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. இன்னும் அப்படியே இருக்கும்னு தான் நெனைக்கிறேன் ;-)

    //"கற்றதில்லை அவர்பாடம்"//

    கணக்குபோட்டு விக்கிறாரு, ஆனால் கல்வி கற்றதில்லை-னு சொல்ல விளைந்தேன்.

    இரட்டிப்பு மகிழ்ச்சி. நாகுவைப் போல் , நீங்களும் தெருவனுபவம் பெற்றதற்கு.

    ReplyDelete
  5. சதங்கா,

    ரங்கநாதன் தெருவை ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை எப்படியோ கடந்து சென்ற அனுபவத்தை ஏற்படுத்தி விட்டீர்கள். உங்கள் பதிவு அபாரம்.
    நான் சென்னையில் வசித்தபொழுது பல முறை ரங்கநாதன் தெருவுக்கு சென்றிருக்கிறேன். மக்கள் கூட்டமும், கடைகளும் படிப்படியாக அதிகரித்து எங்கேயோ போய்விட்டது. ரங்கநாதன் தெருவின் அந்த முனையில் ஒரு ரயில் நிலையம் ஒன்று இருந்ததே அது இன்னும் இருக்கிறதா? இரண்டு வாரங்களில் சென்னையில் நான் இருப்பேன். முடிந்தால் தி நகர் சரவணபவனில் சாப்பிட்டு விட்டு ஒரு நடை ரங்கநாதன் தெருவையும் பார்த்துவிட்டு வருகிறேன். திரும்பி வந்து எழுதுகிறேன்.

    ReplyDelete
  6. பரதேசி,

    தி.நகர் சரவணபவனா? 2 வாரங்களிலா? இருக்கட்டும் இருக்கட்டும், என் பெயரைச் சொல்லி ஒரு ப்ளேட் 14 இட்லி சாப்பிட்டுட்டு ஒரு ஸ்பெஷல் டீ குடிச்சுட்டு வாங்க. மாம்பலம் ரெயில் நிலையம் அங்கயேதான் இருக்கு. ரொம்ப ப்ரமாண்டமா இருக்கு. இன்னொரு விஷயம், 80s ல ரெயில்வே ஸ்டேஷன் பக்கத்தில இருந்த பட்ஸ் ஹோட்டலைத் தூக்கிட்டு அங்க அதி ப்ரமாண்டமா ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் வந்திட்டுது தெரியுமா?

    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete
  7. சதங்கா,

    //மாற்றிவிடும் காவலர்
    "மாறிவிடும் மக்கள்"//

    விளக்கிய பிறகு சரியாக இருக்கிறது.

    //"கற்றதில்லை அவர்பாடம்"//

    கணக்குபோட்டு விக்கிறாரு, ஆனால் கல்வி கற்றதில்லை-னு சொல்ல விளைந்தேன்.

    என்னோடு 10-வது வரை படித்த ரவிச்சந்திரனும், +2 வரை படித்த தேவராஜும் சைதாப்பேட்டை வாசிகள். இருவரும் சேர்ந்து பல நாட்கள் ரங்காநாதன் தெருவில் டி.வி., மிக்ஸி, க்ரைண்டர்களுக்கு ப்ளாஸ்டிக் கவர் விற்றுக்கொண்டிருந்தார்கள். பிறகு நடைபாதையில் பழைய புத்தகம் விற்றார்கள், பிறகு கறிகாய் கடை போட்டார்கள் 1989-90 க்குப் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete
  8. பாய்ஸ் திரைப்படம் (சுஜாதா கதை வசனம்)பார்த்த பிறகு குடும்பத்தோடு ரங்கநாதன் தெருவிற்கு போவதில்லை. ஹி...ஹி நான் மட்டும் தனியாக போய் வருவேன்.

    ReplyDelete
  9. பரதேசி,

    //ரங்கநாதன் தெருவின் அந்த முனையில் ஒரு ரயில் நிலையம் ஒன்று இருந்ததே அது இன்னும் இருக்கிறதா?//

    முரளி சொன்னது போல மாம்பலம் ரயில் நிலையம் இன்னும் இருக்கிறது. நான் பார்த்தவரைக்கும் ரயில் நிலையத்தின் மேல் தளத்தில் இருந்து கீழே இறங்கும் போதே குப்பைக்கூளங்கள் ஆரம்பமாகிவிடும், படிகளிலிருந்தே. போததற்கு ரயில் நிலையத்திலிருந்து தெருவிற்குள் நுழையும்போதே குப்பைகள்தான் வரவேற்கும், காரணம் காய்கறிக் கடைகள். அருகே ஒரு சின்ன கோவில் கூட உண்டு, அதன் மேலே கோபுரத்தைச் சுற்றி காய்கறிக்கடைக்காரர்கள் வீசிய குப்பைகளைப் பற்றி தினசரியிலோ, வாரப்பத்திரிகையிலோ சில ஆண்டுகளுக்கு முன் வாசித்த ஞாபகம். முரளி இதைத்தான் ப்ரமாண்டம் என்றாரானு அவர் தான் சொல்லனும்.

    இனிதாய் பயணம் அமைய வாழ்த்துக்கள். கண்டிப்பா வந்து உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  10. முரளி,

    //என்னோடு 10-வது வரை படித்த ரவிச்சந்திரனும், +2 வரை படித்த தேவராஜும் சைதாப்பேட்டை வாசிகள். இருவரும் சேர்ந்து பல நாட்கள் ரங்காநாதன் தெருவில் டி.வி., மிக்ஸி, க்ரைண்டர்களுக்கு ப்ளாஸ்டிக் கவர் விற்றுக்கொண்டிருந்தார்கள். பிறகு நடைபாதையில் பழைய புத்தகம் விற்றார்கள், பிறகு கறிகாய் கடை போட்டார்கள் 1989-90 க்குப் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.//

    "எம்மைப் பொருத்தவரை இவர்களும் கல்லாதவரே" அப்படினு சொல்லித் தப்பிக்க விரும்பவில்லை. எல்லாத்திலயும் ஒரு exception இருப்பது போல இவர்களை எடுத்துக் கொண்டால், நான் எழுதியது சரியாக இருக்குமா ?

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி Mr. அனானி,

    பாய்ஸ், சுஜாதா, அப்புறம் குடும்பத்தை அழைக்காமல் நீங்க மட்டும் போறது, இதெல்லாம் பார்த்தால், நீங்க Mr. ஆகத்தான் இருக்கணும்.

    நீங்க தனியா போறீங்க, சில்மிஷம், கில்மிஷம் பண்ணாம இருந்தாச் சரி ;-)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!