Sunday, January 07, 2007

கதை வளர்ந்த கதை

இப்ப இந்த கத வளந்த கதய பாப்போம்.

இப்படி ஆரம்பிச்சுது:


கூட்டாங்கதை
(கதையை முடித்து பிறகு பெயர் வைக்கலாம்)

"ஏதோ எழுதனும்னு சொன்னியே?", என்றாள் சங்கரி.

அடுத்தது சேர்ந்தது:

"ம்.. என்னை மட்டும் எங்கப்பன் படிக்க வெச்சிருந்தான்னா உங்கிட்ட இப்படி பேப்பரேந்தி பேனாவேந்தி நிக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது. என்னை பள்ளிக்கு அனுப்பினானா இல்ல பாடம் தான் சொல்லித்தந்தானா? சிறுசா இருக்கரப்போவே கண்ணாலத்த வேற பண்ணி வெச்சான்." என்று பொருமித்தள்ளினாள் சௌந்தரி.
"ஏன் ஒனக்கு என்ன கொறச்சல்? உன் மச்சான் தான் உன்னை கண்ணுல வெச்சு பாத்துக்கறானே!" என்றாள் சங்கரி.

பெண்களின் பேச்சு அடுத்தது இப்படி போனது:

"ஆமா. நீதான் மெச்சிக்கணும் என் மச்சானை. அப்படி வெச்சு பாத்துக்கிட்டா, நா ஏன் இங்க வந்து நிக்கறேன் எங்கப்பனுக்கு மனு எழுத?"
"அப்படி என்ன ஆச்சு இன்னிக்கு, இப்படி அலுத்துக்கற நீ", என்று தோண்டிப் பார்த்தாள் சங்கரி.

அடுத்த கட்டம் சுவாரஸ்யம். கதை ஒரு கதையிலிருந்து வெளியே வந்தது.

பேனா அதற்கு மேல் நகர மறுக்கிறது."சே, என்னத்த கதை எழுதி, என்னத்தப் பண்றது?" அலுப்பாக இருக்கிறது, கதையரசனுக்கு. பெயரைப் பார், கதையரசன் - நாலு வார்த்தை தொடர்ந்து எழுத வக்கில்லை; கதையரசனாம் கதையரசன். தனக்குத்தானே கடிந்து கொண்ட வண்ணம் பேனாவை வைத்து விட்டு, இரண்டு கைகளாலும் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொள்கிறார்.

"என்னங்க, வீட்ல குந்துமணி அரிசி இல்ல. காசு குடுங்க போய் வாங்கியாந்திர்றேன்; புள்ளக ரெண்டும் பள்ளிக்கொடத்துல இருந்து வந்தோன்ன பசிக்குதுங்கும்", அவருடைய சதகர்மிணி காப்பி டம்ளரை அவர் முன் நீட்டிய வண்ணம் "இல்லா"ள் பாட்டு இசைக்கிறாள். "இவ ஒருத்தி", அலுத்துக் கொண்ட வண்ணம் சட்டைப் பையைத் துழாவி அதில் இருந்த கடைசி பத்து ரூபாயை எடுத்து அவளிடம் நீட்டுகிறார், "இந்தா, கொஞ்சம் அடக்கியே வாசி. இதுதான் கடைசி", என்றபடி. அவருக்கே தெரியவில்லை அவர் பணத்தைச் சொல்கிறாரா அல்லது குன்றிவிட்ட தன் கற்பனையின் வளத்தைச் சொல்கிறாரா என்று. இந்தக் கதையை எழுதி நாளைக்குள் அனுப்பினால்தான் அது வாரப் பத்திரிகைக்குப் பிரசுரத்துக்கு முன் போய்ச் சேரும்; கொஞ்சமாவது ஏதாவது கிடைக்கும்.

"காப்பிய அங்க வச்சிட்டுப் போ. இன்னங் கொஞ்ச நேரத்துக்கு என்னைத் தொந்திரவு பண்ணாதே", அவளை அனுப்பி விட்டுக் கண்களை மூடிக் கதையைத் தேடியவர் தன்னையறியாமல் தூங்கிப் போகிறார்.


அடுத்த திருப்பம், கதையை இந்த நாட்டுக்கு கடத்திக்கொண்டு போய்விட்டார்கள்:

அந்த நேரத்தில் மிக வேகமாக வந்த கழியொலி விமானம் சராமாரியாக குண்டுகளைப் பொழிந்தது. கதையரசனின் நித்திரை எங்கு போனதென்று தெரியவில்லை. எழுந்து தன் மனைவியைத் தேடிப் பிடித்துுடன் பதுங்கு குழியை நோக்கி ஓடினார். அப்போது அவரது தர்மபத்தினி "நமக்கு எப்ப தான் விடிவு காலம் வரப்போகுதோ தெரியது, பேசாம நாங்களும் அண்ணனுடன் இந்தியாவிற்கு போவோமா" என்று கேட்டாள். "போடி பைத்தியக்காரி, சாவு எங்கிருந்தாலும் வந்தே தீரும், முதலில் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணும்."

சிறிது நேரத்தின் பின் அந்த உயிர் கொல்லி விமானம் தன் வேலையை முடித்து விட்டுச்சென்றது. கதையரசன் தன் கதையில் ஆழ்ந்துவிட, அவர் மனைவி வானதி பிள்ளளகளை அழைத்து வர பாடசாலை சென்றாள்.

பாடசாலை செல்லும் போது கேட்ட தகவல்களினால் வானதி மேலும் அதிர்ச்சிக்குள்ளாகிறாள். எப்படியாவது தன் கணவனை சம்மதிக்கவைத்து இந்தியா கூட்டிச்செல்லும் தீர்மானத்துடன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீடு திரும்புகிறாள்.

வீட்டில் வானதிக்கு ஒர் அதிசயம் காத்திருந்தது. அவள் அண்ணன் வரதன்

ஈழத்தில் கதை முடியும் என்று பார்த்தாஅல் அதுதான் இல்லை. இன்னொரு முறை குண்டுவீச்சு நடந்தால், நம் கதாபாத்திரங்கள் என்ன ஆவது.


அவள் அண்ணன் வரதன் எட்டு அத்தம் (வருடம்) கழித்து லண்டனிலிருந்து வருகை தந்திருந்தார். கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.. ஆனந்தக்கண்ணீர்..

"பிள்ளைகளை கூட்டி வராதது எமக்கும் வருத்தம் தான். ஆனால் நான் ஒரு நற்செய்தியுடன் வந்துள்ளேன்." என்ற வரதன் தனது கைப்பையை திறந்து பழுப்பு லிகிதம் ஒன்றை எடுத்து கதையரசனிடம் கொடுத்தார். அதை படித்ததும் கதையரசன் முகத்தில் தெளிவு வந்ததது.

முகத்தில் கேள்வி குறியுடன் இருந்த வானதிக்கு வரதன் லிகிதத்தின் விடயத்தை விளம்பினார்.

"உங்க எல்லோரையும் லண்டனுக்கு எம்முடன் கூட்டிப்போக விசா ஆவணம் மற்றும் விமான பயண சீட்டுடன் வரனும் என இத்துணை அத்தம் காத்திருந்தேன்.."

பிள்ளைகள் மாமா வாங்கி வந்த பரிசுகளை பார்த்ததும் மிக உற்சாகத்துடன் ஓடினர். பல வருடங்கள் கழித்து ஆனந்தம் அவ்வீட்டில் தெரிந்தது.. லண்டனிற்கு விசா கிடைத்த சந்தோஷத்தை வார்த்தைகளில் வர்ணித்திடமுடியாது.

சிறிது நாட்களின் பின் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நாளும் வந்தது. பல இனிமையான கனவுகளைச் சுமந்து கொண்டு கதையரசன் குடும்பத்தினர் லண்டன் பயணமாயினர். ஹீத்ரூ விமான நிலையத்தில் அவர்களுக்கு வரதன் குடும்பத்தினரிடமிருந்து அமோக வரவேற்பு. வரதன் வீடு செல்லும் வழியில் "அக்கரைச்சீமை அழகினிலே மன ஆடக்கண்டேனே" என்ற பாடல் அவரது காருக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது.

லண்டன் சென்ற புதிதில் கதையரசன் குடும்பத்தினரின் வாழ்க்கை தேனினும் இனிமையாக தித்தித்துக்கொண்டிருந்தது. அவர்களது லண்டன் வாழ் பல உறவினர்கள் வந்து சேமநலம் விசாரித்துச் சென்றனர்.


அதோடு விட்டார்களா? கதையை ஆரம்பித்தவர் விடாக்கண்டன் போலிருக்கிறது:

கதையரசனுக்கு தமிழ் படியளக்க ஆரம்பித்தது. ஆமாம், அவரின் புலமையைக் கேள்விப்பட்டு பிபிசி தமிழோசை நிறுவனத்தார் அவரை வேலைக்கு எடுத்துக் கொண்டனர்.

"நேத்தும் குடிச்சிட்டு வந்து ஒரே கலாட்டா. இன்னக்கி இன்னும் வேலக்கி போவாம தூங்குது", என்றாள் சௌந்தரி.

அவர் விடாக்கண்டன் என்றால், அடுத்தவர் கொடாக்கண்டன்:

இலங்கையில் விட்ட கதையை கதையரசன் எழுத ஆரம்பித்தார். அப்போது அவர் மகள் லதா "அப்பா, எனக்கு ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக் கற்பதற்கு அதிகமாக 100 பவுண்ட் தேவைப்படுகுது, உங்களுக்கு தரமுடியுமா" என்று கேட்டாள். தனது பொருளாதார நிலைமையை எண்ணி கலங்கிய கதையரசன் "இன்னும் ஒரு கிழமையில் கட்டி விடுகிறேன் என்று உனது பள்ளிக்கூடத்தில் சொல்லமுடியுமா?" என்று கேட்டார். கேட்டுப்பார்க்கிறேன் என்று கூறிக்கொண்டே ஐரோப்பாவின் வரலாற்றை படிக்க ஆரம்பித்தாள் லதா. தனது குடும்பப்பிரச்சினைகளை அசை போட்டபடியே மீண்டும் கதையில் மூழ்கிப்போனார் கதையரசன். "நீ உன் மச்சானுக்கு நல்லா இடம் கொடுத்திட்டாய் செளந்தரி" என்றாள் சங்கரி. என்னைக் குறை சொல்லாட்டி உனக்கு தூக்கமே வராதே, நான் கலியாணம் கட்டி படுற பாடு அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்,

இப்படியாக கதை முடித்தேன் யான் என்று சொல்லலாம் ஏன்று பார்த்தால், கதை கமாவில் முடிந்திருக்கிறதே. கமாவில் முடிந்த கதை என்று பெயரிடலாம்.

3 comments:

  1. ஏய்யா! யாருய்யா.... என்னய்யா? என்னப்பா? கதைய வளக்கலாம். ஆனா நீ கதை வளந்த கதையையே வளக்கிறயேப்பா...! சரி, வச்சுக்கோ போ! எனக்கு நல்லா தெரியும். இந்த கூட்டாங்கதை வளந்துகிட்டே போகும்னு.
    ஆத்தா கோளி வளத்திச்சு, மாடு வளத்திச்சு. ஆனா கதைய வளக்கலியே!

    ReplyDelete
  2. இன்னா பண்றது. எழுதறதுக்கு ஒன்னும் உருப்படியா கெடைக்கல. சரி சும்மா வெறும் வாயை மெல்வானேன்னுதான்.

    ReplyDelete
  3. நான் சும்மா நடிகர் திலகம், கமல் ரேஞ்சுக்கு விளையாட்டுக்கு அடிச்சு விட்டேன். கதை வளர்ந்த கதை பிரமாதம். ஒரு அலசு அலசிவிட்டீரைய்யா! பேஷ்! பேஷ்!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!